முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் 1983ல் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியை சமீபத்தில் படித்தேன்.
மொரார்ஜி தேசாய்
அவரது பேட்டி இதோ—மொரார்ஜி: உயிரே போனாலும் நான் புலால் உணவைச் சாப்பிட மாட்டேன்; தடுப்பு ஊசி போட்டுக் கொள்ள மாட்டேன். நான் சென்ற எல்லா நாடுகளிலும் இவ்விஷயத்தில் எனக்கு விதி விலக்கு தரப்பட்டது.
கேள்வி: அப்படியென்றால் நீங்கள் வெளிநாடுகளுக்குச் சென்ற போது, அதைப் பற்றிய தஸ்தாவேஜுகளை உடன் எடுத்து செல்லவில்லையா?
மொ: ஒருபோதும் இல்லை. சின்ன வயதில் எனக்கு தடுப்பு ஊசி போடப்பட்டது. அதன் பிறகு, இயற்கை முறை சிகிச்சை தான். என்னுடைய குழந்தைகளுக்குக் கூட நான் தடுப்பு ஊசி போட்டதில்லை.
கே: மருந்து, மாத்திரைகள்?
மொ: "அலோபதி' மருந்துகளை நான் சாப்பிடுவதில்லை; சில சமயங்களில் ஆயுர்வேத மருந்துகளை சாப்பிடுவேன்.
கே: மலைப் பிரதேசங்கள் போன்ற உயரமான இடங்களில் உள்ள நம் ராணுவ வீரர்கள் சண்டையிட, மது அவசியம் தேவை என்று சொல்கின்றனரே...
மொ: இது சுத்த ஹம்பக் - முற்றிலும் தவறு. எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியவர்கள் மது அருந்தவில்லை. அவர்கள் மது அருந்தியிருந்தால் எவரெஸ்ட்டில் ஏறியிருக்க முடியாது. தென் துருவத்திற்கும், வட துருவத்திற்கும் சாகசப் பயணம் சென்றவர்களும் மதுவைத் தொடவில்லை; தொட்டிருந்தால் இறந்திருப்பர்.
கே: குளிரை சமாளிக்க ரஷ்யர்கள், "ஓட்கா' அருந்துகின்றனரே?
மொ: அவர்கள் அப்படிப் பழக்கப்படுத்திக் கொண்டனர். 1955ல் ரஷ்ய அதிபர் குருஷேவும், புல்காணினும் இந்தியாவுக்கு வந்த போது, பம்பாயில் மதுவிலக்கு அமலில் இருந்ததை என்னிடம் பாராட்டினர்.
கே: உங்கள் தினசரி வாழ்க்கை எப்படித் துவங்குகிறது?
மொ: காலை, 4:00 மணிக்கு எழுந்திருப்பேன். டாய்லெட் செல்வேன்; குளிப்பேன். இதற்கே ஒரு மணி நேரம் பிடிக்கும். பிறகு, பிரார்த்தனை செய்வேன். காலை உணவு நான் சாப்பிடுவதில்லை. தினசரி இரண்டு வேளை தான் நான் சாப்பிடுவேன். அறுபது வயதிற்குப் பிறகு, ஒருநாளைக்கு ஒரு முறை தான் உண்ண வேண்டும். 45 வயதிற்குப் பிறகு, ஒரு நாளைக்கு இரண்டு முறை சாப்பிட்டால் போதும். நான் வெறும் பாலும், பழமும் சாப்பிடுவதால், ஒரு நாளைக்கு, இரண்டு வேளை சாப்பிடுகிறேன். பசும்பால் தான் சாப்பிடுவேன். அந்தந்த சீசனில் கிடைக்கும் எல்லாப் பழங்களையும் சாப்பிடுவேன். ஏனென்றால், இவை எளிதில் ஜீரணமாகும். காலை, 9:45 மணிக்கு பகலுணவு சாப்பிடுகிறேன். மாலை, 6:45க்கு இரவு உணவு.
கே: இந்த மாதிரி உணவுக்கு எப்போது மாறினீர்கள்?
மொ: ஜூன் 26,1975லிருந்து... அதாவது, நெருக்கடி நிலைமையை ஒட்டி என்னை சிறையில் வைத்த நாளிலிருந்து.
நன்றி தினமலர் வாரமலர்.
2 கருத்துகள்:
படிச்சேன், அங்கேயும், இங்கேயும், எங்கேயும்
//அங்கேயும், இங்கேயும், எங்கேயும்//
உங்களது கண்ணன் வருவானைப் போல. :) :) ;)
கருத்துரையிடுக