பகுதி இரண்டு
பகுதி இரண்டுக்குள் செல்லுமுன்:
முற்காலத்தில் சித்தர்களால் பெரிதும் சிலாகிக்கப்பட்ட இந்த மருத்துவமுறை இடையில் சுணக்கம் கொண்டிருந்தாலும், தற்காலத்தில் மீண்டும் மக்கள் மத்தியிலும், வெளி நாடுகளிலும் பெருமளவில் புகழ் பெற்றுவருகின்றது.
சிறுநீர் மருத்துவம் பற்றிய திருமூலரின் திருமந்திரத்தில் அமுரிதாரணை எனும் தலைப்பில் ஐந்து பாடல்கள் உள்ளன. திருமந்திரத்துக்குள் அமுரி தாரணையைப் பற்றி காண்போமா?
--------------------------
(அமுரி - வீரியம், தாரணை - தரித்தல், அமுரிதாரணையாவது வீரியத்தை உடம்பில் தரிக்கும்படி செய்தல். குடிநீர், சிவநீர், வானநீர், ஆகாய கங்கை, அமுத நீர், உவரி, தேறல், மது, கள், மலை நீர் என்பன வெல்லாம் அமுரியைக் குறிக்கும் பல சொற்களாம். சந்திரன் தூலத்தில் வீரியமாகவும், சூக்குமத்தில் ஒளியாகவும், பரத்தில் ஆன்மாவின் சாட்சியாகவும் உள்ளது - யோகசிகோ உபநிடதம் நீர்அமுரியைச் சிறுநீர் என்று கல்பநூல் கூறும். பரியங்க யோகத்தின் பின் இப்பகுதி அமைந்திருப்பதால் அப்பொருள் இங்குப் பொருந்துவது காண்க.)
845. உடலிற் கிடந்த உறுதிக் குடிநீர்க்
கடலிற் சிறுகிணற்று ஏற்றம்இட் டால்ஒக்கும்
உடலில் ஒருவழி ஒன்றுக்கு இறைக்கில்
நடலைப் படாதுயிர் நாடலும் ஆமே.
பொருள் : உடம்பினின்றும் நீங்காமல் உறுதியைப் பயப்பதாகவுள்ள உணர்வு நீரானது கடலின் அருகே சிறு கிணறு தோண்டி ஏற்றமிட்டு இறைத்தலை ஒத்திருக்கும். உடலில் வேறொரு வழியாகக் கீழ்ப்போவதை மேலே செலுத்தினால் உயிர் வருந்தாமல் பாதுகாக்கலாம். உப்பு நீரையுடைய கடலுக்கு அருகே தோண்டி எடுக்கின் நன்னீர் இருப்பது போன்று சிறுநீர் வாயிலுக்கு அருகே அமுரி இருக்கும் என்க.
846. தெளிதரும் இந்தச் சிவநீர் பருகில்
ஒளிதரும் ஓராண்டில் ஊனம்ஒன்று இல்லை
வளியுறும் எட்டின் மனமும் ஒடுங்கும்
களிதரும் காயம் கனகமது ஆமே.
பொருள் : தெளிந்த இந்தச் சிவநீரைக் கொண்டால் ஓராண்டு சாதனத்தில் ஒளியைக் காணலாம். கெடுதல் இல்லாதது இது காற்றுடன் கலந்து மேலேறும். எட்டு ஆண்டுகளில் மனம் கீழ்நோக்குதலைத் தவிர்த்து மேலே நிற்கும். மகிழ்ச்சியை விளைவித்துக் கொண்டிருக்கும். உடம்பு பொன்போன்று பிரகாசிக்கும். சிவநீர் - அமுரி, அமுதநீர் வளியுறு எட்டின் - பிராணவாயு.
847. நூறும் இளகும் நுகரும் சிவத்தினீர்
மாறும் இதற்கு மருந்தில்லை மாந்தர்கள்
தேறில் இதனைத் தெளியுச்சி கப்பிடின்
மாறும் இதற்கு மறுமயி ராமே.
பொருள் : அவ்வாறு அருந்தும் சிவநீரானது கீழேயுள்ள குறியை நெருக்குவதாலும் பிழிதாலாலும் அதன் தன்னை கெட்டு மேலேறும் உயிரை உடம்பில் நீடிக்கச் செய்ய இதைவிட மேலான மருந்து வேறில்லை. மக்கள் இச் சூட்சுமத்தை உணர்ந்து தெளிந்து சிரசில் பாயச் செய்து கொண்டால் நரைத்த உரோமம் கறுப்பாகும் மாற்றத்தைக் காணலாம். நூறு மிளகு அளவு எனக்கொண்டு ஒருநளைக்கு ஒரு மிளகு விழுக்காடு நூறு நாளைக்கு உண்ணுதல் வேண்டும் எனவும் கூறுவர்.
848. கரையரு கேநின்ற கானல் உவரி
வரைவரை என்பர் மதியிலா மாந்தர்
நுரைதிரை நீக்கி நுகரவல் லார்க்கு
நரைதிரை மாறும் நமனும்அங்கு இல்லையே.
பொருள் : அறிவில்லாத மக்கள் சிறுநீர்க் குழாய் அருகில் உள்ள சுக்கிலத்தைக் கழிக்க வேண்டும் என்பர். சத்தற்ற முதல் நிலையையும் முதிர்ந்த நிலையையும் அகற்றி அருந்த வல்லார்க்கு உரோமம் நரைத்தலும் தோல் சுருங்குதலும் மாறும். அவ்வாறு நீரை உடம்பில் அமைக்க வல்லார்க்கு எமபயம் இல்லையாம். (கானல் உவரி - உப்பங்கழி நீர். வரைதல் - நீக்குதல்)
849. அளக நன்னுத லாய்ஓர் அதிசயம்
களவு காயம் கலந்த இந்நீரில்
மிளகு நெல்லியும் மஞ்சளும் வேம்பிடில்
இளகும் மேனி இருளும் கபாலமே.
பொருள் : அழகிய கூந்தலையுடைய பெண்ணே ! ஒரு வியப்பு. உடம்பில் மறைமுகமாகச் சென்று (உணர்வாகிய) இந்நீர் சிரசை அடையுங்காலத்து, மிளகு, நெல்லிப் பருப்பு, கஸ்தூரிமஞ்சள், வேப்பம் பருப்பு ஆகியவற்றை அரைத்துத் தலையில் தேய்த்து முழுகி வருவீராயின் உடம்பு மேன்மையாவதோடு உரோமம் கருமையாகும். இத்துடன் கடுக்காய்த் தூளும் சேர்த்தால்பஞ்ச கல்பம் என்பர்.
850. வீர மருந்தென்றும் விண்ணோர் மருந்தென்றும்
நாரி மருந்தென்றும் நந்தி அருள்செய்தான்
ஆதி மருந்தென்று அறிவார் அகலிடம்
சேதி மருந்திது சொல்லஒண் ணாதே.
பொருள் : வீரியத்தால் உண்டானபடியால் வீர மருந்தென்றும், ஆகாய வெளியில் சோதியாக அமைவதால் தேவர்கள் மருந்தென்றும் பெண்ணால் அடையப்படுவதால் நாரிமருந்தென்றும் என் குருநாதன் அருளிச் செய்தான். இதனைத் தொன்மையான மருந்தென்று யோகியர் அறிவர். இது விரிந்த சோதி மயமானது. இதனைச் சாமானியருக்குச் சொல்லலாகாது
--------------------------------------------------------------------------------------
ஆதாரம்: தமிழ்க்கச்சேரி வலைப்பூ.
இணைப்பு: http://tamilkacheri.blogspot.in/2014/10/blog-post_6701.html
தொடரும் (பகுதி மூன்றில் மற்றொரு செய்தி)
அடுத்து வெளியாக இருக்கும் பகுதி மூன்றில் தவத்திரு பூமானந்தா அவர்கள் எழுதிய நூல் ஒன்றில் இருந்து சில பகுதிகளை காண இருக்கிறோம். மேலும் சென்னையைச் சேர்ந்த பெரியவர் திரு அ.மெய்யப்பன் அய்யா அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கப் போகிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக