திங்கள், 2 மே, 2011

6. கனி இருப்ப... மனித உடல் எனும் மாபெரும் 'ஆ'ச்சரியம்

கனி இருப்ப.
(அஷ்வின்ஜி வழங்கும் இயற்கை நலவாழ்வியல் தொடர்.)

முந்திய பகுதிகளைப் படிக்க இங்கே சொடுக்குங்கள்:






கனி இருப்ப... தொடர்கிறது....

பகுதி ஆறு:
'என்னை இறைவன் நன்றாக வைத்தனன் தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே' என்பார் திருமூலர். உடம்புக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்பதையே மெய்யுணர்வு (அ) மெய்ஞானம் என்றும் கூறலாம். இதைத்தான் 'உள்ளத்திலே சீவன் உறைகின்றானென்று உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்ததேனே' என்பார் திருமூலர். உலகிலேயே மிகப் பெரிய பொய், நிலையாத இந்த உடல்தான் என்னும் மெய்யை உணர்த்துவதால்தான் பொய்யான இந்த உடலை மெய் என்றார்கள் ஞானிகள்.  ஆனால் உலக வாழ்வுக்கு இந்த உடல்தேவையாக இருப்பதினால் உடலை வளர்க்கும் உபாயம் பற்றி எல்லாம் ஞானிகள் கூறுகிறார்கள். மனித உடல் ஒரு அற்புதமான இறையருட்கொடை. உடலின் எல்லா உறுப்புகளும் மிக அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது என ஆய்வாளர்களும் அறிவியலார்களும் வியந்து பாராட்டுகிறார்கள்.பல மில்லியன் ஆண்டுகளாக தொடர் ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட் மூலம் இயற்கை அன்னை மனித உடலின் பாகங்களை சிறப்பாக உருவாக்கி தொடர்ந்து அந்த உடலை பணி புரிய வைத்துக் கொண்டிருக்கிறாள். ஒரு மனிதனின் உடலை கவனித்தால் பெரும் வியப்பு எழுகிறது. ஓயாமல் உடலின் உறுப்புகள் செய்யும் வேலை நமக்கு மாபெரும் வியப்பை உருவாக்குகிறது.
  • கல்லீரல்: ஒரு வருடத்தில் ஒரு மனிதனின் கல்லீரல் 23 தண்ணீர் லாரியில் நிரப்பக்கூடிய அளவுக்கு ரத்தத்தை வடிகட்டுகிறது. 
  • மூளை: உடலின் கனமான உறுப்பு மூளை. இதன் எடை சுமார் ஒன்றேகால் கிலோ 
  • நீரின் அளவு:மனித உடலில் 60 சதவிதம் நீர் தான் உள்ளது. இது சுமார் 50 லிட்டர் இருக்கும். அதாவது நூறு கிலோ மனிதனின் உடலில் 60 லிட்டர் தண்ணீர் தான் இருக்கிறது.
  • இதயம்:இதயம் 24 மணிநேரத்தில் 14 ஆயிரம் லிட்டர் ரத்தத்தை 1.68 கோடி மைல் நீள ரத்தகுழாய்களின் வழியே பரவச்செய்கிறது. இது உண்டாக்கும் சக்தி 80 ஆயிரம் கிலோ எடை உள்ள பொருளை பூமியில் இருந்து ஓரடி உயரம் தூக்க போதுமானது. இதயம் ஒரு நாளில் லட்சம் தடவை சுருங்கி விரிகிறது.
  • பிட்யூட்டரி சுரப்பி:மூளையின் அடிப்பகுதியில் இருக்கும் பிட்யூட்டரி சுரப்பி தான் உடல் வளர்ச்சியையும், பாலின தன்மையையும் கட்டுப்படுத்துகிறது. ஒரு சிறு பட்டாணி அளவே உள்ள இது, உடலின் பல்வேறு பகுதிகளுடன் 50 ஆயிரம் நரம்புகளால் தொடர்பு கொண்டுள்ளது. 
  • உடலின் வளர்ச்சி:ஒருமனிதன் 25 வயதில் முழு வளர்ச்சி பெற்றுவிடுகிறான். 40 வயதுக்கு மேல் வளர்ச்சி நின்றுவிடுவது மட்டுமல்லாமல் மெதுவாக குறையவும் தொடங்கும். 10 ஆண்டுகளுக்கு 4/10 அங்குலம் என்ற அளவில் உயரம் குறைய தொடங்கும். இது குருத்தெலும்புகள்   காய்ந்து போவதால் தான் நேர்கிறது. நாம் பகலை விட இரவில் தான் அதிகம் வளர்கிறோம். குழந்தைகள் கோடை காலத்தில் மழைகாலத்தை விட வேகமாக வளர்கிறார்கள். 
  • இதயத் துடிப்பு:ஒருவரது வாழ்நாளில் இதயம் சுமார் 200 கோடி தடவை துடிக்கிறது. அப்பொழுது 50 கோடி லிட்டர் ரத்தத்தை உடலுக்குள் பாய்ச்சுகிறது. உறங்கும் போதும் கூட மணிக்கு 340 லிட்டர் ரத்தத்தை பாய்ச்சுகிறது.வளர்ச்சி அடைந்த ஒரு ஆண் ஓய்வில் இருக்கும் போது அவனது நாடித்துடிப்பு நிமிடத்துக்கு 70 முதல் 72 வரை இருக்கும். அதுவே முழுமையாக வளர்ந்த பெண் என்றால் 78 முதல் 82 வரை அவளது நாடித்துடிப்பு இருக்கும். கடுமையான உடல்பயிற்சி செய்யும் போது இது 200 வரை உயரும் நாடித்துடிப்பு என்பது இதயத்தின் துடிப்பு என்பதையே குறிக்கிறது. 
  • சருமம் (தோல்): மனித உடலில் மிகப்பெரிய உறுப்பு எதுவென்றால், அது சருமம் தான்.  வளர்ந்த ஒரு ஆணின் சருமத்தின் பரப்பளவு 20 சதுர அடி இருக்கும். இதுவே பெண் என்றால் 17 சதுர அடி இருக்கும். ஒவ்வொரு இரவிலும் தூங்கும் பொழுது, உடல் சுமார் 8 மில்லி மீட்டர் வளர்ச்சி அடைகிறது. பகலில் இந்த உடல் வளர்சி சுருங்கி விடும். உட்காரும் பொழுதும், நிற்கும் பொழுதும் முதுகில் உள்ள குருத்தெலும்புகள் அழுத்தப்பட்டு சுருக்கம் ஏற்படுகிறது. தூங்கும் பொழுது அழுத்தம் இல்லாததால் நீண்டு வளர்கிறது. 
  • ரோமங்கள் (முடி): சராசரியாக உடலில் 50 லட்சம் ரோமங்கள் இருக்கும். உடலில் கருத்த ரோமமுடையவர்களுக்கு சற்று கூடுதலாக இருக்கும். உள்ளங்கை, உள்ளங்கால் விரல்களில் உட்புறம் ஆகிய இடங்களில் மட்டுமே ரோமம் வளர்வதில்லை. 
  • எலும்புகள்:குழந்தை பிறக்கும் பொழுது 300 எலும்புகள் இருக்கும். இவற்றில் 94 எலும்புகள் இளகி மற்றவற்றுடன் இணைந்து வளர்ந்த பருவத்தில் 206 ஆகிறது. எடையை தாங்குவதில் எலும்புகள் கருங்கல்லை விட உறுதியானவை. ஒரு தீப்பெட்டி அளவு உள்ள எலும்பு 9 டன் எடையை தாங்கும் அதாவது கருங்கல்லை போல நான்கு மடங்கு அதிகம். 
இப்படி எண்ணற்ற வேலைகளை ஓயாமல் உடல் செய்து கொண்டே இருக்கிறது.  இந்த வேலைகள் நின்றுவிட்டால் வாழ்க்கை ஓட்டமும் நின்று விடுகிறது. இந்த செய்திகளை நான் திரு வடிவுடையானின் வலைப்பூவில் இருந்து எடுத்தாண்டிருக்கிறேன். அருமையான செய்திகளை தந்தமைக்கு நன்றி: திரு.வடிவுடையான் அவர்களின் வலைப்பூ:http://vcvadivudaiyan.com/blog/archives/282

(நலம் தொடரும்)
வாழி நலம் சூழ..
அஷ்வின்ஜி.

ஞாயிறு, 1 மே, 2011

5. கனி இருப்ப... இயற்கை நலவாழ்வியல் தொடர்..

(அஷ்வின்ஜி வழங்கும் இயற்கை நலவாழ்வியல் தொடர்)

முந்தைய இடுகைகளுக்கு:

பகுதி ஒன்று: அறிவிப்பு.

பகுதி இரண்டு: முன்னுரை மற்றும் அறிமுகம்.

பகுதி மூன்று: இயற்கை நலவாழ்வியல் ஒரு மருந்தற்ற மகத்துவம்.

பகுதி நான்கு :- இயற்கை மருத்துவம் என்றால்…?

பகுதி ஐந்து தொடர்கிறது.

இயற்கை நலவாழ்வியல் பற்றி நான் படித்த, கேட்ட, உணர்ந்த விஷயங்களின் தொகுப்பாக பதிவுகளை வெளியிட்டு வருகிறேன். படித்து பாராட்டி பின்னூட்டி வரும் அனைத்து ஆர்வலர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

சீரியசான இந்த தொடருக்குள் செல்லுமுன்பாக ஒரு ஜோக்கை படியுங்கள்.
ஒரு பூங்காவில் வயதான ஒருத்தர் உட்கார்ந்து அழுது புலம்பிக்கிட்டு இருந்தார். 
அவரு கிட்ட போயி "என்னங்க விஷயம்"ன்னு கேட்டேன்.
அதுக்கு அவர்  "போன மாசம் தான் ரிட்டயரு ஆனேன். ஏகப்பட காசு வந்துச்சி நெறய சொத்து, காரு இருக்கு, அருமையான மனைவி, புள்ளைங்க எல்லாம் இருக்காங்க, வேளாவேளைக்கு அருமையான சாப்பாடு போட்டு என்னை அருமையா கவனிச்சுக்குவாங்க"ன்னாரு. இந்தப் பதிலைக் கேட்டவுடன் நான் அவரைப் பாத்து, "அப்றம் ஏங்க இங்க ஒக்காந்து அழுதுகிட்டு இருக்கீங்க"ன்னு கேட்டேன் அதுக்கு அவர் என் வீட்டுக்கு போற வழி மறந்து போயிட்டேன்"ன்னாரு.
இந்த ஜோக்குக்கும் கட்டுரைக்கும் தொடர்பு இருக்கிறது. தொடர்ந்து படிக்கும் போது இறுதியில் நீங்களே புரிந்து கொள்வீர்கள்.
கனி இருப்ப... 
தொடர்கிறது..
சென்னை அண்ணாசாலை, காயிதே மில்லத் கலைக் கல்லூரி வளாகத்தில் நிறைந்திருக்கும் மரங்களைப் பார்த்திருக்கிறீர்களா? பல நூறு ஆண்டுகளாக வாழும் மரங்கள் அவை. சென்னையின் அதிகமான வாகனப் போக்குவரத்து புழங்கும் இடம் அண்ணா சாலையின் அந்தப் பகுதி. வாகனப் புகையின் மாசு அதிகம் உள்ள இடம். இந்த மரங்கள் இன்னும் ஆரோக்கியமாக வாழ்வதற்குக் காரணம் என்னவாக இருக்கும்? 

அவைகளை சுற்றுப் புற மாசுகள் பாதிக்காமல் இருப்பதற்கு என்ன காரணம்? 

நமது சுவாச கோஷங்களைப் பாதிக்கும் மாசுக்கள், அவற்றை ஏன் பாதிக்க வில்லை? 

நாம் பெறுவது போல அவற்றிற்கு மருத்துவமோ, மருந்துகளோ யார் தருகிறார்கள்? 

அந்த மரங்களால் சுற்றுப் புற சூழல் சீர்கேட்டினை எவ்வாறு எதிர் கொள்ள முடிகிறது? 

அந்த மரங்கள் இயற்கையை நம்பி இருக்கின்றன. அந்த மரங்களுக்கு வாழும் சக்தியை பஞ்ச பூதங்களும் தருகின்றன. 

அவை நிலைத்து நிற்க, மண்ணும், உயிர் வாழ நிலத்தடி நீரும், காற்றும், விண்ணும், சூரியன் தரும் அழலும் (வெப்பமும்) நேரடியாக இயற்கையில் இருந்தே கிடைக்கின்றன. 

அவை செயற்கையாக எவற்றையும் பெறுவதில்லை. இரவு பதினோரு மணியில் இருந்து அதிகாலை நான்கரை மணி வரை அவற்றுக்கு தேவையான ஓசோன் காற்று நேரடியாக கிடைத்து விடுகின்றது. 

அதுவே இந்த மரங்கள் நாம் அவற்றுக்கு எதிராக எத்தனை மாசுப் புகைகளை செலுத்தினாலும் அவற்றை எதிர் கொண்டு ஆரோக்கியமாக உயர்ந்து வளர்கின்றன. நமது தவறான வாழ்க்கை முறை காரணமாக நமது உடலின் மரபு அணுக்களில் கூட சீர் கேடுகள் விளைகின்றன. அதன் காரணமாக நமக்கும், நமது வாரிசுகளுக்கும் இந்த மரபணுக் குறைபாடுகளின் காரணமாக நோய்கள் வருகின்றன. 

ஆனால், அண்ணா சாலையில் நிற்கும் அந்த ஒரு வேப்ப மரம் தனது மருத்துவ குணாதிசயங்களை கொஞ்சமும் மாற்றிக் கொள்ளவில்லை. அதன் மரபணு சீர் குலையவில்லை. பஞ்ச பூதங்களின் துணையுடன் அவைகள் வாழ்வதால் எந்த ஊறுபாடும் இன்றி நெடிதுயர்ந்து நிற்கின்றன.

இன்றைய கால கட்டங்களில் நாம் நம்மை நான்கு சுவர்களுக்கு மத்தியில் அடைத்துக் கொண்டு வாழப் பழகி விட்டோம். மேலும் நேரத்துக்கு தூங்குவதில்லை. பதினொரு மணிக்கு முன்னர் உறங்காவிட்டால் பிரபஞ்சம் தரும் ஓசோன் மூலமாக வருகின்ற பிராண சக்தி நம்மை அடைவதில்லை. உறங்கி இருக்கும் போது தான் இந்த பிராண சக்தி நமக்குள் ஒன்று பட வாய்ப்பு இருக்கிறது. மரங்கள் இரவு வேளைகளின் பொழுது நாம் மாசுபடுத்திய காற்றினை ஆக்சிஜனைத் தயாரித்து வெளிப்படுத்துவதன் மூலம் சுத்தப் படுத்துகின்றது. 
 மனிதனின் உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாதது மரங்கள்.
படம் : நன்றி : கூகிள் 

இந்த அற்புதமான காற்றை சுவாசிக்காமல் நாம் கதவுகளை அடைத்துக் கொண்டு மின்விசிறியின் காற்றையோ அல்லது குளிர் சாதன பெட்டி தரும் காற்றையோ சுவாசித்துக் கொண்டிருக்கிறோம்.அதோடு கூட கொசுவிரட்டியின் புகையையும் காசு கொடுத்து சுவாசித்து நம் ஆரோக்கியத்தை கெடுத்துக் கொண்டிருக்கிறோம். வியாதிகளின் பெருக்கத்திற்கு என்ன காரணம் என்று இப்போது புரிகிறதா?

இன்றும் தயாராகக் கிடைக்கும் இயற்கை அன்னையின் அருட்கொடைகளை விட்டு விலகி போய்க் கொண்டிருக்கிறோம் நாம். 

நவீன வாழ்வின் சுகபோகங்களின் ஆதிக்கத்துக்குள் சிக்கிக் கொண்டு ஆதி சக்தி நமக்கு தர தயாராக வைத்திருக்கும் உன்னத இயற்கை நலவாழ்வியல் வளங்களை மறந்து போய் விட்டோம், இந்த பதிவின் ஆரம்பத்தில் புலம்பிக் கொண்டிருக்கும் வயதான பெரியவர் போல.

நவீன வாழ்க்கைக்கு எதிராக எதுவும் நான் சொல்லவரவில்லை. நம்மால் இந்த வாழ்க்கையை தவிர்க்க முடியாது. ஆனால் இயற்கை நலவாழ்வியல் முறைகளை கடைப் படிப்பதின் மூலம் நவீன வாழ்க்கையின் சுகங்களை, அவை தரும் பாதிப்புக்கள் இன்றி அனுபவிக்க நம்மால் இயலும்.

நமது வாழ்க்கை, தொழில் மற்றும் வாழ்வாதாரங்கள், பொருளாதாரம் போன்றவை பாதிக்காமல் சிறிய மாற்றங்களை மேற்கொள்வதின் மூலம் நம்மால் இயற்கை நலவாழ்வியலை மேற்கொள்ள முடியும். 

அவற்றைப் பற்றி மேலும் சிந்திப்போம்..

(நலம் தொடரும்)
வாழி நலம் சூழ..
அஷ்வின்ஜி.

முக்கியக் குறிப்பு: இந்தத் தொடர் கட்டுரையின் அடுத்த பகுதி இரண்டு வாரங்கள் கழித்து வெளியாகும். திருச்சி அருகே உள்ள பெருகமணி என்னும் இயற்கை வளம் நிறைந்த காவிரிக் கரையோரத்து ஊரில் மே நான்காம் தேதியில் இருந்து எட்டாம் தேதி வரை நடைபெறும் ஐந்து நாள் முழு நேர இயற்கை நலவாழ்வியல் முகாமில் கலந்து கொள்ள செல்கிறேன். அதிகாலை நாலரை மணியில் இருந்து இரவு ஒன்பதே கால் வரை பயிற்சிகள் தரப் படுகின்றன. முழு இயற்கை சூழலில், யோகாசனப் பயிற்சி, இயற்கை உணவு தயாரிப்பு முறைகள், தியானம், பிராணாயாமம், இயற்கை நலவாழ்வியல் குறித்த அறிஞர்களின் நேரடி பயிற்சி போன்றவைகளை அங்கே பெறலாம். அங்கே நான் கண்டு, கேட்டு, உணர்ந்த விஷயங்களை அடுத்த தொடரில் இருந்து வெளியிடுவேன். நவீன வாழ்க்கையின் இன்னல்களில் இருந்து விடுபடும் இரகசியங்களை அந்தத் தொடர் கட்டுரைகளின் உங்களுக்கு நான் வெளிப்படுத்துவேன். காத்திருங்கள். நன்றி.

செவ்வாய், 26 ஏப்ரல், 2011

4. கனி இருப்ப..
(அஷ்வின்ஜி வழங்கும் இயற்கை நலவாழ்வியல் தொடர்)

பகுதி நான்கு.

இந்தத் தொடருக்கு பொருத்தமான செய்தியை ஒரு வலைப்பூவில் கண்டேன் அதனை இங்கே மீள் பதிவாக இடுகிறேன்.

உலகில் பல்வேறு வகையான மருத்துவ முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.

ஆங்கில மருத்துவம், சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் என ஒவ்வொருவரும் தங்களது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப குறிப்பிட்ட மருத்துவ முறையை நாடுகின்றனர்.

சமீபகாலமாக ‘இயற்கை மருத்துவம்’ உலக அளவில் பிரபலமடைந்து வருகிறது.

இயற்கை மருத்துவம் என்றால்…?

தாவரங்கள் ஊசி போடுமா…?

மரங்கள் மருந்து தடவுமா…?

என்றெல்லாம் கேலியாகக் கேட்கலாம்.

ஆனால் இயற்கை மருத்துவத்தின் தாத்பரியம் அதுவல்ல.மனிதன் ஆரோக்கியமாக வாழவும், அவனது உடலில் ஏற்படும் பிரச்னைகளைச் சரி செய்யவும் இயற்கையிலேயே எண்ணற்றத் தீர்வுகள் இருக்கின்றன.

மருத்துவ மாத்திரைகளை நம்பி வாழும் நவநாகரிக மனிதனுக்கு வேண்டுமானால் இயற்கை மருத்துவம் என்பதும், அதன் தாத்பரியங்களும் புதிதாக, புதிராக இருக்கலாம்.

ஆனால் ஆதி மனிதனுக்கு இது ஒன்றும் புதிதான விஷயமல்ல. மனிதன் படைக்கப்பட்ட புதிதில் இயற்கையோடு கை கோத்துக் கொண்டு தான் வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தான்.

அப்போது அவனது வாழ்க்கை இன்பம் நிறைந்ததாக இருந்தது. ஆதிமனிதனின் ஆரோக்கியத்திலும் எந்தக் குறையும் இல்லை. அதில் குறைபாடு ஏற்பட்டாலும் இயற்கையில் இருந்தே அவனது பிரச்னைகளுக்கான தீர்வு கிடைத்தது.

இயந்திரங்களின் பெருக்கத்தால் காற்று, நீர், அண்டவெளி, மண் போன்ற இயற்கையின் செல்வங்கள் அனைத்தும் மாசடைந்தன. அதன் விளைவாக, மனிதன், விலங்கு, பறவை, தாவரங்கள் மற்றுமுள்ள உயிரினங்கள் அனைத்தும் தத்தம் இயல்புக்கு மாறான தோற்றங்கொண்டு, நோய்களைப் பெற்றுக் கொண்டன.

நாகரிகமும் விஞ்ஞானமும் வளர வளர மனிதன் இயற்கையில் இருந்து விலக ஆரம்பித்தான். பிரச்னைகளுக்கான தீர்வுகளை மனிதன், தனது ஆதாரமான இயற்கையில் தேடாமல், செயற்கையாக உருவாக்க ஆரம்பித்தான்.

அதில் அவனுக்கு வெற்றியும் கிடைத்தது.

அந்த வெற்றியின் காரணமாக 'இயற்கையை வெல்லமுடியும்’ என்கிற ஆசையும், நம்பிக்கையும் அவனிடத்தில் உருவாகின. அதன் விளைவாகக் கண்டுபிடிப்புகள் பெருகின. இயந்திரங்கள் அதிகரித்தன.மனிதன், இயற்கையில் இருந்து முற்றிலுமாக அந்நியப்பட்டுப் போனான்.

தமிழ் மருத்துவ ஆவணங்களைப் பார்க்கும்போது, மொத்தமுள்ள நோய்களின் எண்ணிக்கை 4448 என்று தெரிய வருகிறது. அக்கணக்கு சுமார் ஆயிரம் ஆண்டுக்கும் முற்பட்டது. இப்போது இந்த எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்திருக்கும்.

ஆனால், இன்றைய மருத்துவர்களை நோய்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கேட்டால், விழிக்கின்றனர். தினந்தோறும் புத்தம் புதிய நோய்கள் கண்டு பிடிக்கப்படுகின்றன.

அவற்றுக்கான மருந்துகளைக் கண்டுபிடிக்க உலகம் போராடிக் கொண்டிருக்கிறது. ஆனாலும், பல நோய்களுக்கு மருந்துகள் இன்னமும் கண்டு பிடிக்கப்படவில்லை என்பது தான் சோகம்.

வளமாகவும் நலமாகவும் வாழ வேண்டிய உயிரினம், நோய்களுடன் போராடிக் கொண்டிருக்கிறது. எந்த மருந்தாவது, எந்த நோயைத் தீர்த்து வைக்காதா? என்ற ஏக்கம் அனைத்து உயிரினங்களின் முகத்திலும் தெரிகிறது.

விலங்குகளையும் பறவைகளையும் தாவரங்களையும் காப்பாற்ற முடியாவிட்டாலும் மனித இனத்தையாவது காப்பாற்றியாக வேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகின்றது, மருத்துவம். அதனால்தான் பல்வேறு மருத்துவமுறைகள் உருவாக்கப்பட்டன. பல்வேறு வழிவகைகளைக் கையாண்டு மனிதன் தன்னைத் தாக்கும் பிரச்னைகளுக்குத் தீர்வுகளைக் கண்டுபிடித்தான். அத்தகைய வழிகள் தான் சித்தா, ஆங்கிலம், ஆயுர்வேதம் எனப் பிரிந்தன.

இயற்கையோடு இணைந்த வாழ்வு வாழ்ந்த பழங்கால மனிதன், ஆரோக்கியம் பாதிக்கப்படாத வகையில் தனது வாழக்கை முறையை அமைத்துக் கொண்டான். அதையும் மீறிஉடல் நிலை பாதிக்கப்பட்டபோது, இயற்கையில் கிடைத்த பொருள்களைக் கொண்டே அவற்றைச் சரிசெய்து கொண்டான். அவனது வாழ்க்கை முறையையும், தனக்குத்தானே அவன் செய்து கொண்ட சிகிச்சைகளையும் ஒழுங்குபடுத்தி, நெறிப்படுத்தித்தான் இயற்கை மருத்துவம் உருவாக்கப்பட்டது.

இயற்கையிலிருந்து உருவான என்பதால்தான் மற்ற மருத்துவமுறைகளை விட, இது மேலானதாகவும், சிறந்ததாகவும் கருதப்படுகிறது.

பரம்பரை நோய், ஓட்டு நோய், தொற்று நோய், உணவு நோய், உடை நோய், உறவு நோய், உவகை நோய் போன்ற எல்லாவிதமான நோய்களில் இருந்தும் நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகளைச் சொல்வதுதான் இயற்கை மருத்துவம்.

தற்போது பூமியில் நிலவிவரும் சுற்றுச்சூழல் மாறுபாடுகளால் உருவாகிற நோய்ப்பெருக்கம் மனித இனத்துக்கே பெரும் சவாலாக இருந்து வருகிறது. தன்னையும் தன்னினத்துச் சந்ததிகளையும் பாதுகாக்கும் வல்லமையை இயற்கை மனிதனுக்கு அளித்திருக்கிறது.

இயற்கை மருத்துவம் அந்த வல்லமையைத்தான் உலகுக்குப் புரிய வைக்கிறது.

உண்மையில் இயற்கை மருத்துவத்தின் அடிப்படை என்ன?

மனிதன் உயிர் வாழவதற்கு வேண்டிய முதன்மை உணவாக சூரிய ஒளி, காற்று, நீர் ஆகியவை உள்ளன. இவை இருக்கும் வரை, மனித உடல் இயங்குவரை பட்டினி என்பதே இருக்காது-. மனிதன் உண்ணும் உணவெல்லாம், மனித உடலுக்குத் தேவைப்படாதவை. சூரிய சக்தியே உலகிலுள்ள உயிர்கள் அனைத்துக்கும் தேவையான முதன்மை உணவு. அதுவே, ஆற்றலின் இருப்பிடம்.

இம்மண்ணில் பட்டினியால் இறப்போரைவிட, முறையற்ற உணவுப்பழக்கதால் இறப்போரின் எண்ணிக்கையே அதிகம். உணவுப்பழக்கத்தால், உடலில் ஏற்படும் வேதியியல் மாற்றத்தால் உண்டாகும் நச்சுகளை வெளியேற்றத் தெரியாமலும் பலர் இறக்கிறார்கள்.

உணவுப்பொருள்களினால் உடம்பில் ஏற்படும் நச்சுத்தன்மையை வெளியேற்றி, உடலைத் தூய்மைப்படுத்தி, உடல் உள்ளுறுப்புகள் அவற்றின் இயல்பு நிலை மாறாமல் பாதுகாக்கும் முறையே காய சுத்தி அல்லது அக சுத்தி எனப்படுகிறது. காய சுத்தி முறையைக் கற்றவர்களுக்குப் பட்டினி என்பதே கிடையாது.

மேலே சொல்லப்பட்டவை அனைத்துமே இயற்கை மருத்துவத்தின் கூறுகளே. காயசுத்தி முறையில் உடலைச் சுத்தம் செய்து, சூரிய ஒளி, காற்று, நீர் ஆகியவற்றை உண்டு வாழ்ந்து ஆரோக்கியத்தைப் பராமரிப்பதே இயற்கை மருத்துவத்தின் மையமான அம்சம்.

பெருவாழ்வு ரகசியம்

நியாயமாகப் பார்த்தால் மனிதன் 300 ஆண்டுகள் வாழ வேண்டும்.

பழங்கால மனிதன் 300 ஆண்டுகள் வாழ்ந்தான் என்பதற்குரிய சான்றுகள் கிடைத்திருக்கின்றன. சமைக்காத இயற்கை உணவை உண்டு வாழும் முயல் இனத்தில், முயல்குட்டி, பிறந்த 3 மாதத்தில் பருவத்துக்கு வந்து குட்டி போடுகிறது. முயலின் வாழ்நாள் 60 மாதங்கள்.

ஆட்டுக்குட்டி, 6 மாதத்தில் பருவத்துக்கு வந்து குட்டி போடுகிறது. ஆட்டின் வாழ்நாள் 120 மாதங்கள். பசு மாட்டின் கன்று, ஓர் ஆண்டில் பருவத்துக்கு வந்து கன்று போடுகிறது. பசுவின் வாழ்நாள் 240 மாதங்கள்.

மனித இனம் 15 ஆண்டுகளில் பருவம் எய்தி குழந்தை பெறத் தயாராவதால், மனித இனத்தின் வாழ்நாள் 3600 மாதங்களாக இருக்க வேண்டும்.

முயல்: 20*3=60/12=5 ஆண்டுகள்

ஆடு: 20*6=120/12=10 ஆண்டுகள்

பசு: 20*12=240/12=20 ஆண்டுகள்

மனிதன்: 20*180=3600/12=300 ஆண்டுகள்

மனிதனும் விலங்கும் பருவம் எய்தும் காலத்தைக் கொண்டு ஆயுள்காலம் கணிக்கப்படுகிறது.

இதுவே இயற்கை நியதியாகக் கருதப்படுகிறது.

உணவாகக் கருதப்படும் காய்கறிகள், கீரைகள், பழங்கள் ஆகியவற்றின் இயல்புநிலை மாறாமல், பச்சையாக (அல்லது குறைந்த பட்சம் ஆவியில் வேகவைத்து) உண்டால் நீண்ட நாள் வாழலாம்.

ஆனால், நாம் அப்படிச் செய்வதில்லை. முறையற்ற உணவுப் பழக்கத்தையே நாம் பின்பற்றுகிறோம். நமது உணவில் பெரும்பான்மையாக இடம்பெறும் தாளித்த, வறுத்த உணவுகள் நமது வாழ்நாளைக் குறைக்கின்றன. அதோடு அசுத்தமான காற்றும் அசுத்தமான குடிநீரும் வாழ்நாளைக் குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. மேலும் புகை, மதுப்பழக்கம் கொண்டவர்களுக்கு 60 வயதுக்கும் குறைவாகவே வாழ்நாள் அமைகிறது.

இவற்றையெல்லாம் மீறி நாம் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும்?

(நன்றி: http://thendral-thangavel.blogspot.com/2010/12/blog-post_25.html)

(தொடரும்..)


அடுத்த பகுதிக்கு: கனி இருப்ப... பகுதி ஐந்து
--

'அன்பே சிவம்' அஷ்வின்ஜி
பிரபஞ்சத் துகளில் 'நான்' யார்?

சனி, 23 ஏப்ரல், 2011

வணக்கம்.

பெருமதிப்பிற்குரிய வலைப்பதிவு அன்பர்களுக்கு வணக்கம்.

தவிர்க்க முடியாத காரணங்களால் "கனி இருப்ப.." தொடரின் அடுத்த பகுதி வெளியிடுவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.

வருகிற புதன் அன்று தொடரின் அடுத்த பகுதி வெளியாகும்.

அன்பர்கள் தயை கூர்ந்து பொருத்தருள வேண்டுகிறேன்.

அஷ்வின்ஜி.

புதன், 13 ஏப்ரல், 2011

அளவுச் சாப்பாட்டின் அற்புதங்கள்.

மனித உடல், இறைவைனின் அற்புதப் படைப்பாகும். நல்ல கட்டுக் கோப்புடன் வளர்ச்சியடைந்த மனித உடலை விட அழகானதொரு பொருள் வேறெதுவும் இருக்க முடியாது. மனித உடலின் அமைப்பு அதிக நுட்பமும், மிக நுண்மையானதுமாகும். அது வியத்தகு முறையில் கூரிய அறிவாற்றலுடன் மிக நேர்த்தியாக தன் வேலையைச் செய்து கொள்கிறது.


அவ்வுடலுக்கு ஏதுவாக, பொருந்தும் உணவுகளை மருந்து போல நாம் உண்ண வேண்டும். நிறைவான அமைதியான வாழ்வுக்கு உறுதுணையாக இருப்பதில் உணவே முதலிடம் பெறுகிறது. அதனாற்றான், உண்டி முதற்றே உலகு, உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்றார்கள் நம் முன்னோர்கள்.


எவ்வாறு உண்பது?


அரை வயிறு உணவு, கால் வயிறு தண்ணீர், கால் வயிறு காற்று என்று வைத்துள்ளனர்.


அளவுக்கு மேல் உண்பது உயிராற்றலைக் குறைக்கும். ஏனெனில், அந்த உணவைச் செரிமானம் செய்வதற்கே உயிராற்றல் அதிகமாகச் செலவாகும்.


அதிகமாக உண்ணத் தூண்டும் விருந்துகளை நாடி ஓடினால் மருந்துகள் நம்மை விரட்டும். நோய்கள் நம்மை மருட்டும்.


தாகம் தீர்க்கவும், உடலுக்கு ஊட்டந்தரவும், உடல் நலன், உடல் உரம், மகிழ்ச்சி, இவற்றைப் பேணவும் தான் உணவுண்பது.


தத்தம் பசியை ஆற்றிக் கொள்ள மக்களும் விலங்குகள் முதலிய ஏனைய உயிரினங்களும் உணவை எந்த முறையில் உட்கொள்ளவேண்டும் என்பதை அறியாமல் உணவு உண்டு வருகின்றனர்.


உணவின் இரகசியங்கள்.


மனிதன் உணவுண்ண பசி தேவை. பசி என்பதை விட, மெய்ப்பசி என்பதே சரியானது. அது என்ன மெய்ப்பசி? நன்றாக பசிஎடுத்து நாவில் சுவை ஊறியிருக்கும் நிலையே மெய்ப்பசி.


அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறு அல்ல

துய்க்க துவரப் பசித்து. (குறள் :944)


முன்பு உண்ட உணவு செரித்த நிலைமைகளை அறிந்து நன்றாகப் பசித்த பின்பு, உடல் நிலைக்கும், கால நிலைக்கும் இடத்திற்கும் மாறுபாடு இல்லாத உணவுகளை உண்ண வேண்டும் என்கிறார் வாழ்வியல் முன்னோடி வள்ளுவப் பேராசான்.


அளவுக்கு மிஞ்சினால்...


அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு

பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு. (குறள்:943)


வள்ளுவரின் வாக்கிற்கிணங்க, அளவாகச் சாப்பிடுவதை நாம் அவசியம் கற்க வேண்டும். நம் உணவின் அளவை நாமே தீர்மானிக்க வேண்டும். பிறரின் அன்பிற்காகவோ, வற்புறுத்தலுக்காகவோ நாம் உண்ணுதல் கூடாது. அதிகச் சாப்பாடு ஆபத்தை விளைவிக்கும். ஆகவே, நாம் உண்ணும் உணவின் அளவை நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும்.


அதிக உணவு உண்டால், அஜீரணமும், மலச்சிக்கலும் ஏற்படும். இவை சுடுகாட்டுத் தேரின் இரு சக்கரங்கள் என்கிறார் சுவாமி சகஜானந்தா. செரிக்காத உணவால், சளி, நாக்கில் பதிவு, கண்ணில் பீளை, வாந்தி, புளிச்ச் ஏப்பம், ஏற்பட்டு இருதய நோய், சர்க்கரை வியாதி, மூலம் என நோய்களோடு நாம் வாழ்க்கையைக் கழிக்க வேண்டி இருக்கும்.


பசித்து, அதுவும் முன் உண்ட உணவு செரித்து விட்டதா என அறிந்து, துவரப் பசித்த பிறகே சாப்பிட வேண்டும். பசி நீங்கினால் அதுதான் அளவு. பசியோடு உட்கார்ந்து, பசியோடு எழுந்திருத்தல் கூடாது.


மிகு உணவை எப்படித் தவிர்ப்பது?


துணை உணவுகளான சாம்பார், ரசம், மோர்க்குழம்பு போன்றவற்றையும், தொடுகறிகளையும் தவிர்க்கலாம். மென்று சாப்பிட்டால் அதிக உணவு தேவைப்படாது. ஒரு உணவை, அதன் சுவை நாவில் மறையும் வரை சுவைக்க வேண்டும்.


உணவு ஒழுங்கு.

1. முளைக்க வைத்த தானியம் மற்றும் தேங்காய், பழங்கள்.

2. காய்கறிப் பசுங்கலவை.

3. இரண்டு வேளை மட்டுமே ஒரே வகையான உணவு.

4. இருட்டுவதற்கு முன் இரவு உணவு.


நன்மைகள்:

  • அஜீரணம், மலச் சிக்கல் இருக்காது. தொப்பை விழுந்து, இதய நோய் வராது.
  • உண்பதற்காக வாழ்கிறோமா அல்லது வாழ்வதற்காக உண்கிறோமா என்பதை சிந்தனையில் கொள்ள வேண்டும். நம் உடம்பே நமக்குச் சுமையாக ஆகக் கூடாது அல்லவா? இறந்தவன் கனமாக இருந்தாலும் கேலிக்கு ஆவான் அல்லவா?
ஆகவே நாம் உண்ணும் உணவை நாமே நிர்ணயம் செய்து கொள்வோம். நலமாக வாழ்வோம். !

(சிவகாசியில் நடைபெற்ற இயற்கை வாழ்வியல் மாநாட்டில் ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கத்தின் செயலாளர் திரு இர.இராமலிங்கம் அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து)

நன்றி:
இந்தக் கட்டுரையை அனுப்பித் தந்திருக்கும் கும்பகோணம், திரு மா.உலகநாதன், எம். ஏ, அவர்களுக்கு என் இதய நன்றி. திரு மா.உலகநாதன் அவர்கள் தற்போது வரலாற்றுத் துறை முனைவர் பட்ட ஆய்வாளராக, திருவிக அரசு கலைக்கல்லூரி, திருவாரூரில் செயலாற்றி வருகிறார். மேலும் ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கத்தின் துணை தலைவராகவும் இருக்கிறார். அவரது மின்னஞ்சல்: worldnath_131149@yahoo.co.in

இந்த அருமையான கட்டுரைக்கு உங்கள் பாராட்டுக்களை தெரிவிக்க விரும்பினால் அவருக்கு மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது இந்த வலைப்பூவில் பின்னூட்டமாகவோ தெரிவிக்கலாம்.

இயற்கை உணவே
நோய் தீர்க்கும் மருந்து.

குலசேகரன் பட்டினம் இயற்கை நலவாழ்வு மையத்தால்
தேசீய இயற்கை மருத்துவக் கழகம்
(National Institute of Naturopathy-Pune)
ஆதரவுடன் நடத்தப்படும்

ஒரு வார இயற்கை மருத்துவ முகாம்

நாள்:- 01-05-2011 to 07-05-2011


நடைபெறும் இடம்: இயற்கை வாழ்வு நிலையம்
(வள்ளியம்மையார் ஆசிரியைப் பயிற்சிப் பள்ளி எதிர் சந்தில்)
குலசேகரன் பட்டினம்
(வழி) திருச்செந்தூர், தூத்துக்குடி மாவட்டம்.

கட்டணம் ரூ.600/-அறுநூறு மட்டும்.

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள:
திரு Dr. மூ.ஆனையப்பன்,
(இயற்கை நலவாழ்வியல் அறிஞர், ஆலோசகர் மற்றும் பயிற்சியாளர். )
9944042986, 9380873465

இந்த நல்வாய்ப்பை பயன்படுத்திக்
கொள்ள வேண்டுகிறேன்.
அஷ்வின்ஜி, சென்னை
Email: ashvinjee@gmail.com

வாழி நலம் சூழ.

செவ்வாய், 12 ஏப்ரல், 2011

3. கனி இருப்ப
அனைவருக்கும் கர வருஷத்து இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள். திருவள்ளுவரின் மற(று)க்க முடியாதகனி இருப்ப என்னும் வார்த்தைகளை அவரிடம் இருந்து இரவல் வாங்கி ஆதி பகவனின் ஆசியுடன் இந்த இயற்கை நலவாழ்வியல் தொடரை துவங்குகிறேன்.
இயற்கை நலவாழ்வியல் ஒரு மருந்தற்ற மகத்துவம்.
இது மருத்துவ முறை அன்று.
ஒன்று ஒரு வாழ்வியல் விஞ்ஞானம்.
வாழ்க்கை முறை.
இயற்கை உணவுகளின் (குறிப்பாக பழ வகை உணவுகளின்) மகத்தான பயன்களை, ஒரு பயனாளர் என்ற முறையில் நான் சொந்தமாக அனுபவித்த நேரடி அனுபவங்கள், கேட்டு அறிந்தவை, பயிற்சிகளில் கற்றவை, மேலும் பல புத்தகங்களில் படித்தவை என பல வகைகளில் எனக்கு புரிய வந்த செய்திகளை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
நலம் அல்லது ஆரோக்கியம் என்றால் என்ன?
உலக சுகாதார நிறுவனம் (World Health Organisation) நலம் என்பதை இவ்வாறாக விளக்குகிறது.
நலம் என்பது முழுமையான உடல், மனம் மற்றும் சமூகத்தில் சிறப்பாக விளங்கும் ஒரு நிலை. ஊனமற்று இருப்பதோ அல்லது நோயற்று இருக்கும் நிலை மட்டுமே நலம் என்று சொல்லமுடியாது. (Health is a state of complete physical, mental and social well being and not merely the absence of disease and infirmity)
நாம் முன்னெப்போதையும் விட ஆரோக்கியத்துக்காக அதிகமாக செலவழிக்கிறோம். முன்னெப்போதையும் விட அதிக மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறோம். எனினும் முன்னெப்போதையும் விட நோய்களால் பாதிக்கப்படுகிறோம்.
ஆங்கில மருத்துவம் என்று அழைக்கப்படும் நவீன மருத்துவம் இப்போது எல்லோராலும் விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்ட மருத்துவ முறையாக இருக்கிறது. ஆங்கில மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் புதிது புதிதான மருந்துகளை கண்டு பிடிப்பதை விட புதிது புதிதான நோய்களை கண்டு பிடிப்பதில் தமது நேரத்தையும் பணத்தையும் அதிகம் செலவழிக்கின்றன. நவீன மருத்துவ ஆராய்ச்சிகள் மூலமாக நிறைய கருவிகளைக் கண்டு பிடித்து விட்டார்கள். நாளுக்கு நாள் புதிய அறுவை சிகிச்சை, புதிய நோய்கண்டுபிடிக்கும் கருவிகள் வந்து கொண்டே இருக்கின்றன. ஒருவர் நோய்வாய்ப்பட்டால் மருத்துவரிடம் செல்கிறார். அவருக்கு மருத்துவர் உடனே சில மருத்துவ பரிசோதனைகளை செய்யச் சொல்லி அறிவுரை கூறுகிறார். எல்லாவற்றிற்கும் எக்ஸ்ரே, இரத்த பரிசோதனை, ஈசீஜி, ..ஜீ., ஸ்கான் டெஸ்ட் என்று புதிது புதிதாக நம்மை பரிசோதனை எடுக்கச் சொல்கிறார்கள். நாமும் ஆயிரக் கணக்கில் செலவழித்து அவற்றை எடுத்துக் கொள்கிறோம். ரிப்போர்ட்டை பார்த்ததும் மருத்துவர், உங்களுக்கு இந்த நோய் வந்திருக்கிறது. அதற்கு இந்த அறுவை சிகிச்சை செய்யவேண்டும். இந்த மருந்துகளை சாப்பிட வேண்டும் என்றெல்லாம் அறிவுரை கூறுகிறார். அவர் சொன்னபடியே எல்லாம் செய்தீர்கள். மாத்திரை சாப்பிட்டதால் வியாதி குணமானதா? நோய் குணமானது போல தோன்றினாலும் விரைவிலேயே பக்க விளைவுகள் உண்டாகின்றன.
டாக்டரிடம் போவீர்கள். மீண்டும் அதை கண்டு பிடிக்க டாக்டர் உங்களுக்கு மேலும் சில பரிசோதனைகளைச் செய்யச் சொல்லுவார். மீண்டும் மாத்திரைகள், அறுவை சிகிச்சை என்று தொடர் செலவு.
பூரண குணம் உங்களை வந்து அடைந்ததா என்றால் இல்லை என்பது தான் பெரும்பாலானோர் நிலைமை..
ஏன் இந்த நிலைமை.? அடுத்த தொடரில் பார்ப்போமா?
(நலம் தொடரும்)
வாழி நலம் சூழ...
அஷ்வின்ஜி.