திங்கள், 12 ஏப்ரல், 2010

பகுதி 5 - இயற்கை மருத்துவம் (தத்துவங்களும் செயல்முறைகளும்) மகரிஷி க.அருணாசலம்.

நோய் நமக்கு நண்பன். பகைவன் அல்ல.

துன்பம் தரும் ஒன்றை எப்படி நண்பனாகக் கருதுவது? இவ்வினா இயற்கையாக எழும் ஒன்று. இதை மேலும் ஆராய்தல் பயன்தரும். துன்பம் தருபவற்றுள் பலவகையுள சில துன்பத்திற்காகவே துன்பம் தருகின்றன. சில துன்பப்படும் ஒன்றில் நலன் கருதித் துன்பம் தருகின்றன. துன்பம் தரும் தனக்கு யாதொரு லாபமும் இல்லை. இந்த மூன்றாம் வகையைச் சேர்ந்தே நோய் தரும் துன்பம். நோய் துன்பம் தருவது. நோயாளி துன்பம் அடைவான். நோயாளி படும் துன்பத்தால் நோய்க்கு யாது பயன்? நோய் தான் அளிக்கும் துன்பத்தின் மூலம் உடலில் பிரச்சினை இருக்கின்றதென்பதைக் காட்டுகின்றது இதுவழியில் இருக்கும் பள்ளத்தை, இடையூறைக் காட்டும் சிவப்பு விளக்குப் போன்றது. இதை அறிந்து மேல் நடவடிக்கை எடுத்தால் நோயாளி பெரும் நன்மையடைவான். ஆதலால் தான் நோயாளி நோயினை நண்பனாகக் கருத வேண்டுமென்கின்றனர்.

"நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தல் பொருட்டு"
என்பது பொய்யாமொழி

நாவடக்கமின்றிக் கண்டதைக் கண்ட கண்ட நேரத்தில் சாப்பிட்டுக் காலாகாலத்தில் மலநீக்கம் செய்யாது இயற்கைக்கு மாறான வாழ்க்கை வாழும் ஒருவனை இடித்துக்கூறி நல்வழிப்படுத்த வருவது நோய். அதனை நண்பனாகக் கருதி உபசரியாமல் பகைவனாகக் கருதி செயற்பட்டால் தனக்குத்தான் கேடு மிகுகின்றது. நண்பனாகக் கருதி வரவேற்று இயல்பறிந்து போற்றி உபசரித்தால் காலாகாலத்தில் நோய் போய் விடும். நண்பர்கள் என்றால் காலக்கெடுவின்றிக் கூடிக் குலவவேண்டும் என்பதில்லை. அவசியமான அளவுக்குத்தான் தொடர்பு இருக்க வேண்டும்.

நட்பு எது எப்படி இருக்க வேண்டும் என்பதைக் காந்தியடிகள் தமது வாழ்க்கை அனுபவத்தில் கண்டதைக் கூறுவதைக் கவனிக்க வேண்டும். "சீர்த்திருத்த முற்படுகிறவர், யாரைச் சீர்த்திருத்த விரும்புகிறாரோ அவரிடம் நெருங்கிய சகவாசம் வைத்துக் கொள்ளக் கூடாது... தனிப்பட்டு அன்னியோன்னியமாக நெருங்கிப் பழகுவதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதே என் அபிப்ராயம்."

நோய் என்பது, பிராண சக்தி தனது வேலையைச் சிறிது காலந்தாழ்த்திச் செய்யும் போது ஏற்படுகின்ற துன்பம் என்பது நமக்குத் தெரியும். இத்துன்பத்தின் காரணம் என்ன என்பதை ஆராய்ந்து அந்த நோயைப் போக்க வேண்டிய வழியையும் ஆராய்ந்து நோயுற்ற உடலுக்குப் பொருந்தும் படியான சிகிச்சைகளைச் செய்ய வேண்டுமென்பது திருவள்ளுவர் திருவாக்கு.

"நோய்நாடி, நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி, வாய்ப்பச் செயல்"

அவ்வப்போது வெளியே தள்ளப்படாமல் உடலினுள்ளேயே தங்கியிருக்கும் நீர்ப்பகுதி அனைத்தும் உடலினுள் உறிஞ்சப்படுகின்றது. இந்த நச்சு நீர் இரத்தத்தில் கலந்து பரவுகின்றது. இதனால் ஊட்டி வளர்க்கப் பெறும் கல்லீரல், சிறுநீரகம், கணையம், மண்ணீரல், இதயம் போன்ற உறுப்புக்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் தான் நீடித்த மலச்சிக்கல் உள்ளவர்களுக்குத் தலைவலி, தூக்கமின்மை, நீரிழிவு, இரத்தக் கொதிப்பு, கீல்வாதம், காசம், மஞ்சள் காமாலை போன்ற வியாதிகள் எல்லாம் வருகின்றன. இவற்றைக் கண்டு பயந்து டாக்டர்களிடம் சென்றால் அவர்கள் மூல காரணத்தை கண்டுபிடிக்காமல், நோயின் அறிகுறிகளுக்குப் பரிகாரமாக மாத்திரைகளையோ, ஊசி மருந்துகளையோ கொடுக்கின்றனர். இந்த நச்சு மருந்துகளால் தற்காலிகப் பரிகாரம் கிடைத்தாலும் நாளடைவில் பெரும் தீங்கே விளைகின்றது.

(இயற்கை வளரும்..)

2 கருத்துகள்:

Geetha Sambasivam சொன்னது…

இதனால் தான் நீடித்த மலச்சிக்கல் உள்ளவர்களுக்குத் தலைவலி, தூக்கமின்மை, நீரிழிவு, இரத்தக் கொதிப்பு, கீல்வாதம், காசம், மஞ்சள் காமாலை போன்ற வியாதிகள் எல்லாம் வருகின்றன.//

mmmmநீடித்த மலச்சிக்கல் எல்லாம் இல்லாமலேயே மேற்கண்ட நோய்கள் வருகின்றன. அதுக்கு என்ன செய்யறது???

Ashwin Ji சொன்னது…

நமஸ்தே கீதாஜி, தங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி. உண்மையில் நீடித்த மலச்சிக்கல் காரணமாக தான் எல்லா நோய்களும் வருகின்றன என்பதை எளிதில் நம்மால் நம்ப முடியாது. மகரிஷி க. அருணாச்சலத்தின் முழு கட்டுரையும் படித்து முடிக்கும் தருவாயில் நமது வாழ்வியல் சிந்தனைகளும், அவற்றைக் கடைப் பிடிப்பதில் எவ்வளவு தவறுகள் நாம் செய்கிறோம் என்பதை அறிந்து வியப்படைவீர்கள். தொடர்ந்து படியுங்க.

கருத்துரையிடுக