வெள்ளி, 24 டிசம்பர், 2010

இயற்கை நலவாழ்வியல். 

நமக்கு நாமே நலம் சேர்ப்போம்.

 நீரின்றி அமையாது உலகு (திருவள்ளுவர்).

நீர் சிகிச்சை முறைகள்.

ஜலநேத்தி கிரியா - மூக்கு கழுவும் உபகரணம்

ஜல நேத்தி கருவி  மூக்கின் உட்பகுதிகளை கழுவிச் சுத்தம் செய்யும் உபகரணமாகும். பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்ட இவ்வுபகரணம் நீண்ட குழலை தனது மூக்காக கொண்டிருக்கும். 
  
ஜலநேதி கருவி

இதைப் பயன்படுத்தி மூக்கைக் கழுவும் பொழுது, சளி தங்கியிருக்கக் கூடிய குழிகளைச் சுத்தம் செய்து, மூக்கு வழியை ஈரப்படுத்தி, காற்றுப்பாதையின் ஆரோக்கியத்தை மீளக் கொண்டுவருகின்றது. அலர்ஜி எனப்படும் ஒவ்வாமைக் காரணிகள், தடிமன், தலையிடி, சளியடைப்பினால் ஏற்ப்படும் தலைக்குத்து (சைனசிட்டிஸ்) போன்றவற்றிலிருந்து விடுதலை பெற உதவுகின்றது.

மிகப்பழைமையான யோகா அப்பியாச முறையான கிரியாக்களில் இதுவும் ஒன்று.  சளி, ஜலதோஷம், ஒவ்வாமை, ஆஸ்த்மா போன்ற நோய்களுக்கு நல்ல நிவாரணம் தரும் இயற்கை வழியிலான நல வாழ்வியல் பொருட்களில் ஜலநேத்தி கருவி பெரிதும் துணையாகிறது.

ஸ்கன்டினேவியா நாட்டில் ஜலதோஷம் வந்தால் குணப்படுத்தும் முதல் உதவி சாதனமாக இதையே பயன்படுத்துவார்கள் என அறியும் பொழுது இயற்கை நலவாழ்வியல் கருத்துக்கள் எந்த அளவு உலகெங்கிலும் பின்பற்றப் பட்டுள்ளன என்று புரிய வருகிறது. 

ஐரோப்பிய நாட்டின் சிறுவன் ஒருவன் ஜலநேத்தி செய்து கொள்ளுதல்.

கடல் உப்பு நீரின் தொற்று நீக்கும், குணமாக்கும் தன்மைகள் பிரான்ஸ், ஜெர்மனி, பின்லாந்து போன்ற நாடுகளில் நன்றே அறியப்பட்டுள்ளன. இன்றைய நாட்களில், மூக்கு வழியை நன்றே சுத்தம் செய்யும் முறையானது, மருந்துகள், மூக்கினுள் சிந்தப்படும் துளிகள், உள்ளுறிஞ்சிகள், தெளிப்புகள் (ஸ்ப்ரே) போன்றவற்றுடன் ஒப்பிடும் பொழுது சிறந்ததாகவும், பரவலாக பயன்படுத்தப்படும் ஒன்றாகவும் இந்த ஜலநேத்தி உபகரணம் பயன்படுகிறது.

எப்படி பயன்படுத்துவது? 
தூளாக்கப்பட்ட சமையல் உப்பை இளந்சூட்டு நீரில் நன்கு கரைத்து ஜலநேத்தி கருவிக்குள் ஊற்றவும். 

உபயோகிக்கத் துவங்கு முன்பாக உப்பு நன்றாக கரைந்து விட்டதை உறுதி செய்து கொள்ளவும். 

குளியலறையில் முகம் கழுவும் தொட்டியின் முன் குனிந்து, தலையை ஒருபக்கமாக சாய்த்து, ஒரு கையில் உபகரணத்தை வைத்துக் கொள்ளவும். 

மூக்கின் பின்புறமாக அமைந்த எலும்புக் குழியிலும் (சைனஸ்), ம்யூகஸ் மேம்பரீன் எனப்படும் சளியப்படை மேற்பரப்புகளிலும், மிகவும் நுண்ணிய (உருப்பெருக்கு கண்ணாடியால் மட்டுமே பார்க்ககூடிய) மயிர் வளர்ச்சிகள் காணப்படுகின்றன. இந்த முடிகளின் அசைவானது, வயலில் காற்று வீசும் பொழுது நெற்பயிரானது ஒரேதிசையில் சாய்ந்து அசைவது போன்றிருக்கும். மெல்லிய சளியப்படையினால் போர்த்தப்பட்டிருக்கும் இம்மயிர்த் தொகுதிகளில் பாக்டீரியாக்கள், பூக்களின் மகரந்தத் துகள்கள், சிறிய தூசுகள் மற்றும் இறந்த செல்களின் சிறுதுணுக்குகள் போன்றவை இச்சளியப்படையில் ஒட்டிக்கொள்கின்றன. 

ஆரம்பத்தில்  மயிர் வளர்ச்சியின் அசைவின் பொழுது ஒட்டிக் கொண்ட இவைகள், பின்னர் ஏற்படும் தொடர் அசைவின் காரணமாக மூக்கின் அடிப்பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதியாக தொண்டை வழியாக இரைப்பையை சென்றடையும். மலத்தில் சளி காணப்படுவது இவ்வகையில்தான். 

வைரஸ் நோய்க்கிருமிகளும், ஒவ்வாமைக் காரணிகளும், மயிர்வளர்ச்சியின் செயற்பாட்டை திறனிழக்கச் செய்யும் பொழுதோ அல்லது சளியப்படை உலர்ந்து, கடினமாகும் பொழுதோ, இயல்பான மூக்கின் செயல்பாடு தடைப் படுகிறது. 

மூக்கின் அடிப்பகுதியை உப்பு நீர் கொண்டு கழுவும் பொழுது, காய்ந்த சளியப்படை, தூசி, மகரந்ததூள்கள், வைரஸ், ஒவ்வாமைக் காரணிகள் அகற்றப்படுவதோடு, சளியப்படை ஈரப்படுத்தப்பட்டு, மயிர் வளர்ச்சியின் இயல்பான அசைவுகள் திரும்பவும் செயல்படுத்தப்படுகிறது. மூக்கின் உட்பள்ளமானது, எலும்புக்குழி(சைனஸ்)களுடன் சிறிய வழிகளினால் இணைக்கப்பட்டுள்ளது.

சளிய மென்படை, நோய் தொற்றின் போது (உதாரணம்: சாதாரண ஜலதோஷம் (காமன் கோல்ட்) வீக்கமடையும். அச்சமயத்தில் சிறு வழிகள் அடைக்கப்பட்டு சைனஸ் தோன்ற (சைனசிட்டிஸ்) வாய்ப்பளிக்கிறது. 

 
முறையாக தொடர்ந்து மூக்கை கழுவி வந்தால், சிறுவழிகள் அடைப்புக்களின்றி தெளிவாக இருப்பதோடு, உப்புத் தண்ணீர் பயன்படுத்தப்படுவதனால், காரநிலை (alkalinity) செயல்படுத்தப்படுகிறது. இதனால் வைரஸ் நோய்க்காரணிகள் வளரமுடியாது போகின்றன. 

ஆஸ்த்மா வியாதி உள்ளவர்களின் நோய்த் தாக்கத்தின் பொழுது, சளியப்படை வீக்கமடைந்து, நாசியின் உட்சுவாச வழி அடைபடுகிறது.  அதனால்தான் அவர்களுக்கு மூச்சிறைப்பு ஏற்படுகிறது. இதனால் வாய்வழிச் சுவாசம் மேற்கொள்ளவேண்டிய நிலைக்கு ஆளாகிறார்கள். இவர்கள் ஜலநேத்தி கருவி கொண்டு முறையாக மூக்கைக் கழுவுவதனால் இந்நிலை நீங்க உதவி செய்யும். 

ஏன் இதை நாம் பயன்படுத்த வேண்டும்?  
நோய் நிலைகள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மூக்கை தொடர்ந்து கழுவி வந்தால், மூக்குக்குழி, மேல் சுவாசத் தொகுதி ஆகியவற்றில் ஏற்ப்படக் கூடிய நோய்களின்றி ஆரோக்கியமாக வாழலாம். காது, மூக்கு, தொண்டை நோய்க்கள் நம்மை அணுகாமல் பாதுகாத்துக் கொள்ள மிக எளிய வழியாகும் இது. 

ஆதிகாலத்தில் முனிவர்கள், சாதுக்கள் தங்கள் கையில் கமண்டலத்தை வைத்திருப்பதை படங்களில் பார்த்திருப்பீர்கள். அவர்களது ஆரோக்கியத்துக்கான யோகக் கிரியைகளை செய்யும் கையடக்கக் கருவியாக கமண்டலங்கள் பயன்பட்டன என்பது இப்போது தெளிவாகிறது. 
 
மேலே - கமண்டலத்தின் இந்நாள் வடிவம். 


மேலே - யோகிகளின் கையில் உள்ள கமண்டலம்.

பயன்படுத்தும் முறை - 
  • கருவியை தயாராக வைத்துக்கொள்ளவும். பின்னர் 1 தேக்கரண்டி உப்பை கருவிக்குள் இட்டு, பின்னர் இளந் சூட்டு நீரில் (8 அவுன்ஸ்) நன்கு கரைக்கவும். நன்கு கரையாத உப்பு துகள்கள் நாசியில் அரிப்பை ஏற்படுத்தும், உப்பு நன்கு கரைந்திருந்தால் அரிப்பு ஏற்படாது.  (குறிப்பு: முதன் முறை பயன்படுத்தும் பொழுது, 1 தேக்கரண்டியிலும் சற்று குறைவாக எடுத்துக் கொள்ளலாம். சில நாட்கள் அனுபவத்தின் பின்னர், அளவை 1 தேக்கரண்டிக்கு உயர்த்திக் கொள்ளலாம். (உப்புக் கரைசலை ஒரு பாத்திரத்தில் முன்னதாக தயாரித்து பின்னர் ஜலநேத்தி கருவிக்குள் விடலாம்). 
  • முகம் கழுவும் தொட்டியின் முன் நின்று கொண்டு தலையை ஒரு புறம் சாய்க்கவும் - (ஒரு காது கீழே படுக்கவாட்டாகவும், மற்றையது மேலாகவும் வரும்வரை)
  • கருவியின் நீண்ட மூக்கை, மேற்புற மூக்குத் துவாரத்தினுள் உட்புகக் கூடிய தூரம் வரை செலுத்திய பின், கருவியை சற்று உயர்த்தி மெதுவாக உப்பு நீரை உள்ளே விடவும். இந்த நேரத்தில் தொடர்ந்து வாயினால் மட்டுமே சுவாசிக்க வேண்டும். அப்போது மற்ற மூக்குத் துவாரத்தின் வழியாக நீர் வெளியேறும்.
  • ஏறக்குறைய பாதி நீரை ஒரு மூக்குத் துவாரத்தினுள் விட்டபின் நிறுத்தி, தலையை மறுபக்கம் சாய்ந்து, மேற்புற மூக்குத் துவாரத்திற்குள் முன்பு போல எஞ்சிய நீரை விடவும். 
 நாசியைச் சுத்தப்படுத்தும் முறை. 
படம் (B)யில் தலையின் கோணத்தைக் கவனிக்கவும்.
  • இப்பொழுது மூக்குத் துவாரம் சற்று காயும் வண்ணமாக, வேகமாக வெளிச் சுவாசம் செய்யவும். அதாவது காற்றை இழுத்து வேகமாக வெளி விடவும். வெளி வரக் கூடிய கழிவுகளைச் சிந்தி அகற்றவும். சில சமயங்களில் பலதடவை சிந்தி கழிவுகளை வேண்டியிருக்கும். 
  • இப் பயிற்சியினை ஆரம்பத்தில், காலையிலும், மாலையிலும் செய்யலாம். அதிகமாக கழிவு தங்கியிருந்தால், நாளுக்கு 3 - 4 தடவை செய்யலாம். ஒரு வாரத்திகுப் பிறகு, மூக்கு அடைப்பின்றி, சுத்தமாக இருப்பதை உணர்வீர்கள். சுத்தமான இந்நிலையில, தினமும் காலையில் ஒரு முறை செய்து வந்தால் போதுமானதாகும். 
  • மேலும் மூக்கடைப்பு அல்லது சளிகூடி அடிக்கடி சிந்தவேண்டியாதாக வேண்டி வந்தாலோ, சளி ஒழுகினாலோ அப்போது எல்லாம் அடிக்கடி மூக்கை இதே முறையில் கழுவிக் கொள்ளலாம். 
முறையாக தொடர்ந்து மூக்கைக் கழுவுவதனால் ஏற்படும் பல நன்மைகளில் சில:- 
  • நாசித் துவாரங்களில் தெளிவான, அடைப்பில்லாத வழி கிடைப்பதனால் சுவாசம் இலகுவாகிறது. அதிகமாக சுரந்த சளி, மற்றும் அதில் சிக்கிய கிருமிகள், ஒவ்வாமைக் காரணிகளும், கழிவுகளும், தூசி, புகை, அரிப்பை ஏற்படுத்தும் அடைப்புகள் எதுவாகிலும் கழுவி அகற்றப்படுகிறது. 
  • நாசித் துவாரங்கள் உலர்ந்து போயிருந்தால் அவற்றை இந்த முறையிலான மூக்குக் கழுவுதல் ஈரப்படுத்துகின்றது. இதன் மூலமாக மூக்கின் உலர் நிலையால் ஏற்படும் சளித் தேக்கத்தை அகற்ற உதவுவதோடு, மூக்கு இரத்த போக்கு தவிர்க்கப் படுகிறது. 
  • உடலின் முதல் நோயெதிர்ப்பு செயல்பாடு அமைந்துள்ள மெல்லிய சளியப்படையலுக்குள் (mucus membreen) கிருமிகள் மற்றும் அசுத்தங்கள் சிக்குவதினால் சளியப்படையலின் நோய் எதிர்ப்பு செயல்பாடு குறைந்து போகிறது. இந்த முறையில் சுத்தம் செய்யும் போது சளியப்படைத் தொகுதிகள் திறம்பட செயல்படத் துவங்குகின்றன. 
  • இந்த செயல் முறை சுலபமானது. இயற்கை வழியிலானது, மருந்துகளற்றது, எனவே பக்க விளைவுகள் அற்றது. மேலும் செலவு குறைந்தது, எவரும் பிறர் துணையின்றி தனக்குத்தானே எளிமையாக செய்துகொள்ளக் கூடியது. 
  • மூக்கின் உட்புறம் ஆரோக்கியமாக இருப்பதனால் சுவையுணர்வும், முகர்வுணர்வும் (மோப்பம்) மேம்படுகிறது.
  • சுவாசத் தொகுதி சம்பந்தமான நோய்களான ஆஸ்மா, மகரந்தக் காய்ச்சல் (ஹேஃபீவர்),  நீண்ட நாளாக இருக்கும் ஜலதோஷம் (கோல்ட்), சளியினால் தோன்றும் காய்ச்சல் (இன்புளுயன்சா), சைனஸ் என்னும் சளிச் சேர்க்கை, போன்ற தொல்லைக்களில் இருந்து நலத்துக்கு மீண்டு வர மிகவும் பயனுள்ளதாகும். 
  • மூக்கு குழல்களின் பாதைகள் சுத்தமாவதினால் அதுவரை செய்து வந்த  வாய்வழிச் சுவாசம், இயல்பான மூக்கு வழிச் சுவாசத்திற்கு மாற்றப்படுகின்றது.
  • மூக்கைக் கழுவி சுத்தமாக வைத்திருப்பதனால், தொண்டை, சுவாசக் குழல் பாதைகள் சுத்தமாக இருப்பதுடன் பார்வை தெளிவுறுவதுடன், தெளிவான சிந்திக்க வழி உண்டாகிறது. 
  • நோய்க் காரணிகள் அகற்றப்படுவதனால் உடலின் நோயெதிர்ப்பு செயற்பாட்டிற்கான தேவை குறைக்கப்படுகிறது. நோய் எதிர்க்கும் செயல்களைச் செய்ய உடலுக்கு நிறைய சக்தி தேவைப் படும். அச் சக்தி விரயமாகாமல் தடுக்கப்படுவதினால் நமது ஆரோக்கிய நல வாழ்வு மேம்படுகிறது.
முக்கிய குறிப்பு: ஜல நேத்திக் கிரியா முறையில் மூக்கு கழுவும் முறையானது, மிகவும் நாள்பட்ட நோய்களுக்கு (chronic diseases) சிகிச்சை தரும் முறை ஆகாது. மூக்கு, காது, தொண்டை வழிகளில் நீண்ட நாள் நோய்கண்டவர்கள் கட்டாயம் மருத்துவ ஆலோசனை பெறவேண்டும்.

நன்றி: கூகிள் இமேஜஸ் படங்கள்.


இடுகைக்கு நன்றி: நலமே பொலிக வலைப்பூவில் இருந்து மீள்பதிவிட்டவர் : அஷ்வின்ஜி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக