அன்பர்களுக்கு என் வணக்கம். மிக நீண்ட நாட்களாக கனி இருப்ப தொடரை வெளியிட இயலாமல் போனது. இடையில் ஏற்பட்ட தொய்வுக்கு மன்னியுங்கள். இந்தத் தொடரில் இயற்கை நலவாழ்வியல் தொடர்பான சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டு வருகிறேன். படித்தது, பார்த்தது, கேட்டது என பல செய்திகள்.
இவை என் வாழ்க்கை முறையை மாற்றிய செய்திகள். படிக்கும் உங்களுக்கும் பயன் தரலாம் என்ற நம்பிக்கையில் எழுத்துச் சித்தர் திரு.பாலகுமாரன் அவர்கள் ''பாலகுமாரன் பேசுகிறார்" என்ற வலைப் பூவில் இயற்கை உணவினைப் பற்றிய அவரது அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் இதனைப் படித்த போது அவற்றை உங்களிடையே பகிர ஆசைப்பட்டேன். பகிர்கிறேன்.தொடர்ந்து படியுங்கள்.
வாழி நலம் சூழ,,,
பால குமாரன் பேசுகிறார்.
கற்றுக் கொண்டால் குற்றமில்லை; நல்ல உணவுப் பழக்கம்.
சமீபமாய் உணவு என்கிற விஷயத்தில் மிகப்பெரிய மாறுதல் தென்னிந்திய மக்களிடையே ஏற்பட்டிருக்கிறது. எல்லா உணவு வகையிலும் விதவிதமான மசாலாக்கள் கலக்கப்படுகின்றன, ஒருவித வாசனை கலந்த காரம் கோதுமை ரொட்டியோடும், பன்னோடும் வெண்ணெய் வதக்கி புரட்டப்படுகிறது. வாசனை தலைமயிரைப் பிடித்து இழுக்க, ருசி கண் சொருக வைக்கிறது. சாலையோரத்தில் கும்பலாய் ஆண்களும், பெண்களுமாய் நின்று கொண்டும், பேசிக் கொண்டும் சாப்பிட, என்ன சாப்பிடுகிறோம் என்று தெரியாமலேயே, எவ்வளவு சாப்பிடுகிறோம் என்று புரியாமலேயே சாப்பிட நேரிடுகிறது, மனசு உணவோடு ஒட்டவில்லை.....
உணவும் தவறு, உணவு உண்ணும் முறையும் பிசகு. இது இந்தத் தலைமுறையையே பலவீனமடையச் செய்து கொண்டிருப்பதை நான் உணர்கிறேன். எல்லாம் கிடக்க, இந்தக் கட்டுரை அஜீரணம் பற்றியோ என்று யாரேனும் அலுத்துக் கொள்ளலாம்.
உணவு ஞானத்திற்கு மிக நெருக்கமாக இருக்கிறது.
வாழ்க்கையின் வெற்றிப்படிகளுக்கு ஆதாரமாக இருக்கிறது.
நான் இடைவிடாமல் ஏதேதோ சிந்தித்துக் கொண்டே இருக்கிறவன். அந்தப் பிரபலமான விரைவு உணவு என் யோசிப்பை எரிச்சலடையச் செய்து விட்டது. தொடர்ச்சியின்மை ஏற்பட்டு விட்டது. மிக உற்று கவனித்த போது, எதிர்மறையான யோசிப்பு எனக்கு ஏற்பட்டது. அதாவது, வயிற்றுப் பொருமலில் யோசிப்பு செம்மை திசைமாறி, வக்கிரமாக சிந்திக்க வைத்து விட்டது.
வாழ்க்கையின் வெற்றிப்படிகளுக்கு ஆதாரமாக இருக்கிறது.
நான் இடைவிடாமல் ஏதேதோ சிந்தித்துக் கொண்டே இருக்கிறவன். அந்தப் பிரபலமான விரைவு உணவு என் யோசிப்பை எரிச்சலடையச் செய்து விட்டது. தொடர்ச்சியின்மை ஏற்பட்டு விட்டது. மிக உற்று கவனித்த போது, எதிர்மறையான யோசிப்பு எனக்கு ஏற்பட்டது. அதாவது, வயிற்றுப் பொருமலில் யோசிப்பு செம்மை திசைமாறி, வக்கிரமாக சிந்திக்க வைத்து விட்டது.
விதண்டாவாதம் தொடர ஆரம்பித்துவிட்டது. நம்மில் பலபேர் கோபமடைவதும், ஆத்திரமடைவதும், அசூயை அடைவதும் உணவினால் தான் என்பது என் எண்ணம்.இந்த இயற்கை உணவு பற்றி ஏற்கனவே சில நண்பர்கள் சொல்லியிருந்தாலும், இதைப் பற்றி திரும்பத் திரும்ப என்னிடம் சொன்னவர் நண்பர் திரு சைதை துரைசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.
மூன்று வருடங்கள் முன்பே “ரொம்ப குண்டா இருக்கீங்க பாலகுமாரன். உடம்பு கனம் தாங்காம கால் அகட்டி நடக்கறீங்க, படியேறினா மூச்சு வாங்குது. அநியாயத்துக்கு சிகரெட் பிடிக்கிறீங்க. நீங்க ஒரு நல்ல ரைட்டர், ஆனா, உங்களைப் பத்தி கவலையா இருக்கு” என்று சொன்னார்.
அவர் சொன்ன உணவு அப்போதைக்கு சிரிப்பை தந்தது. கோஸ், முள்ளங்கி, கேரட் எல்லாவற்றையும் வெட்டி சமைக்காமல் உண்பது, பழரசம் அருந்துவது நவதானியம் போட்ட கஞ்சி குடிப்பது என்றெல்லாம் சொன்னார். தொடர்ந்த பழக்கத்தின் காரணமாகவும், பழக்கப்பட்ட உணவின் ருசி காரணமாகவும் எல்லா இடங்களிலும் சமைத்த உணவுதான் கிடைக்கிறது என்ற நிர்ப்பந்தம் காரணமாகவும், நான் சைதை துரைசாமியை பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை.
ஆனால், இன்று அந்த உணவுக்கு மாறினேன். இதற்கு தூண்டுகோலாய் சினிமா டைரக்டர் வேலுபிரபாகரனும் நிறையப் பேசினார். மாதத்தில் பதினைந்து நாட்கள் சமைத்த உணவும், இன்னொரு பதினைந்து நாட்கள் சமைக்காத உணவும் எடுத்துக் கொள்வதாகச் சொன்னார். வயிறு ஆரோக்கியமாக இருக்கும் என்பதை விளக்கினார்.
விரைவு உணவால் ஏற்பட்ட மோசமான அனுபவத்தாலும் ஆரோக்கியத்தின் மீது ஏற்பட்ட ஆசையாலும், ஒரு நாள் இரவு இயற்கை உணவு என்று ஆரம்பித்தேன்.ஆனால், நான்கு நாட்கள் கடந்ததும் எண்ணெயும், மசாலாவும், வர்ணமும், வாசனையுமாய் இருந்த உணவு சர்வ நிச்சயமாய் விஷமென்று தெரிந்தது. அது படுத்தியபாடு நினைவிற்கு வந்தது.
வீடு ரொம்ப வினோதமாய் என்னைப் பார்த்தது.
“ஐயோ பாவம். உருளைக்கிழங்கு பொடிமாஸும், வெங்காய சாம்பாருமாக விரும்பி சாப்பிட்டு வந்தவன், என்ன பாவம் செய்தானோ, இப்படி பச்சைத்தழை தின்கிறான்”.
“எல்லாவற்றையும் போட்டு ஒருகொதி வேகவைத்து உப்பும் மிளகும் போட்டுத் தரட்டுமா” என் வீட்டில் உன்னை பரிதாபமாய் பார்த்துக் கேட்டார்கள்.
நான் மறுத்துவிட்டு உண்ணத் துவங்கினேன். என் வீட்டை குஷிப்படுத்துவதற்காக ‘ம்மா’ என்று காளை போல் குரல் கொடுத்தேன், தலைகுனிந்து முட்டுவதாய் நடித்தேன்.
“பசுவுக்கு அகத்திக்கீரை, பாலகுமாரனுக்கு கோஸு கீரை” என் பிள்ளை புதுக்கவிதை எழுதினான்.
நொந்து கொள்ளத் துவங்கினால் சிறிய வார்த்தைகூட பெரிதாய் நோகடிக்கும். விளையாட்டு என்று எடுத்துக் கொண்டால் மிகக்கடினமான விஷயமும் ஜாலியாகப் போகும். “நல்லாயிருக்குப்பா..சாப்பிட முடியாது” நான் சொல்ல, என் வீடும் என் தட்டில் கை வைத்தது.
இன்னும் காய்கறிகளும், பழங்களும் நறுக்கப்பட்டன, பேசிக்கொண்டே சாப்பிட்டதில் உணவு போனவிதம் தெரியவில்லை. வயிறு நிரம்பிவிட்டது.
அன்று சமைத்த உணவை எல்லாரும் புறக்கணித்தோம். மறுநாள் காலை வயிறு துடைத்து விட்டது போல் சுத்தமாயிற்று. நார்ச்சத்து உணவு என்பதால், உடம்பு லேசானது போல் ஒரு உணர்வு ஏற்பட்டது.
டைரக்டர் வேலு பிரபாகரன் சொன்னதுபோல், உடைத்த பூண்டு ஐந்து பற்களோடு ஒரு பிடி பொட்டுக்கடலை சாப்பிட்டேன். பொட்டுக் கடலையோடு பூண்டு சாப்பிட பூண்டின் காரம் தெரியவில்லை. மறுநாள் அதற்கு மறுநாள் என்று தினமும் இரவு வேளை மட்டும் நான் இயற்கை உணவை எடுத்துக் கொண்டேன்.
என் வீடும் அவ்வப்போது இதை மேற்கொள்கிறது.
எங்கு பார்த்தாலும் இந்த வழிநடைக் கடைகள். இடைவிடாது, அதில் குழுமும் மக்கள். அநேகமாய் இளைஞர்கள் ஒரு பெரிய கும்பலாய் உடம்பை நாசம் பண்ணிக்கொண்டிருக்கிறோம் என்ற பயம் எனக்கு வந்து விட்டது.
உடம்பைப் பேணுதல் என்பதை இந்தச் சமூகம் சரியாக செய்யவில்லை என்று தோன்றுகிறது. விளையாட்டு சூரர்கள் யாரும் இல்லாது போனாலும் பரவாயில்லை, உற்சாகமான மக்கள் ஒரு தேசத்தின் பொக்கிஷம்.
உற்சாகமான ஜனங்கள் இவ்வளவு மசாலா சாப்பிடக்கூடாது. நாள் தவறாது நடைப்பாதையில் உண்ணக் கூடாது.நாள் முழுவதுமாய் இயற்கை உணவுக்கு மாற நாளாகும். ஆனால் ஒருவேளை நான் சமைக்காத உணவை உண்ணும்போதே உடம்பு வெகு ஆரோக்கியமாய் இருக்கிறது.
“மனசு பத்திப் பேசற பாலகுமாரன், எதுக்கு உணவு பத்தி பேசறாரு?” உங்களில் சிலருக்கு இந்தக் கேள்வி வரக்கூடும்.
திருமூலர் திருமந்திரம் பாட்டு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்.
“உடம்பார் அழியின் உயிரார் அழிவார்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே.
”வளர்த்தல் என்பதற்கு கெடுத்துக் கொள்ளாமலிருந்தால் போதும் என்கிற அர்த்தமும் சொல்ல வேண்டும். சென்னை போன்ற நகரங்களில் ஏற்கனவே நச்சுப்புகை, காசு கொடுத்து விஷம் சாப்பிடவேண்டுமா? ஒரு வேளையாவது இயற்கை உணவை உண்பதற்கு கற்றுக் கொள்ள வேண்டும். நல்ல உணவுப் பழக்கத்தை கற்றுக் கொள்வது நல்லது. அது குற்றமில்லை.
அன்புடன்,
அஷ்வின்ஜி
வாழி நலம் சூழ.
2 கருத்துகள்:
மிக அருமையான தேவையான செய்திகளைப் பகிர்ந்திருக்கிறீர்கள். இப்போதுதான் பார்க்கிறேன். மிக்க நன்றி.
அழைத்ததும் பார்வை இட்டமைக்கு இதய நன்றி.
நேரம் கிடைக்கும் போது தொடர்ந்து வாருங்கள் கவிநயா.
கருத்துரையிடுக