புதன், 19 அக்டோபர், 2011

14. கனி இருப்ப.... இயற்கை நல வாழ்வியல் சிந்தனைத் தொடர்.

அன்பர்களுக்கு என் வணக்கம். மிக நீண்ட நாட்களாக கனி இருப்ப தொடரை வெளியிட இயலாமல் போனது. இடையில் ஏற்பட்ட தொய்வுக்கு மன்னியுங்கள்.  இந்தத் தொடரில் இயற்கை நலவாழ்வியல் தொடர்பான சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டு வருகிறேன். படித்தது, பார்த்தது, கேட்டது என பல செய்திகள்.

இவை என் வாழ்க்கை முறையை மாற்றிய செய்திகள். படிக்கும் உங்களுக்கும் பயன் தரலாம் என்ற நம்பிக்கையில் எழுத்துச் சித்தர் திரு.பாலகுமாரன் அவர்கள் ''பாலகுமாரன் பேசுகிறார்" என்ற வலைப் பூவில் இயற்கை உணவினைப் பற்றிய அவரது அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் இதனைப் படித்த போது அவற்றை உங்களிடையே பகிர ஆசைப்பட்டேன். பகிர்கிறேன்.தொடர்ந்து படியுங்கள். 

வாழி நலம் சூழ,,,

பால குமாரன் பேசுகிறார்.



கற்றுக் கொண்டால் குற்றமில்லை; நல்ல உணவுப் பழக்கம்.

சமீபமாய் உணவு என்கிற விஷயத்தில் மிகப்பெரிய மாறுதல் தென்னிந்திய மக்களிடையே ஏற்பட்டிருக்கிறது. எல்லா உணவு வகையிலும் விதவிதமான மசாலாக்கள் கலக்கப்படுகின்றன, ஒருவித வாசனை கலந்த காரம் கோதுமை ரொட்டியோடும், பன்னோடும் வெண்ணெய் வதக்கி புரட்டப்படுகிறது. வாசனை தலைமயிரைப் பிடித்து இழுக்க, ருசி கண் சொருக வைக்கிறது. சாலையோரத்தில் கும்பலாய் ஆண்களும், பெண்களுமாய் நின்று கொண்டும், பேசிக் கொண்டும் சாப்பிட, என்ன சாப்பிடுகிறோம் என்று தெரியாமலேயே, எவ்வளவு சாப்பிடுகிறோம் என்று புரியாமலேயே சாப்பிட நேரிடுகிறது, மனசு உணவோடு ஒட்டவில்லை.....

உணவும் தவறு, உணவு உண்ணும் முறையும் பிசகு. இது இந்தத் தலைமுறையையே பலவீனமடையச் செய்து கொண்டிருப்பதை நான் உணர்கிறேன். எல்லாம் கிடக்க, இந்தக் கட்டுரை அஜீரணம் பற்றியோ என்று யாரேனும் அலுத்துக் கொள்ளலாம்.

உணவு ஞானத்திற்கு மிக நெருக்கமாக இருக்கிறது.
வாழ்க்கையின் வெற்றிப்படிகளுக்கு ஆதாரமாக இருக்கிறது. 


நான் இடைவிடாமல் ஏதேதோ சிந்தித்துக் கொண்டே இருக்கிறவன். அந்தப் பிரபலமான விரைவு உணவு என் யோசிப்பை எரிச்சலடையச் செய்து விட்டது. தொடர்ச்சியின்மை ஏற்பட்டு விட்டது. மிக உற்று கவனித்த போது, எதிர்மறையான யோசிப்பு எனக்கு ஏற்பட்டது. அதாவது, வயிற்றுப் பொருமலில் யோசிப்பு செம்மை திசைமாறி, வக்கிரமாக சிந்திக்க வைத்து விட்டது. 

விதண்டாவாதம் தொடர ஆரம்பித்துவிட்டது. நம்மில் பலபேர் கோபமடைவதும், ஆத்திரமடைவதும், அசூயை அடைவதும் உணவினால் தான் என்பது என் எண்ணம்.இந்த இயற்கை உணவு பற்றி ஏற்கனவே சில நண்பர்கள் சொல்லியிருந்தாலும், இதைப் பற்றி திரும்பத் திரும்ப என்னிடம் சொன்னவர் நண்பர் திரு சைதை துரைசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். 

மூன்று வருடங்கள் முன்பே “ரொம்ப குண்டா இருக்கீங்க பாலகுமாரன். உடம்பு கனம் தாங்காம கால் அகட்டி நடக்கறீங்க, படியேறினா மூச்சு வாங்குது. அநியாயத்துக்கு சிகரெட் பிடிக்கிறீங்க. நீங்க ஒரு நல்ல ரைட்டர், ஆனா, உங்களைப் பத்தி கவலையா இருக்கு” என்று சொன்னார்.

அவர் சொன்ன உணவு அப்போதைக்கு சிரிப்பை தந்தது. கோஸ், முள்ளங்கி, கேரட் எல்லாவற்றையும் வெட்டி சமைக்காமல் உண்பது, பழரசம் அருந்துவது நவதானியம் போட்ட கஞ்சி குடிப்பது என்றெல்லாம் சொன்னார். தொடர்ந்த பழக்கத்தின் காரணமாகவும், பழக்கப்பட்ட உணவின் ருசி காரணமாகவும் எல்லா இடங்களிலும் சமைத்த உணவுதான் கிடைக்கிறது என்ற நிர்ப்பந்தம் காரணமாகவும், நான் சைதை துரைசாமியை பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை.

ஆனால், இன்று அந்த உணவுக்கு மாறினேன். இதற்கு தூண்டுகோலாய் சினிமா டைரக்டர் வேலுபிரபாகரனும் நிறையப் பேசினார். மாதத்தில் பதினைந்து நாட்கள் சமைத்த உணவும், இன்னொரு பதினைந்து நாட்கள் சமைக்காத உணவும் எடுத்துக் கொள்வதாகச் சொன்னார். வயிறு ஆரோக்கியமாக இருக்கும் என்பதை விளக்கினார். 

விரைவு உணவால் ஏற்பட்ட மோசமான அனுபவத்தாலும் ஆரோக்கியத்தின் மீது ஏற்பட்ட ஆசையாலும், ஒரு நாள் இரவு இயற்கை உணவு என்று ஆரம்பித்தேன்.ஆனால், நான்கு நாட்கள் கடந்ததும் எண்ணெயும், மசாலாவும், வர்ணமும், வாசனையுமாய் இருந்த உணவு சர்வ நிச்சயமாய் விஷமென்று தெரிந்தது. அது படுத்தியபாடு நினைவிற்கு வந்தது. 

வீடு ரொம்ப வினோதமாய் என்னைப் பார்த்தது. 

“ஐயோ பாவம். உருளைக்கிழங்கு பொடிமாஸும், வெங்காய சாம்பாருமாக விரும்பி சாப்பிட்டு வந்தவன், என்ன பாவம் செய்தானோ, இப்படி பச்சைத்தழை தின்கிறான்”. 

“எல்லாவற்றையும் போட்டு ஒருகொதி வேகவைத்து உப்பும் மிளகும் போட்டுத் தரட்டுமா” என் வீட்டில் உன்னை பரிதாபமாய் பார்த்துக் கேட்டார்கள்.

நான் மறுத்துவிட்டு உண்ணத் துவங்கினேன். என் வீட்டை குஷிப்படுத்துவதற்காக ‘ம்மா’ என்று காளை போல் குரல் கொடுத்தேன், தலைகுனிந்து முட்டுவதாய் நடித்தேன். 

“பசுவுக்கு அகத்திக்கீரை, பாலகுமாரனுக்கு கோஸு கீரை” என் பிள்ளை புதுக்கவிதை எழுதினான். 

நொந்து கொள்ளத் துவங்கினால் சிறிய வார்த்தைகூட பெரிதாய் நோகடிக்கும். விளையாட்டு என்று எடுத்துக் கொண்டால் மிகக்கடினமான விஷயமும் ஜாலியாகப் போகும். “நல்லாயிருக்குப்பா..சாப்பிட முடியாது” நான் சொல்ல, என் வீடும் என் தட்டில் கை வைத்தது. 

இன்னும் காய்கறிகளும், பழங்களும் நறுக்கப்பட்டன, பேசிக்கொண்டே சாப்பிட்டதில் உணவு போனவிதம் தெரியவில்லை. வயிறு நிரம்பிவிட்டது.

அன்று சமைத்த உணவை எல்லாரும் புறக்கணித்தோம். மறுநாள் காலை வயிறு துடைத்து விட்டது போல் சுத்தமாயிற்று. நார்ச்சத்து உணவு என்பதால், உடம்பு லேசானது போல் ஒரு உணர்வு ஏற்பட்டது. 

டைரக்டர் வேலு பிரபாகரன் சொன்னதுபோல், உடைத்த பூண்டு ஐந்து பற்களோடு ஒரு பிடி பொட்டுக்கடலை சாப்பிட்டேன். பொட்டுக் கடலையோடு பூண்டு சாப்பிட பூண்டின் காரம் தெரியவில்லை. மறுநாள் அதற்கு மறுநாள் என்று தினமும் இரவு வேளை மட்டும் நான் இயற்கை உணவை எடுத்துக் கொண்டேன். 

என் வீடும் அவ்வப்போது இதை மேற்கொள்கிறது.

எங்கு பார்த்தாலும் இந்த வழிநடைக் கடைகள். இடைவிடாது, அதில் குழுமும் மக்கள். அநேகமாய் இளைஞர்கள் ஒரு பெரிய கும்பலாய் உடம்பை நாசம் பண்ணிக்கொண்டிருக்கிறோம் என்ற பயம் எனக்கு வந்து விட்டது. 

உடம்பைப் பேணுதல் என்பதை இந்தச் சமூகம் சரியாக செய்யவில்லை என்று தோன்றுகிறது. விளையாட்டு சூரர்கள் யாரும் இல்லாது போனாலும் பரவாயில்லை, உற்சாகமான மக்கள் ஒரு தேசத்தின் பொக்கிஷம். 

உற்சாகமான ஜனங்கள் இவ்வளவு மசாலா சாப்பிடக்கூடாது. நாள் தவறாது நடைப்பாதையில் உண்ணக் கூடாது.நாள் முழுவதுமாய் இயற்கை உணவுக்கு மாற நாளாகும். ஆனால் ஒருவேளை நான் சமைக்காத உணவை உண்ணும்போதே உடம்பு வெகு ஆரோக்கியமாய் இருக்கிறது. 

“மனசு பத்திப் பேசற பாலகுமாரன், எதுக்கு உணவு பத்தி பேசறாரு?” உங்களில் சிலருக்கு இந்தக் கேள்வி வரக்கூடும். 

திருமூலர் திருமந்திரம் பாட்டு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்.

“உடம்பார் அழியின் உயிரார் அழிவார்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே.

வளர்த்தல் என்பதற்கு கெடுத்துக் கொள்ளாமலிருந்தால் போதும் என்கிற அர்த்தமும் சொல்ல வேண்டும். சென்னை போன்ற நகரங்களில் ஏற்கனவே நச்சுப்புகை, காசு கொடுத்து விஷம் சாப்பிடவேண்டுமா? ஒரு வேளையாவது இயற்கை உணவை உண்பதற்கு கற்றுக் கொள்ள வேண்டும். நல்ல உணவுப் பழக்கத்தை கற்றுக் கொள்வது நல்லது. அது குற்றமில்லை.

நன்றி: கட்டுரையை முழுமையாகப் படிக்க இங்கே சொடுக்கவும். 
பாலகுமாரன் பேசுகிறார் வலைப்பூ

அன்புடன், 
அஷ்வின்ஜி
வாழி நலம் சூழ. 

ஞாயிறு, 9 அக்டோபர், 2011





சின்மயா மிஷன், சென்னை
ஐ. சி. எப் பகுதி, சென்னை - 38

கீதா ஞான யக்ஞம்.
(தமிழில்)


தவத்திரு சுவாமி சின்மயானந்தா அவர்களின் சீடர் 
ப்ரஹ்மசாரினி சுருதி சைதன்யா அவர்கள்

ஞான விஞ்ஞான யோகம்
(ஸ்ரீமத் பகவத் கீதா - 2வது அத்தியாயம்)

விளக்கச் சொற்பொழிவு நிகழ்த்த இருக்கிறார்கள்.

நாள்: 10-10-2011 (திங்கள் கிழமை) முதல் 15-10-2011 (சனிக்கிழமை) வரை.

நேரம்: மாலை 6.45 முதல் இரவு 8.15 வரை.

இடம்: ஸ்ரீ வெங்கடேஸ்வரா மஹா மண்டபம், 
ஸ்ரீ கமல விநாயகர் திருக்கோவில் அருகில், 
I.C.F. பஸ் டெர்மினஸ், சென்னை 38

ஆர்வமுள்ள அன்பர்கள் கலந்து கொண்டு பயன் பெற அழைக்கிறோம். 

அனுமதி இலவசம்.

வியாழன், 6 அக்டோபர், 2011

உணவை மாற்றினால் உலகை மாற்றலாம்!


அது எப்படி உணவை மாற்றினால் உலகை மாற்ற முடியும்?  

புரியவில்லையே என நீங்கள் திகைப்பதை உணர முடிகிறது.  

ஆம்! நிச்சயமாக உலகை மாற்ற முடியும் என்பதைத்தான் இக்கட்டுரை சிந்திக்கிறது.

உலக உயிர்களெல்லாம் இன்ப வாழ்வையே நாடுகின்றன.  இன்பம் துய்க்க ஏதுவான கருவியாக அமைந்துள்ளது நமது உடம்பு.  அறிவு விளக்கமும் இன்பப் பேறும் உடலால் உண்டாகும். 

உடம்பு உயிருடன் இருந்து துணை புரிவதைப் போல வேறெதுவும் துணை புரிவதில்லை. உட ல்நலம் உயிர் நலனாகும் இத்தகைய உடலை நல்வழியில் பேணுதல் நம் தலையாய கடமையல்லவா? 

உடம்பை நல்வழிப் பேணுதல் எவ்வாறு? 
இதற்கான வழித்துறைகள் பலஉண்டு. எனினும் உண்டி முதற்றே உலகு என்பதற்கொப்பவும், உடம்பென்பது உணவின் பிண்டம் என்ற புறநானூற்று வரிகளுக்கேற்பவும், உடலைச் சோற்றுத்துருத்தி என்ற பட்டினத்தாரின் சொல்லுக்கேற்பவும் உணவு வழி நம் உடம்பை ஓம்பலாம்.  

அந்த உணவு எப்படி இருக்க வேண்டும்? 
ஊட்டம் தரும் உணவாகவும், ஊக்கம் தரும் உணவாகவும் இருக்க வேண்டும். 

வெள்ளை உணவு கொள்ளை நோய் :
பிறப்பு முதல் இறப்பு வரை நாம் உணவில் பல தவறுகள் செய்கிறோம்.  ஆகவே தற்போது உண்ணும் வகைகளிலும் முறைகளிலும் நாம்; மாற்றம் கொண்டு வர வேண்டும். நம்முடைய முழுமுதல் உணவாக இருப்பது அரிசிச் சோறு. இது வெண்மை நிறமுடையது.  உள்ளம் வெள்ளையாக இருக்க வேண்டும். ஆனால் உணவு வெள்ளையாக இருக்கக் கூடாது. ஏனெனில் தீட்டிய அரிசி, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், மாவு, உப்பு, பால், சீனி முதலிய வெள்ளை உணவுகள் கொள்ளை நோய்களை உண்டாக்குகின்றன.

அரிசி: தீட்டிய அரிசியிலும், மாவிலும் எந்த உயிர்ச்சத்தும் இல்லை. நார்ச்சத்தும் கிடையாது.  எனவே மலச்சிக்கல் தவிர்க்க முடியாதது.

எண்ணெய்:சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், புற்றுநோயை உண்டாக்கும் காரணிகளில் ஒன்று.  அதுவும் சமைத்த எண்ணெயை மீணடும் மீண்டும் பயன்படுத்தினால் அதிலுள்ள மிகுக்கொழுப்பினால் இரத்தக் குழாய்கள் தடிமனாகி மாரடைப்புக்கு வழி வகுக்கும்.

உப்பு: நாம் சுவைக்காகச் சேர்க்கும் கடல் உப்பு காய்கறிகளிலுள்ள தாதுஉப்புகளைக் கெடுத்துவிடும். அதனால் கடல்உப்பைத் தாதுஉப்புகளின் திருடன் என்பார்கள்.

பால்: சளியைப் பெருக்கும் உணவு பால்.  பால் சைவ உணவல்ல.   பாலைத் தொடர்ந்து பயன்படுத்துபவர்களுக்கு நெஞ்சக நோய்கள் அதிகம் ஏற்படும்.

சீனி: சீனியை வெண்மையாக்க சோடியம் சல்பானேட் என்ற ரசாயன விஷத்தைச் சேர்க்கிறார்கள்.இது எலும்புக்குள் உள்ள மஜ்ஜையை அழித்துவிடும். மேலும், வெள்ளைச் சீனி நம் உடலிலிருந்து வைட்டமின்களை எடுத்துக் கொண்டு தான் சீரணமாகும். எனவே சீனியை ஒரு வைட்டமின் திருடி என்பார்கள்.

அது சரி! 

இந்த உணவுகள் தானே கடைகளில் நமக்குக் கிடைக்கின்றன.?

இவற்றுக்கு மாற்று உணவுகள் உண்டா? 

அவை நமக்குக் கிடைக்குமா? என்றெல்லாம் நீங்கள் கேட்பது புரிகிறது. 

வெள்ளை உணவுகளுக்கு மாற்று உணவுகள் நிச்சயம் உண்டு.அவை சந்தையில் கிடைக்கும். தேடுங்கள். கிடைக்கும் நல்ல உணவுகளைத் தேடிச் சென்று வாங்கிப் பயன்படுத்த வேண்டும். அதுதான் அறிவுடைமை!  

இனி நாம் தவறான உணவு எது? சரியான உணவு எது என்பதைப் பார்ப்போம். 

கீழ்க்கண்ட தவறான உணவு (வெள்ளை நச்சு)க்கு மாற்றாக சரியான உணவு (இயற்கை உணவு)களை உண்ணப் பழகலாம்.

தீட்டிய அரிசி (வெண்மை): அரிசிக்குப் பதிலாக வரகு அரிசி, கைக்குத்தல் அரிசி, கம்பு, கேழ்வரகு, சோளம், கோதுமை. இவைகளை குருணையாக உடைத்து வேக வைத்து காய்கறிகள் சேர்த்து கிச்சடியாகவும் தயாரிக்கலாம்.  

உப்பு(வெண்மை): உப்புக்கு பதிலாக பொட்டாசியம், இந்துப்பு, கருப்பு உப்பு, நெல்லிக்காய், நெல்லிப்பொடி, புளி, மாங்காய், எலுமிச்சைச் சாறு, தக்காளிச் சாறு சேர்த்து சுவையாக உணவு தயாரிக்கலாம்.  

சீனி(வெண்மை): சீனி(வெள்ளைச்சர்க்கரை)க்குப் பதிலாக பாகுவெல்லம், கருப்பட்டி, அச்சு வெல்லம், பனை வெல்லம்,  நாட்டுச் சர்க்கரை, தேன், பேரீச்சை, உலர் திராட்சை போன்றவற்றை சேர்த்து கொள்ளலாம். 

பால் (வெண்மை): பாலுக்குப் பதிலாக தேங்காய்ப் பால், கேழ்வரகுப் பால், சோயாப் பால், சோளப் பால், வேர்க்கடலைப் பால், உளுந்துப் பால், கம்பு முளைப்பால், தினைமுளைப்பால் போன்ற தானிய வகைகளை முளைக்க வைத்து மிக்சியில் ஆட்டி பால் எடுத்து உண்ணலாம். 

காபிக்குப் பதிலாக  : சுக்குமல்லி காபி, காய்கறி சூப், மூலிகைச் சாறு, தானியச் சாறு, ஓட்ஸ் சாறு, சத்துமா பானம். 

பழக்கடைக்கும், 
காய்கறிக்கடைக்கும் 
செல்லப் பழகிக் கொண்டால் 
மருந்துக் கடைக்குச் 
செல்லத் தேவையில்லை.

நினைவில் கொள்ளுங்கள்:
  • நாள்தோறும் இருவேளை உணவு போதும். 
  • இரு வேளை உணவுகளுக்கு இடையே 7 மணி நேர இடைவெளி தேவை.  
  • இரவு உணவு இருட்டுக்கு முந்தி எடுத்துக்கொள்ளுங்கள்.
  • உங்கள் உணவில் அதிக அளவு இயற்கை உணவுகள் பழங்கள், பசுங்கலவைகள்,  சூப்புகள் இடம் பெறட்டும்.
  • அமைதியான சூழலில் மகிழ்வுடன், மெதுவாக நன்றாக மென்று உண்ணுக. 
  • உண்ணும் போது உணவில் மட்டுமே கவனம் செலுத்துக.
  • நாள்தோறும் சுமார் 2 1/2 (இரண்டரை) லிட்டர் தண்ணீரை, 8 வேளைகளில் சுவைத்து அருந்துக. 
  • நாள்தோறும் குறைந்தது 6 அல்லது 7 மணிநேரம் நிம்மதியாக உறங்குக. 
  • காலை எழுந்தவுடன் சிக்கலின்றி மல ஜலம் கழிக்கவும்.
உலகை மாற்றுவது எவ்வாறு? 
  • தனிமனிதன் திருந்தினால் சமுதாயம் திருந்தும். 
  • சமுதாயம் திருந்தினால் நாடு திருந்தும். 
  • ஒழுக்கத்தைத் திருத்தினால் மட்டும் போதாது.  
  • உணவையும் திருத்த வேண்டும். 
இந்த இயற்கை நலவாழ்வியல் சிந்தனைகளை பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு முறையாக உணவுப் பாடங்கள் வழியாக கற்பிக்க வேண்டும். அரசு முன்வந்து செயல்படாவிடினும், மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் இந்த விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டிய கடமை ஆசிரியர்களுக்கு உண்டு. 

சமூக சேவையாக செயல்படும் இயற்கை நல வாழ்வியல் ஆர்வலர்களின் இலவச ஆலோசனை உதவிகளையும் கேட்டுப் பெறலாம்.

குற்றவாளிகள் உருவாகுவதற்கு அவர்களின் உணவும் ஒரு காரணியாகும்.எனவே, சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு இயற்கை உணவுகள் வழங்கப்பட்டால். உணவுகள் வழியாக அவர்களின் குணங்களும் மாறும். அவர்கள் நல்லவர்களாக சமூகத்திற்குப் பயன்படுபவர்களாக வெளியே வருவார்கள்.இயற்கை உணவால் பயங்கரவாதிகளும், தீவிரவாதிகளும் திருந்தி நல்வழி நடப்பார்கள்.

கூட்டுக்குடும்பங்கள் சிதையாமலிருக்க இயற்கை உணவு நல்ல தீர்வாகும். 
  • குடும்பத்திலுள்ள பேதங்கள் மறையும். 
  • சிறு சிறு குற்றங்களை மறந்து குடும்பத்தினர் குலவி மகிழ இயற்கை உணவு வழிவகுக்கும். 
இவ்வகையான நடவடிக்கைகளால் உணவை மாற்றி நிச்சயம் உலகையும் மாற்றலாம்! 

நன்றி: 
திரு. மா. உலகநாதன் 
(முனைவர் பட்ட ஆய்வாளர்)
இணைச்செயலாளர், 
ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கம்
திருநீலக்குடி. 
செல் 9442902334
இமெயில்:
 
worldnath_131149@yahoo.co.in

ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

யார் சுகவாசி?

மூச்சு இரைக்காமல் மாடிப்படிகளில் லாவகமாக ஏற முடிந்தவர்

தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வருபவர்களால் மட்டுமே முடியக்கூடியது இது.வயிறு பெருத்தால் வாழ்வு சுருங்கும்.அதுபோல தொப்பையுள்ளவர்களால் மூச்சு இரைக்காமல் மாடிப்படி ஏறமுடியாது.  எனவே வயிறு சுருங்கி இருத்தல் வேண்டும்.  (உணவிலும் தோற்றத்திலும்).

சம்மணம் போட்டு அமர்ந்து உண்பவர்
நாகரீகத்தின் தாக்கம் வீடுகள் தோறும் சாப்பாட்டு மேசை. சாப்பாட்டு மேசையில் ஆண்டுக்கணக்கில் சாப்பிடுபவர்களுக்கு மூட்டுகள் மடங்குவது சிரமம்.  எனவே மூட்டுவலி நிச்சயம் இருக்கும்.  இவர்கள் தரையில் அமர்ந்து சம்மணம் போட்டு சாப்பிட்டு (வர வேண்டும்) வந்தால் மூட்டு வலி போயோ போச்!

காலையில் பழைய சோறு சாப்பிட முடிந்தவர்
ஆம்! பழையமுதும், நீராகாரமும் உடலுக்குச் சத்தானதும், உடலை வளர்க்கக் கூடியதும் ஆகும்.  அதுவும் அளவோடு உண்ண வேண்டும்.  கூடவே வெங்காயம் தொட்டுக் கொள்பவர்கள் கொடுத்துவைத்தவர்கள்.

ஆற்று நீர் வாதம் போக்கும்; அருவி நீர் பித்தம் போக்கும்.
சோற்று நீர் இரண்டையும் போக்கும்.

புலால் உணவு, எண்ணெயில் பொரித்தவை, கோலா பானங்கள், பிளாஸ்டிக் பைகளில்/பாட்டில்களில் விற்கப்படும் தண்ணீர், ஐஸ் உணவுகள், ஃபிரிட்ஜ் இவைகளை தவிர்த்து/ஒதுக்கி வாழ்பவர். 

      உணவு தூய்மையானால் அறிவு தூய்மையாகும்
      அறிவு தூய்மையானால் நினைவு தூய்மையாகும்
      நினைவு தூய்மையானால் எல்லாத் துன்ப முடிச்சுகளும் விலகும்!

புலால் உணவு
மனித உடலமைப்பு, பற்கள், உணவுக்குழாய், மலப்பாதை இவையெல்லாம் மென்மையான உணவுகளை உண்ணவும்/செரிக்கவும், கழிவுகளை அகற்றவும் ஏற்றவாறு அமைந்துள்ளது. புலால் உணவுகள் மெல்லுவதற்கும், பின்பு அவை செரிமானம் ஆவதற்கும் கடினமானவை.  மலச்சிக்கலை உண்டு பண்ணுபவை.  எனவே, உடலுக்கு ஒவ்வாத புலால் உணவுகளை அறவே ஒதுக்க வேண்டும்.

எண்ணெயில் பொரித்தவை
எண்ணெயில் பொரிக்கப்படும் பண்டங்கள் செரிமானக் கோளாறை ஏற்படுத்தும்.  மேலும், செரிமான நீரை உற்பத்தி செய்யும் திறனையும் எண்ணெய் பொருள்கள் தடுத்துவிடும்.

குளிர் பானங்கள்
மிகக் குறைந்த செலவில் உற்பத்தி செய்துமிக அதிக விலைக்கு விற்பனையாகும் பானங்கள் இவை.  தூய்மையற்ற குடிநீரும், உடலுக்குத் தீங்கிழைக்கும் இரசாயனக் கலவைகளைக் கொண்டது.

குடிநீர்
தரமற்ற குடிநீரை, அசுத்தக் கிருமிகள் அடங்கிய குடிநீரை பயன்படுத்துதல் கூடாது.  இதனால் வயிற்றுப்போக்கு, மஞ்சள்காமாலை போன்ற நோய்கள் ஏற்படும்.

ஐஸ் பொருள்கள்
இவற்றிலும் நச்சுக் கிருமிகள் உற்பத்தியாகி நம் உடலுக்கும், குடலுக்கும் தீங்கு விளைவிக்கும்.  குழந்தைகள் விரும்பி உண்பதால் தொண்டைச் சதைவளர்ச்சி ஏற்பட்டு அவர்களுக்கு துன்பம் விளைக்கும்..

குளிர்சாதனப்பெட்டி
இதனை சவப்பெட்டி என்கிறது இயற்கை மருத்துவம். ஏனெனில் மீதூண் விரும்பேல் என்ற முதுமொழிக்கு மாறாக, மீதமாகும் உணவுப் பொருள்களை இதில் வைத்தே சாப்பிடுகின்றார்கள்.  எனவே அவை செத்த உணவாகக் கருதப்பட வேண்டும்.

மூன்று பெட்டிகள் நமக்குத் தேவையில்லாதவை :
Fridge: சவப்பெட்டி
Television: முட்டாள் பெட்டி
Washing Machine: சோம்பேறிப் பெட்டி.

காலா காலத்தில் உறங்கச் செல்பவர்
உறக்கம் மனிதர்களுக்கு கிடைத்த வரம்.  படுத்தவுடன் கண் மூடியவுடன் தூங்க முடிந்தவர் அதிர்ஷ்டக்காரர். அப்படித் தூங்க வேண்டுமானால் உடல், மனம், எண்ணம் இவைகளைச் சீராக வைத்துக் கொள்ளுதல் வேண்டும்.  

அவாவின்மை, உடற்பயிற்சி அல்லது உடலுழைப்பு, நற்சிந்தனைகள், ஒத்தும் உதவியும் வாழும் உளப்பாங்கு இவை இருந்தால் உறக்கம் தானே ஓடி வரும்.

காலை மாலை மலம் கழிப்பவர் 
நாம் யாரிடமும் கடன் வாங்க வில்லையா? நாம் தான் ஒரு லட்சாதிபதி. நாம் மலச்சிக்கலின்றி வாழ்கிறாறோ? நாம் தான் ஒரு கோடீஸ்வரர். ஆம்!  அன்றாடம் மலம் கழிவது உடல் ஆரோக்கியத்தின் அறிகுறியாகும். மலச்சிக்கல் பல சிக்கலைக் கொண்டு வரும்.  எனவே, அன்றாடம் காலை/மாலை அல்லது ஒரு வேளை கண்டிப்பாக மலங்கழிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.  மூன்று வேளை மூக்குப் பிடிக்கச் சாப்பிட்டு விட்டு ஒரு முறையாவது மலம் கழிக்க வேண்டாமா?

ருசிக்கு உண்ணாமல் பசிக்கு உண்பவர்
திருவள்ளுவர் மருந்து என்ற அதிகாரத்தின் 10 குறள்களிலும் உணவே மருந்து என்பதை அறிவுறுத்துகிறார்.

      அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
      துய்க்க துவரப் பசித்து -குறள் : 944

பசி வயிற்றைக் கிள்ளுகிறது என்போம். உணவின் சுவை கூடக் கூட அளவின்றி சாப்பிடத் தோன்றும். அளவு மீறினால் அமுதமும் நஞ்சாகும் அல்லவா?  எனவே ருசி பார்த்து உண்ணாமல், நன்றாகப் பசித்த பிறகு அளவோடு உண்ண வேண்டும்.  நாக்குக்கு அடிமையானால், நலம் கெட்டு நடை பிணமாவோம்.  துணை உணவுகளான சாம்பார், ரசம், மோர்க்குழம்பு, தொடுகறிகளை தவிர்த்தால் அளவாகச் சாப்பிட ஏதுவாகும். 

மாதம் இருநாள் உண்ணா நோன்பு இருப்பவர்
நம் உடல் என்னும் இயந்திரம் சலிக்காமல் தொடர்ந்து உழைத்து வருகிறது.  நாம் பயன்படுத்தும் மிதிவண்ட, மோட்டார் சைக்கிள், கார் போன்ற இயந்திரங்களுக்கு ஓவர்ஹாலிங் (Overhauling) செய்வது போல உடலுக்கும், உள் உறுப்புகளுக்கும் ஓய்வு தேவையல்லவா?  எனவே, மாதமிருமுறை உண்ணா நோன்பு இருக்க வேண்டும்.  நீரைக் குடித்தவாறோ அல்லது சாற்றைக் குடித்தவாறோ உண்ணா நோன்பு இருக்கலாம்.

சினம் தவிர்த்து, பிறர் குற்றம் மன்னித்து மறந்து, அன்பு, பொறுமை, கற்பு,  அடக்க ஒழுக்கம் போன்ற குணங்களை பின் பற்றி வாழ முடிந்தவர்கள் தான் சுகவாசி எனப்படுவர். 

            இருக்கும் வரை சுகவாசி!
            அன்றாடம் நீ யோசி!!
            இதை இறக்கும் வரை நீ விசுவாசி!!!


இந்தப் பதிவினை அனுப்பிய திரு மா.உலகநாதன் அவர்களுக்கு என் நன்றி: 
அவரது முகவரி:
மா. உலகநாதன்,
முனைவர் பட்ட ஆய்வாளர்
இணைச்செயலாளர்
ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கம்
திருநீலக்குடி.
செல் : 9442902334
இ.மெயில்: worldnath_131149@yahoo.co.in

நலவாழ்வு நாடுவோர் நலம் வேண்டி வெளியிடுபவர்:
அஷ்வின்ஜி,
வாழி நலம் சூழ.

ஞாயிறு, 4 செப்டம்பர், 2011

நடை பயின்றால் எடை குறையும்.



நடைப்பயிற்சியைப் போல் சிறப்பான உடற்பயிற்சி இல்லை என்று சொல்லுவார்கள். அதுவும் சர்க்கரை நோயாளிகள், இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள், உடல் எடை அதிகமுள்ளவர்கள் ஆகியோருக்கு இது மிகவும் சிறந்தது. 


தற்போது நடக்கும்போது இரண்டு கைகளிலும் அரைக்கிலோ அல்லது கால்கிலோ மணல் மூட்டைகளை தூக்கிக்கொண்டு நடந்தால் தசைகளுக்கு நல்ல பயிற்சி கிடைக்கும். மேலும் நீண்டதூரம் நடப்பதைவிட குறைவான தூரத்திலேயே அதிக கலோரி செலவாகி எடை குறைப்பு, சர்க்கரை குறைப்பு ஆகியவற்றை எளிதில் செயல்படுத்த முடியும்.

ஆயினும் இதய நோயாளிகள்,மூட்டுவலி, மூட்டுப்பிடிப்பு, காலில் புண் உள்ளவர்கள் மருத்துவரிடம் கலந்தாலோசித்த பின்பே இதனைச் செய்யலாம்.

இன்றைய இளைஞர்கள் அடிக்கடி வேலை நிமித்தம் வெளியில் சென்று கொண்டிருப்பதால் தினசரி இரண்டு அல்லது சில நேரங்களில் மூன்று வேளையும் வெளியில் சாப்பிடுகிறார்கள். அப்படிச் சாப்பிடுபவர்களுக்கு குடும்பத்தில் சர்க்கரை நோய் இல்லாவிட்டாலும்ர சர்க்கரை நோய் இளமையிலேயே வரும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

வெளியில் சாப்பிடும் உணவில் குறைந்த நார்ச்சத்து, அதிக மாவுச்சத்து, அதிக உப்பு, அதிக மசாலா, அதிக எண்ணைக் கொழுப்பு ஆகியவை உள்ளன.  

அதேபோல் சக்கரை நோயாளிகளுக்கு இட்லி,தோசை செய்யும்போது உளுந்து அதிகமாகவும், அரிசி குறைவாகவும் போடவேண்டும். ஆனால் உணவகங்களில் அரிசி அதிகம் போடுவார்கள். அதேபோல் சாம்பாரில் சர்க்கரை, பரோட்டாவில் மாட்டுக் கொழுப்பு, சப்பாத்தி மாவில் வாழைப்பழம் போன்றவை சேர்ப்பதாலேயே உடல் எடை அதிகரித்தல், சர்க்கரை கூடுதல் ஆகியவை ஏற்படுகின்றன!!

நன்றி : தமிழ்த்துளி http://abidheva.blogspot.com/2010/02/blog-post_18.html

வியாழன், 1 செப்டம்பர், 2011

கட்டுப்படுத்த முடியாத சர்க்கரையா?

100% சக்கரையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியுமா? 

இது ஒரு மில்லியன் டாலர் கேள்வி.
பொதுவாகவே மருத்துவருக்கும் நோயாளிக்கும் இடையில் ஒரு இடைவெளி உண்டு. அதாவது, மருத்துவர் உணவு இப்படியெல்லாம் சாப்பிடவேண்டும் என்று ஒரு கதைபோல் சொல்லுவார். நோயாளியும் வெகு சிரத்தையுடன் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு வீட்டுக்கு வருவார். அவர் சொன்னதில் பாதிதான் நோயாளிக்குப் புரிந்திருக்கும்.

மருத்துவரைச் சந்தித்து நான்கு நாட்கள் கழித்து யோசித்தால் அதிலும் பாதி மறந்து போய் இருக்கும். இந்த இடைவெளியை நிரப்புவதில்தான் சக்கரையைக் குறைப்பதற்கான சூட்சுமம் இருக்கிறது.

இந்த சூட்சுமத்தைப் புரிந்துகொள்வதற்கு முன் நாம் உணவின் சத்துக் குறிப்பீடு பற்றி அறியவேண்டும். நாம் உண்ணும் உணவுகளில் இத்தனை கிராமுக்கு இவ்வளவு சத்துக்கள் உள்ளன என்ற அளவுதான் அது.

ஏன் இது முக்கியம் என்று கேட்கிறீர்களா? மருத்துவர் மதியம் ஒரு கப் சாதம் அல்லது ஒரு பிளேட் சாதம் சாப்பிடுங்கள் என்று கூறுவார். ஆனால் எவ்வளவு பெரிய கப், எவ்வளவு பெரிய தட்டு என்று அளவு தெரியாது.

உதாரணத்துக்கு கார்த்தி, ஸ்ரீதர்,அன்பு என்று மூன்று பேர் வீட்டிலிருந்து அவர்கள் சாப்பிடும் தட்டைபோய்ப் பார்த்தால் கார்த்தியின் தட்டு பெரிதாகவும் ஸ்ரீதரின் தட்டு நடுத்தரமாகவும் அன்புவின் தட்டு சிறியதாகவும் இருக்கும்.(ஒரு குத்து மதிப்பாகக் சொல்கிறேன்!!)

அதே போல் கப்பின் அளவும் வீட்டுக்கு வீடு மாறுபடும். இது போல் இட்லி.தோசை சப்பாத்தி ஆகியவற்றின் எடை, அளவுபற்றி நாம் சொல்லவேண்டியதில்லை. இதற்கு என்ன செய்யவேண்டும்?

உண்வை எடைபோட்டுச் சாப்பிடவேண்டும்! சக்கரை நோயாளிகள் அனைவரும் இப்படித்தான் செய்ய வேண்டுமா? என்றால் எல்லோரும் செய்தால் நல்லதுதான்.

ஆனால் யாருக்கு இத்தகைய கட்டுப்பாடு மிகவும் அவசியம்?

1.உடல் எடை குறையாமல் இருப்போர்

2.இன்சுலினைக் குறைக்க விரும்புவோர்

3.இன்சுலினிலிருந்து மாத்திரைக்கு மாற விரும்புவோர்

4.சக்கரை கட்டுப்பாட்டில் இல்லாதோர்

 5.சக்கரை நோயின் பக்கவிளைவுகளால் பாதிக்கப்படுவோர்

6.எச்.பி.ஏ.1.சி-இரத்தப் பா¢சோதனை-7%க்கு மேல் உள்ளோர்.

எப்படி, எவ்வளவு எடைபோட்டு சாப்பிடவேண்டும் என்று பார்ப்போம்.

காலை டிபன்-150 கிராம்

மதியம்-250 கிராம் சாதம், இரவு-150 கிராம் டிபனுடன் 100 கிராம் பழங்கள்,100கிராம் சுண்டல்
மூன்று வேளையும் 200கிராம் காய்கறிகள் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

இதற்கு அவசியம் ஒரு நிறுக்கும் தராசு வேண்டும்.

அதே போல் தினமும் எடை போடவேண்டும். இப்படி எடை போட்டு சாப்பிட்டு வீட்டிலேயே சுய பரிசோதனைக்கருவி மூலம் இரத்த சக்கரை அளவைக் கணித்து அதன் படி உணவின் அளவை மாற்றிக்கொள்ளலாம்.

நினைவில் கொள்ளவும்- சக்கரை 24 மணி நேரமும் சரியான அளவு இருந்தால்தான் சக்கரை வியாதியின் பின் விளைவுகளிலிருந்து தப்பிக்க முடியும்.

நன்றி: தமிழ்த்துளி வலைப்பூ. செல்க : http://abidheva.blogspot.com/2009/11/blog-post_21.html

எனது கருத்துக்கள்:
இயற்கை நலவாழ்வியல் தத்துவங்களைப் பின்பற்றுவதின் மூலமும் சர்க்கரை அளவை வெகுவாகக் குறைக்கலாம்.

புதன், 31 ஆகஸ்ட், 2011

காக்கும் கடவுள் கணபதி பாதம் பணிவோம்...

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலுமெயிற்றனை 
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினை 
புந்தியில் வைத்தடி போற்றுகின்றனே.
                                                     -திருமந்திரம்.

கணேச சரணம்.
சரணம் கணேசா.


அஷ்வின்ஜி.

ரமலான் ஸ்பெஷல். - நோன்பின் மகத்துவம்.

வணக்கம் அன்பர்களே. 

நோன்பு நோற்றலின் மகத்துவம் எல்லா மதங்களுக்கும் பொதுவானது. உடல், மனம், ஆத்மாவினை சுத்திகரிக்க நோன்பு பயன்படுகிறது. இந்து மதத்தின் மாதம் ஒருமுறை நோன்பில் இருந்து துவங்கி வாரக்கணக்கில், மாதக்கணக்கில், மற்றும் மண்டலக் கணக்கில் எல்லாம் நோன்புகள் உள்ளன. கிறிஸ்துவ மதத்திலும் லெண்ட் நோன்பு உள்ளது. 

ஜைனர்கள், பௌத்தர்கள் என்று அனைத்து மதத்தினருக்கும் நோன்பு நோற்றல் ஒரு ஆன்மீகக் கடமையாக உள்ளது. அதுபோலவே இஸ்லாமிய சகோதரர்களும் ரமலான் மாதத்தில் நோன்பு இருந்து உடல், மனம், ஆன்மாவை சுத்திகரித்துக் கொள்கிறார்கள். 

கீழே உள்ள கட்டுரையை ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர் இணையத்தில் ராஜகிரி பைத்துல்மால் என்கிற வலைப்பூவில் படித்தேன். அதில் இருந்து நோன்பின் மகத்துவ பற்றிய சில முக்கியமான பகுதிகளை மீள்பதிவாக உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்.  கட்டுரையை முழுமையாக படிக்க வலைப்பூவிற்கு செல்லவும்.

இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு எனது ரமலான் வாழ்த்துக்கள்.

நோன்பு மிகச்சிறந்த இயற்கை மருத்துவம்

இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையான ஐம்பெருங்கடமைகள் – கலிமா, தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் – மனிதகுலத்தின் ஒருமைப்பாடு, சமத்துவம், சகோதரத்துவம், உலக அமைதி, பொருளாதாரப் பங்கீடு ஆகியவற்றின் திறவுகோலாக உள்ளன. மறுமை வாழ்வு, நீதித் திருநாள், கேள்வி கணக்கு சுவனம் என்பன பற்றி மனிதனுக்கு அறிவுறுத்தி நல்வழிப்படுத்துவதற்கு உதவுவதாக திருமறையும், திருநபி (ஸல்) அவர்களின் வாழ்வும் வாக்கும் அமைந் துள்ளன. இவற்றில் மூன்றாவது கடமையான ரமளான் நோன்பு பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம். ரமளான் என்ற சொல் கரித்தல், சுட்டெரித்தல் என்ற பொருள் கொண்டது. விறகை தீ எரிப்பது போல நோன்பு பாவங்களை எரித்து விடுகிறது என்பதால் நோன்பு கடமையாக்கப்பட்ட இஸ்லாமிய ஆண்டின் ஒன்பதாவது மாதம் ரமளான் என்றழைக்கப்படுகிறது. இம் மாதத்தை அல்லாஹ்வின் மாதம், பொறுமையின் மாதம், ஈகையின் மாதம் என நபி (ஸல்) அவர்கள் புகழ்ந்து கூறியுள்ளார்கள்.

முந்திய சமுதாயத்தவர்களுக்கு விதிக்கப்பட்டது போல, நபி (ஸல்) அவர்களின் சமுதாயத்தினருக்கு நோன்பு விதிக்கப்பட்டு, ரமளான் மாதம் பகற்பொழுதில் நோன்பு நோற்பதைக் கடமையாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் பரிசுத்தவான்களாகலாம் (2:183,185) என வான்மறை விளக்குகிறது.

நபிமார்களுக்கு வழங்கப்பட்ட ’ஸுஹுபுகள்’ என்ற வேதக்கட்டளைகளும், தவ்ராத், ஸபூர், இன்ஜீல், திருக்குர்ஆன் ஆகிய நான்கு வேதங்களும் வழங்கப்பட்ட புனித மாதமாக ரமளான் அமைந்துள்ளது. மனிதர்களுக்கு நேர்வழியைக் காட்டி நன்மை, தீமைகளைப் பிரித்தறிவிக்கும் திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதமாக ரமளான் இருப்பதால், அம்மாதத்தை கடமையான நோன்பு நோற்கும் காலமாக அல்லாஹ் அறிவித்துள்ளான். (2:185) ஹிஜ்ரி 2ம் வருடம் முதல் ரமளான் நோன்பு கட்டாயக் கடமையாக்கப்பட்டது.

உணவு, தண்ணீர், உடல் இச்சை ஆகியவற்றை பகற்காலங்களில் தவிர்ப்பது என்பது மட்டும் நோன்பின் நோக்கமல்ல. நோன்பு நோற்றிருக்கும் போது பொய், புறம் பேசுவது, தீய பார்வை, தீயன கேட்டல், தீய உணர்வுகள் ஆகியவற்றை விலக்கி வைப்பதும் கட்டாயமாகும். இதனைத் தவிர்க்காமல் உணவையும் பானத்தையும் விட்டிருப்பதால் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தேவையுமில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். 

ஒரு மாத நோன்பு, உடற்கழிவுகளை நீக்கி, இரைப்பை, குடல் முதலியனவற்றைப் புதுப்பிக்கிறது. அவற்றின் பணிகள் சிறக்க உதவுகின்றன. உடல் பருமன் குறைவதற்கு வழியேற்பட்டு இரத்தக்கொதிப்பு, இதய நோய்கள் போன்றவை தாக்காமல் உடல் காக்கப்படுகிறது,

உணர்வுகள் கட்டுப்படுத்தப்பட்டு மிருக உணர்வுகள் களைந்தெறியப்படுகின்றன. உணவு, பானம், உறக்கம் ஆகியவற்றில் ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் தோற்றுவிக்கிறது. நோன்பு நோற்பவரின் உள்ளத்தில் உயர்ந்த இறையுணர்வைத் தூண்டுகிறது. அல்லாஹ்வின் அன்பைப் பெற்றுத் தருகிறது.

வீண்பேச்சு, பொய், புறங்கூறல், சண்டை–சச்சரவு, காமப் பார்வை முதலியனவற்றைத் தடுத்து, ஒழுக்க உணர்வுகளைப் பரிணமிக்க செய்வதால் நோன்பு ஒரு கேடயம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

’பசித்திருத்தல் ஓர் அருமருந்து’ (லங்கனம் பரம ஒளஷதம்) என்பது முதுமொழி.

தனித்திருப்பதும் பசித்திருப்பதும் விழித்திருப்பதும் ஆன்மீக உயர்வுக்கு வழிகாட்ட வல்லன. பிராணிகள் நோயுற்றால் இறை தின்ன மறுத்து விடுகின்றன. விரைவாக நலம் பெற அது உதவுகிறது. மனிதனுக்கும் அது பொருந்தும். ஏனெனில் வயிறு ஒரு கெட்ட பாத்திரம். உடல் நோய்களுக்கு அதுவே காரணமாகி விடுகிறது.

‘வயிறு நலமுடன் பேணப்பட்டால் உடல் நலமும் பேணப்படுகிறது’ என்பது நபிமொழியாகும்.(பைஹகீ) “ நம்பிக்கையாளர் ஒரு வயிற்றில் உண்ணுகிறார். இறைமறுப்பாளர் ஏழு வயிற்றில் உண்ணுகிறார்” என்பதும் நபிமொழி (திர்மிதீ) அதாவது அளவுக்கதிகமாக உண்ணுகிறார் என்பது கருத்து.

“உண்ணும்பொழுது வயிற்றில் மூன்றில் ஒரு பகுதி உணவுக்கும். மற்றொரு பகுதி தண்ணீருக்கும், இன்னொரு பகுதி காலியாகவும் இருக்கட்டும்” என்பது நபிமொழியாகும் (திர்மிதீ) அதுவே உணவின் அளவாகும்.

“உண்ணுங்கள், பருகுங்கள், மிதமிஞ்சி விடாதீர்கள் (குர்ஆன் 7:31) என்ற மாமறையின் வழியைப் பின்பற்றி வாழ்ந்த வழிகாட்டிகளான பெரு நபித்தோழர்கள் நோயற்றவர்களாக வாழ்ந்திருந்தனர் என வரலாறு பதித்திருக்கிறது. அளவின்றி உணவுண்டு, உடல் பருத்து விடுவதே பெரும்பாலான நோய்களுக்குக் காரணமாகி விடுகிறது

எனவே பசித்திருப்பதும் பசித்த பின்பே உண்ணுவதும் நலம் தரும் செயற்களாகும். ஏனெனில் நோன்பு என்ற நற்செயல் உடலுக்கு மிகுந்த நலனை வழங்குகிறது. 

“நோயுற்றவரிடமிருந்து உணவை நீக்கி விடுங்கள். இப்பொழுது பட்டினி கிடப்பது நோயுற்றவர் அல்ல; அவருடைய நோயே” என அமெரிக்க மருத்துவர் டியூவே கூறுகிறார்.

மற்றொரு அமெரிக்க மருத்துவர் டாக்டர் எல்ஸன் எம். ஹாஸ் என்பவர் கூறுகிறார் (நோய்த் தடுப்பு மையத்தின் இயக்குநர்) 

“நோன்பு மிகச்சிறந்த இயற்கை மருத்துவம். மிகத் தொன்மையான உலகளாவிய நோய் நிவாரணி. 15 வருடங்களுக்கு முன்பு நான் நோயுற்ற பொழுது உணவைத் தவிர்த்திருந்ததே என் உடல் நலம் தேற உதவியது எனக் கண்டுபிடித்தேன். புதிய சக்தி உடலில் பாய்வதை உணர்ந்தேன். உடலியக்கத்தில் ஓர் உத்வேகம் பளிச்சிடுவதையும் உணர்ந்து கொண்டேன். நலம் தரும் நோன்பு பல நோய்களைத் தடுக்கிறது” மேலும் கூறுகிறார்.

“அமெரிக்கார்களின் பெரும்பாலான நோய்களுக்குக் காரணம் உணவுக் கட்டுப்பாடு இல்லாததேயாகும். நோன்பு என்பதே அவர்களுக்குத் தெரியாத ஒன்றாகும். உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு, சர்க்கரை நோய் முதலியன தோன்றுவதற்கு உணவுக் கட்டுப்பாடின்மையே காரணமாகும். நோன்பு இவற்றைத் தடுக்கும் கருவியாக உள்ளது.”

“நோன்பு உடல் கழிவுகளை நீக்க உதவுகிறது. தசைகளுக்கு வலுவூட்டுகிறது. உடலியக்கத்தை சமநிலைப்படுத்துகிறது.”

“பல மணிநேரம் பசித்திருப்பதன் மூலம் உடற் செல்கள் புத்துணர்வு பெறுகின்றன. சிதைவுகள் சீர் செய்யப்படுகின்றன. ஆகவே தான் மனித குலம் தோன்றியதிலிருந்து ஏதாவதொரு வகையில் நோன்பு நோற்பது பின்பற்றப்பட்டு வந்துள்ளது.”

அனைத்தையும் அறிந்த அல்லாஹ், ரமளான் மாதத்தில் ஒரு மாத காலம் நோன்பு நோற்பதைக் கடமையாக்கி, நம் உடல் நலம் பேண உதவி செய்துள்ளான் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். நற்செயல்களுக்கு நன்மை வழங்கப்படுகிறது. ஆனால் நோன்பாளிக்கு அல்லாஹ்வே நன்மை வழங்குகிறான். “நோன்பு எனக்காக நோற்கப் படுகிறது அதற்கு நானே கூலி வழங்குகிறேன்” என அல்லாஹ் கூறுகிறான் ‘ரய்யான்’ என்ற தனி சுவனமே நோன்பாளிகளுக்கு மட்டும் காத்திருக்கிறது.

நன்றி: ராஜகிரி பைத்துல்மால் வலைப்பூ.

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

மொரார்ஜி தேசாயின் இயற்கை நலவாழ்வியல்.

முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் 1983ல் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியை சமீபத்தில் படித்தேன்.

 மொரார்ஜி தேசாய்
அவரது பேட்டி இதோ—

மொரார்ஜி: உயிரே போனாலும் நான் புலால் உணவைச் சாப்பிட மாட்டேன்; தடுப்பு ஊசி போட்டுக் கொள்ள மாட்டேன். நான் சென்ற எல்லா நாடுகளிலும் இவ்விஷயத்தில் எனக்கு விதி விலக்கு தரப்பட்டது.

கேள்வி: அப்படியென்றால் நீங்கள் வெளிநாடுகளுக்குச் சென்ற போது, அதைப் பற்றிய தஸ்தாவேஜுகளை உடன் எடுத்து செல்லவில்லையா?

மொ: ஒருபோதும் இல்லை. சின்ன வயதில் எனக்கு தடுப்பு ஊசி போடப்பட்டது. அதன் பிறகு, இயற்கை முறை சிகிச்சை தான். என்னுடைய குழந்தைகளுக்குக் கூட நான் தடுப்பு ஊசி போட்டதில்லை.

கே: மருந்து, மாத்திரைகள்?

மொ: "அலோபதி' மருந்துகளை நான் சாப்பிடுவதில்லை; சில சமயங்களில் ஆயுர்வேத மருந்துகளை சாப்பிடுவேன்.

கே: மலைப் பிரதேசங்கள் போன்ற உயரமான இடங்களில் உள்ள நம் ராணுவ வீரர்கள் சண்டையிட, மது அவசியம் தேவை என்று சொல்கின்றனரே...

மொ: இது சுத்த ஹம்பக் - முற்றிலும் தவறு. எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியவர்கள் மது அருந்தவில்லை. அவர்கள் மது அருந்தியிருந்தால் எவரெஸ்ட்டில் ஏறியிருக்க முடியாது. தென் துருவத்திற்கும், வட துருவத்திற்கும் சாகசப் பயணம் சென்றவர்களும் மதுவைத் தொடவில்லை; தொட்டிருந்தால் இறந்திருப்பர்.

கே: குளிரை சமாளிக்க ரஷ்யர்கள், "ஓட்கா' அருந்துகின்றனரே?

மொ: அவர்கள் அப்படிப் பழக்கப்படுத்திக் கொண்டனர். 1955ல் ரஷ்ய அதிபர் குருஷேவும், புல்காணினும் இந்தியாவுக்கு வந்த போது, பம்பாயில் மதுவிலக்கு அமலில் இருந்ததை என்னிடம் பாராட்டினர்.

கே: உங்கள் தினசரி வாழ்க்கை எப்படித் துவங்குகிறது?

மொ: காலை, 4:00 மணிக்கு எழுந்திருப்பேன். டாய்லெட் செல்வேன்; குளிப்பேன். இதற்கே ஒரு மணி நேரம் பிடிக்கும். பிறகு, பிரார்த்தனை செய்வேன். காலை உணவு நான் சாப்பிடுவதில்லை. தினசரி இரண்டு வேளை தான் நான் சாப்பிடுவேன். அறுபது வயதிற்குப் பிறகு, ஒருநாளைக்கு ஒரு முறை தான் உண்ண வேண்டும். 45 வயதிற்குப் பிறகு, ஒரு நாளைக்கு இரண்டு முறை சாப்பிட்டால் போதும். நான் வெறும் பாலும், பழமும் சாப்பிடுவதால், ஒரு நாளைக்கு, இரண்டு வேளை சாப்பிடுகிறேன். பசும்பால் தான் சாப்பிடுவேன். அந்தந்த சீசனில் கிடைக்கும் எல்லாப் பழங்களையும் சாப்பிடுவேன். ஏனென்றால், இவை எளிதில் ஜீரணமாகும். காலை, 9:45 மணிக்கு பகலுணவு சாப்பிடுகிறேன். மாலை, 6:45க்கு இரவு உணவு.

கே: இந்த மாதிரி உணவுக்கு எப்போது மாறினீர்கள்?

மொ: ஜூன் 26,1975லிருந்து... அதாவது, நெருக்கடி நிலைமையை ஒட்டி என்னை சிறையில் வைத்த நாளிலிருந்து.

நன்றி  தினமலர் வாரமலர்.

திங்கள், 22 ஆகஸ்ட், 2011


இயற்கை உணவே
நோய் தீர்க்கும் மருந்து. 
குலசேகரன் பட்டினம் 
இயற்கை நலவாழ்வு மையத்தால் 
நடத்தப்படும் 



ஒரு வார இயற்கை மருத்துவ முகாம்


நாள்:- 26-09-2011 to 02-10-2011 

நடைபெறும் இடம்: இயற்கை வாழ்வு நிலையம்
(வள்ளியம்மையார் ஆசிரியைப் பயிற்சிப் பள்ளி எதிர் சந்தில்)
குலசேகரன் பட்டினம்
(வழி) திருச்செந்தூர், தூத்துக்குடி மாவட்டம்.

கட்டணம் ரூ.600/-அறுநூறு மட்டும்.

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள:

திரு Dr. மூ.ஆனையப்பன்,
(இயற்கை நலவாழ்வியல் அறிஞர், ஆலோசகர் மற்றும் பயிற்சியாளர். )

9944042986

இந்த நல்வாய்ப்பை பயன்படுத்திக்
கொள்ள வேண்டுகிறேன்.

அஷ்வின்ஜி, சென்னை

சென்னையில் யோகா பயிற்சி பெற்றிடவும், 
தமிழ்நாடு உடற்பயிற்சி & விளையாட்டு கல்வி 
பல்கலைக்கழகத்தின் 
(University Grants Commission approved) 
சான்றிதழ், டிப்ளமா, பி.ஜி.டிப்ளமா, 
பி.எஸ்சி, எம்.எஸ்சி பட்டப் படிப்புகளைப் 
பற்றிய வழிகாட்டுதல் மற்றும் 

இயற்கை நலவாழ்வியல் 

ஆலோசனைகளைப் பெறவும் 
அணுகுங்கள்.

தொடர்புக்கு:  அஷ்வின்ஜி, 9444171339
Email: ashvinjee@gmail.com

வாழி நலம் சூழ.

வியாழன், 7 ஜூலை, 2011

13. கனி இருப்ப... (இயற்கை நலவாழ்வியல் சிந்தனைத் தொடர்)



வணக்கம். 

கடந்த பதிவில் அருகம்புல் சாறு பற்றி பார்த்தோம். இந்த பதிவில் நாம் வல்லாரைச் சாறு பற்றி பார்க்கப் போகிறோம். வல்லாரை ஒரு அற்புத மூலிகை. தெய்வீக ஞான மூலிகைகளில் ஒன்று வல்லாரை. மனித உடலின் ஞான பாகம் என்று அழைக்கப்படும் சிரசு (தலை)பகுதியில் அமைந்துள்ள மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தும் மூலிகை வல்லாரை ஆகும். கல்வி, ஞானம், அறிவு இவற்றிற்கு தெய்வமாக விளங்கும் கலைவாணியின் பெயரால், சரஸ்வதி மூலிகை என்று அழைக்கப்படும் வல்லாரை இலையின் அமைப்பும், மூளையின் அமைப்பும் ஒரே மாதிரி அமைந்திருக்கும் அதிசயத்தை கீழே உள்ள படங்களில் இருந்து ஒப்பு நோக்கி அறியலாம்.


 வல்லாரை இலை.
மனித மூளை.


பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நமது தமிழ் நாட்டின் சித்தர்கள் ஆய்வின் மூலமே வல்லாரை என்னும் இம்மாமருந்து உலகிற்கு அறியப்படுத்தப்பட்டது. வடமொழியில் இந்த மூலிகை பிரம்மி என்று அழைக்கப்படுகிறது. காய கல்ப மூலிகைகளில் வல்லாரையும் ஒன்றாகப் போற்றப்படுகிறது. இன்று வணிக ரீதியாக வல்லாரை கலந்த மருந்து மாத்திரைகள், டானிக்குகள், லேகியங்கள் போன்றவை விற்கப் படுகின்றன. ஆயினும் வல்லாரைச் சாறு அருந்துவதன் மூலம் ஒருவர் நேரடியான பலனை உடனுக்குடன் பெற்றிடலாம்.

இப்படிப்பட்ட ஒரு தெய்வீக ஞான மூலிகையான வல்லாரை இலைச் சாற்றினை தொடர்ந்து உட்கொண்டு வருவதால் ஏற்படும் பயன்களைப் பற்றி திரு.மூ.ஆனையப்பன் அவர்களின் ‘நோயின்றி வாழ’’ என்னும் கட்டுரையின் அடுத்த பகுதியைக் கீழே காணலாம்.

வல்லாரைச் சாறு.

வல்லாரை தழைகளை பிழிந்து சாறு எடுத்து நீர் சேர்த்து வெறும் வயிற்றில் அருந்தவும்.


வல்லாரை இலைச் சாறு குணப்படுத்தும் நோய்கள்.

1.         நரம்புத் தளர்ச்சி.
2.         நினைவாற்றல் இன்மை.
3.         மூளை வளர்ச்சிக் குறைவு.
4.         வயிற்றுப் புண்
5.         காமாலை.
6.         தொழு நோய்.
7.         வாதம்.
8.         நீரிழிவு.
9.         சளி.
10.      சிறுநீர் அடைப்பு.
11.      மாதவிடாய்க் கோளாறுகள்.
12.      யானைக் கால்
13.      காய்ச்சல்.
14.      இதய பலம் இன்மை.
15.      தாதுக் குறைவு.
16.      காமம் தொடர்பான குறைபாடுகள்/நோய்கள்.


(நல வாழ்வியல் சிந்தனைகள் தொடரும்)

அஷ்வின்ஜி.
வாழி நலம் சூழ. 

நன்றி: இயற்கை நலவாழ்வியல் அறிஞர் திரு. மூ.ஆ. அப்பன், குலசேகரன்பட்டினம். 

ஞாயிறு, 3 ஜூலை, 2011

12. கனி இருப்ப...இயற்கை நலவாழ்வியல் தொடர் சிந்தனைகள்.

கனி இருப்ப... எனும் இந்த தொடர் கட்டுரையைப் படித்து ஆதரித்து வரும் வலைப் பதிவு அன்பர்களுக்கு என் வணக்கம்.

இயற்கை நலவாழ்வியல் முறைகளை பின்பற்றினால் நோயின்றி வாழலாம். மருத்துவரை அணுகத் தேவையில்லை.மருந்துகள் உண்ணத் தேவையில்லை. பெரும் பொருட்செலவையும், மன உளைச்சலையும் மிச்சப்படுத்தலாம். இயற்கை நலவாழ்வியலைப் பின்பற்ற வயது ஒரு தடை இல்லை. 


இயற்கை நலவாழ்வியல் முறைகளை இளம் வயதில் இருந்தே (அதுவும் குழந்தைப் பருவத்தில் இருந்தே) பின்பற்றினால் கிடைக்கும் பயன்கள் எண்ணற்றவை . 


இளம் யுவர்களும், யுவதிகளும் திருமணத்துக்கு முன்பிருந்தே பின்பற்றினால் இல்லறம் சிறந்து நன்மக்களைப் பெறலாம். இந்த முறையிலான வாழ்க்கையை வாழ்பவர்களின் குழந்தைகள் ஆரோக்கியக் குழந்தைகளாக பிறப்பார்கள். நோயின்றி, அறிவுக் கூர்மையுடன் சிறந்து வாழுவார்கள். 

மெடிகல் இன்சூரன்ஸ் என்றெல்லாம் பணத்தையும் நேரத்தையும் செலவழிப்பதற்கு பதிலாக, இயற்கை நலவாழ்வியல் பயிற்சிகளிலும், அது தொடர்பான புத்தகங்களை வாங்கிப் படிப்பதிலும், இயற்கை நலவாழ்வியல் முறைகளைப் பின்பற்றுவோருடன் இணைந்து செயல்படுதலும் (சத்சங்கம்), தொடர் நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் "நோயற்ற நலவாழ்வை'" தரும். ப்ரீமியம் செலுத்தாத, மருத்துவமனைக்கு செல்ல வேண்டி இருக்காத, மருந்துகளை அருந்த வேண்டி இருக்காத ஒரு மருத்துவக் காப்பீடு தேவை எனில் அது இயற்கை நலவாழ்வியல் முறை ஒன்றுதான். நல்ல மனம், நல்ல உடல் பெற்றால் தான் நல்ல எண்ணங்கள் தோன்றும், வாழ்க்கை வளமும், நலமும் பெற்றிட அமைதியான ஆனந்த வாழ்வு வாழ்ந்திட இயற்கை நலவாழ்வியலை பின்பற்றுங்கள். 

யோகா பயிற்சிகள், தியானம், பிராணாயாமம், இயற்கை உணவுகளை உண்ணுதல், நலவாழிவியல் பயிற்சிகளை பெறுதல், அது தொடர்பான கல்விகளைக் கற்றல் போன்றவை உங்களை மருத்துவத்தை மறுத்து மகத்துவமாக வாழ வைக்கும். 

இயற்கை நலவாழ்வியல் தொடர் சிந்தனைகளில் தமிழகத்தின் முன்னணி இயற்கை நலவாழ்வியல் அறிஞர் திரு. மூ.ஆனையப்பன் அவர்களின் ''நோயின்றி வாழ.''கட்டுரை தொடருகிறது.


நோயின்றி வாழ.. 
மூ.ஆ.அப்பன்.

இயற்கை மூலிகைகள்:
தினம் காலையில் வெறும் வயிற்றில் கீழ்க் குறிப்பிட்ட மூலிகைச் சாறுகளை ஒருவேளை மட்டும் அருந்தி, இரண்டு மணி நேரம் எந்த திரவ/திட உணவை அருந்தாமல் இருந்தால் நோயின்றி வாழலாம். இந்த வகையில் முதலாவதாக அருகம்புல் சாறு பற்றிப் பார்க்கலாம்.

அருகம்புல் சாறு:

நன்றி: கூகிள் இமேஜஸ் 

அருகம்புல் சாறு குணப்படுத்தும் நோய்கள்:
  1. உடல் தளர்ச்சி.
  2. நரம்புத் தளர்ச்சி.
  3. அமிலத் தன்மை.
  4. மலச் சிக்கல்.
  5. பல் நோய்.
  6. வாய் துர்நாற்றம்.
  7. ஆண்மைக் குறைவு.
  8. தாய்ப்பால் பற்றாக்குறை.
  9. சளி.
  10. சர்க்கரை நோய் (அ) நீரிழிவு நோய்.
  11. இரத்த அழுத்தம்.
  12. ஆஸ்துமா.
  13. சொறி, சிரங்கு.
  14. வெண்குஷ்டம்.
  15. தோல் நோய்கள்.
  16. வயிற்றுப் புண்.
  17. கொலஸ்ட்ரால்.
  18. தூக்கமின்மை.
  19. இரத்தப் புற்று நோய்.
  20. அனீமியா (அ) இரத்த சோகை.
  21. இதயக் கோளாறுகள்.
  22. உடலில் தேங்கி உள்ள நச்சு தன்மை ஆகியன.

செய்முறை:
அருகம் புல்லை சுத்தமாக கழுவி, துண்டுகளாக வெட்டி, மிக்சியில் அடித்து சாறு எடுத்து, நீர் சேர்த்து வெறும் வயிற்றில் அருந்தவும்.  
(தொடரும்) 


அஷ்வின்ஜி,
வாழி நலம் சூழ. 
நன்றி : திரு.மூ.ஆ.அப்பன், குலசேகரன்பட்டினம் (திருச்செந்தூர்) தமிழ்நாடு.