திங்கள், 28 ஜூன், 2010

பகுதி 25
இயற்கை மருத்துவம் 
(தத்துவங்களும் செயல்முறைகளும்) 
மகரிஷி க.அருணாசலம்.

தேய்மான நிலை, குறைதல் நிலை, ஆக்க நிலை போன்ற மூன்று நிலைகளிலும் வளர்ந்து குணமடையும்-நோய்ப்போக்கின் நிலையை அறியாது பயத்தினால் அவசரப்பட்டுத் திடீர் சிகிச்சை முறைகளைக் கையாளும் போது முடிவு விபரீதமாக உள்ளது.

ஐந்து விதமான மலங்கள் அதாவது வியர்வை. அபாணவாயு, சளி, சிறுநீர், மலம் ஆகியவை காலாகாலத்தில் அந்தந்த உறுப்புகள் மூலம் வெளிவந்து கொண்டிருந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

வாழ்க்கைச் சிக்கல் நிறைந்த இக்காலத்தில் ஏதாவது ஒரு காரணத்தால் மலம் கழிப்பதையோ சிறுநீர் கழிப்பதையோ ஒத்தி வைக்கிறார்கள்.

ஆடை ஆபரண அலங்காரங்களால் வியர்வை வெளிவருவது தடைப் படுகின்றது.  சோப்பு, பவுடர் முதலியவற்றை உபயோகிப்பதால் தோல் தன் செயலை இழக்கிறது. இவற்றால் மலங்கள் உள்ளே தங்கி உள் உறுப்புக்களை இயங்காது திக்குமுக்காடச் செய்கின்றன.

முதல் நிலையில் தீவிரமாக வரும் வீக்கம். ஜுரம் போன்றவைகளை அமுக்கி வைக்கும் சிகிச்சை முறைகளைக் கையாண்டோ, கிருமிநாசினிகள் போன்ற விஷமருந்துகளைக் கொடுத்தோ தீவிர நோயை நாட்பட்ட நோயாக மாற்றி விடுகின்றனர். சாதாரணமாக வந்த ஜுரம் சில நாட்களுக்குப் பிறகு டைபாய்டு அல்லது மலேரியா போன்ற விஷக்காய்ச்சலாக வெளி வருகின்றது. இவற்றிற்கும் மருந்து கொடுத்து அவற்றால் முடிவாக உயிர் கொல்லும் பலனையே கண்ட நவீன மருத்துவர்கள் கூட இப்போது இவற்றிற்கு இயற்கை முறைகளைக் கையாள ஆரம்பித்திருக்கிறார்கள்.

உதாரணமாக டைப்பாய்டு காய்ச்சலுக்கு இப்போதெல்லாம் உபவாசமும் தண்ணீருமே சிகிச்சை முறையாகக் கையாளுகின்றனர். இந்த நோய்களுக்கு மருந்து கொடுப்பது ஆபத்தாக முடியுமென்பது இவர்கள் கண்டறிந்த உண்மை. சிறுகச் சிறுக தண்ணீர் அருந்துவதும். உபவாசம் இருப்பதும் நோயாளிகளை ஆரோக்கிய நிலைக்குக் கொண்டு வருகிறதென்பதைக் கண்டு கொண்டு அதனையே பெரும்பாலும் கையாளுகின்றனர். இதேபோல் சீரழிக்கும் நோயான க்ஷயத்திற்கு நல்ல காற்றை சுவாசித்து ஏற்ற உணவு மாற்றங்களோடு வாழ்ந்து வந்தால் குணம் காணலாம் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.

நோய் ஐந்து நிலைகளில் வளர்ந்து, தேய்ந்து முடிவடைகிறது. இக்காலத்தில் எளிய இயற்கை முறைகளைக் கையாண்டால் உடல் பழையபடியும் நலம்பெறும். இந்த உண்மையை அறியாமல் தோன்றி வளரும் நிலைகளைக் கண்டு பயந்து நச்சுமருந்துகளைக் கையாளுவதால் நோய் மேலும் சிக்கலாகி உடல் துன்பத்தை அதிகரிக்கிறது. மருந்து முறைகளினால் மேலும், மேலும், பிராணசக்தி குறைவதோடுகூட பணவிரயமும் ஆகிறது. இயற்கை வழியிலேயே நோயை நண்பனாகக் கருதி கொஞ்சம் கொஞ்சமாக உடலிலுள்ள பிராணசக்தியை வளர்த்து, உணவு மாற்றத்தாலும் இயற்கையை ஒட்டி வாழ்வதாலும் நோய்நீங்கி ஆரோக்கியம் பெறலாம். ஆரம்ப நிலையில் தீவிரமாக வெளிவரும் நோய்களைக் குணப்படுத்துவது எளிது இந்த உண்மையை அறியாது மருந்துகளை நாடுவதால் டாக்டர்களின் உதவி கொண்டு நோய்களை அதிகப்படுத்திக் கொள்கின்றோம்.

நோய் ஒன்று தான்; பல அல்ல அதற்கு சிகிச்சையும் ஒன்றுதான் என்ற இந்த அறிவு தெளிவாக வரப்பெற்றால் ஒவ்வொருவரும் தனக்குத் தானே வைத்தியம் செய்துகொண்டு இன்ப வாழ்வு வாழலாம்.

நிறைவு.

1 கருத்து:

என்னது நானு யாரா? சொன்னது…

நண்பரே! எல்லா விஷயங்களும் மக்களுக்கு சென்று சேர்ந்தால் தானே பயன். காட்டில் காயும் நிலவு போல ஏன் உங்களின் வலைபகக்த்தை யாருக்கும் தெரிய முடியாதவாறு வைத்திருக்கிறீர்கள்.

உங்களின் பதிவுகளை http://ta.indli.com -மில் இணைக்க முயற்ச்சி எடுங்கள். அப்போது தான் மக்கள் உங்களின் பதிவுகளை படித்து பார்த்து பயன் அடைய முடியும்.

வேறு பல Tamil Blog Aggregators-கூட இருக்கிறார்கள். அவர்களிலும் இணைக்க முயற்ச்சி மேற்கொள்ளலாம்.

என் வலைபக்கத்தில் இருக்கும் எல்லா Voting Widget-களை பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம் எதில் எதில் இணைக்கலாம் என்று. நீங்கள் கட்டாயம் என் வலைபக்கத்திற்கு கண்டிப்பாக வரவேண்டும். என் வலைபக்கத்தின் முகவரி http://uravukaaran.blogspot.com

நன்றி நண்பரே!

கருத்துரையிடுக