ஞாயிறு, 31 ஜனவரி, 2010


அன்புள்ளம் கொண்ட தமிழ் நெஞ்சங்களுக்கு வணக்கம்.

இயற்கை நலவாழ்வியல் இன்றைய அத்தியாவசியத் தேவை ஆகிவிட்ட நிலையில் அவ்வாழ்வினை வாழும் முறைமைகளைத் திரட்டி தரும் ஒரு மையமாக இந்த வலைப்பூவினை தொடங்கியுள்ளேன்.

இயற்கை வாழ்வியல் சிந்தனைகளை இவ்வையகம் மாண்புடன் வாழத் தந்த முக்காலமும் உணர்ந்த அக்கால ரிஷிகளுக்கும், சித்தர் பிரான்களுக்கும் சிரம் தாழ்ந்த வணக்கம் செலுத்தி இந்த வலைப் பூவினை அவர்களுக்கெல்லாம் அர்ப்பணிக்கிறேன்.

நவீன காலத்தின் மாமனிதராக விளங்கிய இயற்கை வாழ்வியல் சிந்தனைகளை ஆர்வத்துடன் செயல்படுத்தி தன் மீது பரிசோதனைகளைச் செய்து பார்த்து சிலாகித்து பல செய்திகளைக் கூறிய முதல்வராகத் திகழும் எம்மான் காந்தி மகானுக்கும் என் வணக்கங்கள். மேலும் தமிழ் நாட்டின் இயற்கை வாழ்வியல் தத்துவத்தின் கலந்கலரை விளக்கமாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் அமரர் திரு.ம.கி.பாண்டுரங்கனார், மற்றும் அமரர் திரு மு.இராமகிருஷ்ணன் அவர்களுக்கும் உள்ளம் நிறைந்த நன்றி அஞ்சலிகளைச் செலுத்துகிறேன்.

இன்று நம்மிடையே உலவி வழிகாட்டிகளாக மட்டுமின்றி வாழ்ந்துகாட்டிகளாக என்போன்றோருக்கு உடல்/மன நலன்களை மீட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கும் திரு. மு.ஆ.அப்பன் (மு.ஆனையப்பன்) அவர்களுக்கும், யோகி திரு.தி.ஆ.கிருஷ்ணன் அவர்களுக்கும் இந்த வலைப்பூவை அர்ப்பணிக்கிறேன்.

முதல் செய்தியாக திரு மு.ஆ.அப்பன் அவர்கள் இந்த வலைப்பூவுக்காகவே பிரத்தியேகமாக எழுத்தி தந்த நோயின்றி வாழ (To Live Without Diseases) என்கிற படைப்பினை முதல் பதிவாக வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன்.

எல்லார் வாழ்விலும் நலம் பெற இந்த பதிவுகள் பயன் தருவனவாக அமையும் என்பதில் எனக்கு சற்றும் ஐயமில்லை.

வாழி நலம் சூழ என்று வாழ்த்தி வணங்கி தங்களை வரவேற்கிறேன் .

அஷ்வின்ஜி
இயற்கை நலவாழ்வியல் விரும்பி.