எனது யோகா ஆசான் திரு. யோகி. தி.ஆ.கிருஷ்ணன் அவர்கள் நெல்லையில் ஒரு விழாவில் கலந்து கொள்ளச் சென்று இருந்த போது தினமலர் தினசரிக்கு தந்த பேட்டியை வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன்.
பதிவு செய்த நாள் : அக்டோபர் 12,2010,03:43 IST
தினமலர் முதல் பக்கம் » பொது செய்தி »தமிழ்நாடு
வெளிநாட்டினர் யோகாவை விரும்புவது ஏன்?
நெல்லையில் யோகா குரு கிருஷ்ணன் விளக்கம்
திருநெல்வேலி: "வெளிநாட்டினர் யோகாவை விரும்புவது ஏன்' என நெல்லையில் யோகா குரு தி.ஆ.கிருஷ்ணன் விளக்கம் அளித்தார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்தவர் தி.ஆ.கிருஷ்ணன். இவர் 8 வயதில் யோகாசனங்களை கற்க துவங்கினார். சிவானந்தா ஆசிரமத்தில் யோகாசனங்களை கற்றார். யோகக்கலை வல்லுநர்கள் சுத்தானந்த பாரதி, கீதானந்தா, திரேந்திர பிரம்மச்சாரி, ஆசனா ஆண்டியப்பன் உள்ளிட்டோரிடம் யோகாசனங்களை கற்று தேர்ந்தார். இளமைக்காலத்தில் பல மாநிலங்களுக்கும் சென்று யோகாசன பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்றுள்ளார். யோகக்கலையில் 60 ஆண்டுக்கால அனுபவம் கொண்ட இவர் பல பட்டங்களை பெற்றுள்ளார். சென்னையில் திருமூலர் யோகா, இயற்கை உணவு ஆய்வு அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளை மூலம் நான்கு மையங்களில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு யோகா, இயற்கை உணவு குறித்து டிப்ளமோ முதல் ஆய்வுப்படிப்பு வரை பயிற்சி அளித்து வருகிறார். தாய்லாந்து, சீனா, ஜப்பான், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கும் சென்று யோகா பயிற்சி அளிக்கிறார்.
நெல்லையில் யோகா குரு தி.ஆ.கிருஷ்ணன் கூறியதாவது:
வெளிநாட்டு உடற்பயிற்சி முறைகளால் உடல்தசை அழகு பெறும். ஆனால் யோகா செய்தால் உடல் மெலிந்து உள் உறுப்புகள் வலிமை பெறும். உடல், மனம், ஆன்மாவை யோகாசனங்கள் ஒருங்கிணைக்கும். நாளமில்லா சுரப்பிகளை சீராக இயங்கச்செய்வதால் உடல் சக்தி பெறும். பிராண சக்தி அதிகரிக்கும். மனம் திடமாகும். இதனால் வெளிநாட்டினர் யோகாவை விரும்பி கற்கின்றனர். வடமாநிலங்களில் யோகா பயிற்சி நிலையங்கள் ஏராளமாக உள்ளன. தமிழகத்தில் யோகக்கலை குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. பல்கலைக்கழகங்களில் யோகா படிப்புகள் துவக்கப்பட்டுள்ளது.
யோகா பயிற்சி நிலையங்களில் ஏராளமானோர் ஆர்வத்துடன் படிக்கின்றனர். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு யோகா கற்பிக்கப்படுகிறது. கோயில்களில் மக்களுக்கு யோகா கற்றுத்தரப்படுகிறது. தியானம் சிறுவயதில் இருந்தே குழந்தைகளுக்கு கற்றுத்தரப்படவுள்ளது. தமிழகத்தில் யோகாசன ஆசிரியர்களுக்கு தகுதிக்கேற்ப ஊதியம் அளிக்க வேண்டும். ஊதியத்தை முறையாக வழங்க வேண்டும். யோகக்கலையை வளர்க்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை முறைப்படுத்த வேண்டும். யோகக்கலைக்கு வெளிநாடுகளில் மவுசு உள்ளது. யோகா கற்றவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றால் சிறந்த வாய்ப்புக்களை பெறலாம்.
தினமும் பயிற்சி:
தினமும் காலையில் உட்கார்ந்து, மல்லாக்க, குப்புறப்படுத்து, நின்று செய்யக்கூடிய சில ஆசனங்கள், மூச்சுப்பயிற்சி, தியானம் செய்துவந்தால் உடல்நிலை நன்கு இருக்கும். நோய்கள் ஏற்படாது. ஆசனங்களை தினமும் செய்ய வேண்டும். "ஆசனம் பாதி, அசனம் (உணவு) பாதி' என்பர். ஆசனங்கள் செய்தால் மட்டும் போதாது. இயற்கை உணவு முறை பின்பற்ற வேண்டும். பச்சைக்காய்கறிகள், தேங்காய், அவல், பழவகைகள், பழச்சாறுகள் போன்றவற்றை உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும். இயற்கை உணவு உண்டு ஆசனங்களை செய்துவந்தால் நோய்நொடியின்றி என்றும் இளமையுடன் வாழலாம். மனவளர்ச்சியற்றோர், தொழு நோயாளிகள் கூட ஆசனங்கள், இயற்கை வைத்திய முறையில் குணமடைந்துள்ளனர்.
மலச்சிக்கல் நோய்க்கு அடிப்படை.
புலால் உணவால் உடலில் கழிவுகள் தேங்கி மலச்சிக்கல் ஏற்படும். எனவே இயற்கை உணவுப்பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். இளைய தலைமுறையினர் தினமும் அதிகாலை 4 மணிக்கு படுக்கையில் இருந்து எழ வேண்டும். நாள்தோறும் யோகாசனங்கள், மூச்சுப்பயிற்சி, தியானம் செய்ய வேண்டும். கட்டுப்பாடு, நுண்ணறிவு வளர புலால் உணவை தவிர்க்க வேண்டும். பழங்கள், பச்சைக்காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு யோகா குரு தி.ஆ.கிருஷ்ணன் கூறினார்.
நன்றி: தினமலர் இணையம் : http://www.dinamalar.com/News_Detail.asp?Id=105015
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக