சனி, 16 நவம்பர், 2013

உணவே மருந்து!

எல்லாவிதமான நோய்களுக்கும் சிறந்த மருந்து உணவுதான் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.உணவு என்றால் கண்டபடி தின்பதல்ல; சத்துக்கள் அடங்கிய முறையான சத்துணவைச் சாப்பிடுவதில்தான் குணம்பெற முடியும் என்கிறார்கள்.

அர்கனாஸிஸில் உள்ளது டாக்ஸிகோலாஜிகல் மையம் (Toxicological Center). மருந்து மற்றும் உணவில் உள்ள நஞ்சுப் பொருட்கள் பற்றி ஆராய்வது இதன் பணி.
இங்கே 12 விதமான முறையில் விலங்குகளை அதன் உணவு முறைகளை வைத்துச் சோதித்தனர். இதன் முடிவில் ஒவ்வொரு வேளையும் சிறிது பசி இருக்கும் விதத்தில் குறைவாகச் சாப்பிட்டு வந்தால் வாழ்நாள் எளிதாக நீடிக்கும் என்று கண்டுபிடித்துள்ளனர்.
குறைவாகச் சாப்பிடுங்கள். ஆனால் அந்த உணவு சிறந்த சத்துணவாக இருக்கட்டும். இதுவே புற்றுநோய் உள்பட எந்த நோயும் வராமல் தடுக்கும் முக்கியமான ஆரோக்கியத் திறவுகோல் என்ற சுலோகம்தான் இனி உலகம் முழுக்க ஒலிக்கும் என்று எதிர் பார்க்கலாம்!
அமெரிக்க ஜனத்தொகையில் 21 வயதுக்கு மேற்பட்டவர்களுள் 55% கொழுத்த சரீரத்துடன் இருப்பது ஏன் என 1999ஆம் ஆண்டு ஆராய்ச்சி செய்தார்கள். சத்துணவாக இல்லாமல் கண்டவற்றையும் இவர்கள் சாப்பிட்டதால் கொழுத்த சரீரம், இதய நோய், நீரிழிவு நோய் என பல பாதிப்புக்கு ஆளாகிவிட்டனர். புற்றுநோய் ஏற்படவும் இதுவே பலருக்குக் காரணமாகியிருக்கிறது.
நிறையச் சாப்பிட்டும் அது சத்துணவாக இல்லாததால் டி.என்.ஏ. மரபணுக்களும் பாதிக்கப்பட்டு புற்றுநோய் ஏற்பட்டு விடுகிறது. சத்தில்லாத உணவு செல்களைச் சீரழித்து விடுகிறது. செல்கள் சீரழிந்தால் வெப்பக் கதிர்வீச்சுக்கள் உடலுக்குள் அதிகமாகிப் புற்றுநோய் வளரத்தூண்டும் பொருட்களை அதிகம் உற்பத்தி செய்துவிடுகிறது!
அமெரிக்கர்களில் 25% பேர்கள் தான் ஐந்து வேளைகள் பழங்கள், காய்கறி சாலெட்டுகளை சாப்பிடுகின்றனர். இதில் கிடைக்கும் மிக நுண்ணிய தாது உப்புக்களும், வைட்டமின்களும், டி.என்.ஏ. எனும் மரபணுக்களை கெடாமல் பார்த்துக் கொள்கிறதாம்!
சில விலங்குகள் குறிப்பிட்ட காலத்தில் பட்டினி கிடக்கின்றன. அப்போது படிப்படியாக உடலில் உள்ள அழுத்தம் குறைந்து இனப்பெருக்கச் சக்தி அதிகரிக்கிறது. இந்தப் பட்டினி காலத்தில் புற்றுநோய் உருவாகத் தூண்டும் விஷயங்கள் அழிந்து போய்விடுகின்றன. இவை மனிதர்களுக்கும் பொருந்தும்.
எனவே நோய் தொற்றுவது குறைவாக இருக்கவும், நீரிழிவு, இதய நோய், புற்றுநோய் முதலியவை குணமாக அல்லது வராமலிருக்க சரிவிகித சத்துணவை அளவாகச் சாப்பிடுவதே நல்லது. முடிந்தால் வாரம் ஒரு நாள் உண்ணாமல் இருப்பது நல்லது. இதனால் நச்சு முறிவு மருந்து நம் உடலில் இயற்கையாகவே இரசாயன மாறுதலால் ஏற்பட்டு, நீண்ட நாள் வாழ முடியும் - நோய்களின் தொல்லை இன்றியே!
நன்றி: 
வாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள்–கே.எஸ்.சுப்ரமணி 
www.tamilvanan.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக