ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014

நினைத்தது நிறைவேற குபேரத் தியானம் - 4 (நிறைவுப் பகுதி)

முழு உடல் மீது உங்கள் கவனத்தைச் செலுத்துங்கள். உடலின் பாரத்தைப் பூமி தாங்குவதை உணருங்கள். உங்கள் உடல் லேசாகி லேசாகி வானத்தில் மிதப்பதை உணருங்கள். உடல் முழுவதும் மிகவும் லேசாகிப் போன உணர்வு உங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தருகிறது. இதுவே உங்கள் உடல் முழுவதும் தளர்த்தி விடப்பட்டு மிகவும் நிம்மதியாக இருக்கும் நிலை என்பதை உணருங்கள். சாந்தியாசனத்தின் (சவாசனத்தின்நிலை.  இதை அப்படியே மனதில் பதித்துக் கொள்ளுங்கள்.

இப்பொழுது மூச்சை மெதுவாக உள்ளே இழுங்கள். பிராணன் உடலுக்குள் நுழைந்து எல்லா பாகங்களையும் இளமையாக்குகிறது என்பதை உணருங்கள். மூச்சை வெளியே விடுங்கள். உடலின் அசுத்தங்கள் யாவும் வெளியேறுகின்றன என்று உணருங்கள்

மீண்டும் மூச்சை உள்ளிழுங்கள். புதிய பிராணன் உடலுக்குள் நுழைந்து செல்களை எல்லாம் இளமையாக்குகிறது என்பதை உணருங்கள். மூச்சை வெளியே விடுங்கள். அசுத்தங்கள் யாவும் வெளியேறுகின்றன நாம் தூய்மை பெறுகிறோம் என்பதை உணருங்கள்.

எப்பொழுது  தேவைப்பட்டாலும் நினைத்த மாத்திரத்தில் ஓய்வுநிலையை உங்களால் கொண்டு வர முடியும். இப்பொழுது மூச்சை ஆழமாக உள்ளிழுத்து வெளிவிடுங்கள்.

மெல்ல மெல்ல  உங்கள் மனதை அமைதி பெறச் செய்யுங்கள். சலனங்கள் மறைந்து மனம் நிம்மதி அடைவதை உணருங்கள். உங்களுக்குள்ளேயே நீங்கள் மெல்ல மெல்ல உள் நோக்கிச் செல்வது போல் உணருங்கள். உங்கள் மனக் கண்ணில் ஒருஅமைதியான அழகான குளத்தைப் பாருங்கள். அதில் ஏற்படும் சிறு சிறு அலைகள் உங்கள் எண்ணங்களுக்கு ஒப்பானவை. 

ஒவ்வொரு அலையும் தண்ணீருக்குள் மூழ்கி மறைகிறது. அப்பொழுது உங்கள் மனதில் உள்ள எண்ணங்களும் சலனங்களும் ஒவ்வொன்றாக மறைவதை உணருங்கள். உங்கள் மனதில் சலனங்கள் மறைந்து அமைதியும் சாந்தமும் பரவுவதை உணருங்கள்.

அமைதி!   அமைதி!!    அமைதி!!!

உங்கள் மனதில் ஏற்படும்  இந்த அமைதி மிகவும் ஆனந்தமானது .சுகமானது. இன்பமானது.  மனம் லேசாகிப் போவதைச் சற்றே உணருங்கள். இந்த உணர்வை அப்படியே அனுபவியுங்கள்.

இப்பொழுது உங்கள் மனதுக்குப் பிடித்த ஒரு இடத்தை  நினைத்துக் கொள்ளுங்கள். இந்த இடம் உங்களுக்கு மிகுந்த நிம்மதியையும் சந்தோஷத்தையும் தந்து உங்கள் மனதை அமைதிப்படுத்தும் இடமாகும். இந்த இடம் நீங்கள் ஏற்கனவே சென்ற இடமாக இருக்கலாம். அல்லது ஏதேனும் படத்திலோ புத்தகத்திலோ பார்த்துப் போக வேண்டும் என்று விருப்பப்பட்ட இடமாகவும் இருக்கலாம்.

இது ஒரு மலையுச்சியாக இருக்கலாம்.
கடற்கரையாக இருக்கலாம்.
கோயிலாக இருக்கலாம், சொந்த அறையாக இருக்கலாம்
பூசை அறையாகவும் இருக்கலாம்.

நீங்கள் தேர்ந்தெடுத்த இடம் எதுவானாலும் அதை அப்படியே மனக் கண்ணில் கொண்டு வந்து நிறுத்துங்கள். அந்த இடத்துக்கு மனதால் போய் விடுங்கள். மீண்டும் ஒரு முறை மூச்சை உள் இழுத்து வெளிவிடுங்கள். இப்பொழுது மனதுக்குப் பிடித்த இடத்திற்குச் சென்று விட்டீர்கள். இப்பொழுது நீங்கள் அங்குத் தான் இருக்கிறீரகள். இது உங்களுக்கு மிகவும் பிடித்த இடம். ஏனெனில் இது நீங்களே தேர்ந்தெடுத்த இடம். அதனால் தான் மிகவும்  சந்தோஷமாக இருக்கிறீர்கள்.

இங்கிருக்கும் ஏதேனும் ஒரு பொருளைத் நினைவினால் தொட்டுப் பாருங்கள். மற்றும் நிறங்கள் வாசங்களை  மனதில் பதித்துக் கொள்ளுங்கள். சந்தோஷமான உணர்வுகளை அப்படியே பதித்துக் கொள்ளுங்கள். மிகவும் அமைதியாக மிகவும் சந்தோஷமாக இருப்பதை உணருங்கள். இந்த நிலையை மனதில் பதித்துக் கொள்ளுங்கள். இப்பொழுது உங்கள் உடலும் மனமும் மிகவும் சந்தோஷமாக இருப்பதை உணருகிறீர்கள். உங்கள் உடலும் மனமும் மிகவும் சாந்தத்துடனும் மிகவும் நிம்மதியுடனும் இருக்கின்றன.

இந்த நிலை மிக மிகச் சிறந்த நிலை. 

இப்பொழுது நீங்கள் குபேர (ஆல்ஃபா) நிலையில் இருக்கிறீர்கள். இது மிகவும் சந்தோஷமான ஆனந்தமான நிலையாகும். 

இந்த நிலையில் இருக்கும் பொழுது  நீங்கள் உள்ளுணர்வுடனும் மிகுந்த சக்தியுடனும் மிகவும் ஆக்கபூர்வமாகவும் செயல்படுகிறீர்கள். இந்த நிலையைத் துல்லியமாகப் பதித்துக் கொள்ளுங்கள் மறுபடியும் நீங்கள் இந்த நிலைக்குப் போகமுடியும்.இதுதான் உங்கள்  மனதின் குபேர (ஆல்ஃபா) நிலை.

இந்த நிலையில் இருக்கும் போது மனதுக்குள் பத்திலிருந்து ஒன்றுவரை எண்ணுங்கள்.

பத்து ஒன்பது எட்டு இப்பொழுது மெல்ல மெல்ல ஆழமாகச் செல்கிறீர்கள்.

ஏழு ஆறு ஐந்து மிக அற்புதமான உணர்வு இது.

நான்கு மூன்று இரண்டு ஒன்று. நீங்கள் இப்பொழுது மிக ஆழமான குபேர (ஆல்ஃபா) நிலையில் இருக்கிறீர்கள்.

இப்பொழுது உங்கள் இரு கைகளிலும் உள்ள குபேர முத்திரையில் கவனத்தைப் பதியுங்கள். இந்த ஆழமான ஆல்ஃபா நிலையை மனதில் பதிய வைத்துக் குபேர முத்திரையுடன் சம்பந்தப்படுத்திக் கொள்ளுங்கள்.

இந்த நிலையில் இயங்கும்போது சக்தி வாய்ந்தவராக இருக்கிறீர்கள். மிகுந்த உள்ளுணர்வுடன் செயல்படுகிறீர்கள். மிகவும் சந்தோஷமாக இருக்கிறீர்கள்.

உங்களால் முடியாதது எதுவுமில்லை. எல்லாமே உங்கள்கைகளில் இருக்கிறது. இந்த நிலையில் நீங்கள் நிறைவேற்ற நினைக்கும் கோரிக்கையை அது நிறைவேறி விட்டது போல மனக்காட்சியாகக் காணுங்கள். 

உங்கள் ஆழ்மனத்தில் குபேர (ஆல்ஃபா) நிலை நிலையாகப் பதிந்து விட்டது. இனி நீங்கள்  எப்போது குபேர முத்திரையைப் பயன் படுத்தினாலும் உங்கள் மனம்  ஆல்ஃபா நிலையை எட்டி விடும்.

அந்த நிலையில் இருந்து செயல்படும். இப்பொழுது  உங்கள் கவனத்தை இந்த இடத்திற்குக் கொண்டு வாருங்கள். மல்லாந்து படுத்திருக்கிறீர்கள். மூச்சை உள்ளிழுத்து வெளியே விடுங்கள். இரண்டு கால்களையும் கைகளையும் அசைத்துத் தலையை வலப்பக்கம் இடப்பக்கம் திருப்பிப் பிறகு இரண்டு கைகளையும் தலைக்குப் பின்புறம் கொண்டு சென்று நிலத்தில் வையுங்கள்.

கால்களையும் கைகளையும் விறைப்பாக நீட்டுங்கள். பிறகு தளர்த்துங்கள். தலைக்குப் பின்புறம் உள்ள கைகளைத் தொடைகளுக்கு அருகில் கொண்டு வாருங்கள். வலதுகையைத் தலைக்கு மேல் உயர்த்தி வலது பக்கம் உருண்டு இடது கையை வயிற்றுக்கு அருகில் ஊன்றி மெதுவாக எழுந்து உட்காருங்கள். கண்கள் மூடியிருக்கட்டும். கைகளை உரசித் தேய்த்துக் கண்களில் வையுங்கள். பிறகு விழித்துப் பாருங்கள்.

குறிப்பு: இத்துடன் குபேரத் தியானம் நிறைவு பெறுகிறது. இரவு தூங்கப் போகுமுன்னர் இந்த தியானத்தினை செய்து வந்தால் நிம்மதியாக உறக்கம் வரும்.

நன்றி அறிவிப்பு:-
நமது வலைப்பூவுக்காக பிரத்தியேகமாக இந்த இந்தக் கட்டுரையை எழுதி அனுப்பி உதவிய யோகா மாஸ்டர், பொறியாளர் திரு.அ.மெய்யப்பன், B.E., M.B.A., P.G.Dip.(Yoga) அவர்களுக்கு நமது சார்பில் இதயம் கனிந்த நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் .

வாழி நலம் சூழ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக