செவ்வாய், 28 ஜூன், 2011

11. கனி இருப்ப...இயற்கை நலவாழ்வியல் தொடர் சிந்தனைகள்.

"இந்த உலகத்திலேயே மிகவும் ஆச்சரியமான விஷயம் எது?" என்று தர்மபுத்திரரிடம் யட்சன் கேட்டதற்கு "நாள்தோறும் மக்கள் இறந்துகொண்டிருப்பதைப் பார்த்தாலும், தான் மட்டும் என்றும் அழியாமல் இருப்போம் என்று ஒவ்வொருவனும் நினைப்பது தான் ஆச்சரியமான விஷயம்" என்று தர்மர் விடையளித்ததாக மகாபாரதத்தில் வரும் யக்ஷப் பிரச்னம் என்னும் பகுதி கூறுகிறது.

இந்த ஆச்சரியம் மனிதனின் உடல் நலத்துக்கும் பொருந்தும்.  தனது நலவாழ்வுக்கு சற்றும் பொருந்தா உணவுப் பழக்கங்களை கொண்டிருக்கும் மனிதன், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பொருந்தா உணவுப் பழக்க வழக்கங்களால் உடல் நலிவுற்று உயிர் இழக்கும்போது கூட தனது நலத்தைப் பற்றி எந்த ஒரு கவலையும் கொள்ளுவதில்லை. 


மேலை நாட்டு கலாச்சாரம், மற்றும் உணவு வியாபாரிகளின் விளம்பர மோகம் போன்றவற்றினால் நமது மக்கள் இயற்கைக்கு மாறான உணவுப் பழக்க வழக்கங்களினால் தனது உயிருக்கு தமக்குத் தாமே கேடு விளைவித்துக் கொண்டிருக்கிறார்கள். 


இன்ன செய்கின்றோம் என்று அறியாமல் இவர்கள் செய்கிறார்கள் என்று இறைத் தூதர் இயேசுநாதர் வருந்திய மன நிலையில் நாம் இவர்களைப் பார்த்து வருந்த வேண்டி உள்ளது.


தமது வாரிசுகளின் எதிர் கால நலத்தைப் பற்றிக் கவலை கொள்ளாமல், ஃபாஸ்ட்ஃபுட்டில் உணவினை தாமும் உண்டு, தம் பிள்ளைகளுக்கும் அதனை பார்சல் செய்து எடுத்துச் செல்கிறார்கள்.  அஜினோ மோட்டோ என்னும் கொடிய மெல்லக் கொல்லும் நச்சு தாம் உண்ணும், உணவினில் கலக்கப்படுகிறது என்பதை அறியாமல் இவர்கள் இருக்கிறார்கள்.


மக்கள் நலம் என்று வாய் கிழியப் பேசும் மத்திய மாநில அரசுகள், மற்றும் அரசியல்வாதிகள் எவரும் எதனையும் கண்டு கொள்வதில்லை. 

"எது மனிதனின் உணவு?" என்ற தமது நலவாழ்வியல் ஆராய்ச்சி நூலில் அமரர் திரு.ம.கி.பாண்டுரங்கனார், சமைத்த உணவை விட பச்சை காய்கறிகள் மேலானவை என்கிறார். பழங்கள் அதைவிட மேலானவை என்று ஆதார பூர்வமாக கூறுகிறார். தேங்காயும் வாழைப்பழமும் மட்டுமே மூன்று வேளை உணவாக இருந்தால் மனிதன் துன்பமில்லா நோயற்ற வாழ்வு வாழலாம் என்று மறுக்க இயலாத விஞ்ஞான பூர்வமான மேற்கோள்களுடன் நிறுவுகிறார் அமரர் ம.கி.பா.

அமரர் ம.கி.பா அவர்களின் பிரதம சீடர்களில் ஒருவரான அமரர் திரு.மூ.ராமகிருஷ்ணன் அவர்களின் தம்பி திரு.மு.ஆ.அப்பன் அவர்களின் இயற்கை நலவாழ்வியல் பற்றிய ''நோயின்றி வாழ'' கட்டுரையின் அடுத்த பகுதி தொடர்கிறது.

நோயின்றி வாழ.. 
மூ.ஆ.அப்பன்.

சமைத்த உணவு.
இயற்கை உணவுக்கு ஒரு வேளை கூட மாற இயலாதவர்கள், சமையல் உணவில் உப்பை படிப்படியாகக் குறைத்து உப்பு (சோடியம் குளோரைடு) அறவே இல்லாத படி உணவு உண்ணப் பழகவேண்டும். உப்பிள்ளது சமைத்துண்டாலே பாதிக்கு மேற்பட்ட நோய்கள் இல்லாது மனிதன் வாழலாம்.  இப்பேருண்மையை அடிப்படியாக வைத்துதான் நாட்டு மருத்துவர்கள், உப்பில்லாப் பத்தியம்த்துடன் நாட்டு மருந்துகளை கொடுத்து நோயைக் குணப்படுத்தினார்கள். உப்பு கொடிது என்பதையறிந்த நம் நுன்னோர்களும் ''உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பான்; தப்பு செய்தவன் தண்டனை பெறுவான்'' எனும் முதுமொழியை ஏற்படுத்து உள்ளனர்.

அடுத்து வெள்ளைச்சீனி(சர்க்கரை) யையும், செயற்கை இனிப்பு உணவுகளையும் (லட்டு, ஜாங்கிரி, அல்வா, பால்கோவா, சாக்லேட், ஆரஞ்சு மிட்டாய், பிஸ்கோத்து (பேக்கரி வகைகள்), மற்றும் பிற செயற்கை உணவுகளை உண்பதை தவிர்க்க வேண்டும்.

அடுத்து அனைத்து அசைவ உணவுகளையும் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, கருவாடு முற்றிலும் தவிர்ப்பது இன்றியமையாதது. காபி, டீ, சோடா, ஐஸ்க்ரீம், பாட்டிலில் அடைத்த செயற்கை குளிர்பானங்கள் போன்றவைகளை தவிர்த்தல் முக்கியம்.

சமைத்த தானிய உணவுகளின் அளவை குறைத்து, காய்கறி, கீரைகளின் அளவைக் கூட வேண்டும். சூடான உணவுகளை உண்ணக் கூடாது. சூடான திரவங்களையும் அருந்தக் கூடாது. ஓரளவு சூடு தணிந்த பின்னரே உண்ண வேண்டும்; அருந்த வேண்டும். புளி, காரம் போன்றவற்றை மிகவும் குறைவாக சேர்க்க வேண்டும். எண்ணைப் பலகாரங்கள், எண்ணையில் தயாரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும். 

அவள், நெல்பொரி, அரிசிப்பொறி, ஆவியில் வெந்த உணவுகள் ஆகியன நெருப்பிலிட்ட உணவுகளாக இருப்பினும் அதிகம் தீங்கு தராதவை. 

அனைத்து நோய்களுக்கும் காரணம் எது?
அனைத்து நோய்களுக்கும் காரணம் மலச் சிக்கல்.

மலச்சிக்கலுக்கு காரணம் எது?
மலச்சிக்கலுக்கு காரணம் சமைத்துண்பதே.

மலச் சிக்கல் தீர வழி.
மலச் சிக்கல் தீர சமைத்துண்பதை விட முடியாதவர்கள் தினம் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் பச்சைத் தண்ணீர் எவ்வளவு அருந்த இயலுமோ (அதாவது 1.2 லிட்டருக்கு (1200 ml) குறையாமல்) அவ்வளவு அருந்தும் பழக்கத்தினை ஏற்படுத்தினால் மலச்சிக்கல் இராது.

(தொடரும்.)

அடுத்து வருவது இயற்கை மூலிகைகளைப்  பற்றி.

வாழி நலம் சூழ..
அஷ்வின்ஜி.

ஞாயிறு, 26 ஜூன், 2011

10. கனி இருப்ப...இயற்கை நலவாழ்வியல் தொடர் சிந்தனைகள்.


இயற்கை நலவாழ்வியல் பற்றிய திரு. மூ.ஆனையப்பன் அவர்களின் ''நோயின்றி வாழ'' கட்டுரையின் அடுத்த பகுதி:-

மனிதன் நோயின்றி வாழ என்ன மாதிரியான உணவுகளைத் தவிர்க்க வேண்டும்?

மனிதன் நோயின்றி வாழ விரும்பினால், சமைத்த செயற்கை உணவுகளான சோறு, இட்டிலி, தோசை, சப்பாத்தி, வடை, ரொட்டி மற்றும் பிற செயற்கை பானங்களான, காப்பி, ஹார்லிக்ஸ், டீ, விவா, சோடா, பாட்டிலில் அடைத்து கடைகளில் விற்கப்படும் அனைத்துவிதமான குளிர் பானங்கள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும். 

மேற்கண்ட உணவுகள் இன்றைய வாழ்வின் தவிர்க்க முடியாத அங்கங்கள் ஆகி விட்டனவே. பின்னர் என்ன மாதிரியான உணவுகளை சாப்பிடவேண்டும்?

மனிதன் உண்மையிலேயே நோயின்றி வாழ விரும்பினால், அவன் இயற்கை உணவுகளை சாப்பிடவேண்டும். அவையாவன:

1. கொட்டைப் பருப்புகள், பழவகைகள், பச்சைக் காய்கறிகள், முளை விட்ட தானியங்கள் போன்றன.

2. இயற்கை பானங்களான நிலத்தடி நீர் (பாட்டிலில் அடைக்கப்பட்ட நீர் செயற்கை நீர்), இளநீர், ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை முதலியவற்றால் தயாரான வெள்ளைச் சர்க்கரை, எசன்ஸ் போன்ற செயற்கை சுவையூட்டிகள் சேர்க்காத சாறுகள்.

மேற்கண்ட நூறு சதவீத இயற்கை உணவுக்கு மாறுதல் எளிது. பயன்களும் கணக்கற்றவை. நோயின்றி வாழ இவை உதவும்.

முழுமையாக மாற இயலாதவர்கள் ஒரு வேளை (நண்பகல்) சமைத்த உணவை சாப்பிட்டுக் கொண்டு மீதம் இரு வேளைகளிலும் (காலை, இரவு ) மேற்குறிப்பிட்ட வகையில் இயற்கை உணவு வகைகளை உண்டு வரவேண்டும். 

இதுவும் முடியாதவர்கள் சமைத்த சைவ உணவுகளை உண்டு கொண்டு இரவு மட்டுமாவது பழங்கள் நிறைந்த இயற்கை உணவுகளை உண்ணலாம்.

ஏன் சமைத்த உணவு ஆபத்தானது? 


சமைத்த உணவு மட்டுமே சாப்பிடும் பழக்கம் உள்ளவர் நோயின்றி வாழ என்ன செய்ய வேண்டும்?

(தொடரும்)
நன்றி: திரு. மூ.ஆ.அப்பன், இயற்கை நலவாழ்வியல் அறிஞர், குலசேகரன்பட்டினம்(திருச்செந்தூர்), தமிழ்நாடு.


வாழி நலம் சூழ..
தொகுப்பு:
அஷ்வின்ஜி

ஞாயிறு, 19 ஜூன், 2011

9. கனி இருப்ப...பெருகமணி இயற்கை நலவாழ்வியல் முகாம்.


அன்பர்களுக்கு வணக்கம்.

சில வாரங்களாக உங்களிடையே தொடர்ந்து வர இயலாமல் போனமைக்கும், உங்களை காக்க வைத்தமைக்கும் என்னை  மன்னியுங்கள்.

உங்கள் ஆதரவு, அன்பு, ஆசிகளுடன் எனது எம்.எஸ்சி (யோகா) தேர்வுகளையும், ப்ராஜெக்ட்களையும், தீசிசையும் வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டேன். உங்களுக்கு என் இதய நன்றிகளை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

இன்னும் நிறைய நலவாழ்வுச் செய்திகளை உங்களிடையே பகிர்ந்து கொள்ள எனது கல்விப் பயணம் உதவி இருக்கிறது. நான் கற்றுக் கொண்டவற்றை வரும் நாட்களில்  உங்களிடையே அவற்றை பகிர்ந்து கொள்வேன்.

தமிழகத்தைச் இயற்கை நலவாழ்வியல் முன்னோடிகளில் மிக மிக முக்கியமாக கருதப்படுபவர்கள் அமரர் பிக்ஷு ஸ்வாமிகள், அமரர் ம.கி.பாண்டுரங்கனார், அமரர்  மூ.ராமகிருஷ்ணன் போன்றோர்கள் ஆவர்.

அவர்களிடம் அணுக்கத் தொண்டர்களாக குருகுலவாசிகளாக இருந்து நலவாழ்வுப் பாடங்களைப் பயின்றவற்றை தற்சமயம் வாழ்ந்து காட்டிக் கொண்டே வழிகாட்டிகளாக செயல்பட்டு வரும் ஆசான்கள் திருவாளர்கள் குலசேகரன்பட்டினம் மூ.ஆனையப்பன் (இவர் சிவசைலம் அமரர் மூ.ராமகிருஷ்ணன் அவர்களின் இளவல்).
சுவாமி நாகலிங்கனார், ஆடுதுறை இர. இராமலிங்கம்,  யோகா ஆசான் தி.ஆ.கிருஷ்ணன், தண்டரைப்பேட்டை ஸ்ரீராமுலு, சென்னை யோகா ஆசிரியர் மற்றும் இயற்கை நலவாழ்வியல் நெறியாளர் அ.மெய்யப்பன்  போன்ற பல ஆசான்களிடம் நேரடியாகப் பாடம் பயில எனக்கு தொடர் வாய்ப்பு கிடைத்து வருவது என் முன்னோர் செய்த நற்பலன்களே காரணம்.

அந்த வகையில் மேலே குறிப்பிட்ட பெரும்பான்மையான முன்னோடிகளிடம் நான் பெருகமணி முகாமில் பயின்றவற்றையும், கடந்த இருபது ஆண்டு காலமாக சேகரித்து வைத்திருக்கும் இயற்கை நலவாழ்வியல் செய்திகளையும் இனி ஒவ்வொரு வாரமும் தவறாமல் உங்களோடு பகிர்ந்து கொள்வேன். 

திரு மூ.ஆ. அப்பன் எழுதிய ''நோயின்றி வாழ'' என்னும் கட்டுரையை இங்கே வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன்.

நோயின்றி வாழ...
மூ.ஆ.அப்பன்

இயற்கையில் படைக்கப்பட்ட மனிதனைத் தவிர அனைத்து உயிரினங்களும் இயற்கையாக கிடைக்கக் கூடிய உணவுகளை உட்கொண்டு, இயற்கையோடியைந்த வாழ்வு வாழ்வதால், அவ்வுயிரினங்களுக்கு மூளை நோய், கண் நோய், செவி நோய், இதய நோய், சிறுநீரக நோய், தொழு நோய், வாதம், காசம், ஆஸ்துமா, ஆட்கொல்லி புற்று நோய், எயிட்ஸ், எலும்பு முறிவு மற்றும் எவ்வித நோயுமின்றி நரை, திரை, மூப்பு இன்றி உடல், உள  ஆரோக்கியமிகுந்து  வாழ்கின்றன. எடுத்துக் காடாக, பறவைகள் தானியங்களை பச்சையாக உண்கின்றன. விலங்கினங்கள் புல், இலை, தழை 
மற்றும் பச்சைக் காய்கறிகளை உண்கின்றன. மண்புழுக்கள் மண்ணையே உணவாக உண்ணுகிறது.

பரிணாம வளர்ச்சியில் உயிரினங்களில் உயர்ந்த உயிரினமான மனிதனோ, தனக்குரிய இயற்கை உணவாக கொட்டைப் பருப்புகளையும், பழவகைகளையும் உண்ணாமல்,பறவையினங்களின் உணவான  தானியங்களையும்,விலங்கினங்களின் உணவான இலைகளையும்,காய்கறிகளையும், சமைத்து உண்பதால்தான் எண்ணற்ற உடல், உள நோய்களுக்கு ஆளாகி அவதிப்படுகின்றான். மனிதனது எண்ணற்ற நோய்களுக்கு, எண்ணற்ற மருந்துகள், மருத்துவமனைகள்  இருந்தும் அவற்றை முழுமையாக நீக்கி கொள்ள முடியாது, திசை மாறிய பறவையைப் போல மனிதன் திணறுகின்றான்.

இயற்கை உணவு.
ஆப்பிளை விட தேங்காய் மிகவும் உன்னதமான உணவு.

மனிதனுடைய அனைத்து உடல், உள நோய்களுக்கு மட்டுமல்ல, உலகிலுள்ள அனைத்து சிக்கல்களுக்கும் காரணம், சமைத்து உண்ணும் பழக்கம் தான்.எனவே மனிதனின் அனைத்து பிணிகளிலிருந்தும் குணம் பெறவும், பிணிகள் வராமலும், நோயின்றி வாழவும் விரும்பினால் அவன் தனது உணவாக கொட்டைப் பருப்புகள் (தேங்காய், முந்திரி, வால்நட், அக்ரூட், பாதம், பிஸ்தா போன்றவை), பழ வகைகள் (வாழை, மா, பலா, ஆப்பிள், பப்பாளி, சீதா, ஆரஞ்சு, கொய்யா, அன்னாசி மற்றும் இதர பழங்கள்), மற்றும் பச்சையாக உண்ணக் கூடிய காய்கறிகளுடன் கூடிய பழவகைகள், முளை விட்ட தானியங்களுடன் கூடிய பழவகைகள் என இயற்கைக்கு மாறுபாடு இல்லாத உணவு வகைகளை பசித்த போதெல்லாம் உண்டு வாழ முயலுதே உயரிய இயற்கை நெறியாகும்.

எனவே தான் பொய்யாமொழிப் புலவரான திருவள்ளுவரும்,  "மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின் ஊறுபாடு இல்லை உயிர்க்கு" எனவும், "மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது, அற்றது போற்றி உணின்" என்றெல்லாம் மானிடருக்கு இயற்கை ஆரோக்கிய நெறியை உணர்த்தியுள்ளார்.

சமைத்த உணவின் தீமைகள் என்னென்ன? இயற்கை உணவுகளை எவ்வாறு தேர்ந்தெடுத்து உண்பது? என்பதை வருகிற தொடரில் காண்போம்.

(தொடரும்) 

தொடர்ந்து படித்து, பின்னூட்டம் தந்து வரும் அன்பர்களுக்கு என் இதய நன்றி.

அஷ்வின்ஜி.
வாழி நலம் சூழ...

செவ்வாய், 14 ஜூன், 2011

உணவு பசிக்கா? ருசிக்கா?






































































நாம் உண்ணும் உணவு எப்படி இருக்க வேண்டும். ?

காஞ்சி பரமாச்சாரியார் அருளியவை.

  • சாப்பாடு நம் உடலை மட்டுமின்றி உள்ளத்தையும் வளர்ப்பதாக இருப்பதால் நாம் திட்டமிட்டு அன்றாடச் சாப்பாட்டை கவனமாக அமைத்துக் கொள்ளவேண்டும். நல்ல உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும். 
  • மரக்கறி (சைவ) உணவின் சிறப்பு என்னவென்றால் அது நமக்கு சாந்த குணத்தை தருகிறது.
  • மரக்கறி (சைவ) உணவிலும் கூட காரம், புளிப்பு முதலியன ராட்சஷ உணர்வைத் தூண்டிவிடக் கூடியவை. பழைய ஆறின உணவு வகைகள் தாம்ச (சோம்பல்) குணத்தை வளர்ப்பவை. பூண்டு, வெங்காயம், முள்ளங்கி, முருங்கை போன்ற உணவுகள் சத்வ குணத்துக்குவிரோதமானவை. இவற்றை தவிர்ப்பது நல்லது.
  • ருசிக்காக சாப்பிடும்போது தான் அளவுக்கு அதிகமாக உண்ண வேண்டி வருகிறது. பசி என்ற ஒன்றை நினைவில் நிறுத்தி உண்ணத் தொடங்கினால் சாப்பிடும் அளவில் நிதானத்தைக் கடைபிடிக்கலாம். அஜீரணம், மனதில் அசுத்தம் போன்றவற்றை வரவழைத்துக் கொள்ளாமல் இருப்போம். 
  • அரைவயிற்றுக்குச் சாப்பிடுங்கள். கால் வயிற்றில் தண்ணீரை நிரப்புங்கள். கால் வயிறு காலியாக இருக்கட்டும். இதையே வைத்திய சாஸ்திரம், தர்ம சாஸ்திரங்கள் எல்லாம் வலியுறுத்திச் சொல்கின்றன.

நன்றி தினமலர்: மார்ச் 27, 2009

திங்கள், 13 ஜூன், 2011

கனி இருப்ப.. தொடர் கட்டுரை பற்றிய ஓர் முக்கிய அறிவிப்பு..

அன்பர்களே.

வணக்கம். 

நான் நலமே. 

நீங்கள் அனைவரும் நலம் தானே?

எனது யோகா முதுகலை அறிவியல் இறுதித் தேர்வு மற்றும் அது தொடர்பான ப்ராஜெக்ட் அறிக்கைகள், தீசிஸ் போன்றவற்றை தயாரிப்பதில் மும்முரமாக ஈடுபட்டு வருவதினால் ''கனி இருப்ப.." தொடர் கட்டுரைகளை தயாரித்து வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. 

தங்கள் ஆர்வத்துக்கு தடையாக இருப்பதற்கு மன்னியுங்கள். ஜூன் மாத இறுதி வரை நான் உங்களிடையே பங்கெடுத்துக் கொள்ள இயலாது சூழ்நிலையில் இருக்கிறேன். ஜூலை முதல் வாரம் வரை காத்திருங்கள். 
இயற்கை நலவாழ்வியல் தொடர்பான மிகச் சிறப்பான செய்திகளை உங்களை இடையே பகிர்ந்து கொள்வதற்காக வைத்திருக்கிறேன். தங்களின் பொறுமைக்கும், ஆர்வத்துக்கும், தொடர் ஆதரவுக்கும், அன்புக்கும் என் இதய நன்றி.

வாழி நலம் சூழ..

அன்புடன்,
அஷ்வின்ஜி.

சனி, 21 மே, 2011

8. கனி இருப்ப...பெருகமணி இயற்கை நலவாழ்வியல் முகாம்.


பெருகமணி (திருச்சி) அருகே கடந்த வாரங்களில் நிகழ்வுற்ற இயற்கை நலவாழ்வியல் பயிற்சி முகாம் தொடர்பான படங்கள். இவை ஏற்கனவே வெளியிடப்பட்டு ப்ளாக்கர் சீரமைப்பு தொடர்பாக நீக்கப் பட்டவை. பதிவில் நீடிக்க மீண்டும் வெளியிடப் பட்டுள்ளது.

முகாமில் வைக்கப் பட்டிருந்த பேனர்கள்.
















நான் படித்து வரும் எம்.எஸ்.சி (யோகா) பாடத்தின் பல்கலைக் கழக தேர்வுகள் இம்மாத இறுதியில் நடைபெற உள்ளதால் 'கனி இருப்ப' தொடர் கட்டுரைகள் ஜூன் முதல் வாரத்தில் இருந்து வெளி வரும். அன்பர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.

நன்றி.

அஷ்வின்ஜி.
வாழி நலம் சூழ.

வியாழன், 12 மே, 2011

உப்பில்லா உணவு.

இசைஞானியின் பத்தியம்!
 [ Wednesday, 11-05-2011 19:21 ]
 
ilaiyaraja-11-05-11













இனிப்பை தவிர்ப்பார்கள், சர்க்கரை வியாதிக்காரர்கள். ஆனால் கடந்த இரண்டல்ல, ஐந்தல்ல, இருபதைந்து ஆண்டுகளாக உப்பை தன் உணவில் சேர்த்துக் கொள்ளாமல் சாப்பிட்டு வருகிறாராம் இசைஞானி இளையராஜா. இத்தனைக்கும் இளையராஜாவுக்கு பெரிதாக எந்த வியாதியும் கிடையாது. கோபம், குரோதம், காமம், இத்யாதி, இத்யாதிகளை தவிர்ப்பதற்காகவே இப்படி பத்திய சாப்பாட்டினை பல வருடங்களாக ஃபாலோ செய்து வருகிறாராம் இளையராஜா! இளையராஜாவின் இந்த உப்பில்லா உணவு கட்டுப்பாடு கடந்த பலவருடங்களாக அவருடன் பணிபுரியும் சக கலைஞர்களுக்கே தெரியாது என்பது தான் ஆச்சர்யத்திலும் பெரிய அதிசயம்!

Courtesy: http://tamilstar.net/news-id-ilaiyaraja-11-05-11615.htm

திங்கள், 9 மே, 2011

7. கனி இருப்ப...பெருகமணி இயற்கை நலவாழ்வியல் முகாம்.

கனி இருப்ப...
(பகுதி ஏழு தொடர்கிறது)

பதிவுலக அன்பர்களுக்கு வணக்கம். கடந்த மூன்றாம் தேதி மாலை மூன்றரை மணி முதல் எட்டாம் தேதி பகல் ஒன்றே கால் மணி வரை பெருகமணி (திருச்சி)யில் நடைபெற்ற இயற்கை நலவாழ்வியல் முகாமில் கலந்து கொண்டு பயன் பெற்றேன். அந்த அனுபவங்களை விரைவில் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.  நான் எழுதி கொண்டிருக்கும் கனி இருப்ப.... தொடரிலேயே இந்த அனுபவப் பதிவுகள் தொடரும்.

பெருகமணி முகாம் பற்றிய ஒரு முன்னோட்டம்.
காலை நான்கரை மணிக்கு துவங்கி இரவு பத்தரை வரை (மதியம் ஒரு மணி நேரம் ஓய்வு தவிர்த்து )நீடித்த நிகழ்ச்சிகள் அனைத்தும் பயனுள்ளவையாக இருந்தன. சுமார் 75 பேர்கள் முகாமில் கலந்து கொண்டனர். எண்பத்தைந்து வயது பெண்மணியில் இருந்து துவங்கி ஆறு வயது சிறுமிகள் உட்பட பலர் ஒரு குடும்பமாக சங்கமித்து இருந்தனர். 

வாழி நலம் சூழ வலைப்பூவில் நான் தந்திருந்த செய்தியைப் பார்த்துவிட்டு பட்டுக்கோட்டை டி.மணிகண்டன் அவரது நண்பர்களுடன் வந்து கலந்து கொண்டு மகிழ்வோடு பயன் பெற்றார்.

சென்னையில் இருந்து சுமார் இருபது பேர் கலந்து கொண்டனர். அதில் பத்து பேர் யோகி தி.ஆ.கிருஷ்ணன் அவர்களின் திருமூலர் யோகா டிரஸ்டில் யோகா பயிலும் மாணவியர்கள். இவர்கள் தமிழ்நாடு விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி பலகலைக் கழகத்தில் Diploma in Yoga,  PG Diploma in Yoga, பயிலுபவர்கள். இவர்களோடு கூட M.Sc(Yoga) பயிலும் நான்கு மாணவர்கள் (என்னையும் சேர்த்து) கலந்து கொண்டனர்.

ஐந்து நாள் முகாமில் அனைவரும் சேர்ந்து சில ஆயிரம் புகைப்படங்கள், மற்றும் காணொளிகள் எடுத்தனர். எனது காமிரா மூலம் (காமிரா இரவல் தந்த நண்பர் ஜி.கே.சுவாமிக்கு நன்றி) நான் சுமார் 350 படங்களை எடுத்தேன்.

அவற்றில் இருந்து சில புகைப் படங்கள் உங்கள் பார்வைக்கு.


பெருகமணி முகாம் - புகைப்படத் தொகுப்பு.

சங்கமம் நுழை வாயிலில்..

குடில் (நான்கைந்து பேர்கள் தங்கலாம்) 

 அழகிய சோலை 

 மற்றும் ஒரு குடில்...

 காணும் இடங்களில் எல்லாம் பசுமை.

 வாழை மரங்கள்..

 வாழை மரங்களின் பின்னணியில் கப்புசின் இல்லம்.

 கோடை வெப்பம் தெரியாத அளவுக்கு நிழல் தரும் மரங்கள்.

 மூங்கில் காடுகள்..

காய்கள் காய்த்து குலுங்கும் மாமரங்கள் 

 பசுமை. பசுமை. பசுமை.

 கண்ணுக்கு விருந்து..

 தென்னந் தோப்பு..

 நுழையு முன்னர் உள்ள பாலம்.

 குளிர்ந்த நீரோடை..

 காவிரி ஆற்றில் இருந்து வரும் நீரோடை..

 மூன்று வேளையும் இயற்கை உணவு..

 நாக்கில் சுவை நீர் ஊற வைக்கும் உணவுகள்..

 ஆஹா. தினம் தோறும எத்தனை வகைகள் ?

 பரிமாறத் தயாராக..

 மதிய உணவு வகைகள்.

 உணவு தயாரிக்கும் குழுவினர்...

 முகாமின் பதிவு பகுதி.

எங்கள் யோகா ஆசான் யோகி டாக்டர் தி.ஆ. கிருஷ்ணன் அவர்கள்.

இயற்கை நலவாழ்வியல் பற்றிய மிகவும் அரிய செய்திகளை ஒரே இடத்தில் நாங்கள் பெற்றிட உதவியாக மின் பொறியாளர் திரு.அ.மெய்யப்பன் (சென்னை) அவர்கள் முழு நிகழ்ச்சியையும் நெறிப்படுத்தினார். தமிழகத்தின் சிறந்த இயற்கை நலவாழ்வியல் அறிஞர்கள் அனைவரையும் ஒரே கூரையின் கீழே சந்திக்க நல்வாய்ப்பாக இந்த முகாம் அமைந்தது. 

சங்கமம் இயற்கை நலவாழ்வியல் மையத்தின் டைரக்டர், அருட்தந்தை திரு.ஜேகப் அவர்களது ஆர்வமான ஒத்துழைப்பும் அவரது இல்லத்தின் அனைத்துப் பணியாளர்களும் மிக அன்புடன் செய்த சேவைகளும் நெஞ்சை நிறைக்கின்றன.

முகாம் நிகழ்ச்சிகளைப் பற்றிய அனைத்து செய்திகளையும் வரும் தொடர் பதிவுகளில் விவரமாக பார்க்கலாம். 

நன்றி.

(தொடரும்)

வாழி நலம் சூழ...

அஷ்வின்ஜி
@A.T.ஹரிஹரன், MSc-Yoga Final.