பழனி முகாமின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் (தொடர்ச்சி)
நேரம்: முற்பகல் நேரம்.
இடம்: ரங்கசாமி கரடு (பழனி-கொடைக்கானல் சாலை)
நிகழ்வு: வாழை இலைக குளியல்
இடம்: ரங்கசாமி கரடு (பழனி-கொடைக்கானல் சாலை)
நிகழ்வு: வாழை இலைக குளியல்
ரங்கசாமிகரட்டில் உள்ள தோட்டத்திலும் ஒரு அழகான தவக்குடில் அமைந்துள்ளது. தமிழ்நாடு இரும்பு வணிகம் உரிமையாளர் திரு.மணி அவர்களது தந்தை தவத்திரு.சின்னசாமி அவர்கள் 75 வயது நிரம்பிய இளைஞர். கடந்த 25-ஆண்டுகளாக இயற்கை உணவுகளை மட்டுமே சாப்பிட்டு ஆரோக்கியமாக இருக்கிறார். இவர் திருப்பராய்த்துறை தபோவனம் சுவாமி சித்பவானந்தாவிடம் ஆன்மிகம், வேதாந்தம் பயின்றவர்.
தவத்திரு.சின்னசாமி ஐயா
(நடுவில் அமர்ந்திருப்பவர்)
பிராண தத்துவம் என்ற தலைப்பில் எங்களுக்கு தவத்திரு.சின்னசாமி ஐயா அனுபவ உரை ஒன்றினை இன்று மாலை வழங்கிட இருக்கிறார். இது போன்ற பல இயற்கை நலவாழ்வியல் முகாம்களை முப்பது ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தின் முன்னோடி இயற்கை நலவாழ்வியல் அறிஞர்களில் ஒருவரான தவத்திரு.மு.இராமகிருஷ்ணன் அவர்களைக் கொண்டு பழனி கொடைக்கானல் மலைச்சாரலில் தேக்கந்தோட்டம் எனும் இடத்தில் முகாம் நடத்திய அனுபவசாலியான இவர் இப்போது தேக்கந்தோட்டத்தில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதினால் அந்த இடத்தில் ஏற்பாடு செய்யஇயலவில்லை என எங்களிடம் கூறினார்.
ரங்கசாமி கரடு எனப்படும் இந்த இடம் ரங்கசாமி மலைச்சாரலில் உள்ள ஒரு இடம். ரங்கசாமி மலையின் உச்சியில் ஒரு பெருமாள் கோவில் உள்ளது. இந்த முறை எங்கள் பயணத் திட்டத்தில் இந்த மலைக் கோவில் இடம் பெறவில்லை. காலையில் புறப்பட்டால் மாலை தான் திரும்பி வர இயலும். கொஞ்சம் நெட்டுக் குத்தான கரடு முரடான மலைப்பாதை என்பதால் இந்த இடம் தேர்வாகவில்லை. அடுத்த முக்கிய காரணம், காட்டு யானைகளில் நடமாட்டம் சமீப காலமாக இந்த மலைப்பகுதியில் அதிக அளவில் உள்ளது.
இவரது தோட்டம் சற்று உயர்ந்த பகுதியில் இருக்கிறது. தவக்குடிலை தோட்டத்திலயே மிகவும் உயர்ந்த பகுதியில் அமைத்திருக்கிறார் திரு.சின்னசாமி ஐயா. இந்த உயர்ந்த பகுதியில் இருந்து பார்த்தால் பழனி மலை தெளிவாகத் தெரியும். அப்படியே வலதுபுறம் பார்வையிடும் போது நான்கு கி.மீ தொலைவில் உள்ள வரதமாதேவி அணைக்கட்டு தெளிவாகத் தெரியும். அதேபோல அணைக்கட்டில் இருந்து பார்த்தால் இந்தத் தவக்குடில் மட்டுமே கண்ணுக்குத் தெரியும் வகையில் அமைந்திருக்கிறது.
இந்தத் தோட்டத்தில் தென்னை பயிரிடப்பட்டு உள்ளது. மலையை ஒட்டிய மின்வேலிக்கருகே ஒரு பெரிய கல்லாலமரம் அமைந்திருக்கிறது. இந்தக் கல்லாலின் அடியில் மிக விரைவில் ஒரு தட்சிணாமூர்த்தி திருவுருவச் சிலை பிரதிஷ்டை செய்யப்பட இருப்பதாக திரு.மணி (திரு.சின்னசாமி அவர்களின் மகன்)அவர்கள் ஞாயிறு அன்றே இந்த இடத்தை பார்வையிடச் சென்ற சமயத்தில் எங்களிடம் தெரிவித்திருந்தார்.
இந்த தோட்டத்தைப் போலவே எங்களது முகாமை ஒட்டிய ஊரான அண்ணா நகர் என்ற இடத்திலும் ஒரு தோட்டம் இருக்கிறது. அங்கேயும் ஒரு தவக்குடில் அமைந்துள்ளது.
அண்ணா நகர் தோட்டத்தில் உள்ள மாமரங்கள் சூழ்ந்த தவக்குடில்.
இந்த இடத்தில்தான் முதலில் எங்களுக்கான முகாம் நடத்துவதாக திட்டமிடப்பட்டு இருந்தது.அடர்ந்த மாமரத் தோப்பின் நடுவில் ஒரு அழகிய தவக்குடில் அமைக்கப்பட்டு உள்ளது. ஒரு குளியலறையும், கழிப்பறையும் கட்ட ஆரம்பித்த நிலையில் முகாம் துவங்குவதற்கு முன்னர் முடிக்கப்படாமல் இருப்பதினால் (காரணம் வீடு கட்டும் ஆட்கள் பற்றாக்குறை!) வேறு வழியின்றி முகாம் இடம் தற்போதைய இடமான புளியந்தோப்புஷெட்டுக்கு மாற்றப்பட்டதாம்.
யோகாச்சாரியாவுடன் நானும், நண்பர் ப்ரேமும் ஞாயிற்றுக்கிழமை அன்றே மூன்று தோட்டங்களையும் பார்வையிட்டோம்.வெள்ளையடித்தல், சிதைந்து போன இடங்களில் சிமென்ட் பூசுதல், மின் இணைப்புகள், குளிப்பறை, கழிப்பறைகளில் குழாய் வசதிகள் செய்தல், உடைந்திருந்த கதவுகளை சீரமைத்தல், அன்பர்கள் அமர வசதியாக மேடும் பள்ளமுமாக இருந்த இடத்தை சமன்படுத்துதல், செடிகொடிகளை அகற்றி சமநிலைப்படுத்தல் என்று பல உட்கட்டமைப்பு வேலைகளை தோட்ட உரிமையாளர் திரு.மணி அவர்கள் நேரடியாக ஆட்களை பார்வையிட்டு வேலை வாங்கிக் கொண்டிருந்ததை நாங்கள் கண்டோம்.
ஞாயிறு காலையில் புளியமரத்து ஷெட்டு முகாமுக்கு விஜயம்.
உரிமையாளர் திரு.மணியுடன் பிரேமும், நானும்.
முகாமின் சூழல். மரகதப் பச்சையாய் புல்வெளிகள்.
புளிய மரத்து ஷெட்டு முகாமில் உள்ள கிணற்றுக்கருகில் யோகாச்சாரியாவுடன்..
யோகாச்சாரியா, நண்பர் பிரேம்குமார் உடன்
புளியமரத்து ஷெட்டு தவக்குடிலில்
ஞாயிறு அன்று நடந்த வேலைகள்.
தனியான ஒரு கொட்டகை போடப்பட்டு கீழே காயர் விரிப்பும் அதற்கு மேலே பெரிய கல்யாண ஜமுக்காளங்களும் போடப்பட்டு குழல் விளக்குகள் பொருத்தப்பட்டு திருவிழாக் கோலமாக புளியமரத்துஷெட்டு தோட்டத்தை மாற்றிக் கொண்டிருந்தார்கள். இதற்கான பெரும் பொருட்செலவுகளை திரு.மணி அவர்களே ஏற்றுக் கொண்டு இந்த இடத்தை தயார் செய்து கொடுத்தார் என்பதை நன்றியறிதலோடு நான் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன். நேற்று திரு.மணி அவர்களை போலவே அவரது தந்தை தவத்திரு.சின்னசாமி ஐயா அவர்கள் இன்று (செவ்வாய்) ரங்கசாமிகரடு தோட்டத்துக்கு முன்னரே சென்று குளிக்கத் தண்ணீர் வசதி போன்றவற்றை முன்னேற்பாடு செய்து விட்டு எங்களை வரவேற்கக் காத்திருந்தார். எங்கள் குழுவினர் வந்து சேர்ந்ததும் ஆண்கள் ஒரு இடத்திலும், பெண்கள் வேறொரு ஒரு இடத்திலுமாக வாழையிலைக் குளியலுக்கு தயாரானார்கள்.
சுமார் இரண்டு மணியளவில் அனைவரும் வாழையிலைக் குளியல் எடுத்து முடிந்ததும், தோட்டத்துக்கு எதிரே அமைந்துள்ள மற்றொரு தோட்டத்தில் உள்ள பம்ப்ஷெட்டில் நீர் இறைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. முதலில் பெண்கள் அனைவரும் குளித்து முடிக்க அதைத் தொடர்ந்து ஆடவர்கள் குளித்ததும் அனைவருக்கும், இளநீர் வழங்கப்பட்டது. மரத்தில் இருந்து நேரடியாக பறித்து உடனே சீவப்பட்ட இளநீர் அருந்த மிகவும் ருசியாக இருந்தது.
சென்னையில் நாம் அருந்தும் காய்கள் பல நாட்களாக லாரிகளில் வெய்யிலில் காய்ந்து வருவதினால் ருசி இருப்பதில்லை. அவற்றின் மருத்துவப் பயன்களும் பெருமளவில் குறைந்து விடுவதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளது. ஆனால் நாங்கள் குடித்த இளநீரின் மருத்துவ குணம் நூறு சதம் எங்களுக்கு கிடைத்ததில் நாங்கள் பெருமகிழ்வு எய்தினோம். பின்னர் வழுக்கையை சுரண்டி சாப்பிட்டோம். சில இரண்டு மூன்று முறை இளநீர்களை கேட்டு வாங்கி அருந்தினார்கள். அன்பர்கள் திருப்தி அடையும் வரை வேண்டிய அளவுக்கு அருந்திட இளநீர் தரப்பட்டது.
மனதும் வயிறும் நிறைய இளநீரும், அழுக்கும், அசதியும் தீரக் குளிக்கும் வசதியையும் செய்து தந்த தோட்ட உரிமையாளருக்கும், அனைத்து வசதிகளையும் இன்முகத்துடன் செய்து தந்த அவரது அன்புக் குடும்பத்தினருக்கும், எங்களது இதயநிறை நன்றிகளை தெரிவித்துவிட்டு அணிவரும் மீண்டும் ஹாஸ்டலுக்குத் திரும்பினோம்.
2 கருத்துகள்:
முகாம் அனுபவங்கள் மனம் நிறைய வைக்கின்றது.,
பொறுமையாக தொடருங்கள்...
வாழ்த்துகள்
வணக்கம் சிவா.
தங்களின் பொறுமையான பின் தொடர்தலுக்கும், அன்பான பின்னூட்டத்துக்கும் நன்றி.
வாழி நலம் சூழ.
தமிழர் திருநாள் வாழ்த்துக்களை தங்களுக்கு முன்கூட்டியே தெரிவித்து மகிழ்கிறேன்.
அஷ்வின்ஜி.
கருத்துரையிடுக