ஞாயிறு, 27 ஜூன், 2010

பகுதி 24

இயற்கை மருத்துவம் 
(தத்துவங்களும் செயல்முறைகளும்) 
மகரிஷி க.அருணாசலம்.

சளிப்பிடித்தல் தீவிர நோய். இதற்கு மாத்திரைகளை உட்கொண்டோ அல்லது ஊசி போட்டுக்கொண்டோ பலர் குணம் காண்கின்றனர். 

உண்மையில் நடப்பது என்ன? 
சளிப்பிடித்தவர்கள் அதற்கான காரணங்களைக் கண்டு பிடிக்காமல் அதாவது நோய் முதலை நாடாமல் சளியைப் போக்க மருந்து மாத்திரைகளை உட்கொள்கின்றனர். சளிக்குக் காரணமாக உள் அழுக்குகளை வெளியேற்றி இருந்தால் முதல் இரண்டு நிலையிலேயே எளிதில் பூரண உடல் நலம் பெறலாம். 


இந்த நோய்க்கு முதற்காரணம் என்ன? 
பொதுவாகக் காலநிலை மாற்றத்தால் சளி ஏற்படுகிறதென்று கருதுகிறார்கள் அல்லது வாடைக்காற்றில் உலாவி வந்ததால் சளி பிடித்துக் கொண்டது என்று நினைக்கிறார்கள். இதில் ஒரளவுதான் உண்மை இருக்கிறது. உள் உறுப்புக்களான சிறுநீரகங்களோ அல்லது குடலோ நச்சுப் பொருள்கள் உள்ளே தங்குவதால் ஆற்றல் குறைந்து தத்தம் வேலைகளைச் செவ்வனே செய்ய முடியாமல் இருக்கின்றன. இதுதான் உண்மை.


நச்சுப்பொருள்களை உபவாசம் மேற்கொண்டு வெளியேற்றி இருந்தால் சளி தானே குறைந்திருக்கும். நச்சுப் பொருள்கள் தங்கி இருப்பதால் உள்உறுப்புகளைச் சார்ந்திருக்கும் மெல்லிய ஜவ்வுகள் விரிந்து அதிலுள்ள உயிரணுக்கள் மாய்ந்தோ அல்லது கெட்டுப்போயோ சளியாக மாறுகின்றது. அது கபமாக வெளிப்படும் பொழுது ஆஸ்த்மா, க்ஷயம் என்ற வேறு நோய்கள் வந்திருப்பதாக நினைத்து அதற்குப் பரிகாரம் தேடுகிறார்கள் புதிய கிருமிகளால் வந்த நோய்கள் இவை என்று நினைத்து மேலும் ஆற்றல் மிக்க விஷமருந்துகளை நாடுகின்றனர். இப்படித் தொடர் சங்கிலி போல் நோய் வளருகிறது.

தோலிலுள்ள மயிர்க்கால்கள் அழுக்கால் அடைபடும் பொழுது உள் உடம்பில் தோன்றிய வெப்பம் வியர்வையாக வெளி வர முடியாமல் மேலும் சூடு அதிகரிக்கிறது. மயிர்க்கால்களைத் திறந்து விடுவதற்கான இயற்கை வழிகளைக் கையாளாமல் மருந்து மூலம் சிகிச்சை செய்தால் தோல் வழியாக வர முயன்ற அழுக்குப் பொருள்கள் உள்ளே சென்று நுரையீரல் வழியாகவோ, கல்லீரல் வழியாகவோ வெளிவர முயலுகின்றன. அவ்வுறுப்புகளும் ஏற்கனவே உடலில் தங்கியுள்ள கழிவுப் பொருள்களின் பளுவினாலோ, அல்லது பிராண சக்திக் குறைவினாலோ தத்தம் வேலைகளைச் செய்ய இயலாமல் இருக்கின்றன. இந்நிலையில் தேங்கியுள்ள கழிவுப் பொருள்களும் மருந்தின் நச்சுகளும் சேர்ந்து உடலைப் பலவீனப் படுத்துகின்றன. உறுப்புகள் சீரழியும் நிலை ஏற்படுகிறது. தீவிர நோய், தீராத நாட்பட்ட நோயாகவும் வளருவதில் வியப்பொன்றும் இல்லை. இயற்கை மருத்துவர்கள் நோய் முதல் நாடி அதற்கு இயற்கை வழியில் பரிகாரம் காண்கின்றனர்.


(அடுத்த பகுதி நிறைவுப் பகுதி..)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக