வெள்ளி, 30 ஜூலை, 2010


இயற்கையை பற்றிய மேலான சிந்தனைகள்..10 Great Quotes On Nature

இரத்தம் ஒரே நிறம் ஆனால் அதிலும் கூட குருதி பேதம் ஏன்?
நான்கு வகையான இரத்த வகைகளுக்கும் ஏற்ற சரியான உணவு எது?

அன்புள்ள வலைப் பதிவு நண்பர்கள் அனைவருக்கும் இனிய வணக்கம்.

நீண்ட நாட்களுக்கு பின்னர் இங்கே எழுதுகிறேன். அமர்நாத்-வைஷ்ணோதேவி புனித யாத்திரையில் இருந்து கடந்த வாரம் தான் இல்லம் திரும்பினேன். பயணம், இறைதரிசனம் அனைத்தும் நலமாய் இருந்தன.

சமீபத்தில் Dr.Peter J.D'Adamo என்பவர் எழுதிய  ''4 Blood Types, 4 Diets - Eat Right 4 your Type'' என்கிற தலைப்பிலான புத்தகத்தை படித்தேன். இவர் ஒரு மருத்துவர் மற்றும் ஆராய்ச்சியாளர். இவர் கண்டு பிடித்தது ஒரு சுவாரசியமான விஷயம். அதாவது மனித இரத்தம் O, A, B, AB என்று நான்கு வகைப் பட்டவை. 

மனிதனின் இரத்தம் ஒரே நிறமாக இருந்தாலும் நான்கு வகையிலான குருதி பேதம் ஏன் வந்தது?

ஆரம்பத்தில் மனிதனுக்கு 'ஓ' வகை இரத்தம் மட்டுமே இருந்ததாம். பின்னர் 'ஏ' வகை இரத்தம் கொண்ட மனிதர்கள் உருவானார்களாம். அதன் பின்னர் மாறுபாடுகள் பல ஏற்பட்டு மனித இனத்தில் 'பி' வகை இரத்தமும் உருவாக ஆரம்பித்ததாம். ''ஏபி'' வகை இரத்தமெல்லாம் சமீப காலத்திய ரத்த வகைகள் என்று கூறுகிறார். அதற்கு மருத்துவரீதியான காரணங்களை தகுந்த மருத்துவ ஆதாரங்களுடன் விளக்குகிறார். அப்படிப்பட்ட ஒவ்வொரு வகை மனிதரும் எந்த வகையான உணவுகளை உட்கொள்ள வேண்டும், எந்த வகைகளை தவிர்க்க வேண்டும், எந்த வகையான வாழ்வியல் முறைகளை பின்பற்ற வேண்டும் என்றெல்லாம் விரிவாக எழுதியிருக்கிறார். அந்த புத்தகத்திலிருந்து சில முக்கியமான விஷயங்களை மட்டும் தமிழாக்கம் செய்து வெளியிடலாம் என்று இருக்கிறேன். விரைவில் அந்த செய்திகளை உங்களிடையே பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன். 

மீண்டும் சந்திப்போம்.

புதன், 30 ஜூன், 2010

 


பிரபல இதய நோய் மருத்துவர் டாக்டர் பிமல் சாஜர் சொல்கிறார்:-

இதய‌த்‌தி‌ற்கு எ‌தி‌ரியே எ‌ண்ணெ‌ய்தா‌ன்

இதய‌த்‌தி‌ற்கு எ‌தி‌ரி எ‌ன்றா‌ல் அது எ‌ண்ணெ‌ய்தா‌ன். எ‌ண்ணெயை‌க் குறை‌த்து‌க் கொ‌ண்டா‌ல், கூடுமான அளவு த‌வி‌ர்‌த்து‌வி‌ட்டா‌ல் இதய‌ம் ந‌ம்மை வா‌ழ்‌த்‌தி‌க் கொ‌ண்டே வா‌ழ்‌ந்து கொ‌ண்டிரு‌க்கு‌ம் எ‌ன்‌கிறா‌ர்க‌ள் மரு‌த்துவ‌ர்க‌ள்.

ஆனா‌ல் எ‌ண்ணையே இ‌ல்லாம‌ல் எ‌ப்படி சமை‌ப்பது எ‌ன்று இ‌ல்ல‌த்த‌ர‌சிக‌ள் ந‌ம்மை‌ மறுகே‌ள்‌வி‌க் கே‌ட்பா‌ர்க‌ள். அத‌ற்கு‌, ஒரு சொட்டு எண்ணை கூட பயன்படுத்தாமல் சமையல் செய்வது எப்படி என்று மரு‌த்துவ‌ர் பிமல் சாஜர் நே‌ற்று செ‌ன்னை‌யி‌ல் செய்து காட்டினார்.

உலகம் முழுவதும் இதய நோயாளிகள் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு தமிழகமும் விதிவிலக்கு அல்ல. தற்போது குறிப்பாக நகர்ப்புறங்களில் வாழும் மக்களின் வாழ்க்கை முறை அடியோடு மாறி உடல் உழைப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாக இல்லை.

குளிர்பானங்கள், பாஸ்ட் புட் முதலியவற்றைதான் இன்றைய இளைஞர்கள் விரும்புகிறார்கள். இத்தகைய காரணங்களால் சிறிய வயதிலேயே எடை அதிகரிக்கிறது. சர்க்கரைவியாதி, உயர் ரத்த அழுத்த இதயநோய் வருகிறது.

இதய நோய்க்கு எண்ணைதான் மூல காரணமாக விளங்குகிறது. அசைவ உணவுகளை எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்‌றி அதிகநேரம் வறுத்து சாப்பிடுவதால் அதிக எண்ணை உடலில் சேர்கிறது.

எனவே எண்ணை இல்லாமல் சமையல் செய்து சாப்பிட்டால் இதய நோய் வராது என்றும் இதயநோய் இருப்பவர் மட்டுமல்ல, ரத்த நாளத்தில் 10 அடைப்பு இருப்பவர்கள் கூட, ஏன், பைபாஸ் சர்ஜரிக்கு சிபாரிசு செய்யப்பட்டவர்கள் கூட எண்ணை பயன்படுத்தாத சமையலை சாப்பிட்டால் ரத்தநாளத்தில் ஏற்பட்ட அடைப்பு குறைகிறது என்றும் அறுவை சிகிச்சையே தேவை இல்லை என்றும் இதய சிகிச்சை நோய் நிபுணரும் சாஓல் என்ற விஞ்ஞானம் மற்றும் வாழும் கலை அமைப்பை சேர்ந்த மரு‌த்துவர் பிமல் சாஜர் கூறுகிறார்.

அவர் எண்ணை இல்லாத சமையலை சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் செய்து காண்பித்தார்.

நான்ஸ்டிக் பாத்திரத்தை பயன்படுத்தி அதில் ஒரு சொட்டு எண்ணை பயன்படுத்தாமல் பக்கோடா தயாரித்து காட்டினார். அதை பலரும் சுவைத்து சாப்பிட்டனர். அதேபோல கோதுமை மாவில் பால் எடுத்து அந்த பாலைக்கொண்டு நான்ஸ்டிக் பாத்திரத்தில் நெய் இன்றி எந்தவித டால்டாவும் பயன்படுத்தாமல் சுவையான அல்வா தயாரித்துக் காட்டினார்.

அதுபோல சாம்பார் சாதம், சாம்பார், உருளைக்கிழங்கு கூட்டு, பட்டர் பீன்ஸ் கலந்த கீரைக்கூட்டு உள்பட பல சமையல்களை செய்து காண்பித்தார்.

அந்த சமையலை அங்கு டாக்டரிடம் பயிற்சிக்கு வந்திருந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் சாப்பிட்டு ருசித்தனர். அவர்கள் கூறுகையில், எண்ணை பயன்படுத்தி சமைத்தது போன்றே, நல்லசுவையாக உள்ளது என்று தெரிவித்தனர்.

எண்ணை இல்லாத சமையல் குறித்து டாக்டர் பிமல் சாஜர் கூறுகை‌யி‌ல், சாஓல் என்ற விஞ்ஞான மற்றும் வாழும் கலை என்ற அமைப்பை நடத்தி வருகிறோம். இதன் நோக்கமே இதய நோய் இல்லாமல் எல்லோரும் வாழ வேண்டும். இதய நோய் வந்தவர்களும் அதில் இருந்து விடுபட்டு சுகமாக இருக்க வேண்டும் என்பதே ஆகும். இதய நோய்க்கு மூலக்காரணம் எண்ணைதான்.

எண்ணை இல்லாமல் எல்லா சமையலும் செய்ய முடியும். அதை நாங்கள் நிரூபித்துள்ளோம். தென் இந்திய சமையலில் மட்டும் பொரியல், கூட்டு, குழம்பு உள்பட 155 வகைகளை செய்து காட்டி உள்ளோம். அதற்கான புத்தகமாக, `எண்ணை இல்லா தென் இந்திய சமையல்' என்று ஒரு பு‌த்தக‌ம் வெளியிட்டுள்ளோம்.

நான் என்னுடைய மருத்துவ பணியில் இந்தியாவில் இதுவரை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இதய நோயாளிகளை இருதய அறுவை சிகிச்சையில் இருந்து காப்பாற்றி உள்ளேன். அதாவது ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டு இருதய அறுவை சிகிச்சைக்கு மரு‌த்துவர்களால் சிபாரிசு செய்யப்பட்டவர்கள், ஆஞ்சியோ பிளாஸ்ட் செய்ய பரிந்துரை செய்யப்பட்டவர்கள் ஆவார்கள். அவர்கள் எங்கள் இருதய திட்டத்தில் சேர்ந்து பயன் அடைந்துள்ளனர். திட்டத்தின்படி 3 நாள் பயிற்சி அளிக்கப்படும்.

அதாவது ஒவ்வொரு சாப்பாட்டிலும் என்ன என்ன கொழுப்பு சத்து உள்ளது. எவ்வளவு கலோரி உள்ளது. அவற்றால் உடலுக்கு ஏற்படும் பிரச்சினை என்ன, வரும் நோயாளிகளின் வேலை என்ன என்பது குறித்து விரிவாக கேட்டறியப்படும்.

பின்னர் அவர்களுக்கு யோகா கற்பிக்கப்படும். எண்ணை இல்லாத சமையலை நேரில் செய்து காண்பிக்கப்படும். தினமும் 35 நிமிடம் நடைப்பயிற்சி செய்ய ஆலோசனை வழங்கப்படும். மனதில் டென்சன் இல்லாமல் இருக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுபோ‌ன்று வாழு‌ம் கலை ப‌ற்‌றிய முழு‌ப் ப‌யி‌ற்‌சியு‌ம் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. பழ வகைகளை சாப்பிடலாம். அதில் எந்தவித கெடுதலும் இல்லை. பப்பாளி, கொய்யா, திராட்சை, வெள்ளரிக்காய், வெண்ணை எடுத்த மோர் ஆகியவற்றை நன்றாக சாப்பிடலாம்.

இந்த பயிற்சி முகாமில் அவர்களுக்கு நா‌ங்க‌ள் க‌ற்று‌க் கொடு‌த்தபடி அவ‌ர்க‌ள் த‌ங்களது வா‌ழ்‌க்கை‌ முறை‌யி‌ல் கடைப்பிடிக்க வேண்டும். அறுவை ‌சி‌கி‌ச்சையை ‌விட இவ‌ற்றை கடை‌பிடி‌ப்பது எ‌ளிதானது எ‌ன்பதா‌ல் ப‌யி‌ற்‌சி‌க்கு வருகின்ற பெரும்பாலானவர்கள் இதனை‌க் கடைபிடித்து இருதய நோய் இன்றி நலமுடன் வாழ்கிறார்கள்.

ரத்தநாளத்தில் அடைப்பு உள்ளவர்கள் அடைப்பு நீங்கி நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள். அதற்கு முக்கிய காரணம் எண்ணை இல்லாமல் சாப்பிடுவதே ஆகும் எ‌ன்று அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.
நன்றி:  http://www.pathivu.com

திங்கள், 28 ஜூன், 2010


வலைப் பதிவுலக அன்பர்களுக்கு. 


வணக்கம். இயற்கை நலவாழ்வியல் தத்துவங்களை பற்றி சரியாக புரிந்து கொள்ளாமல் இயற்கை உணவு முறைகளையும், இயற்கை மருத்துவத்தை பற்றியும் பேசுவது சரியில்லை என்கிற எண்ணத்தில் இயற்கை மருத்துவ தத்துவங்கள் பற்றிய திரு.மகரிஷி க.அருணாசலம் அவர்களது புத்தகத்தினை தட்டச்சு செய்து வெளியிட்டேன். படித்து பின்னூட்டம் தந்தவர்களுக்கு எனது இதய நன்றி. பொறுமையுடனும் ஆர்வத்துடனும் படித்து வரும் அன்பர்களுக்கும் என் நன்றி.

இயற்கை நலவாழ்வியல் சிந்தனைகளை மேலும் எடுத்துச் சொல்லும் இயற்கை நலவாழ்வியல் முன்னோடிகளான அமரர் ம.கி.பாண்டுரங்கன், அமரர் மு.இராமகிருஷ்ணன், மற்றும் இப்போது எனது வழிகாட்டிகளாகவும், இயற்கை நலவாழ்வியல் வாழ்ந்து காட்டிகளாக விளங்கும் திருவாளர்கள் மூ.ஆ.அப்பன், யோகி தி.ஆ.கிருஷ்ணன், ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்க செயலர் திரு.இர.இராமலிங்கம், திரு.ஸ்ரீராமுலு (மதுராந்தகம் தண்டரைபேட்டை) ஆகியோருடைய படைப்புகள், பேட்டிகள் போன்றவற்றை வெளியிட முயற்சிகள் மேற்கொண்டுள்ளேன்.

மேலும் வெளிநாட்டு அறிஞர்களின் புத்தகங்களையும் தமிழில் மொழி பெயர்க்க ஒரு ஆசை உண்டு. நேரம் கிடைக்குமா அதற்கான தெம்பு இருக்கிறதா என்று தெரியவில்லை. 

ஜூலை மாதம் முதல் வாரத்தில் துவங்கும் அமர்நாத்-வைஷ்ணோதேவி யாத்திரைக்கு சென்று வந்த பின்னர் மேலே குறிப்பிட்ட செயல்பாடுகளை துவக்க இருக்கிறேன்.

இறையருள் துணை நிற்க வணங்குகிறேன். 

வாழி நலம் சூழ.

பகுதி 25
இயற்கை மருத்துவம் 
(தத்துவங்களும் செயல்முறைகளும்) 
மகரிஷி க.அருணாசலம்.

தேய்மான நிலை, குறைதல் நிலை, ஆக்க நிலை போன்ற மூன்று நிலைகளிலும் வளர்ந்து குணமடையும்-நோய்ப்போக்கின் நிலையை அறியாது பயத்தினால் அவசரப்பட்டுத் திடீர் சிகிச்சை முறைகளைக் கையாளும் போது முடிவு விபரீதமாக உள்ளது.

ஐந்து விதமான மலங்கள் அதாவது வியர்வை. அபாணவாயு, சளி, சிறுநீர், மலம் ஆகியவை காலாகாலத்தில் அந்தந்த உறுப்புகள் மூலம் வெளிவந்து கொண்டிருந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

வாழ்க்கைச் சிக்கல் நிறைந்த இக்காலத்தில் ஏதாவது ஒரு காரணத்தால் மலம் கழிப்பதையோ சிறுநீர் கழிப்பதையோ ஒத்தி வைக்கிறார்கள்.

ஆடை ஆபரண அலங்காரங்களால் வியர்வை வெளிவருவது தடைப் படுகின்றது.  சோப்பு, பவுடர் முதலியவற்றை உபயோகிப்பதால் தோல் தன் செயலை இழக்கிறது. இவற்றால் மலங்கள் உள்ளே தங்கி உள் உறுப்புக்களை இயங்காது திக்குமுக்காடச் செய்கின்றன.

முதல் நிலையில் தீவிரமாக வரும் வீக்கம். ஜுரம் போன்றவைகளை அமுக்கி வைக்கும் சிகிச்சை முறைகளைக் கையாண்டோ, கிருமிநாசினிகள் போன்ற விஷமருந்துகளைக் கொடுத்தோ தீவிர நோயை நாட்பட்ட நோயாக மாற்றி விடுகின்றனர். சாதாரணமாக வந்த ஜுரம் சில நாட்களுக்குப் பிறகு டைபாய்டு அல்லது மலேரியா போன்ற விஷக்காய்ச்சலாக வெளி வருகின்றது. இவற்றிற்கும் மருந்து கொடுத்து அவற்றால் முடிவாக உயிர் கொல்லும் பலனையே கண்ட நவீன மருத்துவர்கள் கூட இப்போது இவற்றிற்கு இயற்கை முறைகளைக் கையாள ஆரம்பித்திருக்கிறார்கள்.

உதாரணமாக டைப்பாய்டு காய்ச்சலுக்கு இப்போதெல்லாம் உபவாசமும் தண்ணீருமே சிகிச்சை முறையாகக் கையாளுகின்றனர். இந்த நோய்களுக்கு மருந்து கொடுப்பது ஆபத்தாக முடியுமென்பது இவர்கள் கண்டறிந்த உண்மை. சிறுகச் சிறுக தண்ணீர் அருந்துவதும். உபவாசம் இருப்பதும் நோயாளிகளை ஆரோக்கிய நிலைக்குக் கொண்டு வருகிறதென்பதைக் கண்டு கொண்டு அதனையே பெரும்பாலும் கையாளுகின்றனர். இதேபோல் சீரழிக்கும் நோயான க்ஷயத்திற்கு நல்ல காற்றை சுவாசித்து ஏற்ற உணவு மாற்றங்களோடு வாழ்ந்து வந்தால் குணம் காணலாம் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.

நோய் ஐந்து நிலைகளில் வளர்ந்து, தேய்ந்து முடிவடைகிறது. இக்காலத்தில் எளிய இயற்கை முறைகளைக் கையாண்டால் உடல் பழையபடியும் நலம்பெறும். இந்த உண்மையை அறியாமல் தோன்றி வளரும் நிலைகளைக் கண்டு பயந்து நச்சுமருந்துகளைக் கையாளுவதால் நோய் மேலும் சிக்கலாகி உடல் துன்பத்தை அதிகரிக்கிறது. மருந்து முறைகளினால் மேலும், மேலும், பிராணசக்தி குறைவதோடுகூட பணவிரயமும் ஆகிறது. இயற்கை வழியிலேயே நோயை நண்பனாகக் கருதி கொஞ்சம் கொஞ்சமாக உடலிலுள்ள பிராணசக்தியை வளர்த்து, உணவு மாற்றத்தாலும் இயற்கையை ஒட்டி வாழ்வதாலும் நோய்நீங்கி ஆரோக்கியம் பெறலாம். ஆரம்ப நிலையில் தீவிரமாக வெளிவரும் நோய்களைக் குணப்படுத்துவது எளிது இந்த உண்மையை அறியாது மருந்துகளை நாடுவதால் டாக்டர்களின் உதவி கொண்டு நோய்களை அதிகப்படுத்திக் கொள்கின்றோம்.

நோய் ஒன்று தான்; பல அல்ல அதற்கு சிகிச்சையும் ஒன்றுதான் என்ற இந்த அறிவு தெளிவாக வரப்பெற்றால் ஒவ்வொருவரும் தனக்குத் தானே வைத்தியம் செய்துகொண்டு இன்ப வாழ்வு வாழலாம்.

நிறைவு.

ஞாயிறு, 27 ஜூன், 2010

பகுதி 24

இயற்கை மருத்துவம் 
(தத்துவங்களும் செயல்முறைகளும்) 
மகரிஷி க.அருணாசலம்.

சளிப்பிடித்தல் தீவிர நோய். இதற்கு மாத்திரைகளை உட்கொண்டோ அல்லது ஊசி போட்டுக்கொண்டோ பலர் குணம் காண்கின்றனர். 

உண்மையில் நடப்பது என்ன? 
சளிப்பிடித்தவர்கள் அதற்கான காரணங்களைக் கண்டு பிடிக்காமல் அதாவது நோய் முதலை நாடாமல் சளியைப் போக்க மருந்து மாத்திரைகளை உட்கொள்கின்றனர். சளிக்குக் காரணமாக உள் அழுக்குகளை வெளியேற்றி இருந்தால் முதல் இரண்டு நிலையிலேயே எளிதில் பூரண உடல் நலம் பெறலாம். 


இந்த நோய்க்கு முதற்காரணம் என்ன? 
பொதுவாகக் காலநிலை மாற்றத்தால் சளி ஏற்படுகிறதென்று கருதுகிறார்கள் அல்லது வாடைக்காற்றில் உலாவி வந்ததால் சளி பிடித்துக் கொண்டது என்று நினைக்கிறார்கள். இதில் ஒரளவுதான் உண்மை இருக்கிறது. உள் உறுப்புக்களான சிறுநீரகங்களோ அல்லது குடலோ நச்சுப் பொருள்கள் உள்ளே தங்குவதால் ஆற்றல் குறைந்து தத்தம் வேலைகளைச் செவ்வனே செய்ய முடியாமல் இருக்கின்றன. இதுதான் உண்மை.


நச்சுப்பொருள்களை உபவாசம் மேற்கொண்டு வெளியேற்றி இருந்தால் சளி தானே குறைந்திருக்கும். நச்சுப் பொருள்கள் தங்கி இருப்பதால் உள்உறுப்புகளைச் சார்ந்திருக்கும் மெல்லிய ஜவ்வுகள் விரிந்து அதிலுள்ள உயிரணுக்கள் மாய்ந்தோ அல்லது கெட்டுப்போயோ சளியாக மாறுகின்றது. அது கபமாக வெளிப்படும் பொழுது ஆஸ்த்மா, க்ஷயம் என்ற வேறு நோய்கள் வந்திருப்பதாக நினைத்து அதற்குப் பரிகாரம் தேடுகிறார்கள் புதிய கிருமிகளால் வந்த நோய்கள் இவை என்று நினைத்து மேலும் ஆற்றல் மிக்க விஷமருந்துகளை நாடுகின்றனர். இப்படித் தொடர் சங்கிலி போல் நோய் வளருகிறது.

தோலிலுள்ள மயிர்க்கால்கள் அழுக்கால் அடைபடும் பொழுது உள் உடம்பில் தோன்றிய வெப்பம் வியர்வையாக வெளி வர முடியாமல் மேலும் சூடு அதிகரிக்கிறது. மயிர்க்கால்களைத் திறந்து விடுவதற்கான இயற்கை வழிகளைக் கையாளாமல் மருந்து மூலம் சிகிச்சை செய்தால் தோல் வழியாக வர முயன்ற அழுக்குப் பொருள்கள் உள்ளே சென்று நுரையீரல் வழியாகவோ, கல்லீரல் வழியாகவோ வெளிவர முயலுகின்றன. அவ்வுறுப்புகளும் ஏற்கனவே உடலில் தங்கியுள்ள கழிவுப் பொருள்களின் பளுவினாலோ, அல்லது பிராண சக்திக் குறைவினாலோ தத்தம் வேலைகளைச் செய்ய இயலாமல் இருக்கின்றன. இந்நிலையில் தேங்கியுள்ள கழிவுப் பொருள்களும் மருந்தின் நச்சுகளும் சேர்ந்து உடலைப் பலவீனப் படுத்துகின்றன. உறுப்புகள் சீரழியும் நிலை ஏற்படுகிறது. தீவிர நோய், தீராத நாட்பட்ட நோயாகவும் வளருவதில் வியப்பொன்றும் இல்லை. இயற்கை மருத்துவர்கள் நோய் முதல் நாடி அதற்கு இயற்கை வழியில் பரிகாரம் காண்கின்றனர்.


(அடுத்த பகுதி நிறைவுப் பகுதி..)

சனி, 26 ஜூன், 2010

பகுதி 23 
இயற்கை மருத்துவம் 
(தத்துவங்களும் செயல்முறைகளும்) 
மகரிஷி க.அருணாசலம்.

நோய்ப்படைகளுக்கும், சுகப்படைகளுக்கும் இடையே நடக்கும் இந்த யுத்தத்தில் திசுக்கள் தேய்கின்றன. சீழ் அதிகரிக்கிறது இதிலிருந்து கட்டிகள், புண்கள், போன்ற மாற்றங்கள் ஏற்படுகின்றன. நிணநீர் அணுக்கள் நுண்மங்கள், குருதி நாளங்கள் திசுக்கள் நாசமடைகின்றன. மக்களிடையே அண்டத்தில் நடக்கும் யுத்தத்தில் ஏற்படும் நாசங்களைப் போலவே பிண்டத்திலும் அழிவு ஏற்படுகிறது. இந்த மூன்றாம் நிலையை தேய்மான நிலை அல்லது உடற்சிதைவு நிலை என்கின்றனர்.

உடற்சிதைவு நிலையினை நெருக்கடி காலம் எனலாம். இது ஒரு பெரிய திரும்புகட்டம். இதனால் நன்மையும் விளையலாம். தீமையும் விளையலாம். இதில் சுகம் விளைவிக்கும் சக்திகளுக்கு உதவுகிற மாதிரி சிகிச்சை நடந்தால் இரத்தமும், பிராணசக்தியும் அதிகரித்து அந்நிய விஷப் பொருள்களும் வெளியேற்றப்படும் யுத்தத்தில் விளைந்த அழிவுப் பொருள்களும் வெளியேற்றப்பட்டு பூரண சுகம் கிடைக்கும். இதனை குறைதல் நிலை (Abatement) எனலாம். இந்நிலையில் நோய்க்கொதிப்பு தணிகிறது. வீக்கம் வற்றும். வேறு நோய்க்குறிகளும் சாந்தமடைகின்றன.

குறைதல் நிலை தனது முழுவேலையையும் செய்த பின்னர் அதாவது உடலில் சேர்ந்திருந்த விஷப்பொருள்கள் அனைத்தும் வெளியேற்றப்பட்ட பின் ஆக்கவேலை ஆரம்பமாகிறது. இந்த ஐந்தாவது நிலையை ஆக்கநிலை என்கிறார்கள் தேய்ந்த பகுதிகள் வளர்ந்து முழுமை பெறுகின்றன. உடல் புதுமை பெறுகிறது. அசுத்தங்கள் நீங்கி சுத்தமடைகிறது. தீவிர நோய்களை, மேலே குறித்த ஐந்து நிலைகளையும் பொறுமையோடு கடக்கும்படி செய்வதால் உடல் பழைய நிலையினை விரைவில் அடையும். மாறாக, தவறான சிகிச்சை முறைகளைக் கையாண்டு வீக்கத்தை கடுமையான மருந்துகளால் அமுக்கியோ, தடை செய்தோ வைத்தால் தற்காலிகக் குணம் ஒருவேளை கிடைக்கலாம். ஆனால் விஷப்பொருள்கள் உருமாறி உயிரணுக்களுள் நுழைந்து தீராத நாட்பட்ட நோயாக மாறும்.

நோய் நுண்மப் பெருக்க நிலை. தீங்கு பெருக்க நிலை என்ற இரண்டு நிலைகளில் மருந்துகளை உபயோகித்தால் தீவிர நோய் நாட்பட்ட நோயாக வளரும். இதனை ஒரு உதாரணத்தைக் கொண்டு விளங்கிக் கொள்வோம்.

(இருபத்தி ஐந்தாம் பகுதியுடன் நிறைவு அடைகிறது.)

வெள்ளி, 25 ஜூன், 2010

பகுதி 22



இயற்கை மருத்துவம் 



(தத்துவங்களும் செய்முறைகளும்) 



- மகரிஷி க. அருணாசலம்

தீவிர நோயின் ஐந்து நிலைகள்


'நோய் ஒன்றே; பரிகாரமும் ஒன்றே' 

இது இயற்கை மருத்துவத்தின் ஒரு பொதுக்கோட்பாடு நோய்க்குக் காரணங்கள் பலவாக இருக்கலாம். பொருந்தா உணவு, மாறான பழக்கவழக்கங்கள், தவறான சிந்தனைப் போக்கு இவை போன்ற இன்னும் பிற காரணங்களால் நோய் ஏற்படலாம். மேற்கூறிய பல காரணங்களால் உடலில் வேண்டாத பொருள்கள் சேருகின்றன. அவை காலாகாலத்தில் வெளியேறி விட்டால் சிக்கல் இல்லை. பல சமயங்களில் வேண்டாத அந்நியப் பொருள்கள் தேங்கி நிற்கின்றன. காலம் கடந்து இவை வெளியேற முயலும் போது வலியோ, வேறு வித சங்கடங்களோ ஏற்படுகின்றன. அவற்றை நோய் என்கிறோம்.

வளர்சிதை மாற்றம் சதா உடம்பில் நடந்து கொண்டிருக்கிறது. திசுக்களிலுள்ள உயிரணுக்கள் சிதைந்து, மடிந்து இரத்தத்தில் கலக்கின்றன. சிலசமயம் அடிபட்டதாலோ அல்லது வேறு ஏதாவது ஒரு காரணத்தாலோ இரத்தம் உறையலாம். உறைந்த இரத்தம் சிதைவுண்டு சிறுசிறு துண்டுக் கட்டிகளாக இரத்தப் பிரவாகத்தில் கலக்கின்றன. இவை ஏதாவது ஓரிடத்தில் தேங்கி நின்று தாராளனமான இரத்த ஓட்டத்திற்க்கும், பிராணசக்தி இயக்கத்திற்கும் தடையாயிருக்கின்றன. சில சமயம் விபத்துக்கள் ஏற்படும் போது எலும்புகள் உடைந்து அதன் துணுக்குகளும் இரத்தத்தோடு கலந்து நின்று தடை செய்யலாம். சுவாசத்தோடு போகும் கடினமான தூசு தும்புகள் கூட உடம்பின் உள்ளே சென்று இருக்கலாம். இரும்புத் தூசுக்கள், மரத் துணுக்குகள் உடலுள் செல்வதாலும் இயக்கத்திற்குத் தடை ஏற்படலாம் ஒட்டுண்ணிகள், சின்னஞ்சிறு உயிர்ப் பிராணிகள் உட்செல்வதாலும் இது நேரிடலாம். குருதி ஓட்டமோ பிராண இயக்கமோ தடைபடும்பொழுது அவ்வப்பகுதியில் வீக்கம் ஏற்பட்டு அதனால் சூடு அதிகரிக்கலாம். இரத்தக் கொதிப்பால் சில உறுப்புகள், அழற்சி அடையலாம்.

அந்நியப் பொருள்கள் உடலில் தேங்கி நிற்கும்போது நோய் உடனடியாகத் தோன்றுவதில்லை. நோய்குறிகள் தோன்றுமுன் நுண்மங்கள் ஆக்கம் பெறுகின்றன. இது முதல்நிலை இதனை நோய் நுண்மப் பெருக்கநிலை என்கின்றனர். ஆங்கிலத்தில் Incubation state என்று சொல்வார்கள். இந்நிகழ்ச்சி சில நிமிஷங்களிலோ அல்லது நாட்களிலோ நடைபெறலாம். சிற்சில சமயங்களில் இது வாரம், மாதம், வருடம் என்றும் நீளலாம் அந்நியப் பொருள்கள் பெருகி உடலின் சிற்சில பாகங்களில் அல்லது உறுப்புக்களில் வீக்கம் ஏற்படுத்துகின்றன. உடலில் வேலையில் தேக்கமோ, ஆபத்தோ ஏற்படும் சமயம் உயிர் ஆற்றல்கள் வேலை செய்ய ஆரம்பிக்கின்றன. இரத்தத்தில் வெள்ளை அணுக்கள் பெருகி நோய்க்குக் காரணமாக நுண்மங்களோடு போரிடுகின்றன. அந்த இரண்டாம் கட்டம் 'தீங்கு பெருக்குதல் நிலை' எனப்படுகிறது. இதில் அந்நியப்பொருள் அல்லது நோய் நுண்மங்கள் ஒருபுறமும், உடலை நோய்களினின்றும் தடுக்கும் ஆற்றலுள்ள நிணநீர் அணுக்கள் (Phagocytes) மற்றொரு புறமும் அணிவகுத்து போரிடும் நிலையைப் பார்க்கிறோம் இச்சண்டை காலத்தில் படை வீரர்களாகிய நிணநீர் அணுக்கள் பெருக்கத்தால் இரத்தக் கொதிப்பு அதிகரிக்கிறது நாளங்களிலும். உறுப்புக்கள் சிலவற்றிலும் வீக்கம் அதிகரித்து காய்ச்சல் உச்சிலை அடைகிறது. நோயின் அறிகுறிகள் அனைத்து வெளிப்படுகின்றன.


(படிப்பவர்களின் பொறுமைக்கு நன்றி - ஓரிரு தவணைகளில் நிறைவடையும்)

புதன், 23 ஜூன், 2010

ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கத்தின் 324 -வது மாத கூட்டம்.


கடந்த சில ஆண்டுகளாக நான் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தேன். 
பின்னர் இயற்கை நலவாழ்வு முறைகளை படிப்படியாக பின்பற்றி நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், மற்றும் இதய இடது கீழறையில் இருந்த பிறவி குறைபாடு காரணமாக ஏற்பட்ட சிறுநீரக பாதிப்பு இவற்றை எல்லாம் எவ்வாறு குணப்படுத்திக் கொண்டேன் என்ற அனுபவங்களை பகிர்ந்து கொள்ள தமிழகத்தின் முன்னோடி அமைப்புகளில் முதன்மையாக விளங்குகின்ற ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கத்தின் 324 -வது மாத கூட்டத்தில் கலந்து கொண்டு உறுப்பினர்களிடையே பேசிட சங்கத்தின் செயலர் திரு.இராமலிங்கம் அவர்கள் வாய்ப்பு தந்தார் . 

அங்கு நான் உரையாற்றியதை இங்கே வாழி நலம் சூழ வாசகர்களுக்காக வெளியிடுகிறேன்.

 20-06-2010-ஆடுதுறை

வணக்கம்.  நான் சென்னையில் தென்னக இருப்புப்பாதை அலுவலகத்தில் தணிக்கை அதிகாரியாக பணி புரிகிறேன். இப்போது எனது வயது ஐம்பத்து நான்கு.

ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று இரண்டாம் ஆண்டு மே மாதம் ஆடுதுறையில் நடைபெற்ற ஒரு வார இயற்கை மருத்துவ முகாமில் கலந்து கொண்டு இயற்கை நலவாழ்வு பயிற்சி பெற்ற இனிய நினைவுகளை மீண்டும் நன்றியுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அதற்கு பின்னர் தற்போது உங்களிடையே எனது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வாய்ப்பினை உருவாக்கி தந்திருக்கும் திரு மெய்யப்பன் ஐயா அவர்களுக்கும் திரு இராமலிங்கம் ஐயா அவர்களுக்கும் அவர்கள் மூலம் இந்த வாய்ப்பினைத் தந்த இறைவனுக்கும் நன்றி செலுத்துகிறேன்.

கடந்த முறை முகாமில் கலந்து கொண்ட போது நான் சந்தித்த திருவாளர்கள் மெய்யப்பன், இராமலிங்கம், யோகி தி.ஆ.கிருஷ்ணன் மற்றும் மூ.ஆ.அப்பன் ஆகியோரின் தொடர்புகளும் மேலான வழிகாட்டல்களும் இன்றளவும் எனக்கு கிடைத்து வருகிறது என்பது பெருமைக்குரிய மகிழ்ச்சி தரும் செய்தியாகும்.

உங்களிடையே இன்று நான் பேசவிருக்கும் தலைப்பு நான் எவ்வாறு எனக்கு ஏற்பட்ட ''நீரிழிவு நோயினை'' மருந்தின்றி குணமாக்கிக் கொண்டேன் என்பது பற்றி.

முன்னரே இயற்கை நலவாழ்வு பயிற்சி பெற்றிருந்தும் பணி மற்றும் கால மாறுபாடுகளின் காரணமாக என்னால் இயற்கை உணவினை தொடர்ந்து உண்டு வரஇயலாமல் போனது. எனினும் கிடைக்கும் நேரங்களில் எல்லாம் சந்தர்ப்பங்களில் யோகா பயிற்சி மற்றும் இயற்கை உணவுகளை மேற்கொண்டு வந்திருக்கிறேன். எனினும் பணி மும்முரம் காரணமாக ஏழு ஆண்டுகள் 2002 முதல் 2008 வரை இந்தியா முழுமையும் பயணம் செய்து நீண்ட நாட்கள் வெளியில் உணவு உண்ணவேண்டிய சூழ்நிலைகள் உருவானதால் எனக்கு நீரிழிவு பாதிப்பு ஏற்பட்டது. அதற்கு முன்னரே நான் உயர் இரத்த அழுத்தம், ஹைபர்டென்ஷன் போன்ற பாதிப்புகளால் இரயில்வே மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று அங்கு தந்த ஆங்கில மருந்துகளை உண்டு வந்தேன். பின்னர் மன அழுத்தம் காரணமாக அதனுடன் சர்க்கரை வியாதியும் சேர்ந்து கொண்டது.  இரத்த பரிசோதனை செய்து கொண்ட போது கீழ்க் கண்ட அளவுகள் இருந்தன. 22-12-2007 - Blood Sugar (Fasting) 245 mgs/dl (Ref value: 70 to 100). அதன் பிறகு சித்தமருத்துவம் மேற்கொண்டேன். நிறைய லேகியங்கள், பொடிகள், கஷாயங்கள், உணவுக் கட்டுப்பாடுகள் மேற்கொண்ட பின்னர் மீண்டும் பரிசோதனை செய்த போது கிடைத்த அளவுகள்:
09-01-2008 -      Blood Sugar (Fasting) - 275 mgs/dl
         Blood Sugar (PP) - 469 mgs/dl

பிறகு எம்.வி. டையபெடிக் மருத்துவ மனையில் சென்று அங்கு பரிசோதனை செய்து கொண்டேன்.

02-02-2008        -  Blood Sugar (Fasting) - 217 mgs/dl
   Blood Sugar (PP) - 294 mgs/dl
என்று பரிசோதனை முடிவுகள் வந்தன.

அதன் பிறகு ஆங்கில மருத்துவத்தினை மேற்கொண்டேன். தொடர்ந்து ஒரு மாதம் மருந்துகள், உணவுக் கட்டுப் பாடுகள் கடைப் பிடித்த பின்னர் கிடைத்த பரிசோதனை முடிவுகள்

01-03-2008 -      Blood Sugar (Fasting) - 85 mgs/dll (Ref value: 70 to 100)
Blood Sugar ( P  P)    - 102 mgs/dl (Ref Value: 100 to 140)

மருந்துகளையும், உணவுக் கட்டுப்பாடுகளையும் தொடர்ந்து வரவேண்டும் என்கிற ஆங்கில மருத்துவரின் அறிவுரை அடிப்படையில் நான் இரத்த அழுத்தத்துக்கும், சர்க்கரை நோய்க்கும் தொடர் சிகிச்சை மேற்கொண்டேன். ஆயினும் எனது உடல் உபாதைகள் குறைந்த மாதிரி தெரியவில்லை. Once a diabetic; always a diabetic. Once a heart patient; always a heart patient, என்று ஆங்கில மருத்துவர்கள் கூறிய சித்தாந்தம் எனக்கு அலுப்பு தட்டலாயிற்று.

ஏனெனில் மருந்துகளை உண்ணத் தவறி விட்டால் தொல்லைகள் அதிகமாக இருந்தன. சிகிச்சையின் போதும், உடல் வலி, சோர்வு போன்றவை தொடர்ந்து இருந்தன. உடல் உஷ்ணக் கட்டிகள் போன்றவைகள் அடிக்கடி வந்து தொல்லை தந்தன. சிறுநீர்த் தாரை எரிச்சல் ஒரு தொடர் கதையாகவே இருந்தது.

ஆங்கில மருந்துகள் சிறுநீரகங்களில் கற்களை உண்டாக்கும் என்று வேறு கூறினார்கள். அதுவும் இன்றி தொண்ணூறு கிலோ எடையுடன் இருந்தேன். உணவைக் குறைத்தாலும்  இடர்ப்பாடு; சாப்பிட்டாலும் இடர்ப்பாடு என்று இருதலைக் கொள்ளியாய் தவித்தேன்.

இந்த தொடர் தொல்லைகளில் இருந்து விடுபட எண்ணினேன். ஏற்கனவே மேற்கொண்ட இயற்கை உணவு முறைக்கு மாற முடிவு செய்தேன். கடந்த ஆண்டு மே மாதம் கும்பகோணத்தில் நடைபெற்ற இயற்கை நலவாழ்வு முகாமில் கலந்து கொள்ள பதிவு செய்தேன். ஆனால் தேர்தல் பணிக்கு என்னை நியமித்ததால் அதில் கலந்து கொள்ள இயலாமல் போயிற்று. பிறகு திரு யோகி.கிருஷ்ணன் அவர்களை கடந்த ஆண்டு ஜூலை மாதம் சந்தித்தேன்.

அவர் என்னிடம், ''நீங்கள் மீண்டும் தொடர்ந்து யோகப் பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்; இயற்கை உணவினை எவ்வளவுக்கெவ்வளவு முழுமையாக சாப்பிடுகிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு குணமடைதல் விரைவாக இருக்கும்'' என்றார். அவரது அறிவுரையின்படி யோகம், மற்றும் இயற்கை உணவு முறைகளை பின்பற்றினேன்.

கடந்த டிசம்பர் மாதம் திரு மூ.ஆ. அப்பன் அவர்கள் பழனியில் நடத்திய ஒருவார இயற்கை நலவாழ்வு முகாமில் கலந்து கொண்டேன்.

அப்போது முழு இயற்கை உணவு முறைக்கு மாறியது மட்டும் இன்றி ஆங்கில மருந்துகளை சாப்பிடுவதை அறவே நிறுத்தினேன்.

ஒருவார இயற்கை நலவாழ்வு முகாமில் பெற்ற நேரடி அனுபவங்களும், யோகி கிருஷ்ணன் மாஸ்டரிடம் பெற்று வரும் தொடர் யோகப் பயிற்சிகளும் எனக்கு இரத்த அழுத்தம், உடல் எடை, மற்றும் சர்க்கரை வியாதிகளின் பிடியில் இருந்து முழு விடுதலை பெற்று தந்தன.

மேற்குறிப்பிட தொல்லைகளின் சிம்ப்டம்ஸ் என்னிடம் இருந்து முழுமையாக அகன்று விட்டன. ஆகையினால் நான் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளவில்லை. மேலும் ஆங்கில மருத்துவர்களை ஆலோசிக்காமல் ஆங்கில மருந்துகளை கடந்த டிசம்பரில் இருந்து நிறுத்தி விட்டேன். பின்னர் திருவாளர்கள் கிருஷ்ணன் ஐயா மற்றும் மெய்யப்பன் ஐயா இருவரும் என்னை மருத்துவ பரிசோதனை செய்துபார்க்கும்படி அறிவுறுத்தினார்கள்.

அதன் பேரில் இந்த ஆண்டின் ஏப்ரல், மே, ஜூன் மாதம் முதல் வாரத்தில் மேற்கொண்ட இரத்தம், மற்றும் சிறுநீர் பரிசோதனைகளின் முடிவுகள் இதோ:

02-04-2010-  Blood Sugar (Fasting) - 87 mg/dl
Blood Sugar (PP) - 124 mg/dl
Urine Sugar: NIL
07-05-2010-  Blood Sugar (Fasting) - 97 mg/dl
Blood Sugar (PP) - 126 mg/dl
Urine Sugar: NIL
05-06-2010-  Blood Sugar (Fasting) - 87 mg/dl
Blood Sugar (PP) - 128 mg/dl
Urine Sugar: NIL

இப்போது முழு இயற்கை உணவு முறைகளை கடைப்பிடிக்கிறேன். வாரம் ஒரு நாள் உபவாசம், தொடர் யோகா பயிற்சிகள் என்னை ஆரோக்கியம் நிறைந்த ஒரு மனிதனாக மீட்டெடுத்து விட்டன.

வெயிலில் இருந்தால் தான் நிழலின் அருமை தெரியும் என்பார்கள் அதன் பொருளை முழுமையாக உணர்ந்து கொண்டேன். எனது நண்பர்கள் பலர் எனது வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்களை பார்த்து அவர்களும் யோகா/இயற்கை நலவாழ்வு முறைகளை பின்பற்றி பலன் அடைந்து வருகிறார்கள்.

நான் சொல்ல விரும்பும் செய்திகள்:
  • Once a diabetic, always a diabetic. Once a heart patient, always a heart patient எண்ணும் ஆங்கில மருத்துவ சித்தாந்தம் தவறானது.
  • உணவு மற்றும் வாழும் முறைகளிலும், எண்ணங்களிலும், சிந்தனைகளிலும் மாற்றம் ஏற்படுத்தாமல் வெறும் மருந்துகள் மூலமாக எந்த வியாதியையும் குணப் படுத்த முடியாது.
  • நான் எனது சர்க்கரை வியாதிக்கு இயற்கை நலவாழ்வியல் மூலம் குணம் பெற்ற போது, எனது உடல் எடை குறைந்தது; இரத்த அழுத்தம் நார்மல் நிலைக்கு வந்தது. அது மட்டுமின்றி எனக்கு பிறவியிலேயே இதயத்தில் எல்.வி.சி.டி எனப்படும் (Left Ventricular Conductivity Defect) குறைபாடு இருந்தது. அதன் காரணமாக யூரிக் ஆசிட் அதிகமாக இரத்தில் கலந்து போகும் தன்மையும் அதனால் எனது சிறுநீரகங்களுக்கு தொடர் தொல்லைகளும் இருந்ததன. யூரிசீமியா எனும் இந்த தொல்லைக்காக சிறுநீர்ப் பிரித்திகளை ஊக்குவிக்கும் மருந்துகளையும் சாப்பிட்டு வந்தேன். ஆனால் முழு இயற்கை உணவுக்கு மாறிய பின்னர் அந்த தொந்தரவும் என்னை விட்டு நீங்கி விட்டது. முன்னர் இந்த மாத்திரைகளை சாப்பிடாவிட்டால் சிறுநீர் போகும் இடத்தில் எரிச்சல் அதிகம் ஆகிவிடும். சில சமயம் இரத்தம் கூட வெளியேறும்.
  • ஆங்கில மருந்துகளால் ஏற்படுவன மோசமான பின்விளைவுகள். ஆனால் இயற்கை நலவாழ்வியலில் கிடைக்கும் குணம் பூரணமானது (holistic). ஒரு குறிப்பிட்ட வியாதியை மட்டுமின்றி உடல் முழுவதும் செயல்பட்டு நமக்கு தெரியாமல் இருக்கும் குறைபாடுகளையும் களைந்தெறியும் சக்தி இயற்கை நலவாழ்வியலுக்கு உண்டு என்பதை முழுமையாக நான் உணர்ந்தேன்.
  • அடுத்ததாகவும் நிறைவாகவும் நான் சொல்ல விரும்புவது ஒன்று உண்டு. இயற்கை நலவாழ்வியல் உங்களை உங்களுக்கு ஏற்ற மருத்துவராக மாற்றுகிறது. மருந்தில்லா மருத்துவம் என்பதினால் செலவும் இல்லை. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பழம்,காய்கறிகளை இயற்கையாக உண்பதினால் நமக்கு பொருளாதார அடிப்படையில்,எரிவாயு (கேஸ்), மசாலா பொருட்கள், எண்ணை வகைகளுக்கான செலவு, உப்பு,சர்க்கரை, பால் பொருட்கள் மீதான செலவுகள் குறைகின்றன.
  • நோய் இல்லாமல் செயல் படுவதினால் அலுவலுக்கு விடுப்பு எடுத்தல், அலுவல் நேரங்களில் சோர்வாக இருத்தல், மருத்துவ மனைகளில் மருத்துவருக்காக காத்திருத்தல், தேவையற்ற அறுவை சிகிச்சைகளை பெறும் பொருள் செலவில் மேற்கொள்ளுதல், நோய் வாய்ப்படுபவரை கவனித்துக் கொள்ளுபவருக்கு ஏற்படும் தொல்லைகள், மருந்துக்கான பெறும் பொருள் செலவும், பக்க விளைவுகள்,பின்விளைவுகள் போன்றவற்றை முழுமையாக தவிர்க்கலாம். மக்களின் ஆரோக்கியத்துக்காக அரசுகள் பெருமளவில் பணத்தை செலவு செய்வதை தவிர்ப்பதன் மூலம் மத்திய மாநில அரசுகள் அப்பணத்தை மக்கள் நல பணிகளில் நல்ல வழிகளில் செலவிடலாம்.
  • நல்ல உடல், நல்ல மனம், நல்ல சிந்தனைகள் கொண்ட மனிதர்கள் பெருகினால் சமுதாயத்திற்கு அவர்களது பங்களிப்புகள் மேம்பட்டதாக இருக்கும். நாட்டின் உற்பத்தியும் கூடும். மக்களிடையே நற்சிந்தனைகள் வளர்ந்து போட்டி பொறாமை போன்றவைகள் அகன்று, சகோதரத்துவம், அன்பு போன்றவை பெருகும்.
எனது வாழ்வின் மிக முக்கியமான திருப்புமுனையை தந்திருக்கும் இயற்கை நலவாழ்வியலை பற்றி உங்களிடையே பகிர்ந்து கொள்ள நல்வாய்ப்பை ஏற்படுத்தி தந்த திரு மெய்யப்பன் ஐயாவுக்கும், திரு.ராமலிங்கம் ஐயாவுக்கும், மற்றுமுள்ள சங்க நிர்வாகிகள் எல்லாருக்கும், மற்றும் இங்கே பெருவாரியாக குழுமி இருக்கும் உங்கள் எல்லாருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி பாராட்டி வணங்கி விடை பெறுகிறேன்.  நன்றி. வணக்கம்.

-அஷ்வின்ஜி, 
 வலைப்பதிவர், வாழி நலம் சூழ, சென்னை.

செவ்வாய், 22 ஜூன், 2010

பகுதி 21 - 
இயற்கை மருத்துவம் (தத்துவங்களும் செயல்முறைகளும்) 
மகரிஷி க.அருணாசலம்.

"ஏழு பிராணன்களும், ஏழு சுடர்களும் அவற்றின் எரிபொருளும் ஏழு படையல்களும், இதய குகையில் ஒவ்வோர் உயிரிலும் ஏழாய் இயங்கும் பிராணன்களின் ஏழு உலகும் அவனிடமிருந்தே எழுகின்றன" (முண்டக உபநிடதம் பாகம் 2, அத்தியாயம்-1, 8ஆம் சுலோகம்)

சிருஷ்டிகர்த்தரின் செயல்கள் கூட ஏழு ஏழாய் வருகின்றன என்பதை முண்டக உபநிடதம் விரிவாக விளக்குகின்றது.

இந்த ஏழில் ஏதோ ஒரு மர்மம் இருக்கிறது சமீபத்தில் எனக்கு நோய் வந்தபோது முதுகுத்தண்டு குளியல் எடுத்துக் கொள்ளும்படி சொன்னார்கள். தொட்டியில் குறைந்தது 20 நிமிடங்களாவது இருக்க வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டது இது பல நாட்கள் நடந்தன ஏன் இந்த இருபது நிமிடம்? அரைமணியாக ஏன் இருக்கக்கூடாது என்ற எண்ணம் என் மனதில் அடிக்கடி தோன்றியது இதயத்தினின்று வெளியேறும் இரத்தம் உடல் முழுவதும் சுற்றி திரும்பவும் இதயத்தை அடைய மூன்று ஏழுதடவை இரத்தம் போய் வந்தால் அந்த நேரத்திற்குள் ஓரளவு சமநிலையும் தூய்மையும் அடையும் என்பது கருத்தாய் இருக்க வேண்டும். 7 x 3 =21

21 நிமிடங்கள் தொட்டியில் இருங்கள் என்று சொல்வதற்குப் பதிலாக 20 நிமிடங்கள் என்று சொல்கிறார்கள்: அவ்வளவுதான்.

சித்த ஆயுர்வேத மருத்துவர்கள் மருந்து கொடுக்கும் போதே இதை ஒரு மண்டலம் சாப்பிடுங்கள் என்கிறார்கள் 7x6=42 நாற்பது அல்லது நாற்பத்தி இரண்டு நாட்கள் ஒரு மண்டலம். இப்படி ஆறு வாரங்கள் மருந்து சாப்பிட்டபின் ஒரு வாரம் ஓய்வு கொடுத்த பின் கவனித்தால் மருந்தின் வெற்றி தோல்வி தெரியும்.

மனித உடல் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியும் வளர்ந்து வருகிறது. உடலின் கட்டுமானத்திற்கு அடித்த யூனிட்டாக இருப்பது உயிரணுக்கள். இவை ஒவ்வொரு நாளும் பல்லாயிரக் கணக்கில் தோன்றி மடிகின்றன. காலையில் தோன்றி மாலையில் மடிவதில்லை தோன்றுபவை வளர்ந்து அதற்கு உரிய காலம் இருந்து பின் மடிகிறது. அந்த இடத்தைப் புதியவை தோன்றி நிரப்புகின்றன. இந்த மாறுதலைப் பற்றி உடலியல் விஞ்ஞானிகள் இன்றைக்கு இருக்கும் செல்களில் ஒன்றுகூட ஏழாவது ஆண்டில் இருக்காது ஒவ்வொரு ஏழு ஆண்டிலும் மனிதன் புதுமை பெறுகிறான் இதிலும் ஏழின் எழிலைப் பார்க்கலாம். பரு உடலில் சில அங்கங்கள் ஐந்து ஐந்தாக இருக்கின்றன. ஐந்து விரல்கள் ஐந்து பொறிகள், ஐந்து புலன்கள், ஐந்து பிராணன்கள், ஐந்து கோஷங்கள் என்று ஐந்தைந்து இந்த ஐந்தை சூக்கும உடலில் உள்ள இரண்டு தத்துவங்களைச் சேர்த்து ஏழு ஏழாகக் கூறுபவர்களும் உண்டு. இதன் விளக்கங்களை சித்த மருத்துவ நூல்களில் காணலாம்.

இங்கு நாம் தெரிந்து கொள்ள வேண்டியது இந்த ஏழில் விதியை உணர்ந்து அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் புறக்கணித்து விடக்கூடாது. ஆறு நாள் உணவு உண்டவர்கள் ஏழாம் நாள் உண்ணா நோன்பு ஏற்று வயிற்றுக்கும் பிற ஜீரண உறுப்புகளுக்கும் ஓய்வு கொடுப்பவர்கள் நீண்டநாள் நோயின்றி வாழலாம்.
ஏழின் எழில் தொடரும்..
(இயற்கை இன்னும் வளரும்)

திங்கள், 21 ஜூன், 2010

பகுதி 20 - 
இயற்கை மருத்துவம்
(தத்துவங்களும் செயல்முறைகளும்) 
மகரிஷி க.அருணாசலம்.

ஏழின் எழில்

மனிதனின் ஆயுட்காலம் 150 வருடங்கள் 49, வருடங்களாகப் பிரித்தால் இளமை, வயது, பலன்தரும் கிழப்பருவம் என்ற மூன்று வட்டங்களில் இது அமையும். இடையீட்டு ஒழுங்கில் இப்பருவ நிகழ்ச்சிகளை உடலில் தோன்றும் நோய்களிலும் நாம் காண்கிறோம். தசைகள் விரிந்து காய்ச்சல் வந்த ஆறாம்நாள் சிறப்பான அறிகுறிகள் தோன்றுகின்றன. அதன் பிறகு ஒவ்வொரு ஏழுநாள் கழித்தும் நோய் முற்றுகிற அல்லது குறைகிற குணங்களை நாம் காணலாம்.

நாட்பட்ட நோய்களிலும் இதே இடையீட்டு ஒழுங்கை அனுபவமுடையவர்கள் கண்டு கொள்ளலாம். இயற்கை மருத்துவ முறைகளைக் கையாளும் நாட்பட்ட நோயாளி ஒழுங்காக இயற்கை வாழ்வு வாழ்ந்தால் ஐந்து வாரங்களில் நல்ல மாறுதல்களைக் காண்பார். ஆறாவது வாரம் நோய் குணமாகும் அறிகுறிகள் தோன்றும். அதாவது உடலில் பிராணசக்தி அதிகரித்து அதன் பயனாக வெளித்தள்ளும் இயக்கம் தீவிரமாகும். அழுக்குகள் தீவிரமாக வெளியே வரும் பொழுது அதனோடு கூடவே வலியோ, காய்ச்சலோ அல்லது வேறு அறிகுறிகளோ தோன்றும் இதனை இயற்கை மருத்துவர்கள் நோயாளி குணமடைந்து வருவதன் அறிகுறிகள் என்று கண்டு கொள்வார்கள். ஆனால் மருந்து மருத்துவர்களோ, இதனை நோயின் அறிகுறிகள் என்று நினைத்துப் புதிய மருந்துகளை கொடுத்து அழுக்கு வெளியேறுதலைத் தடை செய்வார்கள்.

இயற்கை மருத்துவத்தில் ஏழின் எழில் என்னும் விதியை ஒட்டி ஆறாவது வாரம் தோன்றும் நோயின் அறிகுறிகளுக்கு ஏற்ற சிகிச்சை முறைகளைக் கையாளுவார்கள். இயற்கையின் இடையீட்டு ஒழுங்கின் நியதிகளை நன்கு உணராத நோயாளிகள் இது எனக்குப் பல மாதங்களுக்கு அல்லது சில வருடங்களுக்கு முன்னர் வந்த அதே நோய்தான் மறுபடியும் வந்துள்ளது இயற்கை வாழ்வு முறைகள் கொஞ்சம் பயனளித்துள்ளது. ஆனால் இவை நீண்ட பரிகாரமளிக்கவில்லை என்று மனம் தளர்ந்து உடனடியாக உயிர் கொடுக்கும் மருந்து மருத்துவர்களை நாடுகிறார்கள்.

அவை என்னமோ பழைய வலிகள் தான்; இயற்கை மருத்துவ முறை புது நோய்களை உண்டு பண்ணாது நோயில் திரும்பு கட்டம் என்பது உள்ளே பரம்பரைச் சொத்தாகச் சேர்ந்திருக்கும் வேண்டா நச்சுப்பொருள்களை கண்டமாக (crisis) வெளியேற்றுகிறது. இவை பழைய வலிகளே எனினும் விரைவில் மாறும் நோயாளி இயற்கையை ஒட்டி வாழந்தால் பிராணசக்தி பழையனவற்றை வெளியேற்றி புதிய உடலைக் கட்டியமைக்கும். ஒவ்வொரு கண்த்திற்குப் பின்பும் நோயாளி புதுபலம் பெற்றுத் தேறுவார்.

ஹீலிங் கிரைஸிங் (Healing Crisis) எனப்படும் திரும்புகட்டம் ஒவ்வொரு நோயிலும் அவசியம் தோன்றுமா? என்ற கேள்வி எழலாம். இது நோயாளியின் ஆற்றல் நிலையைப் பொறுத்தது பிராணசக்தி மிகவும் குறைந்து தளர்ந்து போன நிலையில் திரும்புகட்டமே வராமல் போய் மேலும் மேலும் பலகீனப்படுத்தும் அறிகுறிகள் தோன்றி எஞ்சிய நச்சுப்பொருள்களை வெளியேற்ற முடியாமல் இக்கட்டான கண்டங்கள் தோன்றலாம். இவை நோயாளியின் முடிவு காலத்தையே வேகப்படுத்துவதாக இருக்கும் ஆனால் பிராணசக்தியை மிச்சப்படுத்தி இயற்கையையொட்டி வாழ்க்கையை அமைத்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறினால் வாழ்நாளை நீட்டி சுகம் பெற வாய்ப்பு ஏற்படலாம்.

சில நோயாளிகள் தமக்கு எத்தனை திரும்புகட்டங்கள் (Stages) ஏற்படுமென்று கேட்கின்றனர். ஒரு நோயாளி பூரணநலம் பெற எத்தனை கட்டங்கள் அவசியமோ அத்தனைக்கு மேலோ குறைவாகவோ ஒன்றுகூட ஏற்படாது என்று உறுதியாகச் சொல்லலாம். இயற்கை படிப்படியாக முன்னேறுகிறது. ஒரு வேலையாக எடுத்துக் கொண்டு அதனைப் பூர்த்தி செய்த பின்னர் வேறொன்றை எடுத்துக் கொள்கின்றது.

முதலில் ஜீரண உறுப்புக்களை வலிமையுடையனவாக ஆக்குவதற்கான பணி நடைபெறுகின்றது. ஆரோக்கிய வாழ்வு போதுமான உள்ளிழுத்தலையும் அளவிற்குறையாத வெளியேற்றுதலையும் பொறுத்துள்ளது வயிறும், குடலும் திறமையாக வேலை செய்யும் பொழுதுதான் நிரந்தர ஆரோக்கியம் கிடைக்கும். எந்த சிகிச்சை இந்த உண்மையைக் கவனிக்காமல் விட்டுவிடுகிறதோ அது வெற்றியடையாது. இந்த உண்மையினை நோயாளிகள் உணர்ந்து ஒத்துழைப்புக் கொடுக்காவிட்டாலும் தோல்வியே கண்டபலனாக இருக்கும்.

(இயற்கை இன்னும் வளரும்)

வியாழன், 17 ஜூன், 2010

பகுதி 19

இயற்கை மருத்துவம் (தத்துவங்களும் செயல் முறைகளும் - மகரிஷி க.அருணாசலம்.

மனிதன் சோம்பலுக்கு ஆட்பட்டு அதிகம் தூங்குவதனாலோ, நாக்குக்கு அடிமையாய் பெரும் திண்டிக்காரனாக ஆவதனாலோ ஜீரண சக்தி குறைந்து, உண்ட உணவு நச்சுப்பொருளாக மாறுகின்றது. அன்னரசம் இரத்தமாக மாறாமல், சளியாக மாறுவதும் அதனால் இயக்கத்தடை ஏற்படுவதும் வாழ்க்கையை நெறிப்படுத்திக் கொள்ளாதவர்களின் செயல்களிலிருந்து நாம் அறிகிறோம். ஆரம்ப நிலையில் இயக்க நோயாக இருப்பது நாளடைவில் உறுப்பு நோயாக வளரும். இயக்கநோய் நிலையிலேயே பரிகாரம் காண்பது எளிது. ஆனால் நவீன மருத்துவர்கள் இயக்க நோய்க்குக் காரணமாக மலங்களை வெளியேற்றுவதற்குப் பதிலாக அவற்றை அடக்கும் விஷமருந்துகளைக் கொடுத்து நோயை வளர்க்கின்றனர். இயக்கநோய் கொடுக்கும் தீவிர வலியும், துன்பமும் தற்காலிகமாகக் குறைந்தாலும் அவை உள்ளே நின்று உறுப்புக்களை அழிக்கின்றன. அந்த நிலையில் உறுப்புக்களுக்கு புத்துயிர் கொடுப்பது எளிதல்ல. இருப்பினும் இயற்கை ஆற்றல்கள் அனைத்தையும் முறையுடன் பயன்படுத்தினால் உடம்புக்கு புத்துயிர் ஊட்டுவது சாத்தியமே.

ஆரம்ப நிலையில் நம்பிக்கையினாலும் சாதகமான எண்ணங்களின் வலிமைகளினாலும் பல நோய்களைப் போக்கலாம். எனினும் இயக்க நோய்க்கும், மனநோய்க்கும் உள்ள வேறுபாட்டைக் கவனத்தில் கொள்ளவேண்டும். இதிலுள்ள வேற்றுமை மிகவும் நுண்ணியதே பார்க்கப் போனால் வேற்றுமை இல்லையென்றே கூடச் சொல்லிவிடலாம். இயற்கை மருத்துவர் இதைப்பற்றி அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை. நோயாளியை நல்ல சூழலில் இருக்க வைத்து அவரை சீரிய எண்ணங்களை எண்ணும்படியாகவும் பசியின் நிலையை அறிந்து சாத்வீக உணவுகளை உண்ணும்படியாகவும் செய்தால் நோய் நீங்கி பூரண சுகம் பெறுவர்.

(இயற்கை இன்னும் வளரும்)
அடுத்த பதிவில் ஏழின் ஏழில்....

ஞாயிறு, 13 ஜூன், 2010

பகுதி 18 - இயற்கை மருத்துவம் (தத்துவங்களும் செயல்முறைகளும்)  மகரிஷி க.அருணாசலம்.

இருவகை நோய்
நோய்களைப் பல பெயரிட்டு அழைக்கிறோம். இவைகளை இரு பெரும் கூறுகளாகப் பிரிக்கலாம். ஒன்று உறுப்பைச் சார்ந்த நோய்கள். மற்றொன்று இயக்க கூறுகளைச் சார்ந்த நோய்கள். இதனை ஆங்கிலத்தில் Organic நோய்களென்றும் Functional நோய்களென்றும் கூறுகின்றனர். இயற்கை மருத்துவர்கள் நோய் ஒன்றே பல அல்ல என்று கூறுவது நமக்குத் தெரியும். மலம் உள்ளே தங்குவதால் ஏற்படுகிற நச்சுப் பொருள்கள் இயக்கத்தை தடை செய்யலாம். அல்லது உறுப்பையே தேய்த்து உருச்சிதைவு உண்டுபண்ணலாம். அந்த நிலையில் உறுப்புக்கள் செயலிழக்கும். இயக்கம் தடைபட்டு அதனால் துன்பம் விளைகிறபோது அதனை இயக்கக்கூறு சார்ந்த நோய்கள் என்று சொல்கிறோம். உதாரணமாக பெருங்குடலில் மலம் தங்கி நின்று உஷ்ணத்தால் காற்று விரிவடைந்து ரத்தத்தோடு கலக்கிறது அத்தகைய கெட்ட ரத்தம் முழங்கை, முழங்கால் போன்ற மூட்டுக்களில் தேங்கி வலியை உண்டு பண்ணுகின்றன. இதனை வாத நோய் என்றும், மூட்டு வலி என்றும் சொல்லி அதற்கான சிகிச்சை செய்கின்றார்கள். பெருங்குடலில் மலம் தங்கியிருக்கின்ற பொழுது அது சிறுகுடல் இயக்கத்தையும் பாதிக்கும் சிறு குடலுக்கும், பெருங்குடலுக்கும் இடையிலுள்ள வால்வின் வேலை தடைபடுகின்றது. பெருங்குடல் அதாவது ஏறு குடல் ஆரம்பமாகின்ற இடத்திலுள்ள குடல் வாலில் அழற்சி ஏற்பட்டு அந்த உறுப்பு வீங்கித் துன்பம் கொடுக்கிறது. இதனை உறுப்புக்கு வந்த நோய் என்கின்றனர். இயக்க நோய் உறுப்பு நோயாகவும், உறுப்பு நோய் இயக்க நோயாகவும் மாறலாம். ஒரு நிலையில் இயக்கத் தடையாக இருப்பது பிரிதொரு நிலையில் உறுப்பு நோயாக மாறிவிடுகிறது. இந்த வித்தியாசத்தை சரியாகப் புரிந்து கொள்வது மிகமிக அவசியம்.

இரத்தத்தில் மலம் கலந்து அது சிறு நீரகத்தின் வழியாகப் போய்வரும்பொழுது சிறுநீரகம் இரத்தத்திலுள்ள மலத்தைப் பிரிக்கும் பணியைச் செய்கிறது. தோல் வழியாகவும், மலக்குடல் வழியாகவும், மூக்கு வழியாகவும், வெளியேற வேண்டிய மலங்கள் அவ்வாயில்கள் அடைபட்டு இருப்பதனால் அவற்றை சிறுநீரகத்தின் வழியாக வெளியேற்ற வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. இதனால் சிறு நீரகத்திற்கு வேலைபளு அதிகமாகி தளர்ச்சியுறலாம். தனது இயல்பான வேலையைக் கூடச் செய்ய இயலாமல் போகும் நிலை வரலாம். குறிப்பிட்ட மலத்தில் இரசாயன வேகத்தால் சிறுநீரகத்தின் அமைப்புச் சிதையலாம். சிறுநீரகம் வேலை செய்ய முடியாத போது அதனை சிறுநீரக அமைப்பு நோய் என்று கருதி சிகிச்சை செய்கின்றனர். கெட்டுப்போன சிறுநீரகத்தை எடுத்துவிட்டு புதிய சிறுநீரகம் புகுத்தினால் நோய்த்துன்பம் குறைந்து சுகமடையலாம். அறுவைசிகிச்சை நிபுணர்கள் இப்போது இதை இலகுவில் செய்கிறார்கள். சாதாரண இயந்திரங்களில் ஒரு உறுப்பை எடுத்து விட்டு அதற்குப் பதில் புதிய உறுப்பை அமைப்பது எளிதாகலாம். ஆனால் உடம்பின் ஒன்றோடொன்று இயல்பாக இணைந்துள்ளவற்றை எடுப்பது எளிதானாலும், புதிய ஒன்றைப் பொருத்துவது அவ்வளவு சுலபமானதல்ல நிபுணர்கள் சிறு நீரகத்தையோ இதயத்தையோ அல்லது வேறு உறுப்புகளையோ, மாற்றி அமைப்பதை நாம் இப்போது கேள்விப்படுகின்றோம். இதனால் சிலர் குணமடைந்ததாகவும் அறிகின்றோம். அறுவைச்சிகிச்சையால் தற்காலிக குணமடைந்த பலர் வேறு பல உறுப்புக்கள் பாதிக்கப்படுவதையும் நாம் கேள்விப்படுகின்றோம். அறுவைச்சிகிச்சை முறைகளைக் கையாள்வதை விட நோயின் ஆரம்ப காலத்திலேயே இயற்கை முறைகளைக் கையாண்டு மலங்களை உரிய காலத்தில் வெளியேற்றிவிடுவதே சிறந்தது.

(இயற்கை இன்னும் வளரும்)

புதன், 9 ஜூன், 2010

பகுதி 17 - இயற்கை மருத்துவம் (தத்துவங்களும் செயல்முறைகளும்) மகரிஷி க.அருணாசலம்.

இயற்கை நியதிகள்

உலகத்தில் எல்லாம் ஒருநியதியின் கீழ் நடைபெறுகின்றன. வானத்திலுள்ள உடுக்கள் ஓடி ஆடுவது கூட ஒரு நியதியோடுதான். சூரிய சந்திரர்கள் நியதியோடு இயங்குவது நாம் அறிந்ததே. நியதி என்றால் கணக்கிற்கு உட்பட்டது. அளவிட முடியும் எண்ணால் குறிப்பிடலாம். ஒழுங்குமுறை என்பது இதனின் ஒருவகையே கணக்கில் கூடுதலோ, குறைதலோ இருக்கும் போது சமநிலைச் சீரழிவு ஏற்படுகிறது. அமைதி குறையும். மனிதர்கள் பெரும்பாலும் விரும்புவது அமைதியையே. இதனை நிலை நாட்ட விரும்புபவர்கள் விதிமுறைகளை அறிந்து சமநிலைக்குக் கொண்டுவரப் பாடுபடுகிறார்கள். விதிமுறைகளில் ஒன்று, எல்லாம் ஏழு, ஏழாகத் தொகை நிலையில் கூடி நிற்கிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. படைப்பு ஆறு நாட்களில் நடந்தது ஏழாம் நாள் ஓய்வு பெற்று மறுபடியும் படைப்புக்குப் பரமன் தயாரானார் என்பது ஒரு சாரார் கொள்கை. சந்திர கலைகளும் இந்த அளவிலேயே நடைபெறுகின்றன. திங்களை முதல் நாளாகக் கொண்டு கணக்கிடுகிறார்கள். சூரிய ஆதிக்கத்தில் நம்பிக்கையுடையவர்கள் ஞாயிற்றுக்கிழமையை முதல் நாளாகக் கொண்ட கணக்கிடுகிறார்கள். எப்படியும் ஏழுக்குள் ஒன்று பரிபூரண ஓய்வுக்காக என்பது கோட்பாடு. உழைப்பும், ஓய்வும் ஆறும் ஒன்றுமாகக் கூட்டளவில் இருந்தால் இது ஆரோக்கியநிலை: சமநிலை இதுவே அழியாத ஆனந்தத்தைக் கண்டு கொள்ள இயலாது

இந்த ஏழின் எழில் நிறைந்த சட்டத்தை அடுத்து வரும் அத்தியாயங்களில் விரிவாக விளங்கிக் கொள்ள முயலுவோம்.

(இயற்கை இன்னும் வளரும்)