ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

உலகை அழிக்கும் மின்னணுக் கழிவு (ஈ-வேஸ்ட்)

புற்றீசல் போல என்பார்களே அப்படித் தான் இருக்கிறது இன்றைய நவீன உலகில் எலக்ட்ரானிக் பொருட்களின் வளர்ச்சி. இரண்டு வருடங்களுக்கு முன்பு வாங்கிய கணினி இன்றைக்கு அதரப் பழசு என பெயர் சூட்டப்பட்டு ஒதுக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு வாங்கிய கைப்பேசியைக் கைகளில் வைத்திருப்பதே அவமானம் என கருதுகிறது இளைஞர் பட்டாளம். இளசுகளின் கேலிகளும் கிண்டலும் பழைய கைப்பேசிகளை நோக்கி எழுந்து கொண்டே இருப்பதனால் ஆறுமாதம் அல்லது வருடத்துக்கு ஒரு முறை கைப்பேசியை மாற்றுவது என்பதை பிறவிப் பெருங்கடன் போல வழுவாது நிறைவேற்றுகிறது இளைஞர் குழாம்.

கைப்பேசி கணினி என்றில்லை, வீட்டில் பயன்படுத்தும் தொலைக்காட்சிகள் நான்கைந்து வருடமானாலே புதுசாய் வாங்கலாமே என ஒரு உந்துதலும், விவாதமும் வீடுகளில் எழுவதும் வாடிக்கையே. இதே நிலையை குளிர்சாதனப் பெட்டி, குளிர் சாதனக் கருவிகள் என அனைத்திற்கும் பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம்.

எங்கேனும் பழசைக் கொடுத்து புதுசு வாங்க முடிந்தால் இவற்றை அவர்கள் தலையில் கட்டிவிடலாம். இல்லையேல் முடிந்த மட்டும் பயன்படுத்திப் பார்த்துவிட்டு என்ன செய்வது ? குப்பையில் தான் போடவேண்டும் என்கிறீர்கள் தானே ? இது தான் இன்றைக்கு உலகையே உலுக்கும் மிகப்பெரிய பிரச்சனையாய் உருவெடுத்துள்ளது.

என்னிடமிருக்கும் ஒரு பழைய கைப்பேசியை அல்லது கணினியை குப்பையில் எறிந்தால் என்ன ? அதில் என்ன பிரச்சனை இருக்கப்போகிறது என நீங்கள் நினைக்கக் கூடும் ? அப்படி உலகிலுள்ள எல்லோரும் நினைக்கத் துவங்கியதால் தான் பீலி பெய் சாகாடும் கணக்காக உலகில் இன்றைக்கு மின்னணுக் கழிவு (e-waste) எனப்படும் எலக்ட்ரானிக் கழிவு மாபெரும் அச்சுறுத்தலாய் எழுந்துள்ளது.

இப்படிப் போடப்படும் மின்னணுக் கழிவு மட்கி மண்ணோடு மண்ணாகப் போய்விடும் என நினைத்தால் அது தவறு. இத்தகைய கழிவுகள் மண்ணை மிகப்பெருமளவில் மாசுபடுத்துவதுடன் உடலுக்கும், வாழ்க்கைக்கும் பல்வேறு சிக்கல்களையும் தந்து செல்கிறது. இதற்குக் காரணம் இந்த எலக்ட்ரானிக் பொருட்களில் காணப்படும் விஷத் தன்மையுள்ள பொருட்கள்.

சுமார் ஆயிரம் விஷத்தன்மையுள்ள பொருட்கள் இந்த ஒட்டு மொத்த இ-கழிவில் காணப்படுகின்றன. இதன் மூலம் ஒவ்வாமை நோய் முதல் புற்று நோய் வரையிலான பல்வேறு நோய்கள் மனிதனை ஆக்கிரமிக்கும் என்பதே என்பது அதிர்ச்சியூட்டும் உண்மையாகும். இந்த மின்னணுக் கழிவை சரியான முறையில் மறு சுழற்சி செய்வதற்கோ அல்லது அழிக்கவோ பரவலான சிறப்பான நடைமுறைகள் இல்லை என்பதால் உலகம் இந்த சிக்கலை உலக வெப்பமாதலுக்கு அடுத்த இடத்தில் மிக முக்கியமான பிரச்சனையாக முன் வைத்துள்ளது.

பாதரசம், காட்மியம், ஈயம், பைபேனால் போன்றவை இத்தகைய மின்னணுக் கழிவு களில் பரவலாகக் காணப்படும் விஷத் தன்மையுள்ள பொருட்களாகும். இவற்றை எரித்தால் அதிலிருந்து எழும் புகை காற்றை மாசுபடுத்துவதுடன், சுவாசிப்பவர்களுக்கு பல்வேறு விதமான நீண்ட கால நோய்களையும் தந்து செல்கிறது.

இவற்றைப் புதைத்தால் பூமி மாசுபடுகிறது. மண்ணின் வளமும், மண் சார்ந்த நீரும் மாசுக்குள் தள்ளப்படுகின்றன. இவை மனிதனுக்கு பல்வேறு விதமான வடிவங்களில் உபாதையைத் தந்து செல்கின்றன.

அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகள் இந்தப் பிரச்சினையிலிருந்து தப்ப அந்த நாடுகளிலுள்ள மின்னணுக் கழிவுகளை அப்பாவி நாடுகளான இந்தியா, பிலிப்பைன்ஸ், சீனா மற்றும் பின் தங்கிய ஆப்பிரிக்க நாடுகளின் தலையில் கொட்டி விட்டுச் செல்கின்றன. வெளிநாட்டுப் பணத்துக்குக் கையேந்தும் நிலையில் பின் தங்கிய நாடுகள் இருப்பதை சாதகமாக்கிக் கொண்டு சுயநலத்தின் முழு உருவான வளர்ந்த நாடுகள் தங்கள் நாடுகளின் விஷத்தை நமது முதுகில் கொட்டும் விஷமத் தனத்தைச் செய்கின்றன.

தினசரி வாழ்க்கையை எப்படியேனும் ஓட்டவேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டிருக்கும் நமது வறுமை வயிறுகளுக்கு மின்னணுக் கழிவு என்ன என்பதே தெரிவதில்லை. அவர்கள் நாட்டின் பல்வேறு மூலைகளில் அமர்ந்து கொண்டு இந்த எலக்டானிக் பொருட்களை பிரித்து, நல்ல பாகங்களை தனியே எடுத்து, தேவையற்ற பாகங்களை எரியூட்டுகின்றனர். இப்படி உயிருக்கே உலை வைக்கும் வேலையைச் செய்யும் பாட்டாளி மக்களுக்குக் கிடைப்பது பசியாற்றுமளவுக்கான பணம் மட்டுமே.

ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகள் அவர்கள் நாடுகளில் இந்தக் கழிவை அழிக்கச் செலவிடுவதில் 20 விழுக்காடு பணத்தை மட்டுமே செலவிட்டு பிற நாடுகளுக்குக் கழிவுகளை அனுப்புகின்றனர். எண்பது விழுக்காடு லாபம் பெறும் இந்த வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளை உலகின் பொதுக் குப்பைத் தொட்டியாக்கி விட்டன என்பது தான் உண்மை.

பல வளரும் நாடுகளும், பின் தங்கிய நாடுகளும் இத்தகைய கழிவுகளால் நாட்டு மக்களுக்கு ஏற்படும் இன்னலைக் கருத்தில் கொள்ளாமல் இதை வருமானத்துக்கான வழியாய் பார்ப்பதும் மேலை நாடுகளுக்கு சாதகமாகிப் போய் விட்டது.

இந்த மின்னணுக் கழிவுகளை சரியான முறையில் மறு சுழற்சி செய்வது மட்டுமே இந்த இ-கழிவுகளின் பிரச்சனையிலிருந்து உலகைக் காக்கும் வழியாகும். ஆனால் இதிலுள்ள மிகப்பெரிய சிக்கல் மின்னணுக் கழிவுகள் மற்ற கழிவுகளோடு சேர்த்து குப்பைத் தொட்டிகளிலும், குப்பை மேடுகளிலும் தேங்குவது தான்.

ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமெனில், கைப்பேசிகளிலுள்ள அனைத்துப் பாகங்களையும் தனித் தனியே எடுத்து மறு சுழற்சி செய்து பயன்படுத்த முடியும். இதன் மூலம் சுற்றுச் சூழலையும் காப்பாற்றி, லாபத்தையும் பெற்றுக் கொள்ளலாம். இதிலுள்ள தங்கம், வெள்ளி, செம்பு, பிளாஸ்டிக் போன்றவற்றை பல்வேறு விதங்களில் மீண்டும் பயன்படுத்த முடியும்.

சுமார் பத்து கோடிக் கைப்பேசிகளை மறு சுழற்சி செய்தால் அதிலிருந்து சுமார் 3400 கிலோ தங்கம், 16 இலட்சம் கிலோ செம்பு, முப்பத்து ஐயாயிரம் கிலோ வெள்ளி 1500 கிலோ பலாடியம் போன்றவை கிடைக்குமாம். அமெரிக்காவிலுள்ள முன்னணி கைப்பேசி நிறுவனங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து அமெரிக்க சுற்றுப் புற சூழல் பாதுகாப்பு குழுவுடன் இந்த இ-கழிவு முறைப்படுத்தல் பணியில் இணைந்துள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.

உலகில் சராசரியாக ஆண்டுக்கு ஐந்து கோடி டன் எனுமளவில் மின்னணுக் கழிவுகள் சேர வாய்ப்பு இருப்பதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இவற்றில் பத்தோ இருபதோ விழுக்காடு மட்டுமே மறு சுழற்சிக்குள் செல்கின்றன. மிச்சமுள்ள சுமார் எண்பது விழுக்காடு மின்னணுக் கழிவுகள் மற்ற குப்பைகளோடு சேர்ந்து பூமியையும், சுற்றுச் சூழலையும் மாசுபடுத்தும் பணியில் இறங்கிவிடுகின்றன என்கிறது ஆராய்ச்சி முடிவு ஒன்று.

இன்றைய உலகின் விஞ்ஞான வளர்ச்சி இந்த மின்னணுக் கழிவுகளின் அளவை ஆண்டு தோறும் அதிகப்படுத்திக் கொண்டே செல்கிறது. கூடவே கடுமையான சந்தைப் போட்டியினால் நாளொரு புது வகை என அறிமுகமாகிக் கொண்டே இருக்கும் கைபேசி, கணினி போன்ற நவீனப் பொருட்கள் இந்த மின்னணுக் கழிவினை ஊக்கப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. சுமார் நானூறு விழுக்காடு வரை இந்த எலக்ட்ரானிக் பொருட்களின் விற்பனை ஆண்டு தோறும் அதிகரிப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இன்னும் இரண்டே ஆண்டுகளில் இப்போது இருக்கும் மின்னணுக் கழிவைப் போல மூன்று மடங்கு கழிவுகளால் அப்பாவி நாடுகள் மூச்சுத் திணற வேண்டியிருக்கும் என்பது அதிர்ச்சியூட்டும் உண்மையாகும். எத்தனை மடங்கு விற்பனை அதிகரித்தாலும், கழிவுகள் அதிகரித்தாலும் உலகிலேயே அதிக எலக்ட்ரானிக் பொருட்களைப் பயன்படுத்தும் அமெரிக்கா போன்ற நாடுகள் தங்கள் கழிவுகளை கப்பல்களில் ஏற்றி ஆசியாவுக்கு அனுப்பி விட்டு நிம்மதியாகக் குறட்டை விடுகின்றன.

இப்படிப் பட்ட கழிவுகள் அதிகரிக்காமல் இருக்க வேண்டுமெனில் இவற்றைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்களே அதன் ஆயுள் காலம் முடிந்தபின் மறு சுழற்சிக்கான வழிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்கிறார் இத்தகைய அச்சுறுத்தல்களைத் தவிர்க்க ஏற்படுத்தப்பட்ட கிரீன் பீஸ் அமைப்பைச் சேர்ந்த மார்ட்டின் ஹோசிக் என்பவர்.

விற்பனை செய்யும் போதே அதன் மறுசுழற்சிக்கான விலையையும் அந்தப் பொருளில் சேர்த்து விடலாம் என்றும், அந்த பொருளின் ஆயுள் காலம் முடிந்தபின் அவற்றை அந்தந்த நிறுவனங்களே பெற்று மறு சுழற்சி செய்யலாம் எனவும் இந்த அமைப்பு அறிவுறுத்துகிறது.

இதன் மூலம் மின்னணுக் கழிவுகளிலிருந்து பெருமளவுக்கு உலகைக் காக்க முடியும். கூடவே நிறுவனங்கள் தங்கள் பொருட்களின் ஆயுளையும் அதிகப்படுத்தி நல்ல தரமான பொருட்களைத் தயாரிக்க முன்வரும். டெல், ஹைச்.பி, ஆப்பிள், கேட்வே போன்ற நிறுவனங்கள் பல நாடுகளில் தங்கள் தயாரிப்புகளை அவற்றின் ஆயுள் முடிந்தபின் பெற்றுக் கொள்ளத் துவங்கியிருக்கின்றன என்பது ஒரு நல்ல முன்னுதாரணமாகும்.

நல்ல நிலையிலுள்ள பொருட்களை குப்பைகளில் எறிவதை விட அவற்றை கல்வி நிலையங்கள், தொண்டு நிறுவனங்கள் போன்றவற்றுக்கு அளிக்கலாம், இதன் மூலம் கழிவிலிருந்து உலகையும் காக்கலாம். சில ஏழைகளில் தேவையையும் நிறைவேற்றலாம் என்பது இன்னொரு பார்வையாகும்.

மின்னணுக் கழிவுகளை எப்படி அழிப்பது, எங்கே கொடுத்து அவற்றை மறு சுழற்சிக்கு உட்படுத்துவது என்பன போன்ற அடிப்படை விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டிய கடமை அரசுக்கு உண்டு. தெளிவான வரை முறைகளை வகுத்து, அவற்றின் படி நடக்க மக்களை அறிவுறுத்துவதும் மிகவும் இன்றியமையாததாகும். இல்லையேல் நவீனத்தின் வளர்ச்சி உடலில் ஊனத்தை உருவாக்கும் என்பது திண்ணம்.

நன்றி: திரு சேவியர் - http://xavi.wordpress.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக