ஞாயிறு, 27 மார்ச், 2011

மாற்றுமருத்துவம் என்றால் என்ன?

உலகளாவிய அளவில் கோலோச்சும் அலோபதி மருத்துவ முறைக்குப் பதிலீடாக அந்தந்தக் கலாச்சார மற்றும் வாழ்வியல் பிண்ணனிகளோடு பிணைந்திருக்கும் பாரம்பரியமான மருத்துவ முறைகள் (உ-ம்:இயற்கை மருத்துவம், சித்தா, ஆயுர்வேதா,ஹோமியோபதி,யுனானி,அக்குபஞ்சர், ரெய்கி, மலர் மருத்துவம் போன்றவை) மாற்று மருத்துவ முறைகள் என அழைக்கப்படுகின்றன.

அவற்றின் நம்பகத்தன்மை?
நூற்றாண்டுகளைத் தாண்டியும் தன் செல்வாக்கினை இழந்துவிடாமல் இன்னும் அலோபதியின் தாக்குதல்களை சமாளித்துத் தாக்குப்பிடிக்கும் திறன் ஒன்றுபோதாதா? இருக்கட்டும்...

ஆயுர்வேதத்தின்(ஆயுள்+வேதம்- வாழ்க்கையின் வேதம்) வரலாற்றைக் கொஞ்சம் புரட்டிப்பாருங்கள்... இன்றைக்கு நவீன அறிவியல் முறை என்று தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்களே... அந்த காஸ்மெடிக் சர்ஜரி பற்றி புட்டுப் புட்டு வைக்கிறார் ஆயுர்வேதத்தின் மூலவர்களில் ஒருவரான சுஸ்ருதர். ரணசிகிச்சையும் சத்திர சிகிச்சையும் ஆயுர்வேதத்தில் வலிமையாகவே இருக்கின்றன.

தென்னாட்டின் பாரம்பரியமான சித் தவைத்திய மரபின் மூலிகைச் செல்வங்களைத் தானே அலோபதி தன் நவீன சோதனைச் சாலைகளில் பகுப்பாய்வு செய்து தன் சுயக் கண்டுபிடிப்பாக தம்பட்டம் அடித்துக் கொள்கிறது?? (இல்லையென்று மறுப்போர்க்கு ஒரு கேள்வி... ஏன் ஆயுர்வேதம் மற்றும் சித்தாவின் முக்கிய மருந்தினங்களாகத் திகழும் வேம்பு, பாகற்காய், மஞ்சள் போன்றவற்றுக்கு திருட்டுத் தனமாக மேலைநாட்டு மருந்தியல் ஆய்வு நிறுவனங்கள் காப்புரிமை பெறுவதில் தீவிரம் காட்டுகின்றன?)

"நோய்நாடி நோய்முதல்நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல். (குறள் எண்: 948)" என்ற குறளின் பொருளை மிக முழுமையாய் நிறைவு செய்யும் வகையில் "நோய்க்கு மருந்தல்ல நோயாளிக்குத் தான் மருந்து" என்று கூறி மருத்துவத் துறையில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியது ஹோமியோபதி.. (டாக்டர் ஹானிமன் அல்லோபதி மருத்துவராக இருந்து அம்மருத்துவ முறையின் குறைபாடுகளை களைய ஹோமியோபதி முறையை கண்டு பிடித்தவர்.)

ஒரே மாதிரியான நோய் பலருக்கு வந்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவித மருந்து என்ற நடைமுறையிலும் நோயாளியின் உடல், மன மற்றும் சமூகக் கூறுகளின் அடிப்படையிலும் தனது சிகிச்சையை மேற்கொள்ளும் ஹோமியோவின் சிறப்புக்களை நானே அனுபவித்துப் பார்த்து வியந்திருக்கிறேன். எத்தனையோ ஆதாரங்கள் உண்டு.

மேலும் விரித்துக் கூறப்போனால் இது பெருந்தொடராக எழுதவேண்டிய பதிவாக மாறிவிடும்

ஏன் வேண்டும் மாற்றுமருத்துவம்?
அலோபதி மருத்துவமும், அதுசார்ந்த மருந்தியல் நிறுவனங்களும் நோயாளிகளை வெறும் வாடிக்கையாளர்களாக நுகர்வு பிண்டங்களாக மட்டுமே பார்க்கும் அவலம் இன்று தலைவிரித்து ஆடுகின்றது. எப்போது ஒரு மருத்துவன் "தான் முதல் போட்டு நடத்துகிறேன். எனவே தனக்குத் தன் முதலையும், வட்டியையும் மீட்டாக வேண்டும் (MBBS சீட்டுக்கு 50-100 லட்சங்களில் நன்கொடை??)" என்ற நிலைக்குத் தள்ளப் படுகிறானோ அப்போது அவன் உன்னதமான தொழில் noble profession செய்பவன் என்ற நிலையிலிருந்து லாபநோக்குடன் வியாபாரம் profittable profession செய்பவன் என்ற நிலைக்குக் கீழிறங்குகின்றான்.

பொதுவாகவே மக்களை வெறும் நுகர்வோராக மாற்றும் கலாச்சாரச் சீரழிவைத் தடுக்கவேண்டிய அவசியத்தில் தேசம் இருக்கும் நிலையில் மாற்று மருத்துவ முறைகள் இயல்பாகவே அதைச் செய்து வருகின்றன. உதாரணமாக பசுமை வளர்க்கும் கட்டாயத்தில் உலகம் இருக்கும்போது சித்த வைத்திய முறையும், ஆயுர்வேதமும் பசுமையான மரஞ்செடி,மூலிகைகளைச் சார்ந்திருப்பதை சுட்டிக்காட்டலாம்.

அதுமட்டுமல்லாமல் அலோபதி மருத்துவம் மனிதனை எந்திரமயமாக- தலையில் பிரச்சினை என்றால் தலைக்குத் தான் மருந்து, சிறுநீரகத்தில் கோளாறு என்றால் அங்கு மட்டும்தான் சிகிச்சை- என்ற அளவில்தான் பார்க்கின்றது. ஆனால் சித்தா, ஆயுர்வேதம்,ஹோமியோ போன்றவை மனிதனை ஒரு முழுமையான உயிர்த்தொகுப்பு என்ற கோணத்தில் அணுகுகின்றன.

மேலும் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் மூன்று வேளை உணவுக்கே திண்டாடிக் கொண்டிருக்கும் ஒரு வறிய தேசத்தில் பெருமளவில் ஊக்குவிக்கப்பட வேண்டியதாய் இருக்கின்றன இம்மாதிரியான மாற்று மருத்துவ முறைகள்.

இந்த இடத்தில் சீனாவில் கலாச்சாரப்புரட்சி நடந்தபோது மாவோ அறிமுகப் படுத்திய 'வெறுங்கால் வைத்தியர்கள்' (மக்களைத் தேடிச்சென்று பாரம்பரியமுறையில் எளிமையாக வைத்தியம் செய்வது) என்ற திட்டமே சீனாவின் வைத்தியத் தேவையை மிக அதிக அளவில் ஈடுகட்டியது என்பதை நாம் நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும்.

மேலும் உலக சுகாதார நிறுவனம் (WHO) தனது ஆய்வறிக்கை ஒன்றில் 70 சத நோய்களை சாதாரண மருத்துவ அறிவு இருந்தாலே குணப்படுத்தமுடியும்; அதற்கு 10-ம் வகுப்புக் கல்வித்தகுதி இருந்தாலே போதும் என்று கூறியிருக்கிறது. அதனடிப்படையில் கல்பாக்கத்தைச் சேர்ந்த ஆங்கில மருத்துவர் திரு.ராஜரத்தினம் என்பவர் தனது தொண்டமைப்பின் வாயிலாக மேற்கூறிய "வெறுங்கால் வைத்தியர்கள்" போன்றதொரு திட்டத்தை நடைமுறைப் படுத்தி வெற்றி கண்டிருக்கிறார் என்பதையும் உற்று நோக்க வேண்டும்.

என்ன செய்யவேண்டும்?
1) மாற்றுமருத்துவமுறைகளைப் பற்றிய மிகப்பெரும் ஆராய்ச்சிகளை அரசும் மக்கள் நலன்சார்ந்த நிறுவனங்களும் பெருமளவில் முன்னெடுக்க வேண்டும்

2) மாற்றுமருத்துவம் பற்றிய தெளிவான கொள்கைத்திட்டத்தை அதற்குரிய கொளகை வகுப்பாளர்களைக் கொண்டு வகுத்திடல் வேண்டும்

3) மக்களிடையே இதுபற்றிய பிரச்சாரங்களை முறையான திட்டமிடலுடன் மேற்கொள்ள வேண்டும்

4) மாற்றுமருத்துவம் என்பது ஒரு தேசத்தின் சுயச்சார்பான பொருளாதாரத்திற்கு அவசியமானது என்ற புரிதலும், அக்கறையும் ஆட்சியாளர்களுக்கும், அறிவியலாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் வரவேண்டும்

5) பகாசுர பன்னாட்டு மருந்துக் கம்பெனிகளை தீவிரமாக ஒடுக்கிட அரசை வலியுறுத்தக் கோரி மக்கள்நலன் சார்ந்து இயங்கும் அனைத்து இயக்கங்களும் ஒன்றுசேர்ந்து போராடவேண்டும்

மாற்று மருத்துவம் பற்றிய இந்தக் கட்டுரை http://vinthaimanithan.blogspot.com/2010/07/dr.html வலைப்பூவில் இருந்து வெளியிடப்பட்டது. முழுதாக வாசிக்க விந்தைமனிதன் வலைப்பூவுக்குச் செல்லுங்கள்.
நன்றி: விந்தைமனிதன் வலைப்பூ.
--
'அன்பே சிவம்' அஷ்வின்ஜி
பிரபஞ்சத் துகளில் 'நான்' யார்?

வியாழன், 24 மார்ச், 2011

நார்ச்சத்தை பெறுவதற்கான எளிய வழிகள்!

உங்கள அத்தியாவசிய உணவு பட்டியலில் நார்ச்சத்துடன் கூடிய உணவு மிகவும் அவசியமானது.ஜீரணம் சீராக நடைபெறவும், உங்களது உடலில் கொழுப்பை கட்டுப்படுத்துவதிலும், இருதய நோய் வரும் ஆபத்தை குறைப்பதிலும், இரண்டு வித சர்க்கரை நோய் உருவாவதை தடுப்பதிலும்,அவ்வளவு ஏன்... சில வகை புற்றுநோயை வரவிடாமல் தடுப்பதிலும் கூட நார்ச்சத்து மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

நார்ச்சத்து எவ்வளவு தேவை?
இத்தகைய நார்சத்து உங்களது உடலுக்கு எந்த அளவு தேவையாக உள்ளது என்று பார்த்தால், 50 வயது வரையிலான ஆணுக்கு நாளொன்றுக்கு 38 கிராமும், பெண்ணுக்கு 25 கிராமும் தேவையாக உள்ளதாக கூறுகின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.அதே சமயம் 50 வயதுக்கு மேல் நார்சத்தின் தேவை சற்று குறையும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

ஆனால் துரதிருஷ்டவசமாக நம்மில் பெரும்பாலானோர் மேற்கூறிய பரிந்துரைக்கப்பட்ட அளவுடைய நார்ச்சத்து கொண்ட உணவுகளை தினசரி எடுத்துக்கொள்வதில்லை. உண்மையில் சராசரியாக நம்மவர்கள் நாளொன்றுக்கு 14 கிராம் நார்ச்சத்தை மட்டுமே எடுத்துக்கொள்வதாக மருத்துவர்களும், ஊட்டச்சத்து நிபுணர்களும் கூறுகின்றனர்.

ஒவ்வொருவரும் தினமும் எடுத்துக்கொள்ளும் நார்ச்சத்தின் அளவு, அவர்கள் எந்த அளவு கலோரி உணவுகளை எடுத்துக்கொள்கிறார்கள் என்பதை பொறுத்தே அமைகிறது. 1000 கலோரிகளை கொண்ட உணவை ஒருவர் எடுத்துக்கொண்டால் அவருக்கு 14 கிராம் நார்ச்சத்து கிடைக்கிறது.எனவே உதாரணத்திற்கு நீங்கள் 2,500 கலோரி உணவுகளை எடுத்துக்கொண்டால் உங்களுக்கு நாளொன்றுக்கு 35 கிராம் நார்ச்சத்து கிடைக்கும்.

நார்ச்சத்தை அதிகம் எடுத்துக் கொள்வதற்கான வழிகள்:
உங்களுக்கு தேவையான நார்ச்சத்தை எடுத்துக்கொள்வதற்கு பல வழிகள் உள்ளன என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.அதில் முக்கியமானது காய்கறிகள் அதிகம் நிறைந்த உணவை எடுத்துக்கொள்வது.

அது சாண்ட்விச்சோ, பிஸ்ஸாவோ அல்லது பஸ்தாவோ எதுவானாலும் அதில் காய்கறிகளை தாராளமாக சேருங்கள்.உங்களது சாப்பாட்டு தட்டில் பாதியளவு ஸ்டார்ச் எனப்படும் மாவு சத்து அல்லாத காய்கறிகள் இருக்கட்டும். பிறகு பிரட், உருளைக்கிழங்கு அல்லது ஸ்டார்ச் காய்கறிகள் போன்ற ஸ்டார்ச் உணவுகள் தட்டின் அளவில் நான்கில் ஒரு பங்கு இருக்கட்டும்.

நீங்கள் அசைவ உணவு உண்பவர் எனில் தட்டில் கடைசி பங்காக மீன், தோலுரித்த கோழி இறைச்சி மற்றும் கொழுப்பற்ற இறைச்சி போன்றவை இருக்கலாம்.

இது தவிர முழு தானிய உணவுகளையும் எடுத்துக்கொள்ளலாம். அதிலும் வெள்ளை அரிசிக்கு பதிலாக, பிரவுன் அரிசி, முழு தானிய அதாவது கோதுமை பிரட் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

பழச்சாறுக்குப் பதில் பழம்:
நம்மில் பலரிடம் உட்கொள்வதற்கு சுலபமாக இருக்கிறது என்பதற்காக பழங்களை சாறாக, அதாவது ஜூஸ், அரைத்துக் குடிக்கும் வழக்கம் உள்ளது. முழு பழத்தில் உள்ள அளவிற்கு பழச்சாறில் நார்ச்சத்து இல்லை.

பழங்களை தவிர பீன்ஸ் வகையறாக்களிலும் நார்ச்சத்து அதிகம் உள்ளது.நார்ச்சத்து மிகுந்த பீன்ஸ் பல வகைகளில் பலவிதமாக உள்ளது.இவை ஒவ்வொன்றிலுமே நார்ச்சத்து மிகுந்துள்ளது.

நொறுக்கு தீனியிலும் நார்ச்சத்து:
நம்மில் பெரும்பாலானோருக்கு நொறுக்கு தீனி என்றாலே மிக்சர், சிப்ஸ், கேக், ஸ்வீட் மற்றும் நன்றாக எண்ணெய் குளியல் போட்ட போண்டா, பஜ்ஜி, வடை வகையறாக்கள்தான் நினைவுக்கு வரும். அதைத்தான் சாப்பாட்டை விட அதிகமாக எடுத்துக்கொண்டு தொப்பை, தொந்தி என புலம்பி வருகின்றனர்.

இதுமாதிரி நார்ச்சத்து அல்லாத கலோரி அதிகம் நிறைந்த நொறுக்கு தீனிகளுக்குப் பதிலாக கேரட், நறுக்கிய வெள்ளரி துண்டுகள், கொழுப்பு அல்லாத பாப்கார்ன் மற்றும் பழக் கலவை துண்டுகள், முந்திரி, பாதாம் போன்ற கொட்டை பருப்புகள் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம். உடலுக்கு கேடு விளைவிக்காத இவற்றில் நார்ச்சத்தும் மிகுந்த அளவில் உள்ளது.

தக தக தக்காளி:
தக்காளி எப்படி தக தகவென்று பள பளக்கிறதோ அதேப்போன்று பள பளக்கும் உங்களது மேனி, தினமும் நீங்கள் தக்காளி எடுத்துக்கொள்பவராக இருந்தால்! ஏனெனில் தக்காளியில் அந்த அளவிற்கு நார்ச்சத்து மிகுந்துள்ளது.நார்ச்சத்தை அதிகரித்துக் கொள்வதற்கான நடைமுறையில் சாத்தியமான எளிய வழி தினமும் ( அளவோடு) தக்காளி உட்கொள்வதுதான் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

படிப்படியாக அதிகரிக்கவேண்டும்:
முடிவாக ஒன்று! நார்ச்சத்தில் இவ்வளவு நல்லது இருக்கிறதே என்பதற்காக அதை உடனடியாக அதிகமாக எடுத்துக்கொள்ள தொடங்கிவிடாதீர்கள்.திடீரென அதிக அளவு நார்ச்சத்து உணவை அதிகம் எடுத்துக்கொள்வது வயிற்று போக்கு உள்ளிட்ட சில உபாதைகளை ஏற்படுத்திவிடும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

எனவே அதனை படிப்படியாக உங்களது தினசரி உணவில் அதிகரித்து, இறுதியாக உங்களது உணவு தட்டில் மேலே குறிப்பிட்ட அளவு உணவுகளை வழக்கமாக்கிக் கொண்டால் நல வாழ்வு நிச்சயம்!


--
'அன்பே சிவம்' அஷ்வின்ஜி
பிரபஞ்சத் துகளில் 'நான்' யார்?

திங்கள், 21 மார்ச், 2011

இன்சுவையே எமனாகும்!

(மோனோசோடியம் குளுடாமேட்)

இனிய மாலைப்பொழுது.
இணைந்து குடும்பத்துடன்
செல்லும்இடம் -
துரித உணவகம்.
சூடாய் சூப் வகைகள்.
அறுசுவை உணவு.
அத்தனையும் அருமை.

எப்படிக் கிடைக்கிறது இந்த சுவை.
பார்த்துப் பார்த்து பாட்டி சமைத்ததில்
இல்லா சுவை இதில் எப்படி ?

சிந்தித்ததுண்டா?

மொத்தத்தில், மோனோசோடியம் குளுடாமேட்
செய்யும் மோ(ச)டி வித்தை தான் அது.

மோனோசோடியம் குளுடாமேட்
ஒரு சுவை கூட்டி.
1909ல் தொடங்கியது இதன் அறிமுகம்.
அறிமுகமான நாள் முதல் அதை வெல்ல
ஆளே இல்லை மார்கட்டில்.

அறிமுகம் ஜப்பானில்.

அகில உலக சாப்பாட்டுப் பிரியர்களும்
அடிமை இதற்கு.

முதலில் கோதுமையிலிருந்து
பிரித்தெடுக்கப்பட்டது
குளுடாமிக் அமிலம்.
அதைத் தான் முதலில் ஜப்பானில்
சூப்களில் சுவை கூட்ட
பயன் படுத்தினார்கள்.

அமெரிக்காவில், "பொதுவாக பாதுகாப்பான
பொருள் பட்டியலில் "உப்பு, மிளகு, வினிகர்
ஆகியவற்றுடன் மோனோசோடியம்
குளுடாமேட்டும் இடம் பெற்றுள்ளது.
ஐரோப்பிய யூனியனிலும்
மோனோசோடியம் குளுடாமேட்
பாதுகாப்பான உணவுப் பட்டியலில்
வருகிறது.

1968ல்தான் மோனோசோடியம் குளுடாமேட்டின்
முகத்திரை கிழிந்தது. சீன உணவகம் ஒன்றில்
உணவருந்திய சிலர் வயிற்றில் எரிச்சல்,
உடலில் மதமதப்பு, உடலின் மேல் பகுதியில்
இறுக்கம் ஆகிய உபாதைகளை உணர்ந்தனர்.

“சீன உணவக உபாதை” என அதற்கு
நாமகரணம் சூட்டப்பட்டது.

சீன உணவக உபாதைக்கு மோனோசோடியம்
குளுடாமேட்டே காரணம் என
முடிவு கட்டப்பட்டது.

ஆயினும் அதை நிரூபிக்க முடியவில்லை.

ரசல் பிளேலாக் எழுதிய புத்தகமொன்றில்,
மோனோசோடியம் குளுடாமேட்
நியூரான்களை (மூளைத்திசுக்களை)த்
தூண்டி சுவையை அதிக
அளவில் உணரச் செய்கிறது.

ஆனால், அதே மோனோசோடியம் குளுடாமேட்
மூளைத்திசுக்கள் இறக்கவும், அல்ஜீமீயர்ஸ்
மற்றும் பார்கின்சன்ஸ் நோய்களை
அதிகப்படுத்தவும் காரணமாகலாமென
எச்சரித்துள்ளார்.

மோனோசோடியம் குளுடாமேட்
பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவுப் பொருள்
பொட்டலங்கள் மீது, “இந்த உணவுப்பொருளில்
மோனோசோடியம் குளுடாமேட்
பயன்படுத்தப்பட்டுள்ளது”
எனக் குறிப்பிடப்பட வேண்டும்.

அதேபோல்,“மோனோசோடியம் குளுடாமேட்
ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்றதல்ல”
எனவும் குறிப்பிடுவது நம் நாட்டில்
கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எனினும், எச்சரிக்கையாய் இருங்கள்.
மோனோசோடியம் குளுடாமேட் இருப்பதை
“இயற்கை சுவைகூட்டி” என்றும் குறிப்பிட்டிருப்பர்.
ஏமாந்து விடாதீர்.

உணவை எப்போதும் அதன் இயற்கை வடிவிலே
உண்பதுதான் சாலச்சிறந்தது.

நம் உடலும் இயற்கை உணவை ஏற்பதுபோல்,
செயற்கை உணவை ஏற்பதில்லை.

மோனோசோடியம் குளுடாமேட்
சேர்க்கப்பட்ட உணவின் மற்றொரு ஆபத்து-
சுவைகூட்டிகள் நாம் உண்ணும்
உணவின் அளவை அதிகரித்து
உடல் எடையைக் கூட்டும்-கவனம்.

எனவே, மோனோசோடியம் குளுடாமேட்
போன்ற சுவைகூட்டிகளை ஒதுக்கி வைப்பதே
உடலுக்கு உகந்தது.

"மோனோசோடியம் குளுடாமேட்" என்பது
இன்று மார்கெட்டில் பிரபலமாக (சிவந்த நிற
சிறிய பாத்திர முத்திரையுடன்)
விற்கப்படும் ஒரு பொருள்.

கவனமா இருங்க!

நன்றி: உணவு உலகம் வலைப்பூ.
சொடுக்குக:

மார்க்கெட்டில் இந்த
மோனோசொடியம் குளுடாமெட்
எந்தப்
பெயரில் விற்கப்படுகிறது
என்று உங்களுக்கு தெரியுமா?

அஜினோமோட்டோ.

வெள்ளி, 18 மார்ச், 2011

வாழையின் மருத்துவ குணங்கள்..

புதன், 16 மார்ச், 2011

சர்க்கரை நோயும்... தொற்றுக்களும்.....

வாழி நலம் சூழ....இயற்கை நலவாழ்வியல்   

சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரைநோய் தவிர வேறு தொற்று நோய்களும் வருகின்றன. அவற்றை அறிந்துகொள்வது அவர்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பதற்கும் நோய்கள் வருவதற்கு முன் தடுத்துக் கொள்ளவும் உதவும்.

சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருத்தலே மிக நல்லது. கட்டுப்பாட்டில் இல்லாத சர்க்கரையினாலேயே உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோயாளிகள் பல இன்னல்களுக்கும் ஆளாகிறார்கள்.

1.கால்கள்:சர்க்கரை நோயாளிகளுக்கு கால்களில் பாதத்தில் உணர்ச்சிக் குறைவு, மதமதப்பு ஆகியவை ஏற்படும். அதனால் காலில் அடிபட்டால் அதனை உணரும் தன்மை குறைந்து இருக்கும். இதனால் காலில் ஏற்படும் காயத்தில் நோய்க்கிருமிகள் பெருகி ஆறாத புண் ஏற்படுகிறது. இதனால் விரல்களையும் பல நேரங்களில் காலையும் எடுக்க நேரிடுகிறது.

2.சிறுநீரகம்: சிறுநீர் கழிக்கும் பகுதியில் வெடிப்பு, சிறுசிறு புண்கள், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், பெண்களுக்கு வெள்ளைப்படுதல் ஆகியவை ஏற்படுகின்றன.

3.வயிறு, குடல்:அசுத்தமான தண்ணீர், சுகாதாரமற்ற உணவுகளால் வயிற்று வலி,வயிற்றுப் போக்கு ஆகியவை ஏற்படுகின்றன.

4.மூக்கு: சளி அடிக்கடி பிடித்தல், தொண்டைவலி, காய்ச்சல் ஆகியவை சாதாரணமாக எல்லோருக்கும் ஏற்படும். ஆனால் சர்க்கரை நோயாளிகளுக்கு விரைவில் குணமாகாமல் நாள்பட இருக்கும். அதுபோல் அடிக்கடி சளி,காய்ச்சல் ஏற்படும்.

5.பல், ஈறுகள்: பற்கள்,ஈறுகளில் வீக்கம், சீழ்வடிதல் ஆகியவை ஏற்படலாம். ஆகையால் பற்கள்,ஈறுகளில் கவனம் வைப்பது அவசியம்.

6.கண்கள்: கண்களில் கட்ட்டிகள், கண்ணின் வெண்ணிறப் பகுதியில் வைரஸ் தொற்றால் ஏற்படும் (கஞ்சங்டிவைடிஸ்) ஆகியவை ஏற்படலாம்.

7.காது: காதில் நுண்கிருமிகள் தொற்று ஏற்பட்டால் காதில் சீழ்பிடித்தல் ஏற்படும்.

முக்கிய குறிப்பு: இவை நுண் கிருமிகளால் ஏற்படும் தொற்று நோய்கள் தான். சர்க்கரை வியாதியின் பின்விளைவுகள் என்பவை வேறு.

தொற்றுக்களை தடுக்க:

1.சர்க்கரை கட்டுப்பாட்டில் வைத்திருத்தல்.

2.ஊட்டச்சத்து, நுண்ணுயிர்ச்சத்துக்கள்  நிறைந்த உணவுகள் சாப்பிடுவது.

3.ஆரஞ்சு,எலுமிச்சை ஆகிய விட்டமின் சி நிறைந்த உணவு சாப்பிடுதல்.

4. உடற்பயிற்சி, மூச்சுப் பயிற்சி

5.தினமும் 2 முறை பல் விளக்க வேண்டும்.

6.தினமும் 1 அல்லது 2 முறை குளிக்கவேண்டும்.

7.வெளியில் சுகாதாரமற்ற உணவுகள் சாப்பிடக்கூடாது.

8.சுத்திகரிக்கப்பட்ட நீரானாலும் 3 நிமிடம் கொதிக்கவைத்து குடிக்க வேண்டும்.

9.சிறுநீர் கழிக்குமிடத்தில் புண் உள்ளவர்கள் சிறுநீர் கழித்தவுடன் சோப்புப் போட்டுக் கழுவ வேண்டும்.

10.வெளியில் சாப்பிட்டால் சாலட், சட்னி, தண்ணீர் போன்றவற்றைத் தவிர்க்கவும்.

11.சாப்பிடும் முன் கைகளை 5 நிமிடம் சோப்பால் கழுவவும்.

12.பிரிஜ்ஜில் வைத்த உணவை தவிர்க்கவும். மூன்று வேளையும் புதிய உணவே உண்ணவும்.

13.கால்களை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும்.

14.மீறி தொற்றுநோய் ஏற்பட்டால் உடன் மருத்துவரை அணுகவும்.

நன்றி: இணையம் (இணைப்பு நினைவில் இல்லை)
வாழி நலம் சூழ...

சனி, 12 மார்ச், 2011

வணக்கம்.
இரத்தம் ஒரே நிறம் ஆனால் அதிலும் கூட குருதி பேதம் ஏன்? நான்கு வகையான இரத்த வகைகளுக்கும் ஏற்ற சரியான உணவு எது? என்னும் தலைப்பில் ஒரு இடுகையை முன்னர் (ஜூலை 2010) இட்டிருந்தேன். 
சுட்டி: http://frutarians.blogspot.com/2010/07/blog-post.html 

பின்னர் நேரம் கிடைக்காது போனதில் Dr.Peter J.D'Adamo எழுதிய  ''4 Blood Types, 4 Diets - Eat Right 4 your Type''அந்த ஆங்கிலப் புத்தகத்தை என்னால் தமிழாக்கம் செய்ய இயலவில்லை. வேறு ஒரு வலைப்பூவில் இது தொடர்பாக கிடைத்த செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். எனது தமிழாக்கம் விரைவில் வரும். அதுவரை, இதனை படியுங்கள். நன்றி.

உங்களது ரத்த வகை எது? அதற்கேற்ற உணவு எது?

இந்த பதிவின் நோக்கம், சைவ உணவின் முக்கியத்துவம் குறித்து தான்.

உலகம் முழுவதிலும் அசைவ உணவுக்கு மாற்றான இயக்கங்கள் எழுந்து வருகின்றன. காரணம், மனித பரிணாம வளர்ச்சியில் அவனது இயற்கை உணவு என்பது தாவரங்கள் மட்டுமே. இறைச்சி என்பது விலங்கு உலகத்திற்கு படைக்கப்பட்டது. இதில் எது சரி. எது தவறு என்பது குறித்து ஆய்வுகள் நடந்து வருகின்றன. அது ஒரு பக்கம் இருக்கட்டும். சைவ உணவு மட்டுமே மனிதனுக்கு பொருந்திய உணவு என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

காய்கறிகள் என்ற மரக்கறிகள் எளிதில் செரிக்க கூடியது. மனித உடலின் இயங்கு மண்டலத்திற்கு தேவையான சக்திகள் அனைத்தும் சைவ உணவில் அதிகமாகவே இருக்கின்றன. இவை மட்டுமே மனித உடலின் செரிமான மண்டலத்திற்கு பொருந்தி போக கூடியவையும் கூட. இருந்தாலும் சில நேரங்களில் மாமிச உணவும் பொருந்தி தான் போகிறது. ஆனால் அளவோடு உண்டால் அது மருந்தாக அமைகிறது.சரி, எந்த இரத்த வகையினருக்கு எந்த மாதிரியான உணவு முறை பொருந்தும்  என்று பார்க்கலாம்.  அதாவது, இரத்தத்தின் வகை என்பது கார, அமில நிலைப்பாடுகளை பொருத்து அமைகிறது. செவ்வாய் தோஷம் உள்ள பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் உள்ள ஆண் தான் பொருத்தமாக இருக்கும் என்பார்களே..அது ஏன்? இரத்தத்தின் தன்மையை வைத்துதான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள் என்பது தான் உண்மை.  ஆக.. இரத்தத்தின் தன்மைக்கு ஏற்றபடி அமில, காரத் தன்மையுள்ள உணவு வகைகளை உண்டால் அது நமது செயல் திறனை அதிகரிக்கும். ஆரோக்கியமான உடலை தரும். இந்த பதிவில் எந்த இரத்த வகை கொண்டவர்களுக்கு என்ன மாதிரியான உணவுகள் பொருந்தும் என்று பார்க்கலாம். 

'ஏ' பிரிவு இரத்த வகை

இவர்களுக்கு சைவ உணவு மட்டுமே பொருத்தமானது. புத்தம் புதிய காய்கறிகள்,கீரை வகைகளை இவர்கள் அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பீன்ஸ் மற்றும் பயறுவகைகளில் அதிகமான புரதச்சத்து உள்ளது. அவை இவர்களுக்கு இதய நோய்கள், புற்றுநோய்,நீரிழிவு போன்றவை ஏற்படுவதை ஓரளவு தடுக்கும். 'ஏ' இரத்த பிரிவு கொண்டவர்களுக்கு மேற்கண்ட நோய்கள் ஏற்படும் சூழ்நிலை அதிகம் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த இரத்த வகை கொண்டவர்கள் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை தவிர்ப்பது நலம். இவை இவர்களுக்கு எளிதில் சீரணம் ஆவதில்லை. முட்டைக்கோஸ், தக்காளி, உருளைக்கிழங்கு,மிளகு போன்றவற்றில் இருக்கும் 'லெக்டின்' என்ற பொருள் இவர்களின் வயிற்றுக்கு தொந்தரவை தரும்.

'பி' இரத்த வகை

மிதமான மென்மையான உணவுகளே இந்த வகை இரத்த பிரிவு கொண்டவர்களுக்கு ஏற்றவை. பழம், காய்கறிகளை இவர்கள் அதிகமாக சாப்பிடலாம். பாலும், பால்வகை பொருட்களும் உடலுக்கு உகந்தவை அல்ல. தக்காளி அதிகமாக சாப்பிட்டால் வயிற்றுக் கோளாறுகளை உருவாக்கும். சோளம், கோதுமை,பயறு வகைகள்,வேர்க்கடலை சாப்பிட்டால் இவர்களின் உடல் எடை அதிகரிக்கும். இவற்றில் இருக்கும் சில ரசாயனங்கள் இந்த ரத்த பிரிவுகாரர்களுக்கு மந்தம், சோர்வை உருவாக்கும்.

'ஏ'பி' பிரிவு இரத்த வகை

இந்த பிரிவு இரத்தம் இருப்பவர்கள் இறைச்சி உணவை அதிகம் உண்பது கூடாது. இவர்களது வயிற்றில் உணவை சீரணம் செய்யும் அமிலச்சுரப்பு குறைவாக இருப்பதுண்டு. அதனால் சீரணம் மெதுவாக நடக்கும். குறிப்பாக இவர்கள் கோழி இறைச்சியை உண்பது கூடாது. பால், வேர்க்கடலை மற்றும் பருப்பு வகை பொருட்கள், தானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் கோதுமையை அதிகம் சேர்க்க கூடாது. இந்த இரத்த பிரிவு கொண்டவர்களுக்கு அதிகமாக சளித் தொந்தரவு இருக்கும். காலையில் இளம் சுடுநீரில் பாதி எலுமிச்சை பழத்தை பிழிந்து வெறும் வயிற்றில் குடித்தால் சளி தொந்தரவு நீங்கும்.

'ஓ' இரத்த பிரிவு

இவர்கள் மாமிச உணவுகளை சாப்பிடலாம். ஆனால் அதைவிட அதிக நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை சாப்பிடலாம், இயற்கையாக இவர்களின் வயிற்றில் சீரணத்திற்கு சுரக்கும் அமிலத்தின் அளவு அதிகமாக இருப்பதுண்டு. அதனால் செரிக்க சற்று கடினமான உணவுகளை எடுத்துக் கொண்டாலும் எளிதில் சீரணமாகி விடும். கோதுமை இவர்களுக்கு பொருந்தாது. காரணம், கோதுமையில் இருக்கும் ஒரு வகை ரசாயனம் இவர்களது உடலுக்கு பொருந்துவதில்லை. பால் பொருட்களும் பொருந்துவதில்லை. பீன்ஸ், பயறு வகைகளும் இவர்களுக்கு எதிராக இருக்கின்றன. இவற்றை அதிகம் சாப்பிடும் நிலையில் மந்தமான குணம் காணப்படுவதுண்டு. அது போல் முட்டைகோஸ், காலிபிளவர், கடல் உயிரினங்கள், அயோடின் சேர்நத உப்பு போன்றவற்றையும் தவிர்ப்பது நல்லது.

இந்த விடயங்கள் ஒரு வேதியியல் மற்றும் சித்த மருத்துவம் தெரிந்த நண்பரின் ஆலோசனையில் பதியப்பட்டது. இங்கு குறிப்பிட்ட உணவுப்பொருட்கள் உங்களுக்கு ஒத்து வராத ஒன்றாக நீங்கள் அறிந்தால் இங்கு குறிப்பிடப்படும் தகவலும் பொருந்துவதாகும். 
மற்றபடி இந்த தகவல் பொதுவானது என்பதை உங்கள் கவனத்திற்கு வைக்கிறேன். நன்றி.
வலைப்பதிவருக்கு நன்றி: http://greenindiafoundation.blogspot.com/2010/12/blog-post_25.html

இந்தப் பதிவினைப் பற்றி வாழி நலம் சூழ..வலைப்பூவின் கருத்து: 
அசைவ உணவுப் பழக்கம் உள்ளோர் முதலில் சைவ உணவுப் பழக்கத்துக்கு மாறுங்கள்; சைவ உணவு உண்போர் இயற்கை உணவுக்கு மாற்றும். ஏனெனில்,  இயற்கை நல வாழ்வியல் தத்துவப் படி உண்ணும் உணவே மருந்து ஆகிறது. இயற்கை உணவினை முறையான ஆலோசனைப்படி உண்பவர்கள் எந்த விதமான மருத்துவமும் பொருட்படுத்த தேவையில்லை.  திருவள்ளுவரின், "மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு"' எனும் குறளின் படி, இயற்கை நலவாழ்வியலை பின்பற்றுபவர்கள் எந்த விதமான மருத்துவத்தையும் (ஆயுர்வேதம், சித்தம், யூனானி, ஹோமியோபதி, போன்ற மாற்று மருத்துவம் உள்பட) செய்து கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது.
வாழி நலம் சூழ.
அஷ்வின்ஜி.

வியாழன், 10 மார்ச், 2011

நலமோடு வாழ நலவாழ்வியல் குறிப்புக்கள்.

புதிய உலகம்.. (நன்றி: google images)


"It takes less water to produce a year's food for a pure vegetarian than to produce a month's food for a meat-eater."  (John Robbins)


உண்ணும் உணவில் கவனம் தேவை.
சைவ உணவுகளை எடுத்துக்கொள்வது உங்களது உடல் நலனுக்கு எந்தெந்த வகையிலெல்லாம் நல்லது என்பது குறித்து மருத்துவ மற்றும் ஊட்டச் சத்து நிபுணர்கள் தரும் விளக்கம் இங்கே:

நச்சுக்களை அகற்றுபவை:
நார்சத்து மிகுந்த சுரைக்காய், பூசணி, பசலைக்கீரை மற்றும் முட்டைகோஸ் ஆகியவை சைவ உணவ வகைகளில் மிக முக்கியமானவை. உடலில் சேரும் நச்சுகளை அகற்றும் திறன் மேற்கூறிய காய்கறிகளுக்கு உண்டு.அதே சமயம் முட்டை, மீன் மற்றும் இறைச்சி போன்றவற்றில் புரத சத்து இருக்கும் அளவுக்கு நார்சத்து இருப்பதில்லை. 

எலும்புகளை வலுவாக்குபவை:
இறைச்சி உடலில் புரதத்தை அதிகமாக்கி, கொழுப்பை கூட்ட வழி வகுக்க கூடியது. மேலும் நமது சிறுநீரகத்திற்கு அதிக வேலைப் பளுவை ஏற்படுத்த செய்வதோடு, எலும்பிலுள்ள கால்சியத்தையும் உறிஞ்சி விடுகிறது. அதே சமயம் சைவ உணவில் இந்த பிரச்சனை இல்லை.

கார்போஹைட்ரேட் பற்றாக்குறை:
அசைவ உணவு அதிகம் எடுத்துக்கொள்பவர்களுக்கு கார்போஹைட்ரேட் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பும் அதிகம் உண்டு.இதனால் உடல் தனது இயக்கத்திற்கு தேவையான சக்தியை கார்போஹைட்ரேட்டிலிருந்து பெறுவதற்கு பதிலாக சேமித்து வைக்கப்பட்டுள்ள கொழுப்பிலிருந்து எடுத்துக்கொள்ளும் கீட்டோனியம் என்ற நிலை ஏற்படும்.

எளிதில் ஜீரணம்:
சைவ உணவுகள் மூலமாக கிடைக்கும் ஹார்போஹைட்ரேட் படிப்படியாக ஜீரணமாக உடலுக்கு தேவையான குளூகோஸ் சத்தை சீராக அளிக்கும்.அதே சமயம் கொழுப்பும், புரதமும் அதிகம் நிறைந்த இறைச்சி உணவு ஜீரணமாகவே அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். சில சிமயங்களில் சிலருக்கு அது சிரமமாக கூட ஆகிவிடும்.

ஆரோக்கியமான மேனி:
பீட்ரூட், தக்காளி, பூசணி, பாகற்காய் போன்ற சைவ உணவுகள் ரத்தத்தை நன்கு சுத்திகரிப்பதோடு, தோலுக்கு மினு மினுப்பையும் கொடுக்கிறது. அத்துடன் கொய்யா, ஆப்பிள், பேரிக்காய் போன்ற பழங்களை உண்பதும் மேனிக்கு மினுமினுப்பை கூட்டும்.

உடல் எடை:
இறைச்சி உணவை தவிர்ப்பது கொழுப்பு உடலில் சேருவதை குறைக்கும் ஒரு எளிய வழிமுறை. அதற்கு பதிலாக முழு தானிய உணவு,மொச்சை, காய்கறிகள், முந்திரி, பாதாம் போன்ற கொட்டை பருப்புகள் போன்றவற்றை உண்பது உடம்பிலுள்ள கொழுப்பை குறைப்பதோடு, ரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன் ஆகியவற்றையும் குறைக்கிறது.

பற்களுக்கு எளிது:
நமது கடைவாய் பற்கள் இறைச்சி துண்டுகளை கடித்து இழுப்பதை காட்டிலும் தானிய உணவுகள், காய்கறிகள் போன்றவற்றை மென்று அரைக்கத்தான் அதிக தோதாக அமைந்துள்ளன. உமிழ் நீருடன்தான் ஜீரண வேலை முதலில் தொடங்குகிறது.இந்த உமிழ் நீர் தாவர வகை கார்போஹைட்ரேட் உணவுகளை மட்டுமே ஜீரணிக்க செய்யும் ஆற்றலுடையது.

நோய் தடுப்பு:
மேற்கூறிய சைவ உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் சர்க்கரை நோய், புற்று நோய், சிறுநீரக கோளாறுகள்,ஸ்ட்ரோக் மற்றும் எலும்பு தேய்மானம் போன்றவை ஏற்படாமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இவையெல்லாமே சைவ உணவுகளில் மட்டுமே சாத்தியம். அசைவ உணவு பிரியர்கள் இதனை இழக்கிறார்கள்.


செய்தி நன்றி:
வெப்துனியா இணைய தளம்.

வாழி நல சூழ.. 
பழங்கள், பச்சைக் காய்கறிகள் போன்ற இயற்கை உணவுகளை தொடர்ந்து நிறைய உண்டு வருபவர்கள் சைவ உணவுகளை (சமைத்த உணவுகளை) அளவு குறைவாக எடுத்துக் கொள்ளலாம். 
உங்களுக்கு நீங்களே பழங்களை பரிசளித்துக் கொள்ளுங்கள். 

இதன் மூலம் இன்னும் அதிகமான ஆரோக்கிய வாழ்வுடன், நோயற்ற வாழ்வும் வாழலாம்.

ஞாயிறு, 6 மார்ச், 2011

இதயத்திற்கும், ஈரலுக்கும் பலம் தரும் லிச்சி!

  • இதயமும், ஈரலும் உடலின் பிரதான பாகங்கள். இந்த இரண்டு உடல் உறுப்புகளையும் ஆரோக்கியமாக வைப்பதில் லிச்சிக்கு முதலிடம். 
  • பொதுவாக லிச்சி மரத்தின் பழம், விதை, பூ, வேர்ப்பட்டை ஆகிய அனைத்துக்கும் மருத்துவ பயன்பாடு அதிகம்.
  • லிச்சி பழம் இனிப்பான ரோஜா மலரின் வாசனை தரும். பழத்தை தினமும் உண்டு வந்தால் இதயம் நல்ல ஆரோக்கியத்துடன் சுறுசுறுப்பாக வேலை செய்யும். 
  • ஈரல் உடலின் பல்வேறு விஷங்களால் நொந்து போயிருக்கும். லிச்சியின் பழச்சாறு இந்த விஷத்தன்மையை குறைத்து ஈரலுக்கு உரம் ஊட்டும். 
  • தாகத்தை தணிக்கும். 
  • இந்தோனேஷியாவில் இதன் விதைகளை குடல்சார்ந்த நோய்களை குணப்படுத்தவும், மலேசியாவில் நரம்பு நோய்களை சரிப்படுத்தவும் பயன்படுத்துகிறார்கள். 
  • இதன் பூக்களும், வேர்ப்பட்டையும் தொண்டையில் உண்டாகும் பல்வேறு நோய்களை தீர்க்க பயன்படுகிறது.
  • புகைபழக்கம், பாக்கு பழக்கத்தினால் தொண்டைப்பகுதியை ரணப்படுத்தியிருப்பவர்கள் லிச்சி பழங்களை உண்பது நலம். 
  • சீனாவில் பூச்சி கடித்து விட்டால் லிச்சி மரத்தின் இலைகளை சாறு எடுத்து பிழிந்து விடுகிறார்கள்.
  • லிச்சி பழத்தில் உடலின் கட்டுமான உணவு என்று சொல்லப்படும் புரதம் 1.1 கிராம், 
  • தோல்தடிப்பாயும், சொரசொரப்பாகவும் மாறும் தவளைசொறி நோயை கட்டுப்படுத்தும் தாவர கொழுப்பு 0.2 கிராம், 
  • இன்றைக்கு பலருக்கும் அன்றாட பணியில் சிக்கலை ஏற்படுத்தும் மலச்சிக்கலை கட்டுப்படுத்தி குடலின் தசைநார்களை சீராக இயங்க வைக்கும் நார்ப்பொருள் 0.5 கிராமும், எலும்பு, பல் பலம் பெற உதவும் கால்சியம் 10 மில்லிகிராமும், கால்சியம் உடலில் சேர உதவும் பாஸ்பரஸ் 35 மிகி, உடல் வெளுத்து போவதை தடுத்து நிறுத்தும் இரத்த சிவப்பணுக்களின் கட்டமைப்புக்கு முக்கியமான இரும்பு சத்து 0.7 மிகி, 
  • நாக்கு வீங்குவது, சிவந்து பிளவுபடுதல், வாய்ஓரங்களில் வெடிப்பு உண்டாவதை தடுத்து நிறுத்தும் ரைபோபிளேவின் 0.06 மிகி, 
  • சளி உருவாகாமல் தடுத்து தலைசுற்றல், கிறுகிறுப்பை தடுக்கும் வைட்டமின் சி 31 மிகி, மக்னீசியம் 10 மிகி, பொட்டாஷியம் 159 மிகி, தாமிரம் 0.30 மிகி களோரின் 3 மிகி உள்பட எராளமான சத்துக்கள் லிச்சி பழத்தில் தாராளமாக உள்ளன.
  • அவ்வப்போது இதனை உணவில் சேர்த்துக் கொண்டால், உடல்நலன் நிச்சயம் நன்றாக இருக்கும் என்பதில் மாற்றமில்லை.
நன்றி: http://greenindiafoundation.blogspot.com

புதன், 2 மார்ச், 2011

7. இயற்கை நலவாழ்வியல் நூல் அறிமுகம் 
 
 பகுதி ஒன்று.

எது மனிதனின் உணவு?
 
அமரர் ம.கி.பாண்டுரங்கனார்.

இயற்கை நலவாழ்வியல் தத்துவங்களை பண்டைய ரிஷிகளும், சித்தர்களும் நமக்கு போதித்து அரும்பெரும் நூல்களை விட்டுச் சென்றிருக்கிறார்கள். 
 
நவீன காலத்தில் என்று பார்த்தால், நம் நாடு சுதந்திரம் கிடைப்பதற்கு முன்னதாக தமிழ் நாட்டில் பல அறிஞர்கள் பரப்பினார்கள். 
 
அமரர் பிக்ஷு ஸ்வாமிகள், ம.கி.பாண்டுரங்கனார், புதுக்கோட்டை டாக்டர் லக்ஷ்மண சர்மா போன்ற ஆன்றோர்கள் இந்த வகையில் இயற்கை நலவாழ்வியலுக்கு  மகத்தான சேவை செய்திருக்கிறார்கள். 
 
மேற்கத்திய நாகரிகம் அந்த கால கட்டங்களிலேயே தனது விஷ விதைகளை தூவத் தொடங்கி விட்டது. அதன் தீய பலன்களை இப்போது நாம் அறுவடை செய்து வருகிறோம். 
 
நூறு ஆண்டுகளுக்கு முன்னரே இயற்கை நலவாழ்வியல் பற்றிய விழிப்புணர்வை போதித்த மகான்களில் ஒருவரான அமரர் ம.கி.பாண்டுரங்கன் 01-01-1901-ல் பிறந்தவர். தமிழாசிரியராக இருந்த இவர் சுதந்திரப் போராட்ட வீரராக பலமுறை சிறை சென்றவர். அவரது துணைவியாரும் அவரோடு சுதந்திர வேள்வியில் தன்னை அர்ப்பணித்து கொண்டவர்.  தமிழ்ப் பெரியார் திரு.வி.க, கவியோகி சுத்தானந்த பாராதியார் மற்றும் காங்கிரஸ் பேரியக்கத் தலைவர்களான மகாத்மா காந்தி போன்றோரின் நல்லெண்ணத்துக்கு பாத்திரமானவர் அமரர் ம.கி.பா அவர்கள்.  இயற்கை நலவாழ்வியல் முறைகளை தமது வாழ்க்கை முறையாக பின்பற்றி பலரையும் வாழ வைத்த, வழிகாட்டிய அமரர் சிவசைலம் மு.ராமகிருட்டிணன்  அவர்களை உருவாக்கிய பெருமை அமரர் ம.கி.பா அவர்களையே சேரும்.  தண்டரைப்பேட்டை ஸ்ரீராமுலு அவர்கள் அமரர் ம.கி.பா மற்றும் மு.ரா இருவரோடும் நெருங்கிப் பழகியவர். இன்றும் தண்டரைபேட்டை (மதுராந்தகம் அருகே)யில் இயற்கை நலவாழ்வு மையத்தை நடத்தி வருபவர். ''மகத்தான மனிதர் ம.கி.பா'' எனும் நூலில் அமர ம.கி. பாண்டுரங்கத்தின் வாழ்க்கை வரலாறை எழுதி இருக்கிறார். அந்நூலைப் பற்றி பிறகு சொல்கிறேன். 
 
இன்று நாம் எடுத்துக் கொண்டிருக்கும் நூல் அமரர் ம.கி.பா அவர்களின் ''எது மனிதனின் உணவு?" எனும் ஆராய்ச்சி நூல். தமிழில் மூன்று  பாகங்களாக வெளியிடப் பட்டிருக்கும் இந்நூல் ஒரு அரிய வகை நூலாகும். பதிப்பில் இப்போது இல்லை என்ற வகையில் ஒரு சிலரிடமே கிடைக்கும் இந்நூல் எனக்கும் கிடைத்தது நான் செய்த பெரும்பேறு என்று தான் சொல்லவேண்டும். ஒரு இயற்கை நலவாழ்வியல் முகாமின் போது ஐயா ஸ்ரீராமுலு (தண்டரைபேட்டை) அவர்களிடம் இந்த தொகுதிகளையும், ம.கி.பா அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் வாங்கினேன்.

ம.கி.பா அவர்களின் ''Man's Food Unveiled" என்ற ஆங்கிலப் புத்தகத்தின் தமிழாக்கமே ''எது மனிதனின் உணவு?" என்னும் இந்த அற்புதமான ஆராய்ச்சி நூல்.
 
இந்த  நூலைப் பற்றி திரு ம.கி.பா அவர்கள், ''இது மாறா இயற்கைத் தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆராய்ச்சி நூல்'' என்கிறார்.

மேலும், "பெருமதி கொண்டு ஆராய்ந்தும் முடிவுதெரியாத அகிலமதை  முன்பின் அறியாத குறுமதி கொண்டு ஆராய முற்பட்டேன். பெரியோர் நிற்பவெவை கழிபவெவை காண்பர். நலம் வளர." என்று தன்னடக்கத்துடன் கூறுகிறார்.
 
இந்நூலுக்கு  அணிந்துரை வழங்கி இருக்கும் திரு.வி.க அவர்கள், "உயிர்கள் பெரிதும் இயற்கையோடு இயைந்து வாழாது அதனின்றும்வழுக்கிச் செயற்கைச் சேற்றில் வீழ்ந்து நெளிகின்றன. அதனால் உயிர்கட்குப் பலதிற நோய்கள் உண்டாகின்றன. எல்லா நோய்களுக்கும் பிறப்பிடம் மலச்சிக்கல் என்பது கவனிக்கத் தக்கது. 
 
இந்நூலின்  கண் நோயுறுதற்குக் காரணமும், நோயைப் போக்குதற்குரிய வழிகளும், இயற்கை முறையிலேயே விளக்கப்பட்டிருக்கின்றன. உடல் நலனுக்குரிய உணவுப் பொருட்கள் ஆராய்ச்சி முறையில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.
 
இந் நன்நூலை யாத்த திரு. ம.கி.பாண்டுரங்கனார்  முன்னே தேசத் தொண்டாற்றிப் பலமுறை சிறை சென்றவர். அவர் இப்போது இயற்கை நூல்களை ஆய்ந்து, இயற்கையோடு இயைந்து, தாமே வாழ்ந்து அதனால் தாம் பெற்ற இன்பத்தை மற்றவரும் பெறுதல் வேண்டுமென்று மேலும் பல நூல்களை எழுதி தொண்டாற்றி வருகிறார். இத்தகைய தொண்டே இதுபோழ்து நாட்டிற்கு பெரிதும் வேண்டற்பாலது. பல்லாயிரம் இயற்கை பாண்டுரங்கனார் பெருக நாட்டகத்தே உரிமை மனம் கமழும். நாட்டில் புத்தர், திருவள்ளுவர் போன்றோர் தோன்றுவர். பொருந்திய தொண்டு செய்யப் புகுந்த நண்பர் பாண்டுரங்கனாருக்கு எனது நன்றி உரியதாகுக." என்று கூறுகிறார்:

யோகசமாஜ நிறுவனர் கவியோகி சுத்தானந்த பாரதியாரும் இந்த அருமையான நூலுக்கு அணிந்துரை செய்திருக்கிறார். அவர் கூறுகிறார்: "எது மனிதனின் உணவு?" இவரது  அரிய ஆராய்ச்சி நூல். பொறுமையாக படித்து நின்றால் உணவோழுக்கத்தலேயே நல்வாழ்வு பெறலாம். பாண்டுரங்கனார், தற்கால விஞ்ஞான அறிஞர் நூல்களையெல்லாம் அலசிப் பிழிந்து, சிந்தித்துப் பயின்று பார்த்து தமக்கென உணவு முறை வகுத்துக் கொண்டவர். அம்முறைப் படி வாழ நல்வாழ்வு நிலையம் நாட்டினார். அது ஆழ்வார்குறிச்சிக்கருகே சிவசைலத்தில் 33 ஏக்கர் நிலத்தில் அமைந்த சோலை மலைக்கருகே உள்ளது. இங்கே இவருடன் திரு.இராமகிருஷ்ணன் முதலியோர் இயல்வழி வாழுகின்றனர். மேற்கும் கிழக்கும் இந்த நல்வாழ்வைப் பயில இங்கே கூடுகின்றனர்.
 
நல்வாழ்வுத் திருவாளர் தேங்காய் பழமே உண்டு திருவுடன் வாழ்கின்றனர். உப்புப் புளி மிளகாய்ப் பேச்சே இல்லை! நோய் அந்தப் பக்கமே அணுகுவதில்லை; நோயாளர் வந்தால் அந்தத் தூய காற்றுப் பட்டதும் தூயாளராகின்றனர். 
 
இந்த நூலில் அரிய பொருட் செறிவுள்ளது. சிந்தனைக்கினிய நூல், இயற்கை உணவின் ஏற்றம், உணவு விஞ்ஞானம், பேரறிஞர் கருத்தும், ஆராய்ச்சியும், உணவுப் பாகுபாடு, உணவுப் பகுத்தறிவு, உணவின் அமைப்பு, சமைப்பு, நச்சுப் பொருட்களால் உண்டாகும் தீமை, மருந்தின் மாயம், மாந்தர் மதிமயக்கம் இவையெல்லாம் பல அறிஞர் கோட்பாடுகளுடன் இந்நூல் உணர்த்தும்.

பச்சையுனவுகள், கிழங்குகள், பச்சடிகள், தேங்காய், தக்காளி, கீரை வகைகள், மாங்காய், கொத்துமல்லி, பிஞ்சுக் காய்கறிகள், கனிகள், எலுமிச்சஞ்சாறு, துளசி, அவல், பேரீச்சை, திராட்சை, இளநீர் சேர்ந்த உணவு  தயாரிக்கும் முறை, எல்லாம் அனுபவித்துச் சொல்லுகிறார் பாண்டுரங்கனார்; படித்து பயன் பெறுக!" என்கிறார் கவி யோகி.

இயற்கை நலவாழ்வியல் பற்றிய இந்த அரிய நூலைப்  பற்றிய மதிப்புரை அடுத்த பதிவில் தொடரும்...

வாழி நலம் சூழ..

அஷ்வின்ஜி.