ஞாயிறு, 2 பிப்ரவரி, 2014

தியானம் எனப்படும் மன ஒருமைப்பாடு.

மனஉளைச்சல்களை அதிகம் தருகிற வாழ்க்கை முறையாக நமது வாழ்க்கை முறைகளை தற்போது நாமே மாற்றிக் கொண்டு விட்டோம். ஸ்ட்ரெஸ் (stress) என்னும் இந்த மன உளைச்சல் மனிதனை படாத பாடு படுத்தி கொண்டிருக்கிறது. இல்லாத வியாதிகளை வரவழைக்கச் செய்கிறது இந்த மன உளைச்சல். ஏற்கனவே வியாதியால் பீடிக்கப்பட்டிருப்போரை அதிக வியாதிகளை தந்து மேலும் துன்பத்தில் ஆழ்த்துகிறது.

மனம் என்கிற இந்த கருவியினை முறைப்படியாக செப்பனிடத் தவறினால் ஏற்படும் துன்பங்களை நாம் உணரத் தவறி விட்டோம். அதனால் மனித வாழ்வில் துன்பங்கள் தொடர்கதைகளாகிப் போயின. மன உளைச்சலை நீக்கிக் கொள்ள மிகச் சிறந்த வழியாக தியானம் போற்றப்படுகிறது. அறிவியல் ரீதியாக தியானம் மிகச் சிறந்த மன ஒருமைப்பாட்டினைத் தரும் முறையாக உலகில் உள்ள எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

இந்தத் தியானம் என்கிற அற்புத மன ஒருமைப்பாட்டுக் கலையினை அஷ்டாங்க யோகம் எனும் யோக முறையின் எட்டுப் படிகளில் ஒன்றாக ஏழாவது படியில் வைத்து தமது யோகசூத்திரங்களின் மூலம் விளக்கி அருளி இருக்கிறார் யோகக் கலையின் பிதாமகர் என எல்லோராலும் போற்றி வணங்கப்படும் பதஞ்சலி முனிவர். தலைசிறந்த சிவராஜ யோகியான திருமூலரும் அஷ்டாங்க யோகத்தின் படிநிலைகளை தமது திருமந்திரம் எனும் புகழ் பெற்ற யோகசாத்திர நூலில் விளக்கி உள்ளார்.

யோகம் என்றால் என்ன? என்று கேட்டால் பலரும்  பலவிதமாக சொல்வார்கள்.

ஆனால் யோகம் என்றால் என்ன என்பதை பதஞ்சலி தனது இரண்டாவது சூத்திரமாக இவ்வாறு சொல்லுகிறார்..

யோகஸ்சித்தவ்ருத்தி நிரோதஹ– அதாவது மனதில் தோன்றும் எண்ண அலைகளை நிறுத்துவதே யோகம் எனப்படுவது என்கிறார் பதஞ்சலி.

அப்படி எனில் யோகம் என்பது கையைக் காலை உடலை வளைத்து செய்யும் ஆசனம் இல்லையா? ஆசனம் மட்டுமே யோகம் இல்லை என்பதை நாம் முதலில் அறிந்து கொள்ளவேண்டும்.  யோகம் என்பது எட்டு நிலைகளை கொண்டது. அதனை அட்டாங்க யோகம் என்று அழைக்கிறார்கள். அட்டாங்க யோகம் எனப்படும் எட்டுப்படி நிலைகளை நான் இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன்.

1.  இயமம்.
2.  நியமம்
3.  ஆதனம்
4.  பிராணாயாமம்
5.  பிரத்தியாகாரம்
6.  தாரணை
7.  தியானம்
8.  சமாதி

எனப்படும் எட்டுப் படிநிலைகள் மூலம் ஒரு சாதகன் பெறக் கூடிய பயன் என்பது மனத்தின் (அ) சித்தத்தின் எண்ண அலைகளை நிறுத்துவதே என்கிறார் பதஞ்சலி முனிவர். மனம் என்பது கண்ணுக்குத் தெரியாத ஒரு கருவி. அதனை சிந்தனை செய்யாதே! உன் எண்ண அலைகளை நிறுத்தி விடு! என்று அந்த மனத்திடம் நாம் கட்டளையிட்டால் அது கேட்குமா?

தாயுமானவர் எனும் ஞானியைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். தாயுமானவரின் தந்தை கேடிலியப்ப பிள்ளையின் காலத்திற்கு பிறகு திருச்சிராப்பள்ளியில் விஜயரங்க சொக்கநாத நாயக்கர் ஆட்சியில் பெருங்கணக்கராக இருந்தார் தாயுமானவர். அரசு பணிகளை செவ்வனே செய்து வந்த போதிலும், அவருள்ளம் இறையருள் நாட்டத்திலேயே இருந்தது. அவர் திருச்சி மலைக்கோட்டையில் உள்ள தாயுமானசுவாமி கோயிலுக்கு தினமும் சென்று வழிபடுவது வழக்கம். சுவாமியை தரிசித்து விட்டு வலம் வருகையில் தட்சிணாமூர்த்தி சுவாமியின் சன்னதியில் சென்று வழிபடுவதையும் வழக்கமாக கொண்டவர். ஒரு நாள் அப்படி வலம் வந்து தட்சிணாமூர்த்தி சன்னதிக்கு வந்த தாயுமானவரை ஒரு ஞானி கவர்ந்தார். தட்சிணாமூர்த்தி சன்னதியில் தட்சிணாமூர்த்தி திருஉருவுக்கு நேராக எதிர்ப்புறத்தில் அமர்ந்திருந்த அந்த ஞானியின் பெயர் மௌனகுரு ஸ்வாமிகள். மௌனமே வடிவாக இந்த ஞானி அமர்ந்திருப்பது தென்முகக் கடவுள் என்று நாம் வழிபடுகின்ற தட்சிணாமூர்த்தியைப் பார்த்தபடி.

இறைவடிவினரான அந்த தட்சிணாமூர்த்தி எப்படி அமர்ந்திருக்கிறார் தெரியுமா? கல்லாலின் அடியில் சனகாதி முனிவருக்கு ஞானத்தை போதிக்கிறார். அங்கே சொற்கள் இல்லை. சின் முத்திரையைக் காட்டி அருட்பார்வையால் நான்கு வேதங்களையும், உபநிடதங்களையும், அனைத்து தத்துவங்களையும், ஞானத்தையும் சில நொடிகளில் போதிக்கிறாராம் தட்சிணாமூர்த்தி சுவாமி. யோகீஸ்வரன் என்று நாம் வணங்கும் சிவனின் ஒரு வடிவான தட்சிணாமூர்த்தி ஸ்வாமிகள் தான் மௌனகுரு வடிவில் வந்து தாயுமானவரை ஆட்கொள்கிறார். அவர் பின்னாலேயே சென்ற தாயுமானவர் துறவியாகி விட்டார். பதவி, பொன், பொருள், வீடு, மனைவி, மக்கள், உற்றார், உறவினர் என்ற பந்தங்களை துறந்து அவரும் ஒரு துறவி ஆகிவிட்டார். அந்த தாயுமானவர் மனசைப் பற்றி தனது தேஜோமயானந்தம் எனும் பாடலில் சொல்கிறார்.

கந்துக மதக்கரியை வசமா நடத்தலாம்; கரடிவெம் புலிவாயையும்கட்டலாம்;
ஒரு சிங்க முதுகின்மேற் கொள்ளலாம்; கட்செவி யெடுத்தாட்டலாம்;
வெந்தழலி னிரதம்வைத் தைந்துலோ கத்தையும் வேதித்து விற்றுண்ணலாம்;
வேறொருவர் காணாம லுலகத் துலாவலாம் விண்ணவரையேவல் கொளலாம்;
சந்ததமு மிளமையோ டிருக்கலாம்;
மற்றொரு சரீரத்தி னும்புகுதலாம்;சலமே னடக்கலாம்; கனன்மே லிருக்கலாம்,
தன்னிகரில் சித்தி பெறலாம்; சிந்தையை யடக்கியே சும்மா விருக்கின்ற திறமரிது;
சத்தாகியென் சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே! தேசோமயானந்தமே   
- தாயுமானவர் (கிபி 1608 - 1662)

இந்த அருமையான பாடலின் சுருக்கமான பொருள் இதோ:- குதிரை, மதயானையை நம் வசமாக்கி நடத்தலாம். கரடி, வெண்புலி வாயையும் கட்டலாம். ஒரு சிங்கத்தின் மேலேறி உட்கார்ந்து கொள்ளலாம். பாம்பை (கட்செவி) நம் இஷ்டப்படி ஆட்டுதல் கூடும். நெருப்பில் பாதரசம் (இரதம்) இட்டு ஐந்து உலோகங்களையும் பொன்னாக்கி விற்று உண்ணலாம். வேறு யாரும் காணாமல் உலகத்திலே உலா வரலாம். தேவர்களை (விண்ணவர்களை) வேலை வாங்கலாம். சதாகாலமும் இளமையோட இருக்கலாம். வேறொரு உடலில் புகுந்து கொள்ளலாம். நீரின் (சலம் - ஜலம்) மேல் நடக்கலாம். நெருப்பின் (கனன் - கனல்) மேல் தங்கி இருக்கலாம்.  தமக்கும் மேலான பிற சித்திகளைப் பெறலாம். ஆனால், மிக்க கடினம் யாதெனில் ''மனத்தை அடக்கி சும்மா இருக்கின்ற திறம் அரிது' உண்மையாகி என் மனதிற் குடி கொண்டிருக்கிற, அறிவான தெய்வமே,தேசோமயானந்தமே என்றெல்லாம் பாடுகின்ற தாயுமான சுவாமிகள்  நாம் அட்டமாசித்தியைக் கூட அடைந்து விடலாம். ஆனால் இந்த மனத்தை அடக்கி சும்மா இருப்பது என்பது கடினமே என்கிறார்.

ஆனானப்பட்ட அந்த தாயுமானவரே மனசை அடக்குவது கடினம் என்று சொல்லி விட்டார் நமக்கு எதற்கு இதெல்லாம் என்ற பயந்து விடாதீர்கள். மனசை வசப்படுத்தும் இந்த திறனை யோகத்தின் படிநிலைகளில் ஒன்றான தியானம் மூலமாக அடையலாம்; அட்டாங்க யோகத்தின் மூலம் எண்ண அலைகளின் வளர்ச்சியை நிறுத்துவது இயலும் என்கிறார் பதஞ்சலி முனிவர்.

மனசை வசப்படுத்துவது என்பது கொக்கு பிடிப்பது போலத்தான்.!

கொக்கை எப்படிப் பிடிப்பது?’ என்று ஒருவன் ஒரு அதி புத்திசாலியிடம் கேட்டானாம். கொக்குதானே பிடிக்கணும்? ரொம்ப சுலபம். கொக்கு தலையில் கொஞ்சம் வெண்ணையை வைக்கணும். கொஞ்ச நேரம் கழித்து வெண்ணை உருகி கொக்கின் கண்ணை மறைக்கும். அப்போது கொக்கு திகைத்து போய் பறக்க இயலாமல் நிற்கும். அப்போ கொக்கை கப் என்று பிடித்து விடலாம்என்றானாம் அந்த அதிபுத்திசாலி. அது சரி. கொக்கை வெண்ணை தலையில் வைக்கும் போதே அதைப் பிடித்து விடலாமே. இவனிடம் போய் யோசனை கேட்டோமேஎன்று நினைத்தானாம் கேள்வி கேட்டவன்.

என்னடா இது? இந்த ஆள் கொக்கு வெண்ணை என்று சம்பந்தமே இல்லாமல் சொல்கிறானே என்று யாரும் தயவு செய்து நினைக்க வேண்டாம். எல்லாவற்றுக்கும் தொடர்பு இருக்கிறது. உடல் மனம் ஆன்மா மூன்றையும் இணைப்பதுதான் யோகம் என்று முதலில் பார்த்தோம் அல்லவா?. யோகம் என்றால் மனசின் எண்ண அலைகளை தடுத்து நிறுத்துவது என்று இரண்டாவதாக பார்த்தோம். அட்டாங்க யோகம் என்பது என்ன என்றும் பார்த்தோம்.

எண்ண அலைகளை தடுத்து நிறுத்தும் இந்த படிநிலை ஏழாவது படிநிலையான தியானத்தை அடுத்து வரும் எட்டாவது படியான சமாதி நிலை.

இந்த சமாதி நிலையில் தான். மனசை கட்டவேண்டும் என்றால், அசையாத நிலையை உருவாக்கவேண்டும் என்றால், முதலாவதாக நாம் இயமம் என்கிற சமூக ஒழுக்கத்தை பின்பற்ற வேண்டும்.. இரண்டாவதாக நாம் நியமம் என்கிற தனி மனித ஒழுக்கத்தை பின்பற்ற வேண்டும். மூன்றாவதாக இந்த உடலை நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஆசனங்களை பயில வேண்டும். நான்காவதாக மனதை கட்டுக்குள் கொண்டு வர பிரணாயாமம் (மூச்சைக் கட்டு), ஐந்தாவதாக பிரத்தியாகாரம் (ஐம்புலன் ஒழுக்கம்), ஆறாவதாக தாரணம்(ஐம்புலன் ஒடுக்கம்), ஏழாவதாக தியானம்(ஏழாவது அறிவு) போன்ற படி நிலைகளைக் கடக்க வேண்டும். அப்போது தான் அந்த மனமற்ற (எண்ணமற்ற) சமாதி நிலை கிட்டும் என்பதால் தான் மனமென்னும் அந்த கொக்கைப் பிடிக்க அட்டாங்க யோகம் எனப்படும் வெண்ணையை அதன் தலையில் வைக்கவேண்டும் என்ற பொருளில் அந்த அதிபுத்திசாலி சொல்லி இருப்பான் என்று நான் நினைக்கிறேன்.

ஆக பதஞ்சலி சொல்கிற மாதிரி எண்ண அலைகளை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் அட்டாங்க யோகத்தினை பயில வேண்டும். அந்த எட்டுப்படி நிலைகளை கடக்க வேண்டும். தாயுமானவருக்கு கிடைத்தது போல சரியான ஒரு நல்லாசான் கிடைத்தால், உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் இந்த பிறவியிலேயே மனமற்ற நிலையை அடைய வழி வகுக்கும் சில பயிற்சிகள் உங்களுக்கு கைகூடலாம். இவற்றின் துணை கொண்டு இந்த பிறவியை வெல்லக்கூடிய உபாயங்கள் பிற்காலத்தில் உங்களுக்கு கிடைக்கலாம். அந்த இனிய நிலை அதாவது சமாதி நிலை உங்களது தேவைகளை தேடல்களை அடிப்படையாக கொண்டது. வாழ்க்கையை நலமாக, வளமாக வாழ வேண்டும்... எனக்கு இந்த சமாதி நிலையெல்லாம் வேண்டாம் என்பவர்களுக்கு நல்ல உடல், நல்ல மனம் என்கிற அருமையான வாழும் கலையை கற்றுக் கொள்ள தியானப் பயிற்சிகள் உதவும். ஒரு புதையலின் அருகே உங்களை அழைத்துச் செல்லும் போது அந்த செல்வத்தை எந்த அளவுக்கு அள்ளிக் கொள்ள வேண்டும் என்பதை... கை நிறையவா? பை நிறையவா? மூட்டை மூட்டையாகவா, லாரி லாரியாகவா? நீள நீள கண்டெயினர்களிலா? என்பதையெல்லாம் நீங்கள்தான் முடிவு செய்து கொள்ளவேண்டும்.

எப்படியோ, நாம் கற்றுக் கொள்ளப் போகிற செய்திகள், இது வரை நாம் வாழ்க்கையைப் பற்றி புரிந்து கொண்ட விஷயங்களை, நமது பழக்க வழக்கங்களை, சிந்தனை அமைப்புக்களை எல்லாவற்றையும புரட்டிப் போடக் கூடியதாக இருக்கும் என்று மட்டும் என்னால் உறுதியாகக் கூறமுடியும். 'நன்றிது தேர்ந்திடல் வேண்டும்; இந்த ஞானம் வந்தார்ப் பின்னர் வேறென்ன வேண்டும்? என்பார் மஹாகவி பாரதி. ஞானம் என்கிற அந்த விழிப்புணர்வினை நீங்கள் பெற்று விட்டால் உங்களை நீங்கள் வெற்றி கொள்ள முடியும். உங்களை வெற்றி கொண்ட பின்னரே உலகை வெல்ல முடியும் என்பதுதான் இரகசியம்.

நமது வாழி நலம் சூழ வலைப்பூவில் தொடர்ந்து கட்டுரைகளை எழுதி வரும் யோகாசன ஆசிரியரும், இயற்கை நலவாழ்வியல் நெறியாளருமான பொறியாளர் பிக்ஷுஅடிப்பொடி திரு. .மெய்யப்பன், B.E., M.B.A., PG Dip(Yoga&Naturopathy) அவர்கள் குபேரத் தியானம் எனும் தலைப்பில் எவ்வாறு நீங்கள் மனதில் நினைத்ததை மனதின் துணை கொண்டு தியானத்தின் மூலமாக அடையலாம் என்று எதிர் வரும் தொடர்களில் விளக்கவுள்ளார். நான்கு பகுதிகளில் வர இருக்கும் அந்தத் தொடரின் அறிமுகக் கட்டுரையாக இதனைக் கருதி, தொடர்ந்து குபேர நிலைத் தியானம் எனும் தலைப்பில் வர இருக்கும் பதிவுகளைப் படித்து பயன் பெற உங்களை அழைக்கிறேன்.

நன்றி.

2 கருத்துகள்:

கோமதி அரசு சொன்னது…

தியானத்தைப் பற்றி அருமையான விளக்கம்.
வரும் தொடர் அறிமுகக் கட்டுரைகள் படிக்க ஆவல்.

Ashwin Ji சொன்னது…

வணக்கம் கோமதி அரசு
வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி.

கருத்துரையிடுக