செவ்வாய், 25 மே, 2010

பகுதி 14 - இயற்கை மருத்துவம் (தத்துவங்களும் செயல்முறைகளும்) மகரிஷி க.அருணாசலம்.


வெளியேற்றலுக்குப் பதிலாக அமுக்கி வைத்தல்
நாம் உண்ணும் உணவு இரத்தமாக மாறி உடலுக்கு வேண்டிய ஊட்டத்தைக் கொடுக்கிறது. உண்ணும் எல்லாப் பொருள்களுமே இரத்தமாக மாறி விடுவதில்லை. உடம்பில் ஊறும் செரிமானச் சுரப்பு நீர்களும், புளிமங்களும் அன்னக் குழம்புடன் சேர்ந்து பின்னர், அன்னரசமாகவும் அதிலிருந்து உறிஞ்சப்பட்ட சாரம் இரத்தமாகவும் மாறுகிறது. எஞ்சிய பொருள்கள் வேண்டாதவையாக பெருங்குடல் வழியாக வெளித்தள்ளப்படுகின்றன. இப்பொருள்கள் ஐவகை மலங்களாக அதாவது கரியமிலவாயு, வியர்வை, சிறுநீர், மலம், கபம் என வெவ்வேறு உறுப்புகளினால் வெளியேற்றப்படுகின்றன. இந்த வேலை அவ்வப்போது நடைபெற்றால் பரவாயில்லை. ஆனால், நாகரிக வாழ்வில் ஈடுபட்ட மனிதர்கள் பலர் இதனைக் காலாகாலத்தில் செய்வதில்லை. தடைபட்ட மலம் உள்ளே தங்கி நிற்கின்றது. உடலுள் உறையும் பிராணசக்தி காலங்கடந்து உடம்பில் நிற்கும் கழிவுப்பொருள்களை வெளித்தள்ளும் இயக்கமே நோய் எனப்படுகிறதென்று இயற்கை மருத்துவர்கள் நம்புகின்றார்கள்.

ஆதலால்தான் இவர்கள் நோயை நண்பனாகக் கருதுகின்றார்கள். நோய்க்கு இவர்கள் பயப்படுவதில்லை. தோன்றும் அறிகுறிகளைக் கண்டு அஞ்சுவதில்லை. காரணங்களைக் கண்டுகொண்டு அந்நியப் பொருள்கள் அதாவது உடற்கட்டுமானத்துக்க வேண்டாத உள்ளேயுள்ள பொருள்களை வெளியேற்ற உதவுகின்றனர்.

நவீனமுறை பயின்ற மருத்துவர்கள் எளிய இயற்கை மருத்துவச் சிகிச்சைகளைக் கையானாது அறிகுறிகளையே நோய் என்று நினைத்து அவற்றிற்குப் பரிகாரம் காண முயலுகின்றனர். அவர்கள் கையாளும் பரிகாரங்கள் மலத்தை வெளியேற்றாமல் உள்ளே அமுக்கி வைக்கவே செய்கின்றன. இதனை நவீன மருத்துவர்கள் ஒப்புக் கொள்வதில்லை. தங்களுடைய மருத்துவமும் மலத்தை வெளியேற்றவே செய்கிறதென்று கூறுகின்றனர்.

ஆனால் உண்மை என்ன? சளி, இருமல், கோழை முதலிய நோய்க்குறிகள் நீங்க, சாப்பிடும் மருந்துகள் ஒவ்வொன்றிலும் அபின், கஞ்சா போன்ற போதைப்பொருள்கள் கலந்திருப்பது வெள்ளிடைமலை. இவை மலத்தை நீக்குவதற்குப் பதிலாக மலம்தோன்றும் இடங்களிலுள்ள ஜவ்வு படலத்தையும் நரம்புகளையும் தளரச்செய்து செயலற்றவைகளாக்கி, ஸ்தம்பிக்க வைத்து விடுகின்றன. உடனடியாகக் குணம் இருப்பது போல் தோன்றுகின்றது. உண்மையில் நடப்பது வெளித்தள்ளும் ஆற்றல் குறைந்து, மருந்தின் வேகத்தால் மலங்கள் உள்ளொடுக்கி உயிரணுக்களிடையே பதுங்கிக் கொள்கின்றன. இதே போல் பாதரசம், ஈயம், துத்தநாகம் போன்ற மருந்துகளிலுள்ள விஷம் உள்ளுடம்பிலுள்ள இயக்கங்களைத் தடைசெய்து அல்லது மிகவேகமாகத் தூண்டி மல வெளியேற்றலுக்குத் தடையாகவே வேலை செய்கின்றன. இத்தகைய சிகிச்சைகள் நடைபெறும் பொழுதெல்லாம் தற்காலிகச் சுகம் கிடைப்பினும், மருந்தின் விஷமும் மலத்தின் விஷமும் கலந்து புதிய புதிய நோய்களாக உருவெடுகின்றன. ஆஸ்த்மா, இதயநோய், புற்றுநோய், கண்டமாலை, மேகநோய், நமட்டுச்சொறி முதலியவை தோன்றி மனிதர்களை அல்லற்படுத்துகின்றன. இத்தகைய நோய்களை நவீன மூலமும் குணப்படுத்த முயலுகிறது. ஆனால் இவை உருமாறி மறுபடியும் மறுபடியும் வந்து தொலைகின்றன. டாக்டர்களைக் கேட்டால் "ஆமாம், இவையெல்லாம் தீராத நோய்கள் புதிய மருந்துகளைக் கண்டு பிடித்துத்தான் இவைகளைப் போக்க முடியும். இவைகளுக்கு நடைமுறையில் உள்ள மருந்துகளை உட்கொண்டு காலங்கடத்துங்கள்" என்று சமாதானப்படுத்துகின்றனர். நீரழிவு நோயைக் குணப்படுத்த முடியாது ஆனால் நாள்தோறும் இன்சுலின் ஊசிபோட்டு எப்படியோ வாழலாம் என்ற ஆறுதல் கிடைக்கின்றது. அறுவையின் மூலமாகவோ அல்லது சுட்டுப்பொசுக்குவதன் மூலமாகவோ புற்றுநோயிலிருந்து தற்காலிகமாகத் தப்பலாம். அதை அறவே ஒழிக்க இதுவரை பரிகாரம் காணமுடியவில்லை என்கின்றனர்.

இதே கதைதான் ஆஸ்த்மா, க்ஷயம், மூலம், பெளந்திரம் போன்ற தீராத நோய்களுக்கும் இவைகளுக்குப் பெயரே தீராத நோய்கள் ஆராய்ச்சியாளர்கள் இதுவரை கண்டுபிடித்துள்ள 4000-க்கும் மேற்பட்ட நோய்களில் 60 சதவிகித நோய்கள் டாக்டர்களால் அதாவது நவீன மருந்துகளால் உண்டானவை என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். இவான் இலிச் என்ற பேரறிஞர் Medical Mnemisis அதாவது "வைத்தியச் சாபத்தீடு" என்ற ஒரு புத்தகமே எழுதி வெளியிட்டுள்ளார்.

(இயற்கை இன்னும் வளரும்)

8 கருத்துகள்:

Ananya Mahadevan சொன்னது…

தமிழ்த்திரட்டிகளில் போட்டா நாலு பேருக்கு உபகாரமா இருக்குமே?

Ananya Mahadevan சொன்னது…

// சளி, இருமல், கோழை முதலிய நோய்க்குறிகள் நீங்க, சாப்பிடும் மருந்துகள் ஒவ்வொன்றிலும் அபின், கஞ்சா போன்ற போதைப்பொருள்கள் கலந்திருப்பது வெள்ளிடைமலை. இவை மலத்தை நீக்குவதற்குப் பதிலாக மலம்தோன்றும் இடங்களிலுள்ள ஜவ்வு படலத்தையும் நரம்புகளையும் தளரச்செய்து செயலற்றவைகளாக்கி, ஸ்தம்பிக்க வைத்து விடுகின்றன. உடனடியாகக் குணம் இருப்பது போல் தோன்றுகின்றது.// இதுக்குத்தான் நாங்க அல்லோபதியே உட்கொள்வதில்லை அஷ்வின் ஜி! நாட்டு மருந்து, ஆயூர்வேதம் இவையெல்லாம் ரொம்ப உடல் உபாதை இருந்தால் மட்டும் உபயோகிப்பது. நூற்றுக்கு நூறு அலோபதியைப்பற்றி சொல்லி இருப்பது யாவும் உண்மையே. அருமையான பகிர்வு.

Ananya Mahadevan சொன்னது…

previous posts, blog archive links போன்ற கேட்ஜட்டுகளை இணைக்கவும். பழைய பதிவுகளை ரெஃபர் செய்ய உபயோகமா இருக்கும்.

Ashwin Ji சொன்னது…

நீங்கள் சொன்னபடியே செய்கிறேன் அனன்யா. கருத்துக்கு இதய நன்றி

மதுரையம்பதி சொன்னது…

வேலைப் பளு அதிகம், இன்றுதான் வரமுடிந்தது. ஹோமியோபதி வைத்தியத்தில் நாள்பட்ட வியாதிகளான, ஆஸ்மா போன்றவற்றுக்கு நிவாரணம் இருப்பதாகச் சொல்கிறார்களே?....அதில் பக்க விளைவுகளும் இல்லை என்கிறார்கள். இவற்றைப் பற்றியும் எழுதுங்கள் சார்.

Ashwin Ji சொன்னது…

நமஸ்தே மௌலிஜி,
வருகைக்கு நன்றி. இப்போது இயற்கை நலவாழ்வியல் பற்றிய தொடரில் கவனம் செலுத்த வேண்டி இருப்பதினால் ஹோமியோபதி பற்றி நிச்சயம் பிறகு பதிவிடுகிறேன். ஆல்டர்நேடிவ் மெடிசின்ஸ் பற்றி எழுதும் பொது ஹோமியோபதி பற்றியும் விரிவாக காணலாம். அன்புக்கும் ஆதரவுக்கும் கருத்துக்கும் இதய நன்றி.

மங்குனி அமைச்சர் சொன்னது…

நல்ல பயனுள்ள பதிவு , நன்றி

Ashwin Ji சொன்னது…

வணக்கம் மங்குனி அமைச்சர் அவர்களே.
தங்கள் மேலான வருகைக்கும், அன்பான கருத்துரைக்கும் என் இதய நன்றி.
அடிக்கடி வாருங்கள்.

கருத்துரையிடுக