திங்கள், 16 ஜனவரி, 2012

9. பழனி யோகா ஆன்மீக இயற்கை நலவாழ்வியல் பயிற்சி முகாம் அனுபவப் பகிர்வுகள்.மூன்றாம் நாள் நிகழ்வுகள் 

மூன்றாம் நாள் நிகழ்வுகள் :- 28-12-2011: புதன் கிழமை காலை/முற்பகல்

திட்டமிட்டபடி அனைவரும் அதிகாலையிலேயே விழித்து யோகப்பயிற்சிக்குத் தயாரானோம்.

காலை மணி ஆறு
பள்ளியின் பின்னணியில் ஓங்கி உயர்ந்த கொடைமலை முகடுகளில் பனி கவிழ்ந்திருந்த காட்சியைக் காணக் காண மனசுக்கு மிகவும் ரம்மியமாக இருந்தது.

சிலீரென பனிக்காற்று வீசிக் கொண்டிருந்த அந்த இனிய காலைப் பொழுதில், பள்ளிப் பிரார்த்தனை மையத்தில் கூடிய அன்பர்களுக்கு நண்பர் பிரேம்குமார் சூரியநமஸ்காரம், பிராணாயாமம், மற்றும் சில எளிய பயிற்சிகளை கற்றுத் தந்தார்.

நிறைவாக சாந்தி ஆசனப் பயிற்சியை நான் அளித்து பயிற்சியை முடித்தோம்.  ஹாஸ்டல் கேண்ட்டீனில் இருந்து அனைவருக்கும் சூடான பிளாக்டீ கொண்டு வந்து வழங்கப்பட்டது. யோகப் பயிற்சியும், பிளாக்டீயும் சேர்ந்து தந்த புத்துணர்வில், கிடைத்த கொஞ்ச நேரத்தில் அன்பர்கள் சிலர் மைதானத்தில் வாலிபால் விளையாடினார்கள். எட்டுநடைப் பயிற்சி கற்றுத் தரப்பட்டது. பலதரப்பட்ட வாழ்க்கை பின்னணியில் இருந்து வந்திருக்கும் நாங்கள் எங்கள் வயதினை மறந்து குழந்தைப் பருவத்திற்குப் பின்னோக்கி பயணித்து எங்களை மறந்து கொண்டிருந்தோம்.

அடுத்த நிகழ்வுக்கு செல்லவேண்டுமே என்ற நினைவில் நாங்கள் எங்கள் டார்மிட்டரிக்கு சென்று சிறிது தேரத்தில் குளித்து விட்டு தயாரானோம்.  வரதமாநதி அணைக்கட்டுக்குச் சென்றோம். எங்களது முகாமில் இருந்து மூன்று கி.மீ தொலைவில் இருக்கிறது வரதமாநதி அணைக்கட்டு. இதன் உயரம் 65 அடி. இந்த அணையில் இருந்து கிடைக்கும் நீரை பயன்படுத்தி,  பழனி வட்டாரத்தின் சுற்றுப்புறத்தில் உள்ள கிராமங்களின் 6,500 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறுகின்றன. 


கடந்த முறை நான் வந்திருந்த போது நிரம்பி வழிந்த அணை.
கொடைக்கானல் மலைச்சாரலில் இருந்து பாலாறு பொருந்தலாறு, வரதமாநதி, குதிரையாறு மூலமாக நீர்வரத்து பெற்று பழனி, திண்டுக்கல் மாவட்டக் கிராமங்கள் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றன.  குதிரையாறு அணைக்குத் நாளை செல்வதாகாக பயணத்திட்டம் உள்ளது. கடந்த முறை நாங்கள் ஷண்முக நதிக்கு நீர் கொண்டு சேர்க்கும் ஷண்முகம்பாறை என்ற இடத்துக்குச் சென்று வந்த நினைவுகள் இன்னமும் பசுமையாக இருக்கிறது. தனியார் நிலத்தின் வழியாக அனுமதி பெற்றுத் தான் இந்தப் பாறைக்குச் செல்ல இயலும். இந்தமுறை மாற்றாக வேறு ஒரு இடத்துக்கு செல்லலாமே என்று குதிரையாறு அணைக்குச் செல்லும் வாய்ப்பை யோகாச்சாரியா முருகன்ஜி உருவாக்கினார்.

காலை மணி எட்டு
நாங்கள் ஒரு பஸ்சில் ஏறி அணைக்கட்டு இருந்த இடத்தை அடைந்தோம். பஸ் நிறுத்தத்தில் இருக்கும் ஒரு மூதாட்டியின் கடையில் அனைவருக்கும் சூடான சுக்கு கஷாயம் கிடைத்தது. சிலர் ஒரு கோப்பைக்கு மேலேயே கேட்டு வாங்கி சாப்பிட்டார்கள். பரிவுடனும் அக்கறையுடனும் எங்களை உபசரித்த அந்த மூதாட்டியுடன் நாங்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டோம். இவருக்கு ஒரே மகன். கணவனை இழந்தவர். மகன் எந்த வேலையிலும் இல்லாமல் வெட்டியாக திரிந்து குடித்து பொழுதினை போக்கிக் கொண்டிருக்க அகவை ஐம்பத்தேழிலும் டீ, தோசை சுட்டு விற்று அதில் வரும் வருமானத்தில் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார். நல்ல வேளையாக தமிழக அரசின் சத்துணவு திட்டத்தில் தொகுப்பூதியம் பெறும் சமையல்காரர் பணியினை செய்து வருவதால் ஓய்வூதியம் பெறும் வாய்ப்பு இவருக்கு இருக்கிறது. தன் கையே தனக்குதவி என்று இந்த வயதிலும் உழைப்பு மட்டுமே மூலதனமாகக் கொண்டு தன்னம்பிக்கையுடன் செயல்படுகிறார் இந்தப் பெண்மணி.

அந்த மூதாட்டியின் அன்பான உபசரிப்புக்கு நன்றி தெரிவித்து, அணைக்கட்டை நோக்கி அனைவரும் நடந்தோம். கடந்த 2009 ஆண்டு இறுதியில் பழனியில் நடைபெற்ற இதே போன்றதொரு முகாமில் கலந்து கொள்ள நானும் பிரேமும் வந்திருந்த போது கூட இந்த அணைக்கட்டுக்கு நாங்கள் வந்திருந்தோம். 

அப்போது அணைக்கட்டு நிறைய தண்ணீர் நிறைந்து காணும் இடமெங்கும் பிரவாகமாக தண்ணீர் விழுந்து கொண்டிருந்தது. இப்போது அந்த அளவிற்கு தண்ணீர் வரத்து அணையில் இல்லை. அணை ஓரளவுக்கு நிறைந்திருக்க, நீர் அணையின் மேற்புறமாக வழியவில்லை. கீழ்ப்புறமாக திறந்திருந்த வழியாக நீர் பிரவகித்து வெளியேறிக் கொண்டிருந்தது. 
 முகாமின் உணவுத் தயாரிப்பாளர் குடந்தை ரமேஷ்.

 அணையில் இருந்து வெளியேறும் சொற்ப நீர்.

 பாசனத்துக்காக கீழ்ப் பகுதி வழியாக வெளியேற்றப்படும் நீர்.

 ரம்யமான இயற்கைக் காட்சி.

தாய் மடியை நினைவு படுத்தும் மரகதப் பசுமை 

அந்தச் சூழ்நிலை மாசுபடியாத காற்று, சுத்தமான நீர்ப்பரப்பு, பறவைகளின் காலை நேர பூபாளராகங்கள் என சுற்றுப்புறம் மிகவும் அமைதியாக இருந்தது. நாம் குழந்தையாக இருந்தபோது நிம்மதியாகப் படுத்திருந்த தாய்மடி தந்த உணர்வும் நிம்மதியும் எங்களை ஆட்கொண்டது.

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், பழநி வரதமாநதி அணையை பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இங்குள்ள மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், பழநி-கோடைக்கானல் ரோட்டில் வரதமாநதி அணை உள்ளதால் நிறைய சுற்றுலாப் பயணிகள் இந்த அணையைக் கடந்து செல்கிறார்கள்.

பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த அணையில், குளுமையான சூழலை வழங்கும் பசுமையான மரங்கள் பல உள்ளன. இவை தவிர குடும்பத்தினருடன் பொழுது போக்குவதற்கான பூங்காவும் உள்ளது. பண்டிகை காலம் மட்டுமின்றி வாரந்தோறும் சனி, ஞாயிறு கிழமைகளில், இங்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. கையோடு கொண்டு வரும் உணவுப் பொருட்களை சாப்பிட்ட பின்னர் சுற்றுலா வருவோர் விட்டெறியும் பிளாஸ்டிக் பைகள், பாட்டில்களை அகற்றாமல் சுற்றுச்சூழல் மாசுபடும் வாய்ப்பு அதிகரித்து வருகிறது.

அனுமதி இலவசம் என்பதாலோ என்னவோ அணையை பராமரிப்பதில் அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை என்பது சுகாதார சீர்கேடுகளில் இருந்து தென்படுகிறது. அணை அருகே மலைக்குன்றில் அமைக்கப்பட்டுள்ள ஓய்வு அறையும், பராமரிப்பின்றி பாழடைந்துள்ளது. செடிகள் அடர்த்தியாக வளர்ந்துள்ளதால், இங்குள்ள பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள சிலை செடிகளுக்குள் மறைந்து காணப்படுகிறது. குழந்தைகளுக்கான விளையாட்டு அமைப்புகளும், பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.இவற்றை பயன்படுத்தும் வகையில் சீரமைத்து, அணைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்.இதுபற்றி நாளிதழ்களில் பலமுறை செய்திகள் வெளியிட்டும் நிர்வாகம் பாராமுகமாக இருப்பதாக இந்தப் பகுதி மக்கள் குறைப்பட்டுக் கொண்டார்கள்.

காலை மணி ஒன்பது:
நாங்கள் அனைவரும் அணைக்கட்டில் ஏறி சென்று பின்னணியில் பரவிக் கிடக்கும் நீர்ப் பரப்பை கண்களால் அளக்க முயன்று தோற்றுப் போனோம். இயற்கை அழகை அனைவரும் தம்முடன் கொண்டு வந்திருந்த காமிராவுக்குள் போட்டி போட்டுக் கொண்டு படங்களாக சேமித்துக் கொண்டார்கள். 





கொஞ்ச நேரம் அழகை ரசித்த பின்னர் ஒரு அமைதியான இடம் பார்த்து கொண்டு வந்த விரிப்பினை விரித்து அமர்ந்தோம்.அனைவருக்கும் பலவிதமான பழங்கள் சாப்பிடத் தரப்பட்டன. 

சிந்தனை விருந்துக்கு முன்னர் கொஞ்சம் கனி விருந்து.

யோகசாரியாவுடன் முகாம் அன்பர்கள்.

கடந்த முறை முகாமுக்கு வந்திருந்த செந்தில் அவர்களின் தம்பி.

சற்று நேரத்தில் யோகாசாரியா முருகன்ஜி வந்து சேர்ந்தார். தியான பயிற்சி துவங்குவதற்கு முன்னதாக முருகன்ஜி என்னைப் பேச அழைத்தார். பயிற்சி பெறும் மாணவனாக வந்த என்னை அழைத்த வியப்பின் மேலீட்டால் தயங்கிய நான் முதலில் நன்றிகளைத் தெரிவித்து எனது எண்ணங்களை பகிரத் தொடங்கினேன்.

(பகிர்வுகள் தொடரும்)

ஞாயிறு, 15 ஜனவரி, 2012

நலவாழ்வியல் புத்தக மதிப்புரை: நலமிக்க வாழ்க்கை முறை

எல்லோருக்கும் எனது பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

நேற்று சென்னை புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்களில் இருந்து ஒரு நலவாழ்வியல் தொடர்பான புத்தகம் பற்றி இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஆயுர்வேத அடிப்படையிலான உணவு மற்றும் பானம் பற்றிய தொகுப்பாக திரு.சி.வே.ராதாகிருஷ்ண சாஸ்திரி அவர்களால் எழுதப்பட்டு அகஸ்தியர் பதிப்பகம், தெப்பக்குளம், திருச்சி-20 ல் இருந்து பதிக்கப்பட்ட இந்நூல் ஒரு அரியதொரு நலவாழ்வியல் வழிகாட்டி நூலாகும்.

நூலைப் பற்றிய அறிமுகம்:

நலமிக்க வாழ்க்கை முறை - உணவும் பானமும் (ஆயுர்வேதம் கண்டது) - பாகம் ஒன்று & இரண்டு. (ஒரே நூலாக)

220 பக்கங்கள் கொண்ட இந்நூலின் நோக்கம் என்ன என்பதை நூலாசிரியரின் முன்னுரையில் இருந்தே காணலாம்.

சென்ற தலைமுறையினர் காலதேசச் சூழ்நிலைகளில் பரபரப்பின்றி கடமையுணர்ச்சியும், நல்வழியில் ஆர்வமும் கடும்பயிற்சியும் கொள்வதில் தயங்காமல் ஒரே சீராக வாழ்த்தனர். அவர்கள் ஏற்ற நடைமுறை இன்றைய விஞ்ஞான அவசரகால நடைமுறைக்கு ஒத்துவருமா என்று சிந்திக்கத் தூண்டியுள்ள இன்றைய சூழ்நிலையில், அவர்கள் நடைமுறையில் இருந்த ஏற்புடைமை பற்றி அறிமுகப்படுத்துவதே இந்நூலின் நோக்கம். உணவும், பானமும், பத்தியமும், அபத்தியமும், மக்களின் நோயற்ற நல்வாழ்வு பற்றிய சிந்தனையைத் தூண்ட உதவுமென்ற நல்லெண்ணத்துடன் இந்நூலை தமிழ் மக்கள் முன் ஸமர்ப்பணம் செய்கிறோம்.

சுமார் அறுபது தலைப்புக்களில் வாழ்க்கை முறையை எவ்வாறு நோயின்றி அமைத்துக் கொள்ளலாம் என்று அழகாக இந்த நூலில் கூறப்பட்டுள்ளது. இயற்கைத் தேவை மூன்று, உடலைத் தாங்கும் மூன்று என வாழ்க்கைத் தேவைகளை இனம் பிரித்து தெளிவான தமிழில் ஆங்காங்கே தேவைப்பட்ட இடங்களில் சமஸ்கிருத மேற்கோள்களுடன் சுவாரசியம் குன்றாமல் விளக்கி இருக்கிறார் ஆசிரியர்.நலவாழ்வு பற்றி அக்கறை கொண்டோர் ஒவ்வொருவரும் வாங்கிப் படித்துப் பயன்பெற வேண்டிய நூல் இது. 

நூலின் விலை ரூ.190/-

சனி, 14 ஜனவரி, 2012

வாழி நலம் சூழ... பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக.


பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.


எண்ணம் யாவிலும் நெஞ்சினித்திட,
பேசிடும் சொற்களில் நாவினித்திட,
செயல்கள் தோறும் இனிமை விளைந்திட,

இனி வரும் நாளெல்லாம் 
எல்லோர் வாழ்விலும் நனி வளம் பெருகிட,
பொங்கும் மங்கலம் என்றும் தங்கிட,
என்னாணை அம்பலத்தான்
இன்னருள் வேண்டி யான்
வணங்குவன் நிதமும். 

வாழி நலம் சூழ...

' அன்பே சிவம்' அஷ்வின்ஜி.
பிரபஞ்சத் துகளில் 'நான்' யார்?

புதன், 11 ஜனவரி, 2012

8. பழனி யோகா-ஆன்மீக-இயற்கை நலவாழ்வியல் பயிற்சி முகாம் - இரண்டாம் நாள் அனுபவப் பகிர்வுகள்

பழனி முகாம் அனுபவப் பகிர்வுகள்.
இரண்டாம் நாள் நிகழ்வுகள் (தொடர்கிறது)

வாழை இலைக்குளியலை எடுத்து முன்பெப்போதுமில்லாத வகையில் புத்துணர்வு பெற்ற மகிழ்ச்சியுடன் அவரவர் அறைக்குச் சென்று உடை மாற்றல், சற்றுநேர ஆசுவாசம் என சுதாரித்துக் கொள்ளச் சென்றார்கள். சத்சங்க நிகழ்வுக்காக சுமார் ஐந்தரை மணியளவில் அனைவரும் பள்ளியின் பிரார்த்தனை ஹாலில் சத்சங்கம் ஒன்றிற்காக வந்து குழுமும்படி சொல்லப்பட்டது. நிகழ்வுக்கு முன்னதாக சிறிது நேரத்தை சேமித்துக் கொண்ட சில அன்பர்கள் விளையாட்டு மைதானத்தில் வாலிபால், கிரிக்கெட்டு போன்ற விளையாட்டுக்களை ஆடி மகிழ்ந்தார்கள்.

சதசங்கத்துக்கு அன்பர்கள் குழுமியதும் பேசிய தவத்திரு.சின்னசாமி, 'பிராண-தத்துவம்' எனும் தலைப்பில் பேசி செயல்முறையாக செய்துகாட்டி விளக்கம் தந்தார்கள். மிகச் சர்வசாதாரணமாக தாயுமானவர் பாடல்களும், திருமந்திரமும் அவரிடம் இருந்து வெளிப்பட்டதும் இன்றி அவற்றுக்கேற்ற பொருள் விளக்கமும் தந்தார்.

பிராணாயமத்தில் ஒரு வகையான கும்பகப் பிராணாயமத்தை அவர் அனாயாசமாக எங்களுக்குச் செய்து காட்டினார். மூச்சை உள்ளிழுத்து வெகுநேரம் வெளிவிடாமல் நிறுத்தும் அந்தர்-கும்பகம் என்ற பிராணாயாமத்தை இரண்டு நிமிடங்கள் வரை நிறுத்தியும், பின்னர் மூச்சை வெளியேற்றி விட்டு பகிர்-கும்பகம் எனும் மூச்சில்லாமல் இருக்கும் நிலையில் இரண்டு நிமிடங்களும் இருந்து காட்டி அனைவரையும் வியப்புக்குள் ஆழ்த்தினார். வாசியோகத்தைப் பற்றி நிறையப் படித்திருக்கும், பலருக்கு இந்த நேரடி அனுபவம் களிப்பூட்டுவதாக இருந்தது.

புளியமரத்து ஷெட்டு தவக்குடிலில் இரண்டு ஆண்டுகள் தனிமைத் தவம் இருந்து இந்த பிராணாயாமச் சாதனையை பயின்றதாக தெரிவித்தார். இதுவரை தனக்கு எந்தவிதமான நோயும் வந்ததில்லை,எனவே எந்தவிதமான வைத்தியமும் எடுத்துக் கொள்ள நேர்ந்ததில்லை என்று கூறி அனைவரையும் அசரவைத்தார் அந்த எழுபத்தைந்து வயது இளைஞர்.

இந்த பெரியவருடன் எங்களுக்கு தேடக் கிடைக்காத ஒரு அற்புதமான சத்சங்கம் நிறைவடைந்ததும், 'மெய்த்தவம்' திருச்செந்தில் அடிகள் பிரம்மசூத்திரத்தில் இருந்து சில முக்கிய பகுதிகளை அருமையாக விவரித்தார். அன்பர்களின் ஐயம் தெளிதலுக்குப் பின்னர் இரண்டாம் நாள் பயிற்சி நிறைவுக்கு வந்தது.

முகாமின் மூன்றாம் தினமான நாளைக்கு   கொடைக்கானலுக்கு இன்பச்செலவு செல்வதாக திட்டம் இருந்தது. கொடைக்கானலில் குளிர் அதிகம் என்பதால் அந்த பயணத்தை ரத்து செய்து விடலாம் என யோகா.முருகன்ஜி யோசனை சொன்னார். பெருவாரியான அன்பர்கள் இந்த முடிவினை ஒப்புக்கொண்ட போதிலும் சிலருக்கு இந்த எதிர்பாராத முடிவு ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது. எனினும் சூழ்நிலையை அனுசரித்து கொடைக்கானல் பயணத்தை ரத்து செய்ய அனைவரும் ஏகமனதாக ஒப்புக் கொண்டார்கள்.

அதற்கு மாற்று ஏற்பாடாக நாளைக் காலையில் அனைவரும் வரதமாநதி அணைக்கு செல்வது எனவும் அங்கு சத்சங்கம் மற்றும் தியானப் பயிற்சியை செய்து விட்டு, முகாமுக்குத் திரும்பி மதிய உணவுக்குப் பின்னர் பழனிக்கு சென்று மலைக் கோவில் மற்றுமுள்ள இதர கோவில்களைச் சுற்றிப் பார்ப்பது என்று முடிவானது.

காலை யோகப் பயிற்சிகளை வழக்கப்படி பள்ளி வளாகத்தில் செய்து முடித்த பின்னர் வரதமாநதி அணைக்கட்டுக்கு செல்வது என்று முடிவானது.அன்றிரவு உணவாக எல்லோருக்கும் அவல், பேரீச்சை மற்றும் பலவிதமான பழங்கள் வழங்கப்பட்டன. இரவு உணவுக்குப் பின்னர் அனைவரும் உறங்கச் சென்றோம். சென்னை இயற்கைப்பிரியனும், பழனி BSNL-பாஸ்கரும் அன்றிரவு எங்களுடன் டார்மிட்டரியில் தங்கினர்.
(பகிர்வுகள் தொடரும்)

7. பழனி யோகா-ஆன்மீக-இயற்கை நலவாழ்வியல் பயிற்சி முகாம் - இரண்டாம் நாள் அனுபவப் பகிர்வுகள்


பழனி முகாமின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் (தொடர்ச்சி)

நேரம்: முற்பகல் நேரம். 
இடம்: ரங்கசாமி கரடு (பழனி-கொடைக்கானல் சாலை)  
நிகழ்வு: வாழை இலைக குளியல் 

ரங்கசாமிகரட்டில் உள்ள தோட்டத்திலும் ஒரு அழகான தவக்குடில் அமைந்துள்ளது. தமிழ்நாடு இரும்பு வணிகம் உரிமையாளர் திரு.மணி அவர்களது தந்தை தவத்திரு.சின்னசாமி அவர்கள் 75 வயது நிரம்பிய இளைஞர். கடந்த 25-ஆண்டுகளாக இயற்கை உணவுகளை மட்டுமே சாப்பிட்டு ஆரோக்கியமாக இருக்கிறார். இவர் திருப்பராய்த்துறை தபோவனம் சுவாமி சித்பவானந்தாவிடம் ஆன்மிகம், வேதாந்தம் பயின்றவர். 
தவத்திரு.சின்னசாமி ஐயா 
(நடுவில் அமர்ந்திருப்பவர்)

பிராண தத்துவம் என்ற தலைப்பில் எங்களுக்கு தவத்திரு.சின்னசாமி ஐயா அனுபவ உரை ஒன்றினை இன்று மாலை வழங்கிட இருக்கிறார். இது போன்ற பல இயற்கை நலவாழ்வியல் முகாம்களை முப்பது ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தின் முன்னோடி இயற்கை நலவாழ்வியல் அறிஞர்களில் ஒருவரான தவத்திரு.மு.இராமகிருஷ்ணன் அவர்களைக் கொண்டு பழனி கொடைக்கானல் மலைச்சாரலில் தேக்கந்தோட்டம் எனும் இடத்தில் முகாம் நடத்திய அனுபவசாலியான இவர் இப்போது தேக்கந்தோட்டத்தில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதினால் அந்த இடத்தில் ஏற்பாடு செய்யஇயலவில்லை என எங்களிடம் கூறினார்.

ரங்கசாமி கரடு எனப்படும் இந்த இடம் ரங்கசாமி மலைச்சாரலில் உள்ள ஒரு இடம். ரங்கசாமி மலையின் உச்சியில் ஒரு பெருமாள் கோவில் உள்ளது. இந்த முறை எங்கள் பயணத் திட்டத்தில் இந்த மலைக் கோவில் இடம் பெறவில்லை. காலையில் புறப்பட்டால் மாலை தான் திரும்பி வர இயலும். கொஞ்சம் நெட்டுக் குத்தான கரடு முரடான மலைப்பாதை என்பதால் இந்த இடம் தேர்வாகவில்லை. அடுத்த முக்கிய காரணம், காட்டு யானைகளில் நடமாட்டம் சமீப காலமாக இந்த மலைப்பகுதியில் அதிக அளவில் உள்ளது. 

இவரது தோட்டம் சற்று உயர்ந்த பகுதியில் இருக்கிறது. தவக்குடிலை தோட்டத்திலயே மிகவும் உயர்ந்த பகுதியில் அமைத்திருக்கிறார் திரு.சின்னசாமி ஐயா. இந்த உயர்ந்த பகுதியில் இருந்து பார்த்தால் பழனி மலை தெளிவாகத் தெரியும். அப்படியே வலதுபுறம் பார்வையிடும் போது நான்கு கி.மீ தொலைவில் உள்ள வரதமாதேவி அணைக்கட்டு தெளிவாகத் தெரியும். அதேபோல அணைக்கட்டில் இருந்து பார்த்தால் இந்தத் தவக்குடில் மட்டுமே கண்ணுக்குத் தெரியும் வகையில் அமைந்திருக்கிறது.

இந்தத் தோட்டத்தில் தென்னை பயிரிடப்பட்டு உள்ளது. மலையை ஒட்டிய மின்வேலிக்கருகே ஒரு பெரிய கல்லாலமரம் அமைந்திருக்கிறது. இந்தக் கல்லாலின் அடியில் மிக விரைவில் ஒரு தட்சிணாமூர்த்தி திருவுருவச் சிலை பிரதிஷ்டை செய்யப்பட இருப்பதாக திரு.மணி (திரு.சின்னசாமி அவர்களின் மகன்)அவர்கள் ஞாயிறு அன்றே இந்த இடத்தை பார்வையிடச் சென்ற சமயத்தில் எங்களிடம் தெரிவித்திருந்தார்.

இந்த தோட்டத்தைப் போலவே எங்களது முகாமை ஒட்டிய ஊரான அண்ணா நகர் என்ற இடத்திலும் ஒரு தோட்டம் இருக்கிறது. அங்கேயும் ஒரு தவக்குடில் அமைந்துள்ளது. 

அண்ணா நகர் தோட்டத்தில் உள்ள மாமரங்கள் சூழ்ந்த தவக்குடில். 

இந்த இடத்தில்தான் முதலில் எங்களுக்கான முகாம் நடத்துவதாக திட்டமிடப்பட்டு இருந்தது.அடர்ந்த மாமரத் தோப்பின் நடுவில் ஒரு அழகிய  தவக்குடில் அமைக்கப்பட்டு உள்ளது. ஒரு குளியலறையும், கழிப்பறையும் கட்ட ஆரம்பித்த நிலையில் முகாம் துவங்குவதற்கு முன்னர் முடிக்கப்படாமல் இருப்பதினால் (காரணம் வீடு கட்டும் ஆட்கள் பற்றாக்குறை!) வேறு வழியின்றி முகாம் இடம் தற்போதைய இடமான புளியந்தோப்புஷெட்டுக்கு மாற்றப்பட்டதாம்.

யோகாச்சாரியாவுடன் நானும், நண்பர் ப்ரேமும் ஞாயிற்றுக்கிழமை அன்றே மூன்று தோட்டங்களையும் பார்வையிட்டோம்.வெள்ளையடித்தல், சிதைந்து போன இடங்களில் சிமென்ட் பூசுதல், மின் இணைப்புகள், குளிப்பறை, கழிப்பறைகளில் குழாய் வசதிகள் செய்தல், உடைந்திருந்த கதவுகளை சீரமைத்தல், அன்பர்கள் அமர வசதியாக மேடும் பள்ளமுமாக இருந்த இடத்தை சமன்படுத்துதல், செடிகொடிகளை அகற்றி சமநிலைப்படுத்தல் என்று பல உட்கட்டமைப்பு வேலைகளை தோட்ட உரிமையாளர் திரு.மணி அவர்கள் நேரடியாக ஆட்களை பார்வையிட்டு வேலை வாங்கிக் கொண்டிருந்ததை நாங்கள் கண்டோம்.

ஞாயிறு காலையில் புளியமரத்து ஷெட்டு முகாமுக்கு விஜயம்.
உரிமையாளர் திரு.மணியுடன் பிரேமும், நானும்.

 முகாமின் சூழல். மரகதப் பச்சையாய் புல்வெளிகள்.

 புளிய மரத்து ஷெட்டு முகாமில் உள்ள கிணற்றுக்கருகில் யோகாச்சாரியாவுடன்..

யோகாச்சாரியா, நண்பர் பிரேம்குமார் உடன்

புளியமரத்து ஷெட்டு தவக்குடிலில் 
ஞாயிறு அன்று நடந்த வேலைகள்.

தனியான ஒரு கொட்டகை போடப்பட்டு கீழே காயர் விரிப்பும் அதற்கு மேலே பெரிய கல்யாண ஜமுக்காளங்களும் போடப்பட்டு குழல் விளக்குகள் பொருத்தப்பட்டு திருவிழாக் கோலமாக புளியமரத்துஷெட்டு தோட்டத்தை மாற்றிக் கொண்டிருந்தார்கள். இதற்கான பெரும் பொருட்செலவுகளை திரு.மணி அவர்களே ஏற்றுக் கொண்டு இந்த இடத்தை தயார் செய்து கொடுத்தார் என்பதை நன்றியறிதலோடு நான் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன். நேற்று திரு.மணி அவர்களை போலவே அவரது தந்தை தவத்திரு.சின்னசாமி ஐயா அவர்கள் இன்று (செவ்வாய்) ரங்கசாமிகரடு தோட்டத்துக்கு முன்னரே சென்று குளிக்கத் தண்ணீர் வசதி போன்றவற்றை முன்னேற்பாடு செய்து விட்டு எங்களை வரவேற்கக் காத்திருந்தார். எங்கள் குழுவினர் வந்து சேர்ந்ததும் ஆண்கள் ஒரு இடத்திலும், பெண்கள் வேறொரு ஒரு இடத்திலுமாக வாழையிலைக் குளியலுக்கு தயாரானார்கள்.

சுமார் இரண்டு மணியளவில் அனைவரும்  வாழையிலைக் குளியல் எடுத்து முடிந்ததும், தோட்டத்துக்கு எதிரே அமைந்துள்ள மற்றொரு தோட்டத்தில் உள்ள பம்ப்ஷெட்டில் நீர் இறைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. முதலில் பெண்கள் அனைவரும் குளித்து முடிக்க அதைத் தொடர்ந்து ஆடவர்கள் குளித்ததும் அனைவருக்கும், இளநீர் வழங்கப்பட்டது. மரத்தில் இருந்து நேரடியாக பறித்து உடனே சீவப்பட்ட இளநீர் அருந்த மிகவும் ருசியாக இருந்தது.

சென்னையில் நாம் அருந்தும் காய்கள் பல நாட்களாக லாரிகளில் வெய்யிலில் காய்ந்து வருவதினால் ருசி இருப்பதில்லை. அவற்றின் மருத்துவப் பயன்களும் பெருமளவில் குறைந்து விடுவதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளது. ஆனால் நாங்கள் குடித்த இளநீரின் மருத்துவ குணம் நூறு சதம் எங்களுக்கு கிடைத்ததில் நாங்கள் பெருமகிழ்வு எய்தினோம். பின்னர் வழுக்கையை சுரண்டி சாப்பிட்டோம். சில இரண்டு மூன்று முறை இளநீர்களை கேட்டு வாங்கி அருந்தினார்கள். அன்பர்கள் திருப்தி அடையும் வரை வேண்டிய அளவுக்கு அருந்திட இளநீர் தரப்பட்டது. 

மனதும் வயிறும் நிறைய இளநீரும், அழுக்கும், அசதியும் தீரக் குளிக்கும் வசதியையும் செய்து தந்த தோட்ட உரிமையாளருக்கும், அனைத்து வசதிகளையும் இன்முகத்துடன் செய்து தந்த அவரது அன்புக் குடும்பத்தினருக்கும், எங்களது இதயநிறை நன்றிகளை தெரிவித்துவிட்டு அணிவரும் மீண்டும் ஹாஸ்டலுக்குத் திரும்பினோம்.
(பகிர்தல் தொடரும்)

பகுதி ஏழு >>>>

செவ்வாய், 10 ஜனவரி, 2012

6. பழனி யோகா-ஆன்மீக-இயற்கை நலவாழ்வியல் பயிற்சி முகாம் - அனுபவப் பகிர்வுகள்

பகுதி ஆறு:

இரண்டாம் நாள் நிகழ்வுகள்: 
27.12.2011 செவ்வாய் காலை, முற்பகல், பிற்பகல், மாலை

எங்கள் தோட்டத்துக்கு எதிர்ப்புறம் மிகவும் பரந்த நிலப்பரப்பில், கொடைக்கானல் மலைச்சாரலில், பிரம்மாண்டமாய் அமைந்திருந்த வேலன் விகாஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி எல்.கே.ஜி யில் இருந்து ப்ளஸ்டூ வரை வகுப்புக்களை கொண்டிருக்கிறது. நாங்கள் தங்கி இருந்த அந்த சமயத்தில் ப்ளஸ்டூ மாணவ மாணவியர் மட்டும் ஹாஸ்டலில் தங்கி இருந்தார்கள். அவர்களுக்கு இரவு பத்து மணி வரை சிறப்பு வகுப்புக்கள் (இது விடுமுறைப் பொழுது என்ற போதிலும்) நடந்து கொண்டிருந்தன. 

பள்ளி வளாகத்தில்...  
தோட்டக்காரர் தமது மகனுடன்.

பள்ளியில் பூத்துக் குலுங்கும் மலர்கள். 

 விதம் விதமான வண்ணங்களில்...

 முள்ளில் மலர்ந்த மலர்க் கூட்டம்.

பூ பார்க்க அழகாயிருக்கிறது.

தீவிரமான கல்வி போதிப்புகளிடையே மாணவர்களுக்கு குதிரை ஏற்றம், களரி, சிலம்பம், கத்தி வீச்சு, குங்க்பூ, கராத்தே, யோகா, நீச்சல் குளம் என்று அனைத்து வீரதீர விளையாட்டுக்களுடன், மற்ற விளையாட்டு மற்றும் தடகளப் பயிற்சிகளும் சொல்லித் தரப்படுகின்றன. ஆங்கிலத்தில் சரளமாக பேசுதல், பேச்சுத் திறன், போன்ற பயிற்சிகளும், போட்டிகளும் நிகழ்த்தப் பட்டு திறமையாளர்களை அடையாளம் காணவும், ஆர்வமுள்ளவர்களுக்கு ஊக்கம் தருதல் போன்ற சிறப்பம்சங்கள் கொண்ட அறிவாலயமாக விளங்குகிறது இந்த வேலன் விகாஸ் பள்ளி. 

பள்ளி வளாகத்தில் 
 குதிரை மேய்ந்து கொண்டிருக்கிறது.

 விடுமுறை ஓய்வில்

அருமையான விளையாட்டுத் திடலுடன் ஹாஸ்டல் பிளாக் இணைந்திருக்கிறது. காலையில் நான்கு மணிக்கு அலாரம் வைத்து அனைவரையும் எழுப்பி யோகா செய்ய தயாராகி வெளியே வந்த போது காலை மணி ஆறு ஆகி இருந்தது. 

பள்ளி வளாகத்தின் பின்னணியில் கொடைக்கானல் மலையை பனி மேகங்கள் சூழ்ந்திருக்க, காற்றில் குளிர் அதிகம் தெரிந்தது. யோகப் பயிற்சிக்காக பிரார்த்தனை ஹாலில் அன்பர்கள் தத்தம் விரிப்புக்களுடன் வந்து சேர்ந்தார்கள்.நண்பர் பிரேம்குமார் யோகப்பயிற்சிகளை சொல்லித்தர ஆரம்பித்தார். சூரிய நமஸ்காரம், உடல் தளர்வுப் பயிற்சிகள், நின்ற நிலை ஆசனங்கள், அமர்ந்த நிலை ஆசனங்கள், குப்புறப் படுத்த நிலை ஆசனங்கள், மல்லாந்து படுத்த நிலை ஆசனங்கள், பிராணாயாமம் போன்றவற்றில் இருந்து தேர்ந்தெடுத்த சில பயிற்சிகள் சொல்லித் தரப்பட்டன. பின்னர் சாந்தி ஆசனம் என்று அழைக்கப்படும் யோகநித்ரா (அறிதுயில்) பயிற்சியை அனைவருக்கும் நான் அளித்தேன்.

ஒரு மணிநேர யோகாசனப் பயிற்சிக்குப் பின்னர் ஹாஸ்டல் காண்டீனில் இருந்து அனைவருக்கும் சூடான பிளாக்டீ வழங்கப்பட்டது. டீ அருந்திய பின்னர் வாலிபால் அரங்கில் நமது அன்பர்கள் சற்று நேரம் வாலிபால் ஆடி மகிழ்ந்தார்கள். எட்டு நடைப் பயிற்சி எனும் தமாஷான நடைப்பயிற்சியை அனைவரும் மேற்கொண்டோம். சென்னை நண்பர் நாகராஜன் சீரியசாக திடலைச் சுற்றி ஜாகிங் சென்று கொண்டிருந்தார்.

இன்று உபவாச தினம். மேலும் வாழைஇலைக் குளியல் இருப்பதினால் திடமான உணவுகளைத் தவிர்த்தாக வேண்டும். திரவ வடிவிலான சாறுகள், எலுமிச்சை, நெல்லி, தேன் கலந்த பானங்களை வேண்டும் போதெல்லாம் அருந்தலாம்.

காலை யோகாசார்யா முருகன்ஜி வந்து சேர்ந்தார். அவருடன் சென்னையைச் சேர்ந்த இயற்கைபிரியன் (இரத்தின சக்திவேல்) வந்திருந்தார். இவர் இயற்கை நலவாழ்வியல் தொடர்பாக சுமார் அறுபது புத்தகங்களை எழுதி இருக்கிறார். இயற்கை நலவாழ்வியல் முகாம்களில் கலந்து கொண்டு உரை நிகழ்த்துவதோடு அல்லாமல் தனது புத்தகங்களைக் கொண்டு வந்து விற்பனை செய்துவிடுவார். கலகலப்புடன் பழகிச்  சிரிக்கச் சிரிக்க உரை நிகழ்த்தி அனைவரையும் சிந்திக்க வைப்பதில் விற்பன்னர் இந்த இயற்கைப் பிரியன். குடந்தை அருகே உள்ள திருப்பனந்தாளில் நாளை தொடங்கவிருக்கும் சங்கப்பிரக்ஷாலனக்கிரியா மற்றும் இயற்கை நலவாழ்வியல் முகாமில் அவர் உரை நிகழ்த்த செல்லும் வழியில் இன்று பழனியில் இறங்கி எங்களோடு உரையாட வந்திருக்கிறார்.

அனைவரும் புறப்பட்டு ரங்கசாமிகரடுக்கு செல்ல ஆரம்பித்தோம். வாழையிலைக் கட்டு ஒரு டூவீலரில் எடுத்துச் செல்லப்பட்டது. இன்று வெய்யில் மிகவும் கம்மியாக அடித்தது. மேகமூட்டம் இருந்ததால் வெயிலில் அதிக உஷ்ணம் இல்லை. வாழை இலைக் குளியலுக்கு சுள்ளென்று வெயில் இருந்தால் நிறைய வியர்வை வெளியேறும். இந்த மாதிரி சூடுகுறைந்த வெயிலில் மண்குளியல் சாத்தியம் இல்லை என்பதால் அனைவருக்கும் வாழையிலைக் குளியல் தருவது என்று முடிவானது.

(பகிர்தல் தொடரும்)

சனி, 7 ஜனவரி, 2012

5. பழனி யோகா-ஆன்மீக-இயற்கை நலவாழ்வியல் பயிற்சி முகாம் - அனுபவப் பகிர்வுகள்

பகுதி ஐந்து.

முதல் நாள் நிகழ்வுகள்: 26.12.2011(திங்கள்கிழமை)

முகாம் தொடங்கிய நாளான இன்று காலை முகாமில் ஒரு ஹோமம் செய்து விட்டு அனைவரும் பழனி நகரில் உள்ள தயாசதனில் நடந்த தொடக்க விழாவில் கலந்து கொண்டபின்னர் அனைவரும் மதிய உணவுக்காக மீண்டும் தவக்குடில் அமைந்திருந்த புளியமரத்துஷெட்டு முகாமுக்குத் திரும்பினோம்.

நாங்கள் வந்து சேர்ந்திருந்த போது குடந்தை ரமேஷ் (இயற்கை உணவுத் தயாரிப்பாளர்) தன்னந்தனியாளாக முப்பது பேருக்கு இயற்கை உணவினைத் தயார் செய்திருந்தார். நாங்கள் அனைவரும் கடும்பசியில் இருந்தோம். எல்லோரையும் வரிசையாக அமரவைத்து இலை போட்டு அதில் ஊறவைத்த பயறு, கார அவல், இனிப்பு அவல், பழக்கலவை, மற்றும் பலவிதமான பழங்கள் பரிமாறப்பட்டன. அனைவரும் இறைவணக்கம் சொல்லி விட்டு உணவை ருசித்துச் சாப்பிட்டோம்.

உணவுக்குப் பின்னர் அனைவருக்கும் ஒரு மணி நேரம் ஓய்வு தரப்பட்டது. மாலை நான்கு மணிக்கு அனைவருக்கும் யோகப் பயிற்சி அளிக்கப்பட்டது. யோகாசார்யா முருகன்ஜி யோகப் பயிற்சி அளித்தார். அவரிடம் யோகா பயிலும் ஹரிபிரசாத் (11வது படிக்கும் பள்ளி மாணவன்) சில கடினமான ஆசனங்களை சுலபமாகச் செய்து காட்டி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

யோகாசன வகுப்பிற்குப் பின்னர் சீர்-வளர்-சீர் திருச்செந்தில் அடிகள் (மெய்த்தவம்) பதஞ்சலி யோக சூத்திரத்தில்  இருந்து மிக மிக முக்கியமான சூத்திரங்களை அனைவருக்கும் புரியும்படியான எடுத்துக்காட்டுகளுடன் எளிமையாக விளக்கினார். அனைவரும் ஆர்வத்துடன் குறிப்பு எடுத்துக் கொண்டார்கள். பலர் கேள்வி கேட்டு தங்கள் ஐயங்களை தெளிந்து கொண்டார்கள். இரவு முகாமில் தங்க வேண்டாம் எனவும், எதிரில் உள்ள வேலன் விகாஸ் பள்ளியில் உள்ள ஹாஸ்டலில் அனைவரும் தங்கிக் கொள்ளலாம் எனவும் எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. கடுங்குளிர், சரியான கழிப்பறை வசதி இல்லாமை, யானைகள் அலையும் பகுதி போன்ற காரணங்களால் இந்த மாற்று முடிவு எடுக்கப்பட்டது. மேலும் கிருஸ்துமஸ் விடுமுறை ஆதலால் ஹாஸ்டல் காலியாக இருந்ததாலும், இருபத்தி நான்கு மணி நேரமும் சுடுநீர் உள்பட, பாத்ரூம்-கழிப்பறை வசதியும், பாதுகாப்பான சூழ்நிலையும் என்பதினால் சென்னை, கோவை, பெங்களூரு, ஈரோடு போன்ற பல பகுதிகளில்  இருந்து வந்திருக்கும் விருந்தினர்களுக்கு அடிப்படை வசதிகளை அளிக்கும் பொருட்டு இந்த மாற்றம் செய்யப்பட்டது. முதல் மாடியில் தனித்தனியாக அமைந்திருந்த ஆடவர் மற்றும் பெண்கள் பகுதியில் டார்மிட்டரி அறைகள் ஒதுக்கப்பட்டன. ஹாஸ்டல் வார்டன் திரு சதீஷ் மற்றும் பள்ளித் தாளாளர்  உடன் இருந்து எங்களுக்கான வசதிகளைக் கேட்டு அன்புடன் கவனித்து வழங்கினார்கள்.

மறுநாள் காலையில் பள்ளி வளாகத்திலேயே யோகப் பயிற்சி, பின்னர் அவர்களை புளியமரத்துஷெட்டு முகாமில் இருந்து சுமார் இரண்டு கி.மீ தூரத்தில் இருந்த ரங்கசாமி மலைக்கு ஒட்டியதாக அமைந்திருந்த ரங்கசாமிகரடு என்ற பகுதியில் இருந்த மற்றொரு தோட்டத்தில் வாழைஇலைக் குளியல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முற்பகலில் கனமான உணவு ஏதும் இல்லாமல், கிட்டத்தட்ட உபவாச நிலையில் இந்த குளியலை மேற்கொள்ள வேண்டும் என்பதால் அனைவருக்கும்    நாளைப் பகல் போதில் உணவு வழங்கப்படமாட்டாது என்று சொல்லப்பட்டது. வாலை இலைக் குளியல் மூலம் உடலில் உள்ள நச்சு தன்மையை நீக்கி கொள்ளலாம். வெயிலில் குறைந்த உடையுடன் தரையில் விரிக்கப்பட்ட இலையில் மல்லாக்க படுத்துக் கொண்டவுடன் உடல் முழுதும் வாழை இலையைச் சுற்றி முகம் உள்பட பார்சல் போல கட்டி விடுவார்கள். குறைந்தது அரைமணி நேரம் அதிகபட்சமாக முக்கால் மணி நேரம் அப்படியே வெய்யிலில் இருக்க வேண்டும். உடல் முழுதும் நன்றாக வியர்க்கும். அதன் பின்னர் பார்சலைப் பிரிக்கச் சொல்லி வெளியே வந்து சற்று நேரம் இளைப்பாறிய பின்னர் குளிக்க வேண்டும். அதன் பின்னர் இளநீர் வழங்கப்படும். இதுதான் நாளைய இயற்கை நலவாழ்வு நிகழ்ச்சி என்று அனைவருக்கும் விளக்கப்பட்டது.

காலை ஆறு மணிக்கு யோகப்பயிற்சி துவக்கப்படும் என்பதால் எல்லோரும் இரவு உணவினை முடித்து கொண்டு அனைவரும் தத்தம் டார்மிட்டரிக்கு செல்லும்படி வேண்டிக்கொள்ளப்பட்டோம். நானும், பிரேமும், குடந்தை ரமேஷும் மட்டுமாவது இரவு தவக்குடிலில் தங்கலாம் என்று இருந்தோம்.அதனைக் கேள்விப்பட்ட அடிகளாரும், முருகன்ஜீயும் எங்களையும் டார்மிட்டரியிலேயேதான் தங்கவேண்டும் என்று அன்புக் கட்டளையிட்டுவிட்டார்கள்.

எங்களுக்கு இந்த ஏற்பாடு திருப்தி அளிக்கவில்லை. பள்ளியின் இரவுக காவலர் திரு.ஸ்டீபனிடம் இது குறித்து விசாரித்தோம். சோலார் மின்வேலியினால் தோட்டம் பாதுகாக்கப்பட்டு இருந்தாலும், சிலசமயம் வேலிக்கு அந்தப் பக்கமாக உள்ள மரங்களைச் சாய்த்து வேலியின் மேல் தள்ளி மின்தொடர்பைத் துண்டித்து விட்டு யானைகள் தோட்டத்துக்குள் புகுந்து விடுவது உண்டாம். அப்படி ஒரு அசம்பாவிதம் கொஞ்ச மாதங்களுக்கு முன்னர் இதே தோட்டத்தில் நடந்திருப்பதினால், முன்பின் அனுபவம் இல்லாத வெளியூர்க்காரர்களைத் தோட்டத்தில் இரவுநேரத்தில் அனைவரையும் தங்கவைப்பதில் அமைப்பாளர்களுக்கு தயக்கமும் பயமும் சங்கடமும் இருந்தது. 

மேலும் ஒரு ஒற்றை யானை இப்போது இந்தப் பகுதியில் அடிக்கடி தென்படுவதாக ஊர்மக்கள் பேசிக் கொண்டார்கள். எது (எ)ப்படி இருப்பினும் முதல் நாள் இரவின் யானைப்பிளிறல்கள் மத்தியில் உறங்கும் த்ரில்லிங் அனுபவத்தை இழந்த சோகத்தில் நாங்கள் உறங்கச் சென்றோம். 

(பகிர்வுகள் தொடரும்)


பகுதி ஆறு >>>>

வெள்ளி, 6 ஜனவரி, 2012

16. கனி இருப்ப....:படித்ததில் பிடித்தது. இயற்கையோடு இணைந்து வாழ்வோம்.

பகுதி 16.
கனி இருப்ப.. தொடர்கிறது.

இந்த தொடரில் இயற்கை நலவாழ்வியல் தொடர்பாக நான் படித்தவற்றை, பார்த்தவற்றை, கேட்டவற்றை பகிர்ந்து வருகிறேன். சமீபத்தில் 'இயற்கை வாழ்க்கை முறை'  எனும் தலைப்பிட்ட வலைப்பூவில் படித்த செய்திகளை நலவாழ்வியல் ஆர்வலர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன். அருமையானதொரு பதிவை வெளியிட்ட 'இயற்கை வாழ்க்கைமுறை' வலைப்பூ ஆசிரியருக்கு நன்றி.

இயற்கையோடு இணைந்து வாழ்வோம்.

இயற்கை:
இயற்கை இயற்கையாகவே இருக்கிறது.
இயற்கையில் தான் எல்லாமே இருக்கிறது.
இயற்கையாகவே அதில் எல்லாம் இருக்கிறது.
இயற்கையாகவே அது பரிணமித்தது.

இது தான் மெய்ஞ்ஞானமும்,விஞ்ஞானமும் கண்ட ஒரே ஒரு உண்மை.

அந்த இயற்கையின் பகுதிகள் தான் இந்த அண்ட சராசங்கள், பஞ்ச பூதங்கள், அதில் ஒன்றான இந்த பூமி, தாவரங்கள், அனைத்து கோடி ஜீவராசிகள், இறுதியாக தோன்றிய மனிதர்கள்.

இந்த இயற்கையில் எல்லாம் ஒன்றை ஒன்று சார்ந்தே தான் இருக்கின்றன, அதன் விளைவாக எல்லாம் எப்போதும் ஒரு ஒழுங்கமைப்போடு இயங்கி வருகின்றன, இந்த ஒழுங்கமைப்பில் மாற்றம் வரும்போது தான் துன்பங்கள் ஏற்படுகின்றன.

இயற்கையின் ஒழுங்கமைப்பில் ஏற்படும் மாற்றம் தான் எல்லா துன்பங்களுக்கும் காரணம் எனும் இந்த உண்மையை உணராத ஒரே ஒரு இயற்கையின் வினோதமான பிராணி தான் மனிதன்.


இந்த 21 ம் நூற்றாண்டில் மனிதன் தன்னுடைய வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டு முழுமையாக இயற்கைக்கு எதிராகவும், மாறாகவும் வாழ்ந்து வருகிறான். அதன் விளைவாக இனிமேலும் இந்த பூமி இருக்க வேண்டுமா? வேண்டாமா? என்ற அவலமான ஒரு சூழ்நிலையை உருவாக்கியுள்ளான்.


தான் இயற்கையின் ஒரு சிறு பகுதியே என்ற உண்மையை உணராததின் காரணத்தால் இயற்கைக்கு தன்னால் இயன்ற அளவிலான தீங்குகளை இழைத்தும், தானும் துன்பப்பட்டு, இயற்கையில் உள்ள எல்லாவற்றையும் துன்பத்தில் ஆழ்த்தும் கொடிய செயல்களை மனிதன் செய்து வருகிறான். 


இதன் விளைவாகத் தான், பூமியை காப்பாற்ற பல போராட்டங்களும், நடவடிக்கைகளும் தேவைப்படுகின்ற ஒரு அவல நிலையில் நாம் வாழ்ந்து வருகிறோம். இதில் என்ன வெட்கக்கேடான விஷயம் என்றால் "உலகில் தான் வாழும் வீட்டையே (பூமி) அழித்து வாழ்கிற ஒரே ஒரு அதிசய பிராணி மனிதன்" மட்டும் தான்.  இதில் மற்றொரு வியப்பிலும் வியப்பு என்ன என்றால் இந்த மனித பிறவிக்கு மட்டும் தான் பகுத்து அறிய கூடிய ஆறாவது அறிவு உள்ளது என்பது தான். “WHAT A STRANGE CREATURE MAN IS THAT HE FOULS HIS OWN NEST” –RICHARD M.NIXON


மனிதன் இயற்கையை ஒட்டி வாழ்ந்து வந்தால் நோய் நொடிகள், பிரச்சினைகள் இல்லாத ஆரோக்கிய ஆனந்த வாழ்க்கையை நிச்சயமாக வாழ முடியும். ஆனால் நாம் இயற்கைக்கு முரண்பட்டு எத்தனையோ காரியங்களைச் செய்கிறோம்.அன்றாட வாழ்வில் இரசனையற்ற, அழகற்ற, செயற்கையான துன்பம் விளைவிக்கின்ற செயல்களை மட்டுமே செய்து வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வாழ்வின் அர்த்தம் புரியாமலும், வாழ்வின் நோக்கம் தெரியாமலும், செயற்கையான பொருள்களின் துணையோடு வாழ்வதையே இன்பம், மகிழ்ச்சி என்ற தவறான புரிதலுடன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.


“THE REALITY IS THAT IN THE MUCH OF THE INDUSTRIALIZED SOCIETIES, WE ARE COMPLETELY ADDICTED TO OUR COMFORTS, WE ARE A SOCIETY OF ADDICTS” – JULIA BUTTERFLY HILL


எப்போதுமே நமது மனம் ஒரு வித வெறுமையுடன் இருப்பதற்கும், பூரண மகிழ்ச்சி கிடைக்காமல் அல்லல்படுவதற்கும், என்ன கிடைத்தாலும், எப்படி வாழ்ந்தாலும் மன நிறைவு இல்லாமல் இருப்பதற்கும் காரணம் இயற்கையை விட்டு விலகி செயற்கையாக வாழ்வதே ஆகும்.


நம்முடைய ஒவ்வொரு எண்ணங்களும், செயல்களும், நோக்கங்களும், பழக்க வழக்கங்களும் இயற்கைக்கு எதிரானதாக/மாறானதாக அமைந்துள்ளது. அதுதான் எல்லா பிரச்சினைகளுக்கு ஆணிவேர். இயற்கையுடனும், மற்ற உயிரினங்களுடன் நமக்கு இருக்கும் தொடர்பு, பரிணாம வளர்ச்சியில் மரபு வழியாக வந்த ஒரு இணைப்பு.  இதனை மறந்து/அறியாது இயற்கையை விட்டு விலகி நகரமய சூழலில் செயற்கையான பொருட்களுடன் நம் வாழ்வை அமைத்து கொண்டதே, இயற்கையில் இருந்து அந்நியப்பட்டு போனதற்கு காரணம்.


இயற்கை வாழ்க்கை முறை

இயற்கை எப்படி நிலம், நீர்,,வாயு, நெருப்பு.ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களால் ஆனதோ அது போன்றே நம் உடலும் பஞ்ச பூதங்களால் ஆனது...


"அண்டத்தில் உள்ளதே பிண்டம்

பிண்டத்தில் உள்ளதே அண்டம்

அண்டமும் பிண்டமும் ஒன்றே"


இயற்கை எவ்வளவு பவித்திரமானதோ அதே போன்றே இயற்கையிலே பிறந்து இயற்கையுடன் வளர்ந்து இயற்கையிலே கலந்து போகும் நம் தேகமும் அந்த அளவு பவித்திரமானது.இதை அறிந்த நம் முன்னோர்கள் இயற்கையோடு ஒன்றிவாழ கற்றுக்கொண்டார்கள். அதனாலே நம் முன்னோர்களால் நோய் நொடி இல்லாமல் வாழமுடிந்தது. அந்த இயற்கையோடு இனிமையாக வாழும் கலைகளை வாழ்க்கை முறைகளாக வகுத்து வைத்தார்கள். நாமோ பகுத்தறிவு,  பகுத்தறிவு என்று சொல்லிக்கொண்டு நமது முன்னோர்கள் சொல்லி வைத்த நல்ல விஷயங்களை எல்லாம் ஒன்றொன்றாக தொலைத்து கொண்டிருக்கிறோம்.


உலகில் உள்ள லட்சோபலட்ச உயிர்களும் இயற்கையையே ஆதாரமாகக் கொண்டு வாழ்கின்றன. அவைகள் எந்த வித மருத்துவ முறைகளோ, மருத்துவமனைகளோ, மருந்துகளோ, மருத்துவர்களோ இல்லாமல் நோயின்றி வாழ்கின்றன.ஆனால் மனிதன் மட்டுமே உடலுக்கு தேவையானவற்றை உண்ணாமல் வாய்க்கு ருசியானவைகளை சாப்பிட்டு, உடலுழைப்பு இல்லாமல், அருந்த வேண்டியதை அருந்தாமல், கழிக்க வேண்டியதை சரிவர கழிக்காமல், உடல் நலத்தை கெடுத்துக்கொண்டு தானும் அவதிப்பட்டு அடுத்தவரையும் அவதிக்கு உள்ளாக்கி இயற்கைக்கு எதிராக நோய்நொடியுடன் காலம் கழிக்கிறான். இயற்கை வாழ்க்கை முறையை விடுத்து மற்ற மருத்துவ முறைகளை பின்பற்றுவதால் நாட்டில் நாளுக்கு நாள் நோய்கள் அதிகமாகின்றன. ஒரு நோயை குணப்படுத்த மருந்து உண்டால் பல புது நோய்கள் வருகின்றன. எனவே இந்த மருத்துவ முறை ஒரு பொருத்தமான தீர்வாக இருக்க முடியாது. 


குறைந்த பட்ச தேவைகள், சுகங்கள் கூட இன்றைய நிலையில் மனிதனுக்கு எட்டாக்கனியாகி விட்டது. நம் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றங்களே இந்த கஷ்டத்திற்கெல்லாம் மூல காரணம்.


இவையெல்லாம் இயற்கைக்கும், இயற்கை தர்மத்திற்கும் எதிராக செயல்பட்டதால் இயற்கை நமக்கு விதித்த தண்டனைகள். இந்த தண்டனையிலிருந்து வெளிப்பட இயற்கை வாழ்க்கை முறையை நம்பி சரணடைவதே வழியாகும். நல்ல வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டியது அவசியமாகும்.


நோய்கள், நோயாளிகள் அதிகமாக இருக்கும் அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேலை நாடுகளில் மக்கள் இந்த உண்மையை அறிந்து கொண்டு இப்போது யோகாசனங்கள், பிராணாயாமம், தியானம் செய்வது, பச்சை காய்கறிகளை உண்பது, முளைக்கட்டிய பயறுகள் உண்பது, தண்ணீர் அதிகமாக குடிப்பது, புலால் உண்பதை நிறுத்துவது என்று பல இயற்கை முறைகளை பின்பற்ற தொடங்கி இருக்கிறார்கள்.


அவர்கள் எப்படி இதை அறிந்து கொண்டார்கள் என்றால், புறவாழ்க்கைத் தேவையின் உச்சத்தை அவர்கள் தொட்டு கையை சுட்டு கொண்டார்கள்.


நாம் என்னவென்றால் “இருப்பதை விட்டு விட்டு பறக்க ஆசைப்படாதே” என்பதற்கு இணங்க நம்முடைய மூதாதையர்கள் கொடுத்த உன்னத அறிவை விட்டு விட்டு தவறான பாதையில் பயணித்து எல்லா துன்பங்களையும் வலிய வரவழைத்து கொள்கிறோம்.


இதைத் தான் நமது தேசப்பிதா தீர்க்க தரிசனமாக சொல்லி வைத்தார் அன்றே. “GOD FORBID THAT INDIA SHOULD EVER TAKE TO INDUSTRIALISM AFTER THE MANNER OF WEST ,IT WOULD STRIP THE WORLD BARE LIKE LOCUSTS” - MOHANDAS GANDHI


நோய்கள் எத்தனை? எந்த உறுப்பில் வந்திருக்கிறது? எத்தனை நாளாக இருக்கிறது என்பது இங்கு பிரச்னை அல்ல.  “எரிவதை பிடுங்கினால் கொதிப்பது தானாக அடங்கும்”. அதனால் எரிவது என்ன என்று உணர்ந்து வாழும் வாழ்க்கை முறையை மாற்றிகொண்டால் இனிமையாக வாழலாம். எந்த நோயாக இருந்தாலும் இந்த முறையில் பரிபூரண குணம் அடையலாம். "நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்" என்கிறது குறள் மறை. அதற்கு முதலில் தேவை நம்முடைய மனமாற்றம் ஒன்றே.இவற்றிற்கெல்லாம் தீர்வு இயற்கை வாழ்க்கை முறையிலேயே இருக்கிறது. இயற்கையாக ஆரோக்கியத்தை கொடுக்கும் இயற்கை வாழ்க்கை முறையை விட்டு எல்லா பிரச்னைக்கும் மருந்துகளையும் வைத்தியர்களையும் தேடி அலைகிறோம். நாமிழந்த நம் முன்னோர்களின் உணவு பழக்கவழக்கங்களை மறுபடியும் கொண்டு வர முடியாமலிருக்கிறோம், முயலாமலிருக்கிறோம். இனியாவது விழித்துக்கொண்டு நம் பிரச்சனைகளுக்கு தீர்வு நம்மிடமே, நம் வீட்டிலேயே இருக்கிறது என்று அறிந்து கொண்டு மாற்றதை நோக்கி பயணிப்போம்.


"மாற்றம் ஒன்று மட்டுமே மாற்றமற்றது". எனவே இயற்கையோடு இணைந்து வாழ்வோம் இனிமையாக.


நன்றி:இயற்கை வாழ்க்கை முறை(வலைப்பூ) இணைப்பு: http://iyarkaivazhkaimurai.blogspot.com

முக்கிய அறிவிப்பு: சென்னையில் இயற்கை நலவாழ்வியல் தொடர்பான ஒரு நாள் நேரடிப் பயிற்சி முகாம் வருகிற எட்டாம் தேதி (௦08-01-2012) அன்று பெருங்களத்தூர் சதானந்தபுரம் எனும் ஊரில் நடைபெற உள்ளது. இயற்கை நலவாழ்வியல் முன்னோடிகள் வாயிலாக நேரடிப் பயிற்சி பெற ஒரு அற்புத வாய்ப்பு. ஆர்வமுள்ள இயற்கை நலவாழ்வியல் அன்பர்கள் அந்த முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம். முகாம் தொடர்பான அழைப்பிதழைக் காண இங்கே கிளிக் செய்யவும்.

வாழி நலம் சூழ...

பொதுநலம் கருதி வெளியிட்டவர்:

அஷ்வின்ஜி @ A.T.ஹரிஹரன், M.Sc(Yoga), சென்னை.
மேலும் விவரங்கள் பெற:94444171339

(தொடர்ந்து கனியும்...)