வியாழன், 13 பிப்ரவரி, 2014

ஆதலினால் தியானம் செய்வீர்!


ஆதலினால் தியானம் செய்வீர்
தஞ்சாவூர்க் கவிராயர்

அறிவியல் சூத்திரங்களுக்கு அடங்காத, அவற்றுக்கு அப்பாற்பட்ட கீழ்த்திசை ஞானத்தை தங்களது ஆராய்ச்சி அளவு கோல்களாலும் நவீன அறிவியல் உபகரணங்களாலும் அளந்து பார்ப்பதில் மேலைநாட்டவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் அண்மையில் தியானம் பற்றிய அவர்களின் ஆராய்ச்சி முடிவுகள் விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளன.

தியானம் செய்கிறபோது மூளையில் என்ன விதமான ரசாயன மாற்றம் ஏற்படுகிறது? இதைக் கண்டுபிடிக்க தொடர்ந்து தியானப் பயிற்சியில் ஈடுபட்டு வரும் துறவிகளையும் யோகிகளையும் இத்தகைய ஆராய்ச்சிக்கு உட்படுத்தினார்கள். சில நுட்பமான கருவிகளைக் கொண்டு தியானம் செய்பவர்களின் மூளையை கண்காணித்ததில், தியானத்தின் மூலம் உலகிலேயே அளவு கடந்த மகிழ்ச்சியை அனுபவிக்கிற ஒரு மனிதரைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்! 

அந்த மனிதரின் பெயர் ரிகார்டு. பிரான்ஸ் நாட்டின் பௌதிக விஞ்ஞானி. வயது 66. இப்போது இமயமலையில் இருக்கும் பௌத்த மடாலயம் ஒன்றில் துறவி. ஒரு பெரிய கல்விக் குடும்பத்தில் பிறந்த ரிகார்டு ஆராய்ச்சிப் படிப்பை முடித்து பெரிய விஞ்ஞானி ஆனார்.

யோகம், இந்திய தத்துவ ஞானம் பற்றிய ஆய்வில் இவரது கவனம் திரும்பியது. தியானம் பற்றிய ஆராய்ச்சிக்காக இந்தியத் துறவிகளிடம் தியானம் பயின்று ஆராய்ச்சிக்கு தன்னையே உட்படுத்திக் கொண்டார். அவரே வேலை, குடும்பம் எல்லாவற்றையும் உதறிவிட்டு பௌத்த துறவியாகி இமயமலையில் ஒரு பௌத்த விஹாரத்தில் சேர்ந்துவிட்டார்

தொடர்ந்து 26 வருடங்கள் ன விரதம், தியானம். இவரை தலாய்லாமா தனது அணுக்கத் தொண்டர்களில் ஒருவராக ஏற்றுக் கொண்டார். தலாய்லாமாவின் உலகச் சுற்றுப் பயணங்களில் இவரும் உடன் செல்கிறார்.

நீண்ட நெடிய தியானத்தில் மூழ்கியிருப்போர் பட்டியலில் இந்த ரிகார்டு முதலிடம் வகிக்கிறார். அமெரிக்க நாட்டின் அறிவியலாளர் குழு, புகழ் பெற்ற நரம்பியல் விஞ்ஞானி ரிச்சர்டு தலைமையில் இவரை பரிசோதனைக்கு உட்படுத்தியது

இவரது தலைமீது 256 சென்ஸார் கருவிகள் பொருத்தப்பட்டு "ஸ்கேன்' செய்து பார்த்ததில் ரிகார்டு தியானத்தில் ஈடுபட்டிருக்கும்போது அவர் மூளையில் இருந்து எல்லையற்ற ஆனந்தத்தை பிரதிபலிக்கும் "காமா' கதிர்கள் வெளிப்படுவதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

ரிச்சர்டு என்ன சொல்கிறார்?
"ரிகார்டு மாதிரி நீண்டநேரம் தியானம் எல்லாம் சாதாரணர்களுக்குத் தேவையில்லை. நாள் ஒன்றுக்கு 20 நிமிட நேரம் மூன்று வாரங்கள் தியானம் செய்து வந்தாலே போதும். மனசுக்குள் மகிழ்ச்சி அலை புரண்டோடும். 

மேலைநாடுகளில் தியானம் செய்வோர் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. மகாகவி பாரதி சொல்வதை கவனியுங்கள்

"தியானத்தின் சக்தியை எளிதாக நினைக்க வேண்டாம். மனிதன் தான் விரும்பியபடியே ஆகிறான். ஒருவன் மனதில் நிமிஷத்துக்கு நிமிஷம் தோன்றி மறையும் தோற்றங்கள் எல்லாம் தியானமாக மாட்டா. புதர்க் கூட்டத்திலே தீப்பிடித்தாற்போல மனதிலுள்ள மற்ற கவலைகளையும் எண்ணங்களையும் எரிக்கும் ஒரே ஜோதியாக விளங்கும் பெரிய விருப்பத்தை தியானம் என்று கூறுகிறோம்

தெய்வ பக்தி உள்ளவர்கள் ஆயினும் நாஸ்திகர்கள் ஆயினும் எந்த மார்க்கஸ்தர்களாக இருந்தாலும் ஒரு மார்க்கத்தையும் சேராதவர்களாக இருந்தாலும் அவர்களுக்கும் தியானம் அவசியம். பாரத தேசத்திற்கு தற்காலத்தில் நல்ல தியானம் உணவைக் காட்டிலும் இன்றியமையாதது. சோற்றைவிட்டாலும் விடு. தியானத்தை விடாதே. "உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்' என்பது குறள்

பரிபூர்ண விருப்பத்துடன் தியானம் செய். ஊற்றிலிருந்து நீர் பெருகுவதுபோல் உனக்குள்ளிருந்து தெளிந்த அறிவும் தீரத்தன்மையும் சக்தியும் மேன்மேலும் பொங்கிவரும். இது சத்தியம். அனுபவத்திலே பார்...

பள்ளி ஆசிரியரான என் தந்தை அடிக்கடி தியானத்தில் அமர்ந்து விடுவார். அம்மாவோ நாள் முழுவதும் அடுக்களையில் புழுங்குவார். இப்போது தோன்றுகிறது. அப்பாவை விட அதிகம் தியானம் செய்தது அம்மாதான் என்று.

வீடு பெருக்குவது, பாத்திரம் தேய்ப்பது, காய்கறி நறுக்குவது, துணி துவைப்பது போன்ற சின்னஞ்சிறு வீட்டுவேலைகளை மனம் ஒன்றிச் செய்யும்போது அவை தியானமாக மாறிவிடும்.

பகவான் ரமணர் அடிக்கடி ஆசிரம சமையல் கூடத்துக்கு வந்து அவரே காய்கறிகள் நறுக்கித் தருவது வழக்கம். அப்பளப் பாட்டு என்ற பெயரில் ஆத்ம விசாரத்தை செய்யுள்களாக இயற்றியுள்ளார் பகவான் ரமணர். இதுதான் சூட்சுமம். நாம் செய்கிற காரியங்களை எல்லாம் இறைவனுக்கு நிவேதனமாகப் படைத்து விட வேண்டும். இதுவே தியானம்

கோயில்களில் பிரசாதமாக வழங்கப்படும் பொங்கல் கூடுதல் ருசியாக இருக்கும். அதே பொங்கலை வீட்டில் செய்யும்போது அவ்வளவு ருசிக்காது. இதேபோல் வாழ்க்கை ருசிக்க வேண்டுமெனில் அதை அப்படியே இறைவனுக்கு அர்ப்பணித்து விட வேண்டும். இதற்கு தியானம் துணை செய்யும்

தியானத்துக்கு நோய்களை குணப்படுத்தும் சக்தி உண்டு. தியானம் செய்கையில் மனத்திலே சாந்தி நிலவும். ரத்த ஓட்டம் சீர்படும். நாடித் துடிப்பு நன்றாக இருக்கும். அண்மையில் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட எனக்கு தியானமே அருமருந்தாய் அமைந்து வருகிறது. பாரதியின் தியான மந்திரங்களை நான் அடிக்கடி உச்சரிப்பேன். உள்ளத்தில் உற்சாகம் ஊற்றெடுக்கும். உடம்பிலே புது ரத்தம் பாயும்.

இதோ அந்த மந்திரச் சொற்கள்:

"நான் அமரன்.
எனக்குச் சாவு கிடையாது.
நாழிகைகள் கழிக.
நாள்கள் ஒழிக.
பருவங்கள் மாறுக.
ஆண்டுகள் செல்க.
நான் மாறுபட மாட்டேன்.
என்றும் உயிர் வாழ்வேன்.
எப்போதும் களித்திருப்பேன்.
நான் கடவுள்.
ஆதலால் சாக மாட்டேன்.

தெய்வம் என்னுள் எப்போதும் வந்து பொழிந்து கொண்டிருக்கும்படி என்னைத் திறந்து வைத்திருக்கிறேன்.

அதாவது நான் என்னுள் வீழும்படி எப்போதும் திறந்து நிற்கிறேன்.
என்னுள்ளே கடவுள் நிரம்பியிருக்கிறான்.
அதாவது என்னுள் யான் நிரம்பிக் கிடக்கிறேன்.
என் நாடிகளில் அமிர்தம் ததும்பிப் பாய்கிறது.
அதனால் என் ரத்தம் வேகமும் தூய்மையும் உடையதாய் இருக்கிறது.
நான் எப்போதும் வீர்யமுடையேன்;
ஜாக்ரதையுடையேன்;

எப்போதும் தொழில் செய்வேன்;
எப்போதும் காதல் செய்வேன்;
அதனால் சாதல் இல்லேன்;
நான் இத்தனை ஆனந்தத்துள் மூழ்கிக் கிடக்குமாறென்னே;
நான் தேவனாதலால்!
நான் தீராத இளமை சார்ந்தேன்.
என்றும் எப்போதும் நித்யமான கால முழுமையிலும் தீராத மாறாத இளமை உடையேன்.
மூடமனிதர் தீர்க்காயுள் வேண்டுகின்றனர்.
நான் அதனை வேண்டேன்.

ஏனென்றால் இவர்களெய்தும் நீண்ட வயது துன்பமாகிறதேயன்றி வேறில்லை
நான் சதாகாலம் துன்பமின்றி வாழும் வாழ்க்கையை விரும்புகின்றேன்.
அதனை நான் எய்திவிட்டேன்.

தீராத கவலை பொதிந்த சாதாரண மனித வாழ்க்கை சற்று நீடிப்பினால் என்ன பயன் தரும்?
நான் கவலையை ஒழித்தேன்.
ஆதலால் எப்போதும் வாழ்வேன்.
கவலையாலும் பயத்தாலும் மரணமுண்டாகிறது.
கவலையும் பயமும் பகைவர்.
நான் இப்பகைவரை வென்று தீர்த்தேன்.
ஆதலால் மரணத்தை வென்றேன்.
நான் அமரன்!

காரியத்தில் பதறாது வித்துமுளைக்கும் தன்மைபோல் மெல்லச் செய்து பயன் பெறுவது தியானத்தில் கைகூடும்.
ஒவ்வொரு வித்தும் தியானத்தில் மூழ்கியுள்ளது.
தியானத்தின் முடிவில் மெல்ல மண் கீறி வெளிவந்து செடியாய் மரமாய் மாறுகிறது.
தியானம் தொடர்ந்து நிகழ்கிறது.
மரங்களும் செடி கொடிகளும் நின்றபடி தியானம் செய்கின்றன.
ஒரு மரம் மெüனமாக இருப்பதால் அது இயங்கவில்லை என்று கூற முடியுமா?
மிருகங்களும் அவ்வாறே.

எங்கள் வீட்டின் பாசி படிந்த முற்றத்தில் ஒரு பூனை வெயிலில் கண்மூடி வீற்றிருக்கிறது.
அது தூங்கவில்லை;
சோம்பியும் இல்லை.
ஆம், அது தியானத்தில் மூழ்கியுள்ளது.
இல்லாவிட்டால் எங்கோ அடுக்களையில் நகரும் எலியை பாய்ந்து சென்று கவ்விக்
கொண்டு வரமுடியுமாபூனையின் கவனம் ஒரு புள்ளியில் குவிந்ததுஇரை கிடைத்தது.

நமக்கோ புலன்கள் கூர்மை பெற, ஓர்மை பெற மறுக்கின்றன, "இறை' கிடைக்கவில்லை. தியானம் செய்வதற்கு அமைதியான இடம் தேவை இல்லை என்கிறார் ஸ்ரீஅன்னை. இரைச்சலுக்கு மத்தியிலும் தியானம் கைகூட வேண்டும். தியானம் பழகுவோனுக்கு கவிதை வசப்படும். கல்லுடைப்பதும் கவிதை எழுதுவதும் ஒன்றே எனும் உண்மை புலப்படும்..

பிரபஞ்சமே கற்பனைக்கு எட்டாத ஒரு தியானத்தில் மூழ்கியுள்ளது. அண்டங்களும், பேரண்டங்களும் பால்வழி மண்டலங்களும், சூப்பர் நோவாக்களும் தியானத்தில் ஆழ்ந்துள்ளன. தியான மந்திரமான "ஓம்' என்ற ஒற்றைச் சொல்லின் அதிர்வே அண்ட வெளியெங்கும் நீக்கமற நிறைந்துள்ளதாக அறிவியலாளர் கூறுகின்றனர். மனத்தை தியானத்தால் உருவேற்றி அதை ஒரு கருங்கல் பாறையாக ஆக்கிவிட வேண்டும். அப்போது கவலைகள், பயங்கள், துயரங்கள், துன்பங்கள் ஆழிப் பேரலையாய் வந்து மோதினாலும் அசையாது பாறைபோல் வீற்றிருக்கலாம். 

ஆதலினால் தியானம் செய்வீர்!

கட்டுரையாளர்: எழுத்தாளர்.
நன்றி : தினமணி நாளிதழ் 

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சிறப்பான மந்திரச் சொற்கள் ஐயா... நன்றி...

வாழ்த்துக்கள்...

Ashwin Ji சொன்னது…

Welcome Thiru.Dhanapalan Ji.
Credit goes to Dinamani and Mahakavi Bharathi.

கருத்துரையிடுக