திங்கள், 1 பிப்ரவரி, 2010

மெடிக்கல் பிசினஸ்

Disclaimer:

எந்த ஒரு மருத்துவ முறையையோ, மருத்துவரையோ தனிப்பட்ட முறையில் குறை கூறுவது இந்த வலைப்பூவின் நோக்கம் அல்ல. அதே சமயம் தவறுகளை சுட்டிக் காட்டும் வகையில் வெளியான செய்திகளை வெளியிடுவதன் மூலம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே நோக்கம். பாசிடிவ் பார்வையில் பதிவுகளை படிக்க வேண்டுகிறேன். ஆகையினால் மருத்துவ சேவையில் ஈடுபட்டு வரும் நல்ல எண்ணம் கொண்டவர்கள் மனத்தை புண்படுத்தும் வகையில் இந்தச் செய்தியில் ஏதும் இருப்பதாக தோன்றினால் எனக்கும் தெரிவிக்கவும்.


நன்றி.
frutarians 
-------------------------------------------------------------------------------------------------------------


இன்று, நம் நாட்டில் மருத்துவத் துறையில் நடக்கும் பகல் கொள்ளை பற்றி அறியாதவர் இருக்க முடியாது; ஏனென்றால், டாக்டரை அணுகாத மக்களே இன்று இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. இரு நண்பர்கள் மூலம் மருத்துவத் துறையில் நடக்கும் பகல் கொள்ளையின் வேறு பல கோணங்களையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. "பிரம் த ஹார்சஸ் மவுத்' என்பது போல, மருத்துவ நண்பர் ஒருவரே கீழ்வரும் தகவலைக் கூறியது அதிர்ச்சி அடைய வைத்தது. லண்டனில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில், "கன்சல்டன்ட்' பதவியில் இருக்கிறார் அந்த டாக்டர் நண்பர். நம்மூர்காரர் தான் என்றாலும், பல ஆண்டுகளுக்கு முன்பே லண்டன் சென்று, எப்.ஆர்.சி.எஸ்., பட்டம் இரண்டு பெற்று, தற்போதைய தகுதியை அடைந்துள்ளார். இந்திய டாக்டர்கள், லண்டனில் எப்.ஆர். சி.எஸ்., படித்து பட்டம் பெற்று இருந்தாலும் அவர்களால், ஆஸ்பத்திரியில், "ரிஜிஸ்தார்' என்ற வரையிலுமே பதவி உயர்வு அடைய முடியும். "கன்சல்டன்ட்' என்ற பதவியை நமது டாக்டர்கள் எளிதில் பெற்றுவிட முடியாது; வெள்ளைக்காரர்களுக்கு மட்டும்தான், "கன்சல்டன்ட்' பதவி கிடைக்கும். ஆனால், எனது டாக்டர் நண்பரின் திறமையை அவர்களால் ஒதுக்கித் தள்ள இயலவில்லை; உரிய பதவியை அளித்தே ஆக வேண்டும் என்ற நிலை வந்ததும், கொடுத்துவிட்டனர். இங்கு, "பிராக்டீஸ்' செய்யும், லண்டன், "ரிட்டன்' டாக்டர்கள் பலரும், லண்டனில், "ரிஜிஸ்தார்' பதவி வரையே அடைந்தவர்கள். அதற்கு மேல் பதவி உயர்வு கிடைக்காது என்று அறிந்த பின், வெறுப்பில் இங்கே வந்தவர்கள் தான்!
மூன்று வார விடுமுறையில் லண்டனிலிருந்து, சென்னை வந்திருந்த டாக்டர் நண்பர், தம்முடன் லண்டனில் பணியாற்றிய சில டாக்டர்களை பார்க்கச் சென்று இருந்தார். அவர்கள் எல்லாம், சென்னையில், கடந்த சில வருடங்களில் தோன்றியுள்ள, "பைவ் ஸ்டார்' கலாச்சார ஆஸ்பத்திரிகளில் பணியாற்றுகின்றனர். அவர்களிடமும், அந்தந்த மருத்துவமனைகளின் தலைமை டாக்டர்களிடமும் பேசிவிட்டு வந்த டாக்டர் நண்பர் கூறினார்.
"மணி... தினமும் குறைந்தபட்சம் மூன்று ஆபரேஷன்கள் செய்கிறேன் லண்டனில். ஆபரேஷனுக்கு உட்படுத்தப்பட வேண்டிய என்னிடம், "கன்சல்ட்' செய்யும் நோயாளிகள் ஏராளமானவர் இருக்கின்றனர். "மூன்று வார விடுப்பில் நான் இந்தியா போகிறேன். என் உதவி டாக்டரான வெள்ளையரைக் கொண்டு உங்களுக்கு ஆபரேஷன் செய்விக்க ஏற்பாடு செய்துவிட்டுப் போகிறேன்...' என அவர்களிடம் கூறினேன். "வேண்டவே வேண்டாம் டாக்டர்... நாங்கள் இன்னும் மூன்று வாரம் காத்திருக்கிறோம்!' என வெள்ளைக்கார நோயாளிகளே என்னிடம் கூறினர்.
"காரணம், என்னுடைய தொழில் நேர்மையும், திறமையும் தான். நான் ஆபரேஷன் செய்யும் நோயாளிகளில் ஆயிரத்திற்கு இருவர் கூட மாண்டு போவதில்லை; அப்படியே மாண்டு போனவர்களும், இந்த ஆபரேஷன் காரணமல்லாத வேறு காரணங்களாலேயே இறந்துள்ளனர்.
"தேவையில்லாத அநாவசிய டெஸ்டுகளை செய்யச் சொல்லி நான் வலியுறுத்துவது இல்லை. அதே போல, தேவையில்லாமல் அவர்களை ஆஸ்பத்திரியிலும் நாலு நாள், ஐந்து நாள் வைப்பதும் இல்லை.
"ஆனால், இந்திய மருத்துவம் தெய்வீகமாகக் கருதப்படாமல் வியாபாரமாகி விட்டது. நான் சந்தித்த மருத்துவமனைகளில் தலைமை மருத்துவர்கள், நான் லண்டனில், "கன்சல்டன்ட்' பதவி வகிப்பதாலும், என்னுடைய துறையில் திறமையான அறுவை சிகிச்சை நிபுணர்கள் இங்கு இல்லாததாலும், தமது மருத்துமனையில் பணியாற்ற என்னை அழைக்கின்றனர்.
"மாதம், "கியாரண்டீட்' ஆக ஒரு லட்சம் ரூபாய் வருமானத்திற்கு எனக்கு வழி செய்வதாகக் கூறுகின்றனர். அதே நேரம் தேவையோ, தேவை இல்லையோ, அந்த, "டெஸ்ட்!' இந்த, "டெஸ்ட்!' என்று ஆஸ்பத்திரிக்கு பணம் பண்ண உதவ வேண்டும் என்றும், "நோயாளி வந்த உடனேயே, "இன்டென்சிவ் கேர் யூனிட்'டில் அனுமதித்து, அதற்கு தனியே பணம் பண்ணி ஆஸ்பத்திரிக்குக் கொடுக்க வேண்டும்!' என்றும் கூறுகின்றனர்.
"நான், "இது போன்ற வேலைகளில் என்னால் ஈடுபட முடியாது. மருத்துவத் தொழிலை புனிதமாகக் கருதி ஈடுபட்டுள்ளேன். என்னால் உங்களுக்கு பயன் இருக்காது...' என்று அவர்களிடம் கூறிவிட்டு வந்துவிட்டேன்!' என்றார்.
எழுத்தாள நண்பர் ஒருவர் கூறக் கேட்ட சமாச்சாரம் இது:
"என் நண்பன் ஒருவன் மெடிக்கல் ஸ்டோர் ஆரம்பிக்க உள்ளான்...' என்றார்.
"சிரமமான தொழிலாச்சே... நிறைய பணம் முடக்க வேண்டியது இருக்குமே...' என்றேன்.
"அட, போப்பா... புரியாத புள்ளையா இருக்கியே... இப்போ அந்தக் காலம் எல்லாம் மாறிப் போச்சு... இரண்டு, மூணு டாக்டர்கள் கைவசம் இருந்தால் போதும்...' என புதிர் போடுவது போல பேசினார்.
"புரியவில்லை; விளக்கமாகக் கூறுங்கள்!' எனக் கேட்டேன்.
"மெடிக்கல் ஸ்டோர் ஆரம்பிக்கும் என் நண்பன் முதல் தான் போடுகிறான். அவனுக்கு மூன்று டாக்டர்கள் பழக்கம். அவர்கள் தான் இவனை மெடிக்கல் ஸ்டோர் ஆரம்பிக்கத் தூண்டியது. ஆனால், ஒரே ஒரு கண்டீஷன், ஒவ்வொரு டாக்டருக்கும் தலா மாதம், ரூபாய் இரண்டாயிரம் கொடுத்து விட வேண்டுமாம்!
"அதற்கு பிரதிபலனாக, இவரது கடையிலேயே மருந்து வாங்க அவர்கள் சிபாரிசு செய்வராம். அதுவும், வியாதிக்கு கண்டிப்பாகத் தேவை என்ற மருந்துகளுடன், ஜெனரல் மருந்துகளையும் எழுதிக் கொடுப்பராம்.
"அது மட்டுமல்ல, எல்லா வகை மருந்துகளையும் வாங்கி, ஸ்டாக் செய்து பணத்தை முடக்க வேண்டும் என்ற அவசியம் இல்லையாம்! இந்த டாக்டர்கள் குறிப்பிடும் 10 வகையான மருந்துகளில் மட்டுமே பணத்தை முடக்கினால் போதுமாம்!
"எப்படி பிசினஸ்?' என்றார்! 
"புனிதமான மருத்துவத் துறையை இனி, "மெடிக்கல் புரபஷன்' என அழைப்பதை விடுத்து, "மெடிக்கல் பிசினஸ்' என அழைக்கலாம்!' எனக் கூறி வைத்தேன்.
நன்றி: அந்துமணியின் பார்த்தது, கேட்டது, படித்தது. - தினமலர்-வாரமலர் (31-10-2010)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக