பகுதி-3
மேற்சொன்ன ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கியமற்ற என்ற இரு பிரிவுகளின் கீழ் நாம் சாப்பிடும் எல்லா உணவு வகைகளையும் பயனற்றது, பயனுள்ளது என்று இரு வகைகளாகப் பிரிக்கலாம்.
பயனற்ற உணவு வகைகள்: பயனற்ற உணவு வகைகள் என்பவை நம் உடம்பை வியாதிக்கு உள்ளாக்கி நம்முடைய ஆயுளை குறைக்கக் கூடியவை. செயற்கையாக மிகவும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் எல்லாம் இந்தப் பிரிவின் கீழ் அடங்கும். உடம்பிற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் பெரும்பாலும் இவற்றில் இருக்காது. மேலும் இந்த பயனற்ற உணவுப் பண்டங்கள் புற்றுநோய், சர்க்கரை நோய், இதயக் கோளாறுகள் ஆகியவற்றை உண்டு பண்ணக் கூடியவை.
பயனுள்ள உணவுப் பண்டங்கள்:
இந்தப் பண்டங்கள் நம்முடைய உடம்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றன. அதே சமயத்தில் நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகின்றன. இவ்வுணவுப் பண்டங்கள் பெரும்பாலும் மிதமாக சமைக்கப்படுகின்றன என்பதால் நம்முடம்பிற்குத் தேவையான பெரும்பாலான ஊட்டச் சத்துக்கள் வீணாகாமல் காப்பாற்றப்படுகின்றன. இந்த உணவுப் பண்டங்கள் சர்க்கரை நோய் மற்றும் இதயக் கோளாறுகளிலிருந்து மீட்கக் கூடியவை.
ஐந்து பயனற்ற உணவுகள்:
ஐந்து பிரதான உணவுப் பண்டங்களை நாம் பயனற்ற உணவுகள் எனலாம். இவைகளை நாம் அளவுக்கு அதிகமாகச் சாப்பிடும் பொழுது இவை நம் உடம்பை பலஹீனப்படுத்தி புற்று நோய், சர்க்கரை நோய் மற்றும் இதயக் கோளாறுகளுக்கு ஆளாக்கிவிடுகின்றன. இந்த ஐந்து பிரதான உணவுப் பண்டங்கள் வெள்ளை சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட மாவு, மாற்றம் செய்யப்பட்ட கொழுப்பு, ஹைட்ரஜன் சேர்க்கப்பட்ட கொழுப்பு மற்றும் நம் உடல் நலத்தைப் பாதிக்கும் கெமிக்கல்ஸ் ஆகும்.
1. வெள்ளை சர்க்கரை: இந்தப் பிரிவின் கீழ் கார்ன்சிரப், சுக்ரோஸ், மால்டோஸ் மற்றும் டெக்ஸ்ட்ரோஸ் ஆகியவை கலந்து செய்யப்பட்ட உணவுகள் எல்லாம் அடங்கும். மேலும், குளிர்பானங்கள், பாட்டிலில் போடப்படும் பழச்சாறுகள், ஜாம், மற்றும் கேக் வகைகளும் அடங்கும்.
உடல் நலத்தாக்கம்: மேற்கூறிய சர்க்கரை அதிகமான இந்தப் பண்டங்கள் எல்லாம் நம் ரத்தத்தில் குளுக்கோஸின் அளவை உடனே அதிகப்படுத்தி அதன் விளைவாக இன்சுலின்களையும் நம் உடம்பு எதிர்க்கும் பொழுது இந்த சர்க்கரைமயமான உணவுப் பண்டங்களில் இருக்கின்ற கூடுதல் மாவுச் சத்து எல்லாம் உடம்பில் கொழுப்புச் சத்தாக மாற்றப்பட்டு சேகரம் செய்யப்படுகின்றது. மேலும் இந்தச் சர்க்கரை மயமான உணவுப் பண்டங்கள் நம் உடம்பிலுள்ள பயனுள்ள விட்டமின்கள் மற்றும் தாதுக்களை குறையச் செய்கின்றன. சர்க்கரைக்கு மாற்றாக விற்கப்படுகின்ற செயற்கை இனிப்பு வகைகளில் சர்க்கரை இல்லாவிட்டாலும் இவை நம்மை அதிகமாகச் சாப்பிடச் செய்கின்றன. அப்படி நாம் அதிகமாகச் சாப்பிடும் பொழுது அதன்மூலம் நம் உடல் நலத்தை அவை பாதிக்கின்றன.
2. பதப்படுத்தப்பட்ட வெள்ளை மாவு: இந்தப் பிரிவின் கீழ் வெள்ளை மாவால் செய்யப்படுகின்ற வெள்ளை ரொட்டி, வெள்ளை சாதம், நூடுல்ஸ் மற்றும் கேக் வகைகள், மற்றும் உருளைக்கிழங்கு போன்ற மாவுச்சத்து நிறைந்த காய்கறிகள் அடங்கும்.
உடல் நலத்தாக்கம்: மேற்கண்ட ஸ்டார்ச் சத்துமிகுந்த உணவுப் பண்டங்கள் எல்லாம் சர்க்கரைப் பண்டங்கள் போலவே குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் அளவுகளை ஏற்றிவிடுகின்றன. இன்சுலினை உடம்பு எதிர்க்கும் பொழுது இந்த கூடுதலான ஸ்டார்ச் சத்தும் கொழுப்புச் சத்தாக மாற்றப்பட்டு சேகரம் செய்யப்படுகின்றது. இப்படி வெள்ளை மாவை சாப்பிடுவதற்குப் பதிலாக முழு கோதுமை மற்றும் அரிசியிலிருந்து செய்யப்படுகின்ற உணவுப் பண்டங்களை சாப்பிட்டால் மேற்கண்ட பாதிப்புகளை நாம் தவிர்க்கலாம்.
3. மாற்றம் செய்யப்பட்ட கொழுப்புச் சத்து: இப்பிரிவின் கீழ் ஹைட்ரஜன் கலந்த எண்ணெயால் செய்யப்பட்ட உணவுப் பண்டங்களான மார்ஜரின், உருளைகிழங்கு வறுவல் மற்றும் பேக்கரிப் பண்டங்கள் எல்லாம் அடங்கும். ஹைட்ரஜன் கலந்த எண்ணெய் பண்டங்களை பயன்படுத்தும் பொழுது இந்த எண்ணெயில் இருக்கின்ற கொழுப்பு அமிலங்கள் அழிக்கப்பட்டு குறைபாடுள்ள மாற்றம் செய்யப்பட்டுள்ள கொழுப்புச் சத்துக்கள் வந்துவிடுகின்றன.
உடல் நலத் தாக்கம்: இப்படி மாற்றம் செய்யப்பட்ட கொழுப்புச் சத்துக்கள் நம் உடல் நலத்திற்கு ஒத்துவருவதில்லை. நம்முடைய ரத்தக் குழாய்களில் இவை அடைப்பை ஏற்படுத்துகின்றன. மேலும் நம் உடம்பிலுள்ள செல்களில் இன்சுலினுக்கு வழிவிடும் கதவுகளை மூடுகின்றன.
4. ஹைட்ரஜன் கலந்த கொழுப்புச் சத்துக்கள்: இந்தக் கொழுப்புச் சத்து மாமிச உணவிலும், வறுவல் செய்யப்பட்ட உணவிலும், வெண்ணெய், ஐஸ்கிரீம், மற்றும் பதப்படுத்தப்பட்ட பாலிலும் இருக்கின்றன. தேங்காய் எண்ணெய் மற்றும் பாமாயிலிலும் இந்தக் கொழுப்புச் சத்து இருக்கின்றது.
உடல் நலத் தாக்கம்: ஹைட்ரஜன் கலந்த கொழுப்புச் சத்துக்களை நாம் அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டால், இவற்றை சாப்பிடும் பொழுது தேவையில்லாத கொழுப்புச் சத்து நம் உடம்பில் சேருகின்றது மற்றும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுகின்றது. இன்சுலின் உபயோகம் குறைகின்றது. தேங்காய் எண்ணெயில் இந்தக் கொழுப்புச்சத்து மிகுந்து உள்ளது இருந்தாலும் பதப்படுத்தப்படாத தேங்காய் எண்ணெய் சமையலுக்கு மிக நல்லதாகும். தேங்காய் எண்ணையில் உள்ள நடுத்தரமான கொழுப்பு அமிலங்கள் நம் ரத்த ஓட்டத்தில் சேராமல் ஈரலுக்கு அனுப்பப்படுகின்றன. அங்கே ஈரலில் அவை நேரடியாக எனர்ஜியாக மாற்றப்படு கின்றன.
5. கெமிக்கல்ஸ்: இந்தப் பிரிவின் கீழ் தாது வகைகள், புகையிலை, காபி மற்றும் தேநீரில் உள்ள கஃபின் என்ற கெமிக்கல் ஆகியவை அடங்கும்.
உடல் நலத்தாக்கம்: மதுபானங்களும், புகையிலையும் நம்முடைய ஈரல், இதயம், நுரையீரல் ஆகியவற்றில் நிறைய பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. காபியில் இருக்கும் கஃபின் கெமிக்கல் நம் நரம்புகளைத் தூண்டி விடுகின்றது. கஃபினால் நமக்கு இன்சுலின் சுரப்பது அதிகரிக்கலாம். கார்ன்சிரப் மற்றும் வெள்ளை சர்க்கரை மற்றும் ஹைட்ரஜன் கலந்த சமையல் எண்ணெய் ஆகியவற்றைக் கொண்டு செய்யப்பட்ட உணவுப் பண்டங்கள் எல்லாம் ஜீரணமாவதற்கு மிகவும் காலதாமதம் ஆவதால் அந்த அளவிற்கு நம்முடைய உடம்பிலுள்ள எனர்ஜி விரயமாகின்றது. மேலும் மருந்துக் கடைகளில் டாக்டருடைய மருந்துச் சீட்டு இல்லாமல் வாங்கப்படும் பல மருந்துகளால் நம்முடைய ஈரல் மற்றும் சிறுநீரகம் மற்றும் இதயத்திற்கெல்லாம் பாதிப்பு ஏற்படுகின்றது.
(நலம் தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக