ஐந்தாம் நாள் (நிறைவு நாள்) நிகழ்வுகள்-30-12-2011
வெள்ளிக்கிழமை - காலை ஆறரை மணி:
முந்தைய நாளின் மலை ஏறி இறங்கிய களி(ளை)ப்பு தந்த ஆழ்துயில் தெளிந்து அதிகாலையில் நாங்கள் அனைவரும் விழித்துக் காலைக் கடன்கள், குளியல் முடித்துத் தயாராகி பக்கத்து தெருவில் இருக்கும் அடிகளாரின் இருப்பிடத்துக்கு செல்லும் வழியில் இருந்த செடிகளில் பூத்திருந்த மஞ்சள் புஷ்பங்களையும்,இலைகளையும் கொய்து கொண்டோம். அடிகளாரின் இருப்பிடத்த்டை நோக்கி நண்டதோம்
அடிகளாரின் இருப்பிடத்துக்கு முதல்முறையாக 2009டிசம்பரில் இயற்கை நலவாழ்வியல் மூதறிஞர் திரு.மூ.ஆ.அப்பனுடன் சென்று சந்தித்தேன். அதன் பிறகு பழனி செல்ல வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த முகாம் தொடக்க விழா தயா சதனில் நடைபெற்ற போது அடிகளாரை அவரது இருப்பிடத்தில் இருந்து அழைத்து வரும் நல்வாய்ப்பினை யோகாச்சார்யா முருகன் அவர்கள் எனக்களித்தார்கள்.அப்போது இரண்டாம் முறையாக அவரது இருப்பிடத்துக்குச் சென்றேன்.இப்போது மூன்றாம் முறையாக அடிகளாரின் அழைப்பின் பேரில் அன்பர்களுடன் செல்கிறேன்.
அடிகளாரின் பங்களா பழனியின் மிக முக்கியமான பகுதியான லட்சுமிபுரத்தில் மிக அமைதியான சூழ்நிலையில் சற்றே உள்ளடங்கி அமைந்துள்ளது. ஹாலின் உள்ளே நுழைந்ததும் தெய்வீக சாந்நித்தியம் பிரதிபலித்துக் கொண்டிருக்கும் வகையில் அருள்பாலிக்கும் அருள்மிகு பழனியாண்டவரின் ஐம்பொன் திருமேனிக்கு அபிஷேகம் தொடங்க தயாராக அடிகளார் அமர்ந்திருந்தார். அவரை வணங்கி ஹாலில் அனைவரும் சுற்றி அமர்ந்தோம்.
திருமுறைப் பாடல், சமஸ்க்ருத சுலோகம் என அடிகளார் சரளமாக துதிகளைப் பாடி திருமூர்த்ததுக்கு திருமஞ்சனம் செய்து கொண்டிருந்தார்.மேற்கொண்டு அபிஷேகத்தை தொடரும் வாய்ப்பினை எனக்களித்தார். இது ஒரு கிடைத்தற்கரிய வாய்ப்பு. அடிகளாரின் தனிப்பட்ட பூஜையில் இருக்கும் திருமேனிக்கு அபிஷேகம் செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததை இறையருள் ஈந்த பெரும்பேறாக இன்றும் கருதுகிறேன்.
பால், தயிர், சந்தனம், நெய், தேன், எண்ணெய், வாசனைத் தூள், பஞ்சாமிருதம் என நானாவிதமான அபிஷேக முறைகளும் வரிசையாக சுவாமிக்கு மனமுருகிப் பிரார்த்தித்து செய்தது மனசுக்கு நிறைவாய் இருந்தது. வாழ்வின் பயனை, பழனியாண்டவர் அனைவருக்கும் அருள்கூர்ந்து அளிக்கவேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொண்டேன். நிறைவாக விபூதி அபிஷேகம் செய்ததும் அடிகளாரின் உதவியாளர் திருமேனிக்கு ராஜ அலங்காரம் செய்தார்.
இராஜ அலங்காரத்தில் பழனி ஆண்டவர்.
அடிகளாரின் இல்லத்தில் இருக்கும் சிவலிங்கம்.
விபூதி பிரசாதம், அபிஷேக சந்தனம், அபிஷேகப் பால், பஞ்சாமிர்தம் திருவருட் பிரசாதமாக விநியோகிக்கப்பட்டது. பழனியைச் சுற்றிலும் நடைபெற உள்ள சில ஆன்மீக நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு விடுக்க உள்ளூர்ப் பிரமுகர்கள் அடிகளாரைச் சந்திக்க வந்திருந்தார்கள். பழனி நகரின் சில முக்கிய பிரமுகர்களை எங்களுக்கு அடிகளார் அறிமுகம் செய்து வைத்தார்கள். பின்னர் அடிகளாருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.
அடிகளாருடன் முகாம் அன்பர்கள்.
சற்று நேரம் அவருடன் பேசி இருந்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு முருகன்ஜியின் யோகா மையத்துக்கு வந்தோம். அன்பர் திரு.பன்னீர்செல்வம் எங்கள் அனைவரிடமும் விடை பெற்றுக் கொண்டு திண்டுக்கல் வழியாக இரயில மூலம் சென்னை செல்ல முன்னதாகவே புறப்பட்டுச் சென்றார். அவரை யோகாச்சாரியா பஸ் நிலையம் வரை அழைத்துச் சென்று வழியனுப்பி விட்டு வந்தார். நாங்கள் எங்கள் உடைமைகளை பையில் எடுத்து வைத்து ஒழுங்குபடுத்தினோம். இன்றிரவு நானும் பிரேம்குமாரும் சென்னை புறப்படுகிறோம்.சென்னை அன்பர்கள் நாகராஜனும், பாஸ்கரும் இன்றிரவு சென்னைக்கு புறப்படுகிறார்கள்.
காலையில் பழங்களை உண்டபின்னர் எலுமிச்சம் சாறு வழங்கப்பட்டது. இன்று தான் எங்களுக்கு தானே புயலின் கோரம பற்றியும், சென்னையில் பெய்த அடைமழை பற்றியும் முழுதுவமாகத் தெரிந்தது. முகாமில் இருந்த வரை மொபைல் போன் தொடர்பு இருந்தாலும் சில முக்கியமான அழைப்புக்கள் தவிர வேறு அழைப்புக்களை நான் பெறவில்லை. செய்தித் தாள்கள், தொ(ல்)லைக் காட்சித் தொடர்கள் போன்ற எந்தவிதமான இடையூறுகளும் இன்றி நிம்மதியாக எங்களை மறந்து இருந்திருக்கிறோம்.இந்த முகாமில் எங்களுக்குக் கிடைத்த பெரிய வெற்றி இதுதான். இவை இல்லாமலும் இருக்கமுடியும் என்று நேரடி அனுபவமாக உணர கிடைத்த நல்வாய்ப்பு இது. அது போலவே சமைத்த உணவு, காப்பி, டீ, மற்றும் நொறுக்குத் தீனிகள், செயற்கை பானங்கள் போன்ற எந்த தீமையும் இல்லாமல், அருந்த குளிக்க மலையூற்று தண்ணீர், சாப்பிட பச்சை காய்கறிகள், கனிகள் என முழுமையானதொரு இயற்கை வாழ்வினை வாழ்ந்து பார்க்க எங்களால் இயன்றது. செய்தித்தொடர்பு தொழில் நுட்பங்கள் எல்லாமே ஒரு வியாபாரத் தந்திரமாயைதான் என்ற உண்மையை ஒவ்வொருவரும் இந்த மாதிரி சூழ்நிலையில் வாழ்ந்து பார்த்துத்தான் உணரவேண்டும்.அப்போதுதான் தொலைத் தொடர்பு கருவி கையில் இல்லையென்றாலும் நமக்கு வந்து சேரவேண்டிய செய்தி நாம் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் வந்து சேர்ந்தே தீரும் எனும் அரிய வாழ்க்கை இரகசியம் புரியவரும்.
(பகிர்தல் தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக