செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

சூரிய நமஸ்காரம்



புனே : சூரிய நமஸ்காரம் செய்வதால், அறிவியல் ரீதியாக உடலுக்கு பயன் கிடைக்கிறதா என ஆராயும் முயற்சியில் புனேயைச் சேர்ந்த சில டாக்டர்கள் ஈடுபட்டுள்ளனர். சூரிய நமஸ்காரம் என்னும் யோகப் பயிற்சி முறை, நம் நாட்டில் காலம், காலமாக பின் பற்றப்பட்டு வருகிறது. அதிகாலை நேரத்தில், உடலை முன்னோக்கியும், பின்னோக்கியும் அசைத்து செய்யும் இந்த பயிற்சி,  உடற் பயிற்சி போன்றதே.
இதைத் தொடர்ந்து செய்வதால், உடலுக்கு பயன் கிடைக்கும் என, நம்பப்படுகிறது. மேலும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதாகவும், உடல் பருமனை குறைப்பதாகவும் கூறப்படுகிறது. பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தைச் சேர்ந்த சுப்ரமஜோசிஸ் நரிஸ்பூர் ஓம்கார் என்ற இன்ஜினியர், இது தொடர்பான செயல் முறை ஆய்வை மேற்கொண்டார்.
அவர் கூறுகையில்,"தொடர்ந்து 12 சுற்றுக்கள் சூரிய நமஸ்காரம் செய்வதால், ஒருவரின் உடலில் 350 கிலோ கலோரி குறையும். இது, டிரெட்மில்லில் ஒரு மணி நேரம் உடற் பயிற்சி செய்வதற்கு சமம்.  மேலும் உடலுக்கு தேவையான ஆக்சிஜன் சப்ளையும் சீராகும்'என்றார்.
இதை அறிவியல் ரீதியாக ஆய்வு செய்து பார்ப்பது என்ற நோக்கத்துடன் புனேயைச் சேர்ந்த டாக்டர் குழு ஒன்று களம் இறங்கியுள்ளது. 500 டாக்டர்கள், மைதானத்தில் தினமும் சூரிய நமஸ்காரம் செய்து, இதனால், உடலுக்கு பயன் கிடைக்கிறதா என, ஆய்வு நடத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 
புனேயைச் சேர்ந்த இந்திய மருத்துவ கழகத் தலைவர் டாக்டர் திலிப் சர்தா கூறியதாவது: சூரிய நமஸ்கார பயிற்சியை துவங்குவதற்கு முன், அதில் பங்கேற்போர், மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். அவர்களின் எடை, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு உள்ளிட்ட பல சோதனைகள் நடத்தி, அவை பதிவு செய்யப்படும்.  பின்னர், சூரிய நமஸ்கார பயிற்சி முடிந்ததும், உடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து மீண்டும் சோதனை நடத்தப்படும். இவ்வாறு திலிப் சர்தா கூறினார்.
நன்றி: தினமலர் 30௦-01-2010

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக