செவ்வாய், 10 ஜனவரி, 2012

6. பழனி யோகா-ஆன்மீக-இயற்கை நலவாழ்வியல் பயிற்சி முகாம் - அனுபவப் பகிர்வுகள்

பகுதி ஆறு:

இரண்டாம் நாள் நிகழ்வுகள்: 
27.12.2011 செவ்வாய் காலை, முற்பகல், பிற்பகல், மாலை

எங்கள் தோட்டத்துக்கு எதிர்ப்புறம் மிகவும் பரந்த நிலப்பரப்பில், கொடைக்கானல் மலைச்சாரலில், பிரம்மாண்டமாய் அமைந்திருந்த வேலன் விகாஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி எல்.கே.ஜி யில் இருந்து ப்ளஸ்டூ வரை வகுப்புக்களை கொண்டிருக்கிறது. நாங்கள் தங்கி இருந்த அந்த சமயத்தில் ப்ளஸ்டூ மாணவ மாணவியர் மட்டும் ஹாஸ்டலில் தங்கி இருந்தார்கள். அவர்களுக்கு இரவு பத்து மணி வரை சிறப்பு வகுப்புக்கள் (இது விடுமுறைப் பொழுது என்ற போதிலும்) நடந்து கொண்டிருந்தன. 

பள்ளி வளாகத்தில்...  
தோட்டக்காரர் தமது மகனுடன்.

பள்ளியில் பூத்துக் குலுங்கும் மலர்கள். 

 விதம் விதமான வண்ணங்களில்...

 முள்ளில் மலர்ந்த மலர்க் கூட்டம்.

பூ பார்க்க அழகாயிருக்கிறது.

தீவிரமான கல்வி போதிப்புகளிடையே மாணவர்களுக்கு குதிரை ஏற்றம், களரி, சிலம்பம், கத்தி வீச்சு, குங்க்பூ, கராத்தே, யோகா, நீச்சல் குளம் என்று அனைத்து வீரதீர விளையாட்டுக்களுடன், மற்ற விளையாட்டு மற்றும் தடகளப் பயிற்சிகளும் சொல்லித் தரப்படுகின்றன. ஆங்கிலத்தில் சரளமாக பேசுதல், பேச்சுத் திறன், போன்ற பயிற்சிகளும், போட்டிகளும் நிகழ்த்தப் பட்டு திறமையாளர்களை அடையாளம் காணவும், ஆர்வமுள்ளவர்களுக்கு ஊக்கம் தருதல் போன்ற சிறப்பம்சங்கள் கொண்ட அறிவாலயமாக விளங்குகிறது இந்த வேலன் விகாஸ் பள்ளி. 

பள்ளி வளாகத்தில் 
 குதிரை மேய்ந்து கொண்டிருக்கிறது.

 விடுமுறை ஓய்வில்

அருமையான விளையாட்டுத் திடலுடன் ஹாஸ்டல் பிளாக் இணைந்திருக்கிறது. காலையில் நான்கு மணிக்கு அலாரம் வைத்து அனைவரையும் எழுப்பி யோகா செய்ய தயாராகி வெளியே வந்த போது காலை மணி ஆறு ஆகி இருந்தது. 

பள்ளி வளாகத்தின் பின்னணியில் கொடைக்கானல் மலையை பனி மேகங்கள் சூழ்ந்திருக்க, காற்றில் குளிர் அதிகம் தெரிந்தது. யோகப் பயிற்சிக்காக பிரார்த்தனை ஹாலில் அன்பர்கள் தத்தம் விரிப்புக்களுடன் வந்து சேர்ந்தார்கள்.நண்பர் பிரேம்குமார் யோகப்பயிற்சிகளை சொல்லித்தர ஆரம்பித்தார். சூரிய நமஸ்காரம், உடல் தளர்வுப் பயிற்சிகள், நின்ற நிலை ஆசனங்கள், அமர்ந்த நிலை ஆசனங்கள், குப்புறப் படுத்த நிலை ஆசனங்கள், மல்லாந்து படுத்த நிலை ஆசனங்கள், பிராணாயாமம் போன்றவற்றில் இருந்து தேர்ந்தெடுத்த சில பயிற்சிகள் சொல்லித் தரப்பட்டன. பின்னர் சாந்தி ஆசனம் என்று அழைக்கப்படும் யோகநித்ரா (அறிதுயில்) பயிற்சியை அனைவருக்கும் நான் அளித்தேன்.

ஒரு மணிநேர யோகாசனப் பயிற்சிக்குப் பின்னர் ஹாஸ்டல் காண்டீனில் இருந்து அனைவருக்கும் சூடான பிளாக்டீ வழங்கப்பட்டது. டீ அருந்திய பின்னர் வாலிபால் அரங்கில் நமது அன்பர்கள் சற்று நேரம் வாலிபால் ஆடி மகிழ்ந்தார்கள். எட்டு நடைப் பயிற்சி எனும் தமாஷான நடைப்பயிற்சியை அனைவரும் மேற்கொண்டோம். சென்னை நண்பர் நாகராஜன் சீரியசாக திடலைச் சுற்றி ஜாகிங் சென்று கொண்டிருந்தார்.

இன்று உபவாச தினம். மேலும் வாழைஇலைக் குளியல் இருப்பதினால் திடமான உணவுகளைத் தவிர்த்தாக வேண்டும். திரவ வடிவிலான சாறுகள், எலுமிச்சை, நெல்லி, தேன் கலந்த பானங்களை வேண்டும் போதெல்லாம் அருந்தலாம்.

காலை யோகாசார்யா முருகன்ஜி வந்து சேர்ந்தார். அவருடன் சென்னையைச் சேர்ந்த இயற்கைபிரியன் (இரத்தின சக்திவேல்) வந்திருந்தார். இவர் இயற்கை நலவாழ்வியல் தொடர்பாக சுமார் அறுபது புத்தகங்களை எழுதி இருக்கிறார். இயற்கை நலவாழ்வியல் முகாம்களில் கலந்து கொண்டு உரை நிகழ்த்துவதோடு அல்லாமல் தனது புத்தகங்களைக் கொண்டு வந்து விற்பனை செய்துவிடுவார். கலகலப்புடன் பழகிச்  சிரிக்கச் சிரிக்க உரை நிகழ்த்தி அனைவரையும் சிந்திக்க வைப்பதில் விற்பன்னர் இந்த இயற்கைப் பிரியன். குடந்தை அருகே உள்ள திருப்பனந்தாளில் நாளை தொடங்கவிருக்கும் சங்கப்பிரக்ஷாலனக்கிரியா மற்றும் இயற்கை நலவாழ்வியல் முகாமில் அவர் உரை நிகழ்த்த செல்லும் வழியில் இன்று பழனியில் இறங்கி எங்களோடு உரையாட வந்திருக்கிறார்.

அனைவரும் புறப்பட்டு ரங்கசாமிகரடுக்கு செல்ல ஆரம்பித்தோம். வாழையிலைக் கட்டு ஒரு டூவீலரில் எடுத்துச் செல்லப்பட்டது. இன்று வெய்யில் மிகவும் கம்மியாக அடித்தது. மேகமூட்டம் இருந்ததால் வெயிலில் அதிக உஷ்ணம் இல்லை. வாழை இலைக் குளியலுக்கு சுள்ளென்று வெயில் இருந்தால் நிறைய வியர்வை வெளியேறும். இந்த மாதிரி சூடுகுறைந்த வெயிலில் மண்குளியல் சாத்தியம் இல்லை என்பதால் அனைவருக்கும் வாழையிலைக் குளியல் தருவது என்று முடிவானது.

(பகிர்தல் தொடரும்)

5 கருத்துகள்:

ஜோதிஜி சொன்னது…

நிச்சயம் இது போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ள வேண்டும். அற்பதமான பகிர்வு.

Ashwin Ji சொன்னது…

வணக்கம் ஜோதிஜி.
இது போன்ற நிகழ்வுகளில், நிச்சயம் உங்கள் வரவு நல்வரவாகும். பலருக்கும் பயனுள்ள பகிர்வாகும். அடுத்த நிகழ்வுக்கு உங்களுக்கு அழைப்பு அனுப்புகிறேன். கடந்த ஞாயிறு அன்று சென்னைக்கு வெகு அருகாமையில் (பெருங்களத்தூரில்) ஒரு நாள் முகாம் நடத்தினோம் 45 பேர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இதில் பதினைந்து பேர் பத்தில் இருந்து பதினைந்து வயதுக்குட்பட்ட பள்ளி மாணவ மாணவியர். மீதிபேரில் பாதிபேர் பெண்கள்.
அருமையான பாராட்டுக்கும், பின்னூட்டத்துக்கும் இதய நன்றி.

அஷ்வின்ஜி.

geethasmbsvm6 சொன்னது…

படிச்சாச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்

geethasmbsvm6 சொன்னது…

தொடர

Ashwin Ji சொன்னது…

@கீதாஜீ.
வாசிப்புக்கும், தொடர் பின்னூட்டத்துக்கும் நெஞ்சு நிறை நன்றி.

அஷ்வின்ஜி.

கருத்துரையிடுக