சனி, 26 ஜூன், 2010

பகுதி 23 
இயற்கை மருத்துவம் 
(தத்துவங்களும் செயல்முறைகளும்) 
மகரிஷி க.அருணாசலம்.

நோய்ப்படைகளுக்கும், சுகப்படைகளுக்கும் இடையே நடக்கும் இந்த யுத்தத்தில் திசுக்கள் தேய்கின்றன. சீழ் அதிகரிக்கிறது இதிலிருந்து கட்டிகள், புண்கள், போன்ற மாற்றங்கள் ஏற்படுகின்றன. நிணநீர் அணுக்கள் நுண்மங்கள், குருதி நாளங்கள் திசுக்கள் நாசமடைகின்றன. மக்களிடையே அண்டத்தில் நடக்கும் யுத்தத்தில் ஏற்படும் நாசங்களைப் போலவே பிண்டத்திலும் அழிவு ஏற்படுகிறது. இந்த மூன்றாம் நிலையை தேய்மான நிலை அல்லது உடற்சிதைவு நிலை என்கின்றனர்.

உடற்சிதைவு நிலையினை நெருக்கடி காலம் எனலாம். இது ஒரு பெரிய திரும்புகட்டம். இதனால் நன்மையும் விளையலாம். தீமையும் விளையலாம். இதில் சுகம் விளைவிக்கும் சக்திகளுக்கு உதவுகிற மாதிரி சிகிச்சை நடந்தால் இரத்தமும், பிராணசக்தியும் அதிகரித்து அந்நிய விஷப் பொருள்களும் வெளியேற்றப்படும் யுத்தத்தில் விளைந்த அழிவுப் பொருள்களும் வெளியேற்றப்பட்டு பூரண சுகம் கிடைக்கும். இதனை குறைதல் நிலை (Abatement) எனலாம். இந்நிலையில் நோய்க்கொதிப்பு தணிகிறது. வீக்கம் வற்றும். வேறு நோய்க்குறிகளும் சாந்தமடைகின்றன.

குறைதல் நிலை தனது முழுவேலையையும் செய்த பின்னர் அதாவது உடலில் சேர்ந்திருந்த விஷப்பொருள்கள் அனைத்தும் வெளியேற்றப்பட்ட பின் ஆக்கவேலை ஆரம்பமாகிறது. இந்த ஐந்தாவது நிலையை ஆக்கநிலை என்கிறார்கள் தேய்ந்த பகுதிகள் வளர்ந்து முழுமை பெறுகின்றன. உடல் புதுமை பெறுகிறது. அசுத்தங்கள் நீங்கி சுத்தமடைகிறது. தீவிர நோய்களை, மேலே குறித்த ஐந்து நிலைகளையும் பொறுமையோடு கடக்கும்படி செய்வதால் உடல் பழைய நிலையினை விரைவில் அடையும். மாறாக, தவறான சிகிச்சை முறைகளைக் கையாண்டு வீக்கத்தை கடுமையான மருந்துகளால் அமுக்கியோ, தடை செய்தோ வைத்தால் தற்காலிகக் குணம் ஒருவேளை கிடைக்கலாம். ஆனால் விஷப்பொருள்கள் உருமாறி உயிரணுக்களுள் நுழைந்து தீராத நாட்பட்ட நோயாக மாறும்.

நோய் நுண்மப் பெருக்க நிலை. தீங்கு பெருக்க நிலை என்ற இரண்டு நிலைகளில் மருந்துகளை உபயோகித்தால் தீவிர நோய் நாட்பட்ட நோயாக வளரும். இதனை ஒரு உதாரணத்தைக் கொண்டு விளங்கிக் கொள்வோம்.

(இருபத்தி ஐந்தாம் பகுதியுடன் நிறைவு அடைகிறது.)

வெள்ளி, 25 ஜூன், 2010

பகுதி 22



இயற்கை மருத்துவம் 



(தத்துவங்களும் செய்முறைகளும்) 



- மகரிஷி க. அருணாசலம்

தீவிர நோயின் ஐந்து நிலைகள்


'நோய் ஒன்றே; பரிகாரமும் ஒன்றே' 

இது இயற்கை மருத்துவத்தின் ஒரு பொதுக்கோட்பாடு நோய்க்குக் காரணங்கள் பலவாக இருக்கலாம். பொருந்தா உணவு, மாறான பழக்கவழக்கங்கள், தவறான சிந்தனைப் போக்கு இவை போன்ற இன்னும் பிற காரணங்களால் நோய் ஏற்படலாம். மேற்கூறிய பல காரணங்களால் உடலில் வேண்டாத பொருள்கள் சேருகின்றன. அவை காலாகாலத்தில் வெளியேறி விட்டால் சிக்கல் இல்லை. பல சமயங்களில் வேண்டாத அந்நியப் பொருள்கள் தேங்கி நிற்கின்றன. காலம் கடந்து இவை வெளியேற முயலும் போது வலியோ, வேறு வித சங்கடங்களோ ஏற்படுகின்றன. அவற்றை நோய் என்கிறோம்.

வளர்சிதை மாற்றம் சதா உடம்பில் நடந்து கொண்டிருக்கிறது. திசுக்களிலுள்ள உயிரணுக்கள் சிதைந்து, மடிந்து இரத்தத்தில் கலக்கின்றன. சிலசமயம் அடிபட்டதாலோ அல்லது வேறு ஏதாவது ஒரு காரணத்தாலோ இரத்தம் உறையலாம். உறைந்த இரத்தம் சிதைவுண்டு சிறுசிறு துண்டுக் கட்டிகளாக இரத்தப் பிரவாகத்தில் கலக்கின்றன. இவை ஏதாவது ஓரிடத்தில் தேங்கி நின்று தாராளனமான இரத்த ஓட்டத்திற்க்கும், பிராணசக்தி இயக்கத்திற்கும் தடையாயிருக்கின்றன. சில சமயம் விபத்துக்கள் ஏற்படும் போது எலும்புகள் உடைந்து அதன் துணுக்குகளும் இரத்தத்தோடு கலந்து நின்று தடை செய்யலாம். சுவாசத்தோடு போகும் கடினமான தூசு தும்புகள் கூட உடம்பின் உள்ளே சென்று இருக்கலாம். இரும்புத் தூசுக்கள், மரத் துணுக்குகள் உடலுள் செல்வதாலும் இயக்கத்திற்குத் தடை ஏற்படலாம் ஒட்டுண்ணிகள், சின்னஞ்சிறு உயிர்ப் பிராணிகள் உட்செல்வதாலும் இது நேரிடலாம். குருதி ஓட்டமோ பிராண இயக்கமோ தடைபடும்பொழுது அவ்வப்பகுதியில் வீக்கம் ஏற்பட்டு அதனால் சூடு அதிகரிக்கலாம். இரத்தக் கொதிப்பால் சில உறுப்புகள், அழற்சி அடையலாம்.

அந்நியப் பொருள்கள் உடலில் தேங்கி நிற்கும்போது நோய் உடனடியாகத் தோன்றுவதில்லை. நோய்குறிகள் தோன்றுமுன் நுண்மங்கள் ஆக்கம் பெறுகின்றன. இது முதல்நிலை இதனை நோய் நுண்மப் பெருக்கநிலை என்கின்றனர். ஆங்கிலத்தில் Incubation state என்று சொல்வார்கள். இந்நிகழ்ச்சி சில நிமிஷங்களிலோ அல்லது நாட்களிலோ நடைபெறலாம். சிற்சில சமயங்களில் இது வாரம், மாதம், வருடம் என்றும் நீளலாம் அந்நியப் பொருள்கள் பெருகி உடலின் சிற்சில பாகங்களில் அல்லது உறுப்புக்களில் வீக்கம் ஏற்படுத்துகின்றன. உடலில் வேலையில் தேக்கமோ, ஆபத்தோ ஏற்படும் சமயம் உயிர் ஆற்றல்கள் வேலை செய்ய ஆரம்பிக்கின்றன. இரத்தத்தில் வெள்ளை அணுக்கள் பெருகி நோய்க்குக் காரணமாக நுண்மங்களோடு போரிடுகின்றன. அந்த இரண்டாம் கட்டம் 'தீங்கு பெருக்குதல் நிலை' எனப்படுகிறது. இதில் அந்நியப்பொருள் அல்லது நோய் நுண்மங்கள் ஒருபுறமும், உடலை நோய்களினின்றும் தடுக்கும் ஆற்றலுள்ள நிணநீர் அணுக்கள் (Phagocytes) மற்றொரு புறமும் அணிவகுத்து போரிடும் நிலையைப் பார்க்கிறோம் இச்சண்டை காலத்தில் படை வீரர்களாகிய நிணநீர் அணுக்கள் பெருக்கத்தால் இரத்தக் கொதிப்பு அதிகரிக்கிறது நாளங்களிலும். உறுப்புக்கள் சிலவற்றிலும் வீக்கம் அதிகரித்து காய்ச்சல் உச்சிலை அடைகிறது. நோயின் அறிகுறிகள் அனைத்து வெளிப்படுகின்றன.


(படிப்பவர்களின் பொறுமைக்கு நன்றி - ஓரிரு தவணைகளில் நிறைவடையும்)

புதன், 23 ஜூன், 2010

ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கத்தின் 324 -வது மாத கூட்டம்.


கடந்த சில ஆண்டுகளாக நான் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தேன். 
பின்னர் இயற்கை நலவாழ்வு முறைகளை படிப்படியாக பின்பற்றி நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், மற்றும் இதய இடது கீழறையில் இருந்த பிறவி குறைபாடு காரணமாக ஏற்பட்ட சிறுநீரக பாதிப்பு இவற்றை எல்லாம் எவ்வாறு குணப்படுத்திக் கொண்டேன் என்ற அனுபவங்களை பகிர்ந்து கொள்ள தமிழகத்தின் முன்னோடி அமைப்புகளில் முதன்மையாக விளங்குகின்ற ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கத்தின் 324 -வது மாத கூட்டத்தில் கலந்து கொண்டு உறுப்பினர்களிடையே பேசிட சங்கத்தின் செயலர் திரு.இராமலிங்கம் அவர்கள் வாய்ப்பு தந்தார் . 

அங்கு நான் உரையாற்றியதை இங்கே வாழி நலம் சூழ வாசகர்களுக்காக வெளியிடுகிறேன்.

 20-06-2010-ஆடுதுறை

வணக்கம்.  நான் சென்னையில் தென்னக இருப்புப்பாதை அலுவலகத்தில் தணிக்கை அதிகாரியாக பணி புரிகிறேன். இப்போது எனது வயது ஐம்பத்து நான்கு.

ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று இரண்டாம் ஆண்டு மே மாதம் ஆடுதுறையில் நடைபெற்ற ஒரு வார இயற்கை மருத்துவ முகாமில் கலந்து கொண்டு இயற்கை நலவாழ்வு பயிற்சி பெற்ற இனிய நினைவுகளை மீண்டும் நன்றியுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அதற்கு பின்னர் தற்போது உங்களிடையே எனது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வாய்ப்பினை உருவாக்கி தந்திருக்கும் திரு மெய்யப்பன் ஐயா அவர்களுக்கும் திரு இராமலிங்கம் ஐயா அவர்களுக்கும் அவர்கள் மூலம் இந்த வாய்ப்பினைத் தந்த இறைவனுக்கும் நன்றி செலுத்துகிறேன்.

கடந்த முறை முகாமில் கலந்து கொண்ட போது நான் சந்தித்த திருவாளர்கள் மெய்யப்பன்இராமலிங்கம்யோகி தி.ஆ.கிருஷ்ணன் மற்றும் மூ.ஆ.அப்பன் ஆகியோரின் தொடர்புகளும் மேலான வழிகாட்டல்களும் இன்றளவும் எனக்கு கிடைத்து வருகிறது என்பது பெருமைக்குரிய மகிழ்ச்சி தரும் செய்தியாகும்.

உங்களிடையே இன்று நான் பேசவிருக்கும் தலைப்பு நான் எவ்வாறு எனக்கு ஏற்பட்ட ''நீரிழிவு நோயினை'' மருந்தின்றி குணமாக்கிக் கொண்டேன் என்பது பற்றி.

முன்னரே இயற்கை நலவாழ்வு பயிற்சி பெற்றிருந்தும் பணி மற்றும் கால மாறுபாடுகளின் காரணமாக என்னால் இயற்கை உணவினை தொடர்ந்து உண்டு வரஇயலாமல் போனது. எனினும் கிடைக்கும் நேரங்களில் எல்லாம் சந்தர்ப்பங்களில் யோகா பயிற்சி மற்றும் இயற்கை உணவுகளை மேற்கொண்டு வந்திருக்கிறேன். எனினும் பணி மும்முரம் காரணமாக ஏழு ஆண்டுகள் 2002 முதல் 2008 வரை இந்தியா முழுமையும் பயணம் செய்து நீண்ட நாட்கள் வெளியில் உணவு உண்ணவேண்டிய சூழ்நிலைகள் உருவானதால் எனக்கு நீரிழிவு பாதிப்பு ஏற்பட்டது. அதற்கு முன்னரே நான் உயர் இரத்த அழுத்தம்ஹைபர்டென்ஷன் போன்ற பாதிப்புகளால் இரயில்வே மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று அங்கு தந்த ஆங்கில மருந்துகளை உண்டு வந்தேன். பின்னர் மன அழுத்தம் காரணமாக அதனுடன் சர்க்கரை வியாதியும் சேர்ந்து கொண்டது.  இரத்த பரிசோதனை செய்து கொண்ட போது கீழ்க் கண்ட அளவுகள் இருந்தன. 22-12-2007 - Blood Sugar (Fasting) 245 mgs/dl (Ref value: 70 to 100). அதன் பிறகு சித்தமருத்துவம் மேற்கொண்டேன். நிறைய லேகியங்கள்பொடிகள்கஷாயங்கள்உணவுக் கட்டுப்பாடுகள் மேற்கொண்ட பின்னர் மீண்டும் பரிசோதனை செய்த போது கிடைத்த அளவுகள்:
09-01-2008 -      Blood Sugar (Fasting) - 275 mgs/dl
         Blood Sugar (PP) - 469 mgs/dl

பிறகு எம்.வி. டையபெடிக் மருத்துவ மனையில் சென்று அங்கு பரிசோதனை செய்து கொண்டேன்.

02-02-2008         Blood Sugar (Fasting) - 217 mgs/dl
   Blood Sugar (PP) - 294 mgs/dl
என்று பரிசோதனை முடிவுகள் வந்தன.

அதன் பிறகு ஆங்கில மருத்துவத்தினை மேற்கொண்டேன். தொடர்ந்து ஒரு மாதம் மருந்துகள்உணவுக் கட்டுப் பாடுகள் கடைப் பிடித்த பின்னர் கிடைத்த பரிசோதனை முடிவுகள்

01-03-2008 -      Blood Sugar (Fasting) - 85 mgs/dll (Ref value: 70 to 100)
Blood Sugar ( P  P)    - 102 mgs/dl (Ref Value: 100 to 140)

மருந்துகளையும்உணவுக் கட்டுப்பாடுகளையும் தொடர்ந்து வரவேண்டும் என்கிற ஆங்கில மருத்துவரின் அறிவுரை அடிப்படையில் நான் இரத்த அழுத்தத்துக்கும்சர்க்கரை நோய்க்கும் தொடர் சிகிச்சை மேற்கொண்டேன். ஆயினும் எனது உடல் உபாதைகள் குறைந்த மாதிரி தெரியவில்லை. Once a diabetic; always a diabetic. Once a heart patient; always a heart patient, என்று ஆங்கில மருத்துவர்கள் கூறிய சித்தாந்தம் எனக்கு அலுப்பு தட்டலாயிற்று.

ஏனெனில் மருந்துகளை உண்ணத் தவறி விட்டால் தொல்லைகள் அதிகமாக இருந்தன. சிகிச்சையின் போதும்உடல் வலிசோர்வு போன்றவை தொடர்ந்து இருந்தன. உடல் உஷ்ணக் கட்டிகள் போன்றவைகள் அடிக்கடி வந்து தொல்லை தந்தன. சிறுநீர்த் தாரை எரிச்சல் ஒரு தொடர் கதையாகவே இருந்தது.

ஆங்கில மருந்துகள் சிறுநீரகங்களில் கற்களை உண்டாக்கும் என்று வேறு கூறினார்கள். அதுவும் இன்றி தொண்ணூறு கிலோ எடையுடன் இருந்தேன். உணவைக் குறைத்தாலும்  இடர்ப்பாடுசாப்பிட்டாலும் இடர்ப்பாடு என்று இருதலைக் கொள்ளியாய் தவித்தேன்.

இந்த தொடர் தொல்லைகளில் இருந்து விடுபட எண்ணினேன். ஏற்கனவே மேற்கொண்ட இயற்கை உணவு முறைக்கு மாற முடிவு செய்தேன். கடந்த ஆண்டு மே மாதம் கும்பகோணத்தில் நடைபெற்ற இயற்கை நலவாழ்வு முகாமில் கலந்து கொள்ள பதிவு செய்தேன். ஆனால் தேர்தல் பணிக்கு என்னை நியமித்ததால் அதில் கலந்து கொள்ள இயலாமல் போயிற்று. பிறகு திரு யோகி.கிருஷ்ணன் அவர்களை கடந்த ஆண்டு ஜூலை மாதம் சந்தித்தேன்.

அவர் என்னிடம், ''நீங்கள் மீண்டும் தொடர்ந்து யோகப் பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்இயற்கை உணவினை எவ்வளவுக்கெவ்வளவு முழுமையாக சாப்பிடுகிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு குணமடைதல் விரைவாக இருக்கும்'' என்றார். அவரது அறிவுரையின்படி யோகம்மற்றும் இயற்கை உணவு முறைகளை பின்பற்றினேன்.

கடந்த டிசம்பர் மாதம் திரு மூ.ஆ. அப்பன் அவர்கள் பழனியில் நடத்திய ஒருவார இயற்கை நலவாழ்வு முகாமில் கலந்து கொண்டேன்.

அப்போது முழு இயற்கை உணவு முறைக்கு மாறியது மட்டும் இன்றி ஆங்கில மருந்துகளை சாப்பிடுவதை அறவே நிறுத்தினேன்.

ஒருவார இயற்கை நலவாழ்வு முகாமில் பெற்ற நேரடி அனுபவங்களும்யோகி கிருஷ்ணன் மாஸ்டரிடம் பெற்று வரும் தொடர் யோகப் பயிற்சிகளும் எனக்கு இரத்த அழுத்தம்உடல் எடைமற்றும் சர்க்கரை வியாதிகளின் பிடியில் இருந்து முழு விடுதலை பெற்று தந்தன.

மேற்குறிப்பிட தொல்லைகளின் சிம்ப்டம்ஸ் என்னிடம் இருந்து முழுமையாக அகன்று விட்டன. ஆகையினால் நான் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளவில்லை. மேலும் ஆங்கில மருத்துவர்களை ஆலோசிக்காமல் ஆங்கில மருந்துகளை கடந்த டிசம்பரில் இருந்து நிறுத்தி விட்டேன். பின்னர் திருவாளர்கள் கிருஷ்ணன் ஐயா மற்றும் மெய்யப்பன் ஐயா இருவரும் என்னை மருத்துவ பரிசோதனை செய்துபார்க்கும்படி அறிவுறுத்தினார்கள்.

அதன் பேரில் இந்த ஆண்டின் ஏப்ரல்மேஜூன் மாதம் முதல் வாரத்தில் மேற்கொண்ட இரத்தம்மற்றும் சிறுநீர் பரிசோதனைகளின் முடிவுகள் இதோ:

02-04-2010-  Blood Sugar (Fasting) - 87 mg/dl
Blood Sugar (PP) - 124 mg/dl
Urine Sugar: NIL
07-05-2010-  Blood Sugar (Fasting) - 97 mg/dl
Blood Sugar (PP) - 126 mg/dl
Urine Sugar: NIL
05-06-2010-  Blood Sugar (Fasting) - 87 mg/dl
Blood Sugar (PP) - 128 mg/dl
Urine Sugar: NIL

இப்போது முழு இயற்கை உணவு முறைகளை கடைப்பிடிக்கிறேன். வாரம் ஒரு நாள் உபவாசம்தொடர் யோகா பயிற்சிகள் என்னை ஆரோக்கியம் நிறைந்த ஒரு மனிதனாக மீட்டெடுத்து விட்டன.

வெயிலில் இருந்தால் தான் நிழலின் அருமை தெரியும் என்பார்கள் அதன் பொருளை முழுமையாக உணர்ந்து கொண்டேன். எனது நண்பர்கள் பலர் எனது வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்களை பார்த்து அவர்களும் யோகா/இயற்கை நலவாழ்வு முறைகளை பின்பற்றி பலன் அடைந்து வருகிறார்கள்.

நான் சொல்ல விரும்பும் செய்திகள்:
  • Once a diabetic, always a diabetic. Once a heart patient, always a heart patient எண்ணும் ஆங்கில மருத்துவ சித்தாந்தம் தவறானது.
  • உணவு மற்றும் வாழும் முறைகளிலும்எண்ணங்களிலும்சிந்தனைகளிலும் மாற்றம் ஏற்படுத்தாமல் வெறும் மருந்துகள் மூலமாக எந்த வியாதியையும் குணப் படுத்த முடியாது.
  • நான் எனது சர்க்கரை வியாதிக்கு இயற்கை நலவாழ்வியல் மூலம் குணம் பெற்ற போதுஎனது உடல் எடை குறைந்ததுஇரத்த அழுத்தம் நார்மல் நிலைக்கு வந்தது. அது மட்டுமின்றி எனக்கு பிறவியிலேயே இதயத்தில் எல்.வி.சி.டி எனப்படும் (Left Ventricular Conductivity Defect) குறைபாடு இருந்தது. அதன் காரணமாக யூரிக் ஆசிட் அதிகமாக இரத்தில் கலந்து போகும் தன்மையும் அதனால் எனது சிறுநீரகங்களுக்கு தொடர் தொல்லைகளும் இருந்ததன. யூரிசீமியா எனும் இந்த தொல்லைக்காக சிறுநீர்ப் பிரித்திகளை ஊக்குவிக்கும் மருந்துகளையும் சாப்பிட்டு வந்தேன். ஆனால் முழு இயற்கை உணவுக்கு மாறிய பின்னர் அந்த தொந்தரவும் என்னை விட்டு நீங்கி விட்டது. முன்னர் இந்த மாத்திரைகளை சாப்பிடாவிட்டால் சிறுநீர் போகும் இடத்தில் எரிச்சல் அதிகம் ஆகிவிடும். சில சமயம் இரத்தம் கூட வெளியேறும்.
  • ஆங்கில மருந்துகளால் ஏற்படுவன மோசமான பின்விளைவுகள். ஆனால் இயற்கை நலவாழ்வியலில் கிடைக்கும் குணம் பூரணமானது (holistic). ஒரு குறிப்பிட்ட வியாதியை மட்டுமின்றி உடல் முழுவதும் செயல்பட்டு நமக்கு தெரியாமல் இருக்கும் குறைபாடுகளையும் களைந்தெறியும் சக்தி இயற்கை நலவாழ்வியலுக்கு உண்டு என்பதை முழுமையாக நான் உணர்ந்தேன்.
  • அடுத்ததாகவும் நிறைவாகவும் நான் சொல்ல விரும்புவது ஒன்று உண்டு. இயற்கை நலவாழ்வியல் உங்களை உங்களுக்கு ஏற்ற மருத்துவராக மாற்றுகிறது. மருந்தில்லா மருத்துவம் என்பதினால் செலவும் இல்லை. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பழம்,காய்கறிகளை இயற்கையாக உண்பதினால் நமக்கு பொருளாதார அடிப்படையில்,எரிவாயு (கேஸ்)மசாலா பொருட்கள்எண்ணை வகைகளுக்கான செலவுஉப்பு,சர்க்கரைபால் பொருட்கள் மீதான செலவுகள் குறைகின்றன.
  • நோய் இல்லாமல் செயல் படுவதினால் அலுவலுக்கு விடுப்பு எடுத்தல்அலுவல் நேரங்களில் சோர்வாக இருத்தல்மருத்துவ மனைகளில் மருத்துவருக்காக காத்திருத்தல்தேவையற்ற அறுவை சிகிச்சைகளை பெறும் பொருள் செலவில் மேற்கொள்ளுதல்நோய் வாய்ப்படுபவரை கவனித்துக் கொள்ளுபவருக்கு ஏற்படும் தொல்லைகள்மருந்துக்கான பெறும் பொருள் செலவும்பக்க விளைவுகள்,பின்விளைவுகள் போன்றவற்றை முழுமையாக தவிர்க்கலாம். மக்களின் ஆரோக்கியத்துக்காக அரசுகள் பெருமளவில் பணத்தை செலவு செய்வதை தவிர்ப்பதன் மூலம் மத்திய மாநில அரசுகள் அப்பணத்தை மக்கள் நல பணிகளில் நல்ல வழிகளில் செலவிடலாம்.
  • நல்ல உடல்நல்ல மனம்நல்ல சிந்தனைகள் கொண்ட மனிதர்கள் பெருகினால் சமுதாயத்திற்கு அவர்களது பங்களிப்புகள் மேம்பட்டதாக இருக்கும். நாட்டின் உற்பத்தியும் கூடும். மக்களிடையே நற்சிந்தனைகள் வளர்ந்து போட்டி பொறாமை போன்றவைகள் அகன்றுசகோதரத்துவம்அன்பு போன்றவை பெருகும்.
எனது வாழ்வின் மிக முக்கியமான திருப்புமுனையை தந்திருக்கும் இயற்கை நலவாழ்வியலை பற்றி உங்களிடையே பகிர்ந்து கொள்ள நல்வாய்ப்பை ஏற்படுத்தி தந்த திரு மெய்யப்பன் ஐயாவுக்கும்திரு.ராமலிங்கம் ஐயாவுக்கும்மற்றுமுள்ள சங்க நிர்வாகிகள் எல்லாருக்கும்மற்றும் இங்கே பெருவாரியாக குழுமி இருக்கும் உங்கள் எல்லாருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி பாராட்டி வணங்கி விடை பெறுகிறேன்.  நன்றி. வணக்கம்.

-அஷ்வின்ஜி, 
 வலைப்பதிவர், வாழி நலம் சூழ, சென்னை.

செவ்வாய், 22 ஜூன், 2010

பகுதி 21 - 
இயற்கை மருத்துவம் (தத்துவங்களும் செயல்முறைகளும்) 
மகரிஷி க.அருணாசலம்.

"ஏழு பிராணன்களும், ஏழு சுடர்களும் அவற்றின் எரிபொருளும் ஏழு படையல்களும், இதய குகையில் ஒவ்வோர் உயிரிலும் ஏழாய் இயங்கும் பிராணன்களின் ஏழு உலகும் அவனிடமிருந்தே எழுகின்றன" (முண்டக உபநிடதம் பாகம் 2, அத்தியாயம்-1, 8ஆம் சுலோகம்)

சிருஷ்டிகர்த்தரின் செயல்கள் கூட ஏழு ஏழாய் வருகின்றன என்பதை முண்டக உபநிடதம் விரிவாக விளக்குகின்றது.

இந்த ஏழில் ஏதோ ஒரு மர்மம் இருக்கிறது சமீபத்தில் எனக்கு நோய் வந்தபோது முதுகுத்தண்டு குளியல் எடுத்துக் கொள்ளும்படி சொன்னார்கள். தொட்டியில் குறைந்தது 20 நிமிடங்களாவது இருக்க வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டது இது பல நாட்கள் நடந்தன ஏன் இந்த இருபது நிமிடம்? அரைமணியாக ஏன் இருக்கக்கூடாது என்ற எண்ணம் என் மனதில் அடிக்கடி தோன்றியது இதயத்தினின்று வெளியேறும் இரத்தம் உடல் முழுவதும் சுற்றி திரும்பவும் இதயத்தை அடைய மூன்று ஏழுதடவை இரத்தம் போய் வந்தால் அந்த நேரத்திற்குள் ஓரளவு சமநிலையும் தூய்மையும் அடையும் என்பது கருத்தாய் இருக்க வேண்டும். 7 x 3 =21

21 நிமிடங்கள் தொட்டியில் இருங்கள் என்று சொல்வதற்குப் பதிலாக 20 நிமிடங்கள் என்று சொல்கிறார்கள்: அவ்வளவுதான்.

சித்த ஆயுர்வேத மருத்துவர்கள் மருந்து கொடுக்கும் போதே இதை ஒரு மண்டலம் சாப்பிடுங்கள் என்கிறார்கள் 7x6=42 நாற்பது அல்லது நாற்பத்தி இரண்டு நாட்கள் ஒரு மண்டலம். இப்படி ஆறு வாரங்கள் மருந்து சாப்பிட்டபின் ஒரு வாரம் ஓய்வு கொடுத்த பின் கவனித்தால் மருந்தின் வெற்றி தோல்வி தெரியும்.

மனித உடல் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியும் வளர்ந்து வருகிறது. உடலின் கட்டுமானத்திற்கு அடித்த யூனிட்டாக இருப்பது உயிரணுக்கள். இவை ஒவ்வொரு நாளும் பல்லாயிரக் கணக்கில் தோன்றி மடிகின்றன. காலையில் தோன்றி மாலையில் மடிவதில்லை தோன்றுபவை வளர்ந்து அதற்கு உரிய காலம் இருந்து பின் மடிகிறது. அந்த இடத்தைப் புதியவை தோன்றி நிரப்புகின்றன. இந்த மாறுதலைப் பற்றி உடலியல் விஞ்ஞானிகள் இன்றைக்கு இருக்கும் செல்களில் ஒன்றுகூட ஏழாவது ஆண்டில் இருக்காது ஒவ்வொரு ஏழு ஆண்டிலும் மனிதன் புதுமை பெறுகிறான் இதிலும் ஏழின் எழிலைப் பார்க்கலாம். பரு உடலில் சில அங்கங்கள் ஐந்து ஐந்தாக இருக்கின்றன. ஐந்து விரல்கள் ஐந்து பொறிகள், ஐந்து புலன்கள், ஐந்து பிராணன்கள், ஐந்து கோஷங்கள் என்று ஐந்தைந்து இந்த ஐந்தை சூக்கும உடலில் உள்ள இரண்டு தத்துவங்களைச் சேர்த்து ஏழு ஏழாகக் கூறுபவர்களும் உண்டு. இதன் விளக்கங்களை சித்த மருத்துவ நூல்களில் காணலாம்.

இங்கு நாம் தெரிந்து கொள்ள வேண்டியது இந்த ஏழில் விதியை உணர்ந்து அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் புறக்கணித்து விடக்கூடாது. ஆறு நாள் உணவு உண்டவர்கள் ஏழாம் நாள் உண்ணா நோன்பு ஏற்று வயிற்றுக்கும் பிற ஜீரண உறுப்புகளுக்கும் ஓய்வு கொடுப்பவர்கள் நீண்டநாள் நோயின்றி வாழலாம்.
ஏழின் எழில் தொடரும்..
(இயற்கை இன்னும் வளரும்)

திங்கள், 21 ஜூன், 2010

பகுதி 20 - 
இயற்கை மருத்துவம்
(தத்துவங்களும் செயல்முறைகளும்) 
மகரிஷி க.அருணாசலம்.

ஏழின் எழில்

மனிதனின் ஆயுட்காலம் 150 வருடங்கள் 49, வருடங்களாகப் பிரித்தால் இளமை, வயது, பலன்தரும் கிழப்பருவம் என்ற மூன்று வட்டங்களில் இது அமையும். இடையீட்டு ஒழுங்கில் இப்பருவ நிகழ்ச்சிகளை உடலில் தோன்றும் நோய்களிலும் நாம் காண்கிறோம். தசைகள் விரிந்து காய்ச்சல் வந்த ஆறாம்நாள் சிறப்பான அறிகுறிகள் தோன்றுகின்றன. அதன் பிறகு ஒவ்வொரு ஏழுநாள் கழித்தும் நோய் முற்றுகிற அல்லது குறைகிற குணங்களை நாம் காணலாம்.

நாட்பட்ட நோய்களிலும் இதே இடையீட்டு ஒழுங்கை அனுபவமுடையவர்கள் கண்டு கொள்ளலாம். இயற்கை மருத்துவ முறைகளைக் கையாளும் நாட்பட்ட நோயாளி ஒழுங்காக இயற்கை வாழ்வு வாழ்ந்தால் ஐந்து வாரங்களில் நல்ல மாறுதல்களைக் காண்பார். ஆறாவது வாரம் நோய் குணமாகும் அறிகுறிகள் தோன்றும். அதாவது உடலில் பிராணசக்தி அதிகரித்து அதன் பயனாக வெளித்தள்ளும் இயக்கம் தீவிரமாகும். அழுக்குகள் தீவிரமாக வெளியே வரும் பொழுது அதனோடு கூடவே வலியோ, காய்ச்சலோ அல்லது வேறு அறிகுறிகளோ தோன்றும் இதனை இயற்கை மருத்துவர்கள் நோயாளி குணமடைந்து வருவதன் அறிகுறிகள் என்று கண்டு கொள்வார்கள். ஆனால் மருந்து மருத்துவர்களோ, இதனை நோயின் அறிகுறிகள் என்று நினைத்துப் புதிய மருந்துகளை கொடுத்து அழுக்கு வெளியேறுதலைத் தடை செய்வார்கள்.

இயற்கை மருத்துவத்தில் ஏழின் எழில் என்னும் விதியை ஒட்டி ஆறாவது வாரம் தோன்றும் நோயின் அறிகுறிகளுக்கு ஏற்ற சிகிச்சை முறைகளைக் கையாளுவார்கள். இயற்கையின் இடையீட்டு ஒழுங்கின் நியதிகளை நன்கு உணராத நோயாளிகள் இது எனக்குப் பல மாதங்களுக்கு அல்லது சில வருடங்களுக்கு முன்னர் வந்த அதே நோய்தான் மறுபடியும் வந்துள்ளது இயற்கை வாழ்வு முறைகள் கொஞ்சம் பயனளித்துள்ளது. ஆனால் இவை நீண்ட பரிகாரமளிக்கவில்லை என்று மனம் தளர்ந்து உடனடியாக உயிர் கொடுக்கும் மருந்து மருத்துவர்களை நாடுகிறார்கள்.

அவை என்னமோ பழைய வலிகள் தான்; இயற்கை மருத்துவ முறை புது நோய்களை உண்டு பண்ணாது நோயில் திரும்பு கட்டம் என்பது உள்ளே பரம்பரைச் சொத்தாகச் சேர்ந்திருக்கும் வேண்டா நச்சுப்பொருள்களை கண்டமாக (crisis) வெளியேற்றுகிறது. இவை பழைய வலிகளே எனினும் விரைவில் மாறும் நோயாளி இயற்கையை ஒட்டி வாழந்தால் பிராணசக்தி பழையனவற்றை வெளியேற்றி புதிய உடலைக் கட்டியமைக்கும். ஒவ்வொரு கண்த்திற்குப் பின்பும் நோயாளி புதுபலம் பெற்றுத் தேறுவார்.

ஹீலிங் கிரைஸிங் (Healing Crisis) எனப்படும் திரும்புகட்டம் ஒவ்வொரு நோயிலும் அவசியம் தோன்றுமா? என்ற கேள்வி எழலாம். இது நோயாளியின் ஆற்றல் நிலையைப் பொறுத்தது பிராணசக்தி மிகவும் குறைந்து தளர்ந்து போன நிலையில் திரும்புகட்டமே வராமல் போய் மேலும் மேலும் பலகீனப்படுத்தும் அறிகுறிகள் தோன்றி எஞ்சிய நச்சுப்பொருள்களை வெளியேற்ற முடியாமல் இக்கட்டான கண்டங்கள் தோன்றலாம். இவை நோயாளியின் முடிவு காலத்தையே வேகப்படுத்துவதாக இருக்கும் ஆனால் பிராணசக்தியை மிச்சப்படுத்தி இயற்கையையொட்டி வாழ்க்கையை அமைத்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறினால் வாழ்நாளை நீட்டி சுகம் பெற வாய்ப்பு ஏற்படலாம்.

சில நோயாளிகள் தமக்கு எத்தனை திரும்புகட்டங்கள் (Stages) ஏற்படுமென்று கேட்கின்றனர். ஒரு நோயாளி பூரணநலம் பெற எத்தனை கட்டங்கள் அவசியமோ அத்தனைக்கு மேலோ குறைவாகவோ ஒன்றுகூட ஏற்படாது என்று உறுதியாகச் சொல்லலாம். இயற்கை படிப்படியாக முன்னேறுகிறது. ஒரு வேலையாக எடுத்துக் கொண்டு அதனைப் பூர்த்தி செய்த பின்னர் வேறொன்றை எடுத்துக் கொள்கின்றது.

முதலில் ஜீரண உறுப்புக்களை வலிமையுடையனவாக ஆக்குவதற்கான பணி நடைபெறுகின்றது. ஆரோக்கிய வாழ்வு போதுமான உள்ளிழுத்தலையும் அளவிற்குறையாத வெளியேற்றுதலையும் பொறுத்துள்ளது வயிறும், குடலும் திறமையாக வேலை செய்யும் பொழுதுதான் நிரந்தர ஆரோக்கியம் கிடைக்கும். எந்த சிகிச்சை இந்த உண்மையைக் கவனிக்காமல் விட்டுவிடுகிறதோ அது வெற்றியடையாது. இந்த உண்மையினை நோயாளிகள் உணர்ந்து ஒத்துழைப்புக் கொடுக்காவிட்டாலும் தோல்வியே கண்டபலனாக இருக்கும்.

(இயற்கை இன்னும் வளரும்)

வியாழன், 17 ஜூன், 2010

பகுதி 19

இயற்கை மருத்துவம் (தத்துவங்களும் செயல் முறைகளும் - மகரிஷி க.அருணாசலம்.

மனிதன் சோம்பலுக்கு ஆட்பட்டு அதிகம் தூங்குவதனாலோ, நாக்குக்கு அடிமையாய் பெரும் திண்டிக்காரனாக ஆவதனாலோ ஜீரண சக்தி குறைந்து, உண்ட உணவு நச்சுப்பொருளாக மாறுகின்றது. அன்னரசம் இரத்தமாக மாறாமல், சளியாக மாறுவதும் அதனால் இயக்கத்தடை ஏற்படுவதும் வாழ்க்கையை நெறிப்படுத்திக் கொள்ளாதவர்களின் செயல்களிலிருந்து நாம் அறிகிறோம். ஆரம்ப நிலையில் இயக்க நோயாக இருப்பது நாளடைவில் உறுப்பு நோயாக வளரும். இயக்கநோய் நிலையிலேயே பரிகாரம் காண்பது எளிது. ஆனால் நவீன மருத்துவர்கள் இயக்க நோய்க்குக் காரணமாக மலங்களை வெளியேற்றுவதற்குப் பதிலாக அவற்றை அடக்கும் விஷமருந்துகளைக் கொடுத்து நோயை வளர்க்கின்றனர். இயக்கநோய் கொடுக்கும் தீவிர வலியும், துன்பமும் தற்காலிகமாகக் குறைந்தாலும் அவை உள்ளே நின்று உறுப்புக்களை அழிக்கின்றன. அந்த நிலையில் உறுப்புக்களுக்கு புத்துயிர் கொடுப்பது எளிதல்ல. இருப்பினும் இயற்கை ஆற்றல்கள் அனைத்தையும் முறையுடன் பயன்படுத்தினால் உடம்புக்கு புத்துயிர் ஊட்டுவது சாத்தியமே.

ஆரம்ப நிலையில் நம்பிக்கையினாலும் சாதகமான எண்ணங்களின் வலிமைகளினாலும் பல நோய்களைப் போக்கலாம். எனினும் இயக்க நோய்க்கும், மனநோய்க்கும் உள்ள வேறுபாட்டைக் கவனத்தில் கொள்ளவேண்டும். இதிலுள்ள வேற்றுமை மிகவும் நுண்ணியதே பார்க்கப் போனால் வேற்றுமை இல்லையென்றே கூடச் சொல்லிவிடலாம். இயற்கை மருத்துவர் இதைப்பற்றி அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை. நோயாளியை நல்ல சூழலில் இருக்க வைத்து அவரை சீரிய எண்ணங்களை எண்ணும்படியாகவும் பசியின் நிலையை அறிந்து சாத்வீக உணவுகளை உண்ணும்படியாகவும் செய்தால் நோய் நீங்கி பூரண சுகம் பெறுவர்.

(இயற்கை இன்னும் வளரும்)
அடுத்த பதிவில் ஏழின் ஏழில்....

ஞாயிறு, 13 ஜூன், 2010

பகுதி 18 - இயற்கை மருத்துவம் (தத்துவங்களும் செயல்முறைகளும்)  மகரிஷி க.அருணாசலம்.

இருவகை நோய்
நோய்களைப் பல பெயரிட்டு அழைக்கிறோம். இவைகளை இரு பெரும் கூறுகளாகப் பிரிக்கலாம். ஒன்று உறுப்பைச் சார்ந்த நோய்கள். மற்றொன்று இயக்க கூறுகளைச் சார்ந்த நோய்கள். இதனை ஆங்கிலத்தில் Organic நோய்களென்றும் Functional நோய்களென்றும் கூறுகின்றனர். இயற்கை மருத்துவர்கள் நோய் ஒன்றே பல அல்ல என்று கூறுவது நமக்குத் தெரியும். மலம் உள்ளே தங்குவதால் ஏற்படுகிற நச்சுப் பொருள்கள் இயக்கத்தை தடை செய்யலாம். அல்லது உறுப்பையே தேய்த்து உருச்சிதைவு உண்டுபண்ணலாம். அந்த நிலையில் உறுப்புக்கள் செயலிழக்கும். இயக்கம் தடைபட்டு அதனால் துன்பம் விளைகிறபோது அதனை இயக்கக்கூறு சார்ந்த நோய்கள் என்று சொல்கிறோம். உதாரணமாக பெருங்குடலில் மலம் தங்கி நின்று உஷ்ணத்தால் காற்று விரிவடைந்து ரத்தத்தோடு கலக்கிறது அத்தகைய கெட்ட ரத்தம் முழங்கை, முழங்கால் போன்ற மூட்டுக்களில் தேங்கி வலியை உண்டு பண்ணுகின்றன. இதனை வாத நோய் என்றும், மூட்டு வலி என்றும் சொல்லி அதற்கான சிகிச்சை செய்கின்றார்கள். பெருங்குடலில் மலம் தங்கியிருக்கின்ற பொழுது அது சிறுகுடல் இயக்கத்தையும் பாதிக்கும் சிறு குடலுக்கும், பெருங்குடலுக்கும் இடையிலுள்ள வால்வின் வேலை தடைபடுகின்றது. பெருங்குடல் அதாவது ஏறு குடல் ஆரம்பமாகின்ற இடத்திலுள்ள குடல் வாலில் அழற்சி ஏற்பட்டு அந்த உறுப்பு வீங்கித் துன்பம் கொடுக்கிறது. இதனை உறுப்புக்கு வந்த நோய் என்கின்றனர். இயக்க நோய் உறுப்பு நோயாகவும், உறுப்பு நோய் இயக்க நோயாகவும் மாறலாம். ஒரு நிலையில் இயக்கத் தடையாக இருப்பது பிரிதொரு நிலையில் உறுப்பு நோயாக மாறிவிடுகிறது. இந்த வித்தியாசத்தை சரியாகப் புரிந்து கொள்வது மிகமிக அவசியம்.

இரத்தத்தில் மலம் கலந்து அது சிறு நீரகத்தின் வழியாகப் போய்வரும்பொழுது சிறுநீரகம் இரத்தத்திலுள்ள மலத்தைப் பிரிக்கும் பணியைச் செய்கிறது. தோல் வழியாகவும், மலக்குடல் வழியாகவும், மூக்கு வழியாகவும், வெளியேற வேண்டிய மலங்கள் அவ்வாயில்கள் அடைபட்டு இருப்பதனால் அவற்றை சிறுநீரகத்தின் வழியாக வெளியேற்ற வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. இதனால் சிறு நீரகத்திற்கு வேலைபளு அதிகமாகி தளர்ச்சியுறலாம். தனது இயல்பான வேலையைக் கூடச் செய்ய இயலாமல் போகும் நிலை வரலாம். குறிப்பிட்ட மலத்தில் இரசாயன வேகத்தால் சிறுநீரகத்தின் அமைப்புச் சிதையலாம். சிறுநீரகம் வேலை செய்ய முடியாத போது அதனை சிறுநீரக அமைப்பு நோய் என்று கருதி சிகிச்சை செய்கின்றனர். கெட்டுப்போன சிறுநீரகத்தை எடுத்துவிட்டு புதிய சிறுநீரகம் புகுத்தினால் நோய்த்துன்பம் குறைந்து சுகமடையலாம். அறுவைசிகிச்சை நிபுணர்கள் இப்போது இதை இலகுவில் செய்கிறார்கள். சாதாரண இயந்திரங்களில் ஒரு உறுப்பை எடுத்து விட்டு அதற்குப் பதில் புதிய உறுப்பை அமைப்பது எளிதாகலாம். ஆனால் உடம்பின் ஒன்றோடொன்று இயல்பாக இணைந்துள்ளவற்றை எடுப்பது எளிதானாலும், புதிய ஒன்றைப் பொருத்துவது அவ்வளவு சுலபமானதல்ல நிபுணர்கள் சிறு நீரகத்தையோ இதயத்தையோ அல்லது வேறு உறுப்புகளையோ, மாற்றி அமைப்பதை நாம் இப்போது கேள்விப்படுகின்றோம். இதனால் சிலர் குணமடைந்ததாகவும் அறிகின்றோம். அறுவைச்சிகிச்சையால் தற்காலிக குணமடைந்த பலர் வேறு பல உறுப்புக்கள் பாதிக்கப்படுவதையும் நாம் கேள்விப்படுகின்றோம். அறுவைச்சிகிச்சை முறைகளைக் கையாள்வதை விட நோயின் ஆரம்ப காலத்திலேயே இயற்கை முறைகளைக் கையாண்டு மலங்களை உரிய காலத்தில் வெளியேற்றிவிடுவதே சிறந்தது.

(இயற்கை இன்னும் வளரும்)

புதன், 9 ஜூன், 2010

பகுதி 17 - இயற்கை மருத்துவம் (தத்துவங்களும் செயல்முறைகளும்) மகரிஷி க.அருணாசலம்.

இயற்கை நியதிகள்

உலகத்தில் எல்லாம் ஒருநியதியின் கீழ் நடைபெறுகின்றன. வானத்திலுள்ள உடுக்கள் ஓடி ஆடுவது கூட ஒரு நியதியோடுதான். சூரிய சந்திரர்கள் நியதியோடு இயங்குவது நாம் அறிந்ததே. நியதி என்றால் கணக்கிற்கு உட்பட்டது. அளவிட முடியும் எண்ணால் குறிப்பிடலாம். ஒழுங்குமுறை என்பது இதனின் ஒருவகையே கணக்கில் கூடுதலோ, குறைதலோ இருக்கும் போது சமநிலைச் சீரழிவு ஏற்படுகிறது. அமைதி குறையும். மனிதர்கள் பெரும்பாலும் விரும்புவது அமைதியையே. இதனை நிலை நாட்ட விரும்புபவர்கள் விதிமுறைகளை அறிந்து சமநிலைக்குக் கொண்டுவரப் பாடுபடுகிறார்கள். விதிமுறைகளில் ஒன்று, எல்லாம் ஏழு, ஏழாகத் தொகை நிலையில் கூடி நிற்கிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. படைப்பு ஆறு நாட்களில் நடந்தது ஏழாம் நாள் ஓய்வு பெற்று மறுபடியும் படைப்புக்குப் பரமன் தயாரானார் என்பது ஒரு சாரார் கொள்கை. சந்திர கலைகளும் இந்த அளவிலேயே நடைபெறுகின்றன. திங்களை முதல் நாளாகக் கொண்டு கணக்கிடுகிறார்கள். சூரிய ஆதிக்கத்தில் நம்பிக்கையுடையவர்கள் ஞாயிற்றுக்கிழமையை முதல் நாளாகக் கொண்ட கணக்கிடுகிறார்கள். எப்படியும் ஏழுக்குள் ஒன்று பரிபூரண ஓய்வுக்காக என்பது கோட்பாடு. உழைப்பும், ஓய்வும் ஆறும் ஒன்றுமாகக் கூட்டளவில் இருந்தால் இது ஆரோக்கியநிலை: சமநிலை இதுவே அழியாத ஆனந்தத்தைக் கண்டு கொள்ள இயலாது

இந்த ஏழின் எழில் நிறைந்த சட்டத்தை அடுத்து வரும் அத்தியாயங்களில் விரிவாக விளங்கிக் கொள்ள முயலுவோம்.

(இயற்கை இன்னும் வளரும்)

வெள்ளி, 4 ஜூன், 2010

பகுதி 16 - இயற்கை மருத்துவம் (தத்துவங்களும் செயல்முறைகளும்) மகரிஷி க.அருணாசலம்.

நோயியல் தத்துவம்
முந்திய அத்தியாயங்களில் பிராண சக்தியின் இயல்பையும் செயலையும் பற்றி அறிந்தோம். இப்போது நோய் பற்றிய சில உண்மைகளைத் தெரிந்து கொண்டால் அது உதவியாக இருக்கும். முன்னரே நோய் ஒன்றுதான் பல அல்ல என்றும், அது நமக்கு நண்பனே பகைவன் அல்ல என்பது பற்றியும் ஓரளவு அறிந்து கொண்டுள்ளோம். இப்போது நோய் வளரும் வழிமுறைகளைப் பற்றி ஆராய்வோம்.

நோய் வளரும் வழிமுறைகள்
நோய் என்னும் விதையை உடம்பில் விதைத்து விட்டால் அது மற்றைய விதைகளைப் போலவே வளர்ந்து செடியாகி மரமாகி, பூத்துக்காய்க்கும். ஆரம்பத்திலேயே அதனோடு ஒத்துழைத்து அது பூரணமாக விரிந்து வெளியேற வழிகாட்டிவிட்டால் உடல் தூய்மையுறும். ஊன் உடல் பொன் உடலாக அருள் உடலாக, ஞான உடலாக வளர்ந்து மனிதவாழ்க்கை பெற்றதன் பயனெல்லாம் அடைய உதவும். மாறாக, நோய் வித்து உடலில் விழுந்த உடனேயே அதைக் கண்டு பயந்தவர்கள் மிரண்டு போய் மருத்துவத்தையே பிழைப்பாகக் கொண்ட சிலரிடம் செல்கிறார்கள். அவர்கள் உடனடியாக உடலுக்கு சுகம் கொடுக்கும் பொருட்டு வெளியேறும் மலத்தினை அதாவது நோய் என்று சொல்வதனை பலம் வாய்ந்த நச்சுப் பொருள்களைக் கொண்டு உள்ளேயே ஆழ்த்தி அமிழ்த்து விடுகிறார்கள். வெளியேற வேண்டிய வேண்டாப் பொருள்களும் திசுக்களிடையே சென்று உருமாறி உயிரணுக்குள்ளே நுழைந்து ஒடுங்கி அடங்கி விடுகின்றன. இச்சமயம் கடலில் அலை ஓய்ந்திருப்பது போல் உடலும் அமைதி எய்துகிறது. தட்ப-வெட்பம் சமனடைந்து ஒழுங்காகி விட்டமாதிரி ஒரு தோற்றமும் மனநிறைவும் ஏற்படுகிறது. நோயாளி நோய் தீர்ந்துவிட்டது என்று எண்ணுகிறார். அது தனது உடலுக்குள்ளே அடிமட்டத்திலுள்ள அணுக்களினுள்ளே உருமாறி ஒளிந்து கொண்டிருப்பது இவர்களது கண்களுக்குப் புலப்படுவதில்லை. வேற புலன்களுக்கும் அவை தென்படுவதில்லை. ஆனால் நடப்பது என்ன? நுண்ணிய வடிவில் ஒடுங்கியிருக்கும் வேண்டாப் பொருள் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக வளர்ந்து வருகிறது.

நோய் (அன்னியப் பொருள்) முதலில் வெளியேற முயலுவதைக் தீவிர நிலையென்றும் அடக்கிவைத்த பின் வேறு உருக்கொண்டு வளர்ந்து சமயமும் இடமும் கிடைத்த போது வெவ்வேறு வடிவில் வெளியேற முயலும் காலத்தை நாட்பட்ட நோய் என்றும் கூறுகின்றனர். அறிவும் தன்னம்பிக்கையும் ஆற்றலும் குறைவாக இருப்பதால் மக்கள் திறமையுடைய சிலரை நாடுவது இயல்பே. ஆனால் திறமையுடைய இச்சிலரோ மக்களின் இப்பரிதாப நிலையைப் பயன்படுத்திக்கொண்டு அதனையே வாழும் வழியாகக் கொள்கின்றனர். வந்தவருக்கு உடனடியாக பலன் தெரிவிக்க வேண்டுமென்ற நோக்குடையவர்கள் திருடனைத் தேடிக் கொண்டு தாக்குவதைப் போல் வெளித்தோன்றும் இந்நோயினையும் பலமான மருந்துக்களைக் கொண்டு அமுக்கி விடுகின்றனர். அப்போது நாட்பட்ட நோயும் பலாத்காரத்திற்குப் பயந்து நாடி நரம்புகளுக்குள்ளே ஓடி, ஒளிந்து அங்குள்ள சத்துப் பொருள்களை உண்டு வளர்கிறது. சமயம் வாய்த்த போது சீரழிக்கும் நோயாக, மாறா நோயாக உயிர் குடிக்கும் நோயாக வளர்ந்து முடிவில் மனிதனையே கொல்கிறது.

தீவிர நோய், நாட்பட்ட நோய், மாறா (சீரழிக்கும்) நோய் என்று மூன்று பெரும் நிலைகளில் நாற்று, செடி, மரம் என்பதைப்போல் நோயானது வளர்கின்றது. 

இயற்கை முறை சிகிச்சை மேலே குறிப்பிட்ட ஒவ்வொரு நிலையிலும் ஒத்ததாக இருந்தால் பாதிக்கப் பட்ட ஒருவர் நோயில் இருந்து குணமடைவது எளிதாகும்.

(இயற்கை இன்னும் வளரும்)

செவ்வாய், 1 ஜூன், 2010



சேவை செய்திகள்.....

ஒரு நாள் இயற்கை நல வாழ்வு பயிற்சி முகாம்.

சென்னை மற்றும் சுற்றுப்புறத்தில் வசிக்கும் 
அன்பர்களுக்கு ஒரு இனிய வாய்ப்பு..

வருகின்ற ஆறாம் தேதி ஜூன் மாதம் (ஞாயிற்றுக்கிழமை) அன்று குரோம்பேட்டை ந்யூ காலனியில் ஒரு நாள் இயற்கை நல வாழ்வுப் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. 

இந்தப் பயிற்சி முகாமில் இயற்கை நலவாழ்வு பற்றிய பயிற்சி அளிக்கப்படும்.

இயற்கை உணவு தயாரிக்கும் முறைகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம். காலை மூலிகைச் சாறு, யோகப் பயிற்சி, மதிய இயற்கை உணவு, மற்றும் மாலை பழச்சாறு வழங்கப் படும்.

முகவரி: 
திரு.முத்துகிருஷ்ணன்,
மகாத்மா காந்தி இயற்கை உணவு மற்றும் யோகா நலவாழ்வு மையம்,
21,  சிவானந்தா லேன், 
எட்டாவது கிராஸ் தெரு,
ந்யூ காலனி, குரோம்பேட்டை, சென்னை - 600044
(குரோம்பேட் பேருந்து நிறுத்தத்தில் இருந்து நடக்கும் தூரம் அல்லது ஆட்டோவில் வர ரூபாய் முப்பது வரை செலவாகலாம்.)


தொடர்புக்கான தொலைபேசி:- 044-22386208
பயிற்சி காலம்: காலை ஏழு மணி முதல் மாலை ஐந்து மணி வரை.


கட்டணம்: நூற்று இருபத்தைந்து ரூபாய் மட்டும்.




யோகா பயிற்சி செய்து கொள்ள விரும்புபவர்கள் அதற்கேற்ற (இறுக்கமில்லாத பருத்தியினால் ஆன) உடைகளுடன் செல்வது நலம். 


இயற்கை உணவின் முழு பயன் பெறவேண்டும் எனில் காலையில் முகாமுக்கு வரும் முன்னர் சமைத்த உணவை தவிர்த்து விட்டு ஏதாவது ஒரு பழச் சாறு அல்லது இளநீர் அருந்தி விட்டு முகாமுக்கு வருதல் நலம். 


(குறிப்பு:வாழை இலைக் குளியல் தேவைப்படுபவர்கள் முன்னதாக பதிவு செய்து கொள்ளவும். வாழை இலைக்குளியல் வேண்டுவோர் தனி கட்டணம் ரூ.ஐம்பது செலுத்த வேண்டும். பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் முன்னதாக தங்கள் பெயர்களை பதிவு செய்து கொண்டு விவரங்களை பெற்றுக் கொள்ளவும்.)

அன்பர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம்.

வெள்ளி, 28 மே, 2010

பகுதி 15 - இயற்கை மருத்துவம் (தத்துவங்களும் செயல்முறைகளும்) மகரிஷி க.அருணாசலம்.
15
இயற்கை மருத்துவர்கள் நோயின் அறிகுறிகளுக்கு மருத்துவம் செய்யாமல் உடம்பிலுள்ள பிராணசக்தியை அதிகப்படுத்தி மலத்தை வெளியேற்றும் தந்திரங்களைக் கையாளுகின்றனர். உடம்பில் போதுமான பிராணசக்தி அதாவது உயிராற்றல் இருந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். உடல் தானியங்கி இயந்திரம். அதற்கு ஒரு வாய்ப்புகொடுத்தால் தானே சூழ்நிலையுடனும் இயற்கையுடனும் சமநிலை எய்தும் ஆற்றல் பெறும். எண்ணங்களின் கோளாறுகளினாலோ, உணவென்று வேண்டாதவைகளை ருசி கருதி உட்கொள்வதினாலோ உண்டாகும் துன்பங்களை அறிவறிந்து மாற்றி அமைத்துக் கொண்டால் இப்போது நடைபெறுகின்ற வேண்டாத வேலைகள் பலவற்றை இல்லாமலே செய்து விடலாம்.

கோடானகோடி ரூபாய்கள் செலவிட்டு ஆராய்ச்சியாளர்களைத் தயார் செய்து மருந்தகங்களின் மூலம் புதுப்புது மருந்துகளைக் கண்டுபிடித்து உற்பத்தி செய்து அவற்றிற்கு சந்தை தேட முயற்சிக்கும் வேலைகளின் பெரும்பகுதியைக் குறைத்து, அதனால் எஞ்சும் ஆற்றலையும், வேறு பல வசதிகளையும் ஆக்க வேலைகளுக்குப் பயன்படுத்தலாம். இதனால் நவீன மருத்துவம் தவறானது என்ற அர்த்தமில்லை. அறிவியல் துறை வளர்ச்சியை உள்ளறிவுகொண்டு உகந்த அளவு பயன்படுத்திக்கொள்ளலாம்.

(இயற்கை இன்னும் வளரும்)

செவ்வாய், 25 மே, 2010

பகுதி 14 - இயற்கை மருத்துவம் (தத்துவங்களும் செயல்முறைகளும்) மகரிஷி க.அருணாசலம்.


வெளியேற்றலுக்குப் பதிலாக அமுக்கி வைத்தல்
நாம் உண்ணும் உணவு இரத்தமாக மாறி உடலுக்கு வேண்டிய ஊட்டத்தைக் கொடுக்கிறது. உண்ணும் எல்லாப் பொருள்களுமே இரத்தமாக மாறி விடுவதில்லை. உடம்பில் ஊறும் செரிமானச் சுரப்பு நீர்களும், புளிமங்களும் அன்னக் குழம்புடன் சேர்ந்து பின்னர், அன்னரசமாகவும் அதிலிருந்து உறிஞ்சப்பட்ட சாரம் இரத்தமாகவும் மாறுகிறது. எஞ்சிய பொருள்கள் வேண்டாதவையாக பெருங்குடல் வழியாக வெளித்தள்ளப்படுகின்றன. இப்பொருள்கள் ஐவகை மலங்களாக அதாவது கரியமிலவாயு, வியர்வை, சிறுநீர், மலம், கபம் என வெவ்வேறு உறுப்புகளினால் வெளியேற்றப்படுகின்றன. இந்த வேலை அவ்வப்போது நடைபெற்றால் பரவாயில்லை. ஆனால், நாகரிக வாழ்வில் ஈடுபட்ட மனிதர்கள் பலர் இதனைக் காலாகாலத்தில் செய்வதில்லை. தடைபட்ட மலம் உள்ளே தங்கி நிற்கின்றது. உடலுள் உறையும் பிராணசக்தி காலங்கடந்து உடம்பில் நிற்கும் கழிவுப்பொருள்களை வெளித்தள்ளும் இயக்கமே நோய் எனப்படுகிறதென்று இயற்கை மருத்துவர்கள் நம்புகின்றார்கள்.

ஆதலால்தான் இவர்கள் நோயை நண்பனாகக் கருதுகின்றார்கள். நோய்க்கு இவர்கள் பயப்படுவதில்லை. தோன்றும் அறிகுறிகளைக் கண்டு அஞ்சுவதில்லை. காரணங்களைக் கண்டுகொண்டு அந்நியப் பொருள்கள் அதாவது உடற்கட்டுமானத்துக்க வேண்டாத உள்ளேயுள்ள பொருள்களை வெளியேற்ற உதவுகின்றனர்.

நவீனமுறை பயின்ற மருத்துவர்கள் எளிய இயற்கை மருத்துவச் சிகிச்சைகளைக் கையானாது அறிகுறிகளையே நோய் என்று நினைத்து அவற்றிற்குப் பரிகாரம் காண முயலுகின்றனர். அவர்கள் கையாளும் பரிகாரங்கள் மலத்தை வெளியேற்றாமல் உள்ளே அமுக்கி வைக்கவே செய்கின்றன. இதனை நவீன மருத்துவர்கள் ஒப்புக் கொள்வதில்லை. தங்களுடைய மருத்துவமும் மலத்தை வெளியேற்றவே செய்கிறதென்று கூறுகின்றனர்.

ஆனால் உண்மை என்ன? சளி, இருமல், கோழை முதலிய நோய்க்குறிகள் நீங்க, சாப்பிடும் மருந்துகள் ஒவ்வொன்றிலும் அபின், கஞ்சா போன்ற போதைப்பொருள்கள் கலந்திருப்பது வெள்ளிடைமலை. இவை மலத்தை நீக்குவதற்குப் பதிலாக மலம்தோன்றும் இடங்களிலுள்ள ஜவ்வு படலத்தையும் நரம்புகளையும் தளரச்செய்து செயலற்றவைகளாக்கி, ஸ்தம்பிக்க வைத்து விடுகின்றன. உடனடியாகக் குணம் இருப்பது போல் தோன்றுகின்றது. உண்மையில் நடப்பது வெளித்தள்ளும் ஆற்றல் குறைந்து, மருந்தின் வேகத்தால் மலங்கள் உள்ளொடுக்கி உயிரணுக்களிடையே பதுங்கிக் கொள்கின்றன. இதே போல் பாதரசம், ஈயம், துத்தநாகம் போன்ற மருந்துகளிலுள்ள விஷம் உள்ளுடம்பிலுள்ள இயக்கங்களைத் தடைசெய்து அல்லது மிகவேகமாகத் தூண்டி மல வெளியேற்றலுக்குத் தடையாகவே வேலை செய்கின்றன. இத்தகைய சிகிச்சைகள் நடைபெறும் பொழுதெல்லாம் தற்காலிகச் சுகம் கிடைப்பினும், மருந்தின் விஷமும் மலத்தின் விஷமும் கலந்து புதிய புதிய நோய்களாக உருவெடுகின்றன. ஆஸ்த்மா, இதயநோய், புற்றுநோய், கண்டமாலை, மேகநோய், நமட்டுச்சொறி முதலியவை தோன்றி மனிதர்களை அல்லற்படுத்துகின்றன. இத்தகைய நோய்களை நவீன மூலமும் குணப்படுத்த முயலுகிறது. ஆனால் இவை உருமாறி மறுபடியும் மறுபடியும் வந்து தொலைகின்றன. டாக்டர்களைக் கேட்டால் "ஆமாம், இவையெல்லாம் தீராத நோய்கள் புதிய மருந்துகளைக் கண்டு பிடித்துத்தான் இவைகளைப் போக்க முடியும். இவைகளுக்கு நடைமுறையில் உள்ள மருந்துகளை உட்கொண்டு காலங்கடத்துங்கள்" என்று சமாதானப்படுத்துகின்றனர். நீரழிவு நோயைக் குணப்படுத்த முடியாது ஆனால் நாள்தோறும் இன்சுலின் ஊசிபோட்டு எப்படியோ வாழலாம் என்ற ஆறுதல் கிடைக்கின்றது. அறுவையின் மூலமாகவோ அல்லது சுட்டுப்பொசுக்குவதன் மூலமாகவோ புற்றுநோயிலிருந்து தற்காலிகமாகத் தப்பலாம். அதை அறவே ஒழிக்க இதுவரை பரிகாரம் காணமுடியவில்லை என்கின்றனர்.

இதே கதைதான் ஆஸ்த்மா, க்ஷயம், மூலம், பெளந்திரம் போன்ற தீராத நோய்களுக்கும் இவைகளுக்குப் பெயரே தீராத நோய்கள் ஆராய்ச்சியாளர்கள் இதுவரை கண்டுபிடித்துள்ள 4000-க்கும் மேற்பட்ட நோய்களில் 60 சதவிகித நோய்கள் டாக்டர்களால் அதாவது நவீன மருந்துகளால் உண்டானவை என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். இவான் இலிச் என்ற பேரறிஞர் Medical Mnemisis அதாவது "வைத்தியச் சாபத்தீடு" என்ற ஒரு புத்தகமே எழுதி வெளியிட்டுள்ளார்.

(இயற்கை இன்னும் வளரும்)

சனி, 22 மே, 2010


பகுதி 13 - இயற்கை மருத்துவம் (தத்துவங்களும் செயல்முறைகளும்) மகரிஷி க.அருணாசலம்.

நோய் நீக்கலுக்குக் காரணம்

மருந்து வேண்டாம். மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு...

மனிதர்கள் அனைவரும் விரும்புவது நோயற்ற வாழ்வு. இதுவே குறைவற்ற செல்வம்.

நோயற்ற வாழ்வுதான் வாழ்வாங்கு வாழும் உயர் வாழ்வுக்கு அடிப்படையாகும். இதனாலேயே திருமூலரும் 'உடம்பார் அழியின் உயிரார் அழிவர்' என்று கூறியுள்ளார்.

நோய் நீக்கலுக்குக் காரணம்
"நோய் பல அல்ல" என்றும் "நோய் நமக்கு நண்பன்" என்றும் இதற்குமுன் கூறப்பட்டுள்ளது. அப்படியானால் நாம் ஏன் நோயின்றி வாழ முற்பட வேண்டும்? உடம்பு அழிந்து போகும் நிலைக்கு வந்து கொண்டிருக்கிறது என்பதைக் காட்டும் அறிகுறிதான் நோய். நோய் வந்தபோது நாம் விழித்துக் கொள்ள வேண்டும். உடம்பினுள் ஏதோ வேண்டாத பொருளோ, நச்சுப் பொருளோ தங்கி, அது நம் வளர்ச்சிக்கு இடையூறாக உள்ளது என்பதை நோய் காட்டுகிறது. வேண்டாத பொருள்களை வெளியேற்ற எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் நச்சுப் பொருள்கள் வெளியேறி விட்டால் உடல் ஆரோக்கியத்தில் நிலைத்து நிற்கும். அத்துடன் நீண்டநாள் வாழலாம். நச்சுப் பொருளை வெளியேற்ற முயற்சி செய்யாமல் நோயாளிகள் மருத்துவரிடம் போகின்றார்கள். மருத்துவர்களும் தங்களிடமுள்ள மருந்துகளைக் கொடுத்து நோயினை குணப்படுத்த முயலுகின்றனர்.

மருந்துகளின் தன்மை
ஆங்கில மருத்துவர்களிடமுள்ள மருந்துகளோ பெரும்பாலும் வெறி மயக்கப் பொருள்கள். ஆங்கிலத்தில் இதை 'டிரக்' (Drug) என்று சொல்கிறார்கள். Medicine (மெடிசின்), Drug (டிரக்) என்று ஆங்கிலத்தில் இரு வார்த்தைகள் உண்டு. தமிழில் இரண்டையும் மருந்து என்றுதான் சொல்லுகிறோம். அலோபதிக் மருந்துகளின் பெரும்பாலானவை டிரக்குகளே. மருந்துக் கடைகளில் தகுதி வாய்ந்த டாக்கடர்களுடைய சீட்டு இல்லாமல் இந்த மருந்துகளை கொடுக்கமாட்டார்கள். இந்த மருந்துகளின் மீது விஷம் (Schedule H) என்று சிவப்பு எழுத்தால் எழுதப் பெற்றிருக்கும். விஷத்தை விஷத்தால் முறியடிக்க வேண்டும் என்ற கோட்பாடுடைய மருத்துவர்களுக்கு பூச்சி(வைரஸ்)களால் நோய் வந்துள்ளது. அப்பூச்சிகளை விஷத்தால்தான் கொல்லமுடியும் என்ற கொள்கையுடையோரும் இந்த நச்சு மருந்துகளை உபயோகிக்கின்றனர்.

மருந்துகள் செய்யும் வேலை.
இம்மருந்துகள் செய்யும் வேலைகளை பார்த்தாலும் இதை விளங்கிக் கொள்ளலாம். சில மருந்துகள் உயிரைக் குடிப்பன. இவை பூச்சி(வைரஸ்)களைக் கொல்வதுடன் மனிதனின் உயிராற்றலையும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கும்; குடிக்கும்.

ஏற்கனவேயுள்ள நச்சுப் பொருள்களுடன் இந்த நச்சுப் பொருளும் சேர்ந்து கொண்டு உணர்வை மரத்துப் போக செய்கின்றன. கொஞ்ச காலத்திற்கு வலி தெரிவதில்லை. நோய் தீர்ந்து விட்டதென ஒரு பிரமை ஏற்படுகிறது. உண்மையில் நோய் தீருவதில்லை. அது தெரியவில்லை அவ்வளவே. சில சமயங்களில் இந்த நச்சுப் பொருள்கள் இரத்தத்தில் கலந்து வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. அங்கிருந்து அவை வெளியேற முயலும்போது துன்பம் ஏற்படுகிறது. மக்கள் அதனைப் புதிய நோய் என்று கருதுகின்றனர். பழைய நோய்தான் புதிய இடத்திற்கு வந்திருக்கிறதென்பது அவர்களுக்குத் தெரிவதில்லை. டாக்டர்களும் புதிய நோய்க்கு புதியதொரு சிகிச்சை செய்கிறார்கள்.

(இயற்கை இன்னும் வளரும்..)

செவ்வாய், 18 மே, 2010

பகுதி 12 - இயற்கை மருத்துவம் (தத்துவங்களும் செயல்முறைகளும்) மகரிஷி க.அருணாசலம்.

உடல் உறுப்புகளின் தாங்கும் திறன்

மனிதனுடைய உடல் உறுப்புகள் வாழ்நாள் முழுவதும் சமைத்த உணவின் கொடுமைகளைத் தாங்கிக் கொண்டே வருகின்றன. கழிவுகளை வெளியேற்றிக் கொண்டே இருக்கின்றன. பல வருடங்கள் கழித்து அக்கொடுமைகளை தாங்கிக் கொள்ள முடியாத பொழுது தான் அவைகள் வேலை நிறுத்தத்தில் (Strike) ஈடுபடுகின்றன. அதன் பிறகே புற்றுநோய், இரத்த அழுத்தம், நீரிழிவு, ஆஸ்துமா, சிறுநீரகம் வேலை செய்யாமை போன்ற நோய்கள் வருகின்றன.

இரத்தம் உடலிலிருந்து வெளியே வந்த சில நிமிடத்தில் அதில் உள்ள செல்கள் எல்லாம் இறந்துவிடுகின்றன. அதே போல் மாமிசங்களும் கெட்டுப்போக ஆரம்பித்து நேரம் ஆக ஆக முழு விஷப் பொருட்களாக மாறிவிடுகின்றன. அதைச் சமைக்கும் பொழுது அதில் விஷப் பொருள் மேலும் அதிகரிக்கின்றது. மிருகங்களிலிருந்து கிடைக்கும் புரதச் சத்துக்களே மிகவும் உயர்ந்த புரதம் என்று கூறுவது தவறாகும். அப்படியென்றால் அந்த உயர்ந்த புரதம் எப்படி உருவாக்கப்பட்டது. இலை, தழை போன்ற இயற்கை உணவுகளினால் தானே. சளி, இருமல், ஆஸ்துமா, இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்களை உண்டாக்குவதற்கும் அவற்றை வளர்ப்பதற்கும் மிகவும் உதவி செய்கின்றவை சமைத்த உணவுகளான பால், வெண்ணெய், ஜாம், இனிப்புகள் அரிசி, மீன், முட்டை, மாமிசம் முதலியவைகளே ஆகும்.

இயற்கை உணவு சிறிதும் தராமல், ஒரு சமயம் இங்கிலாந்தில் தண்டனை பெற்ற சிறைச்சாலைக் கைதிகளுக்கு முட்டை, மீன், மாமிசம் முதலியவைகளை மட்டும் எண்ணெயில் பொரித்துக் கொடுத்ததில் அவர்கள் 28 நாட்களுக்குள் இறந்து விட்டார்கள். ஆனால் பட்டினி இருக்கும் மனிதன் 70 நாட்கள் வரை உயிர் வாழ முடியும். மாமிச உணவுகளிலிருந்து வெளியேற்றப்பட வேண்டிய விஷக்கழிவுப் பொருள்களே அந்தக் கைதிகளை விரைவில் கொன்றுவிட்டன. பாம்பின் வாயில் விஷம் உண்டாவது போல் எல்லா மிருகங்களும் விஷத்தை உற்பத்தி செய்கின்றன. மாமிசத்திலிருந்து விஷத்தை தனியாகப் பிரிக்க முடியாமல் மாமிசம் சாப்பிடும் மனிதன் விஷத்தையும் சேர்த்துச் சாப்பிடுகின்றான். சைவ உணவுகளை விட மாமிச உணவுகளைச் சாப்பிடும் பொழுது பத்து மடங்கு அதிகமாக யூரிக் அமிலம் உற்பத்தியாகிறது. இதை வெளியேற்ற கல்லீரல், சிறுநீரகம், இருதயம் நான்கு மடங்கு அதிகமாக வேலை செய்ய வேண்டியிருக்கிறது. சைவ உணவு உட்கொள்வோர் வெளியேற்றும் சிறுநீரில் யூரிக் அமிலம் 0.2 லிருந்து 0.7 கிராம்தான் ஒரு மணிநேரத்திற்கு. ஆனால் மாமிச உணவு கொள்வோர் ஒரு மணி நேரத்திற்கு 2 கிராம் யூரிக் அமிலம் வெளியேற்றுகின்றனர்.

உருளைக் கிழங்கு, ரொட்டி, தானியங்கள், பருப்புகள் நிறைந்த சமைத்த உணவுகளும், அமிலங்களையும் விஷத்தன்மைகளையும் உற்பத்தி செய்து நோய்களை உண்டாக்குகின்றன. தானியங்களிலும் பருப்புகளிலும் கிடைக்கும் எல்லாச் சத்துக்களையும் மிக எளிதாக, பழங்களிலிருந்தும் கொட்டைகளிலிருந்தும் (Fruits and nuts) பெற்று விடலாம். கொட்டைகள் என்பது இங்கே தேங்காய், முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு, அக்ரூட் பருப்பு போன்றவற்றைக் குறிக்கும். சமையல் என்பது ஒரு உபயோகமற்ற, தேவையில்லாத, நேரத்தை வீணாக்கும் செய்கையே. அது இல்லத் தலைவிகளை இருளில் மூழ்கடித்து சமையலறைக்கு அடிமைகளாக்கி விடுகின்றது.


இந்தத் தொடரில் அடுத்து வர இருக்கும் துணைத் தலைப்பு: 
மனிதன் நோயின்றி வாழ முடியாதா?


(இயற்கை இன்னும் வளரும்) 

திங்கள், 17 மே, 2010

சேவை செய்திகள்.

ஒரு முக்கிய அறிவிப்பு.
ஏழு நாட்கள் யோகா & இயற்கை மருத்துவ சிகிச்சை 
மற்றும் விழிப்புணர்வு முகாம்.

இடம்: இயற்கை வாழ்வு நிலையம், குலசேகரன்பட்டினம், தூத்துக்குடி, (தமிழ்நாடு)

நாள்: 18.052010 முதல் 24-05-2010 முடிய.

மனிதனுக்கு மருத்துவமே அவசியமில்லை என திருவள்ளுவர் கூறியுள்ளார்; ஆம், எதை உண்ண வேண்டும்? எப்போது உண்ண வேண்டும்: எவ்வாறு உண்ண வேண்டும்? எனும் இம்மூன்று வினாக்களுக்கு விடைகள் அறிந்தால், எங்கு அலைந்தும் உடல், உள நலம் கிட்டாதவர்கட்கு, எளிதில் மருந்தின்றி, அறுவையின்றி, மாற்று உறுப்பு பொருத்துதல் இன்றி, எளிதில் உடல்/உள நலம் கிட்டிவிடும்.

இந்த முகாமில் ''சீரோ பட்ஜெட்'' மருத்துவம் விளக்கம் அளிக்கப் படுகிறது. தம்பதியராக இம்முகாமில் கலந்து கொள்வது உயர்வு. இம்முகாமில் நோய் தராத, நோய் நீக்கும் உணவுகள் வழங்கப்படும்.

இந்திய அரசுக்கு சொந்தமான (NIN, PUNE) நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் நேச்சுரோபதி, பூனே இந்த முகாமை வழங்குகிறது. இணைந்து முகாமை நடத்துபவர்கள் Natural Life Centre, Kulasekaranpattinam, Tuticorin District (Tamil Nadu) PIN:628206.

நன்கொடை: நபர் ஒருவருக்கு முன்னூறு ரூபாய் மட்டுமே.
மேல் விவரங்கள் பெற: 9380873645 & 9944042986

முகாமில் கலந்து கொள்ள இயலாதவர்கள் கூட மேற்கண்ட தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு திரு.மூ.ஆ.அப்பன் அவர்களிடம் மற்ற நிகழ்ச்சிகள் பற்றிய செய்திகளை அறியலாம்.