ஆசிரியர் கடிதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆசிரியர் கடிதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 28 ஜூன், 2010


வலைப் பதிவுலக அன்பர்களுக்கு. 


வணக்கம். இயற்கை நலவாழ்வியல் தத்துவங்களை பற்றி சரியாக புரிந்து கொள்ளாமல் இயற்கை உணவு முறைகளையும், இயற்கை மருத்துவத்தை பற்றியும் பேசுவது சரியில்லை என்கிற எண்ணத்தில் இயற்கை மருத்துவ தத்துவங்கள் பற்றிய திரு.மகரிஷி க.அருணாசலம் அவர்களது புத்தகத்தினை தட்டச்சு செய்து வெளியிட்டேன். படித்து பின்னூட்டம் தந்தவர்களுக்கு எனது இதய நன்றி. பொறுமையுடனும் ஆர்வத்துடனும் படித்து வரும் அன்பர்களுக்கும் என் நன்றி.

இயற்கை நலவாழ்வியல் சிந்தனைகளை மேலும் எடுத்துச் சொல்லும் இயற்கை நலவாழ்வியல் முன்னோடிகளான அமரர் ம.கி.பாண்டுரங்கன், அமரர் மு.இராமகிருஷ்ணன், மற்றும் இப்போது எனது வழிகாட்டிகளாகவும், இயற்கை நலவாழ்வியல் வாழ்ந்து காட்டிகளாக விளங்கும் திருவாளர்கள் மூ.ஆ.அப்பன், யோகி தி.ஆ.கிருஷ்ணன், ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்க செயலர் திரு.இர.இராமலிங்கம், திரு.ஸ்ரீராமுலு (மதுராந்தகம் தண்டரைபேட்டை) ஆகியோருடைய படைப்புகள், பேட்டிகள் போன்றவற்றை வெளியிட முயற்சிகள் மேற்கொண்டுள்ளேன்.

மேலும் வெளிநாட்டு அறிஞர்களின் புத்தகங்களையும் தமிழில் மொழி பெயர்க்க ஒரு ஆசை உண்டு. நேரம் கிடைக்குமா அதற்கான தெம்பு இருக்கிறதா என்று தெரியவில்லை. 

ஜூலை மாதம் முதல் வாரத்தில் துவங்கும் அமர்நாத்-வைஷ்ணோதேவி யாத்திரைக்கு சென்று வந்த பின்னர் மேலே குறிப்பிட்ட செயல்பாடுகளை துவக்க இருக்கிறேன்.

இறையருள் துணை நிற்க வணங்குகிறேன். 

வாழி நலம் சூழ.

ஞாயிறு, 31 ஜனவரி, 2010


அன்புள்ளம் கொண்ட தமிழ் நெஞ்சங்களுக்கு வணக்கம்.

இயற்கை நலவாழ்வியல் இன்றைய அத்தியாவசியத் தேவை ஆகிவிட்ட நிலையில் அவ்வாழ்வினை வாழும் முறைமைகளைத் திரட்டி தரும் ஒரு மையமாக இந்த வலைப்பூவினை தொடங்கியுள்ளேன்.

இயற்கை வாழ்வியல் சிந்தனைகளை இவ்வையகம் மாண்புடன் வாழத் தந்த முக்காலமும் உணர்ந்த அக்கால ரிஷிகளுக்கும், சித்தர் பிரான்களுக்கும் சிரம் தாழ்ந்த வணக்கம் செலுத்தி இந்த வலைப் பூவினை அவர்களுக்கெல்லாம் அர்ப்பணிக்கிறேன்.

நவீன காலத்தின் மாமனிதராக விளங்கிய இயற்கை வாழ்வியல் சிந்தனைகளை ஆர்வத்துடன் செயல்படுத்தி தன் மீது பரிசோதனைகளைச் செய்து பார்த்து சிலாகித்து பல செய்திகளைக் கூறிய முதல்வராகத் திகழும் எம்மான் காந்தி மகானுக்கும் என் வணக்கங்கள். மேலும் தமிழ் நாட்டின் இயற்கை வாழ்வியல் தத்துவத்தின் கலந்கலரை விளக்கமாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் அமரர் திரு.ம.கி.பாண்டுரங்கனார், மற்றும் அமரர் திரு மு.இராமகிருஷ்ணன் அவர்களுக்கும் உள்ளம் நிறைந்த நன்றி அஞ்சலிகளைச் செலுத்துகிறேன்.

இன்று நம்மிடையே உலவி வழிகாட்டிகளாக மட்டுமின்றி வாழ்ந்துகாட்டிகளாக என்போன்றோருக்கு உடல்/மன நலன்களை மீட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கும் திரு. மு.ஆ.அப்பன் (மு.ஆனையப்பன்) அவர்களுக்கும், யோகி திரு.தி.ஆ.கிருஷ்ணன் அவர்களுக்கும் இந்த வலைப்பூவை அர்ப்பணிக்கிறேன்.

முதல் செய்தியாக திரு மு.ஆ.அப்பன் அவர்கள் இந்த வலைப்பூவுக்காகவே பிரத்தியேகமாக எழுத்தி தந்த நோயின்றி வாழ (To Live Without Diseases) என்கிற படைப்பினை முதல் பதிவாக வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன்.

எல்லார் வாழ்விலும் நலம் பெற இந்த பதிவுகள் பயன் தருவனவாக அமையும் என்பதில் எனக்கு சற்றும் ஐயமில்லை.

வாழி நலம் சூழ என்று வாழ்த்தி வணங்கி தங்களை வரவேற்கிறேன் .

அஷ்வின்ஜி
இயற்கை நலவாழ்வியல் விரும்பி.