வெள்ளி, 25 ஜூன், 2010

பகுதி 22இயற்கை மருத்துவம் (தத்துவங்களும் செய்முறைகளும்) - மகரிஷி க. அருணாசலம்

தீவிர நோயின் ஐந்து நிலைகள்


'நோய் ஒன்றே; பரிகாரமும் ஒன்றே' 

இது இயற்கை மருத்துவத்தின் ஒரு பொதுக்கோட்பாடு நோய்க்குக் காரணங்கள் பலவாக இருக்கலாம். பொருந்தா உணவு, மாறான பழக்கவழக்கங்கள், தவறான சிந்தனைப் போக்கு இவை போன்ற இன்னும் பிற காரணங்களால் நோய் ஏற்படலாம். மேற்கூறிய பல காரணங்களால் உடலில் வேண்டாத பொருள்கள் சேருகின்றன. அவை காலாகாலத்தில் வெளியேறி விட்டால் சிக்கல் இல்லை. பல சமயங்களில் வேண்டாத அந்நியப் பொருள்கள் தேங்கி நிற்கின்றன. காலம் கடந்து இவை வெளியேற முயலும் போது வலியோ, வேறு வித சங்கடங்களோ ஏற்படுகின்றன. அவற்றை நோய் என்கிறோம்.

வளர்சிதை மாற்றம் சதா உடம்பில் நடந்து கொண்டிருக்கிறது. திசுக்களிலுள்ள உயிரணுக்கள் சிதைந்து, மடிந்து இரத்தத்தில் கலக்கின்றன. சிலசமயம் அடிபட்டதாலோ அல்லது வேறு ஏதாவது ஒரு காரணத்தாலோ இரத்தம் உறையலாம். உறைந்த இரத்தம் சிதைவுண்டு சிறுசிறு துண்டுக் கட்டிகளாக இரத்தப் பிரவாகத்தில் கலக்கின்றன. இவை ஏதாவது ஓரிடத்தில் தேங்கி நின்று தாராளனமான இரத்த ஓட்டத்திற்க்கும், பிராணசக்தி இயக்கத்திற்கும் தடையாயிருக்கின்றன. சில சமயம் விபத்துக்கள் ஏற்படும் போது எலும்புகள் உடைந்து அதன் துணுக்குகளும் இரத்தத்தோடு கலந்து நின்று தடை செய்யலாம். சுவாசத்தோடு போகும் கடினமான தூசு தும்புகள் கூட உடம்பின் உள்ளே சென்று இருக்கலாம். இரும்புத் தூசுக்கள், மரத் துணுக்குகள் உடலுள் செல்வதாலும் இயக்கத்திற்குத் தடை ஏற்படலாம் ஒட்டுண்ணிகள், சின்னஞ்சிறு உயிர்ப் பிராணிகள் உட்செல்வதாலும் இது நேரிடலாம். குருதி ஓட்டமோ பிராண இயக்கமோ தடைபடும்பொழுது அவ்வப்பகுதியில் வீக்கம் ஏற்பட்டு அதனால் சூடு அதிகரிக்கலாம். இரத்தக் கொதிப்பால் சில உறுப்புகள், அழற்சி அடையலாம்.

அந்நியப் பொருள்கள் உடலில் தேங்கி நிற்கும்போது நோய் உடனடியாகத் தோன்றுவதில்லை. நோய்குறிகள் தோன்றுமுன் நுண்மங்கள் ஆக்கம் பெறுகின்றன. இது முதல்நிலை இதனை நோய் நுண்மப் பெருக்கநிலை என்கின்றனர். ஆங்கிலத்தில் Incubation state என்று சொல்வார்கள். இந்நிகழ்ச்சி சில நிமிஷங்களிலோ அல்லது நாட்களிலோ நடைபெறலாம். சிற்சில சமயங்களில் இது வாரம், மாதம், வருடம் என்றும் நீளலாம் அந்நியப் பொருள்கள் பெருகி உடலின் சிற்சில பாகங்களில் அல்லது உறுப்புக்களில் வீக்கம் ஏற்படுத்துகின்றன. உடலில் வேலையில் தேக்கமோ, ஆபத்தோ ஏற்படும் சமயம் உயிர் ஆற்றல்கள் வேலை செய்ய ஆரம்பிக்கின்றன. இரத்தத்தில் வெள்ளை அணுக்கள் பெருகி நோய்க்குக் காரணமாக நுண்மங்களோடு போரிடுகின்றன. அந்த இரண்டாம் கட்டம் 'தீங்கு பெருக்குதல் நிலை' எனப்படுகிறது. இதில் அந்நியப்பொருள் அல்லது நோய் நுண்மங்கள் ஒருபுறமும், உடலை நோய்களினின்றும் தடுக்கும் ஆற்றலுள்ள நிணநீர் அணுக்கள் (Phagocytes) மற்றொரு புறமும் அணிவகுத்து போரிடும் நிலையைப் பார்க்கிறோம் இச்சண்டை காலத்தில் படை வீரர்களாகிய நிணநீர் அணுக்கள் பெருக்கத்தால் இரத்தக் கொதிப்பு அதிகரிக்கிறது நாளங்களிலும். உறுப்புக்கள் சிலவற்றிலும் வீக்கம் அதிகரித்து காய்ச்சல் உச்சிலை அடைகிறது. நோயின் அறிகுறிகள் அனைத்து வெளிப்படுகின்றன.


(படிப்பவர்களின் பொறுமைக்கு நன்றி - ஓரிரு தவணைகளில் நிறைவடையும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக