ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

இயற்கை நலவாழ்வியல் அறிஞர் மு.வ.

தமிழ்நாடு தந்த பல அறிஞர்களில் மு.வ. அவர்களும் ஒருவர். அவருடைய பல சிறப்புகளில் முக்கியமான ஒன்று அவர் இயற்கை மருத்துவம் மட்டுமே செய்து கொண்டார் என்பது. அவரது திருக்குறள் தெளிவுரை எல்லோருக்கும் ஏற்புடையது. குறளில் சொல்லியது போல “மருந்தென வேண்டாவாம்” என்று வாழ்ந்தவர். ஆங்கில மருந்து மட்டுமின்றி வேறு எந்த மருந்தும் விரும்பாதவர். பசித்து உண்டு பணிகள் ஆறியவர். கனிகளை அதிகம் உண்டவர். மாறுபாடு இல்லா உண்டியான இயற்கை உணவுகள் ஏற்றவர். காந்தியடிகளின் இயற்கை மருத்துவத்தைக் கற்றவர், பரப்பியவர்.  

தமிழ்நாடு இயற்கை மருத்துவச் சங்கம் என்கிற சங்கத்தை சென்னையில் நிறுவி அதனை வழி நடத்திச் சென்றவர். அதன் பயனாக இயற்கை மருத்துவ நிலையம் அடையாற்றில் அக்காலத்தில் (1969 ல்) துவங்கப்பட்டது. மதுரை அண்ணாச்சி க.அருணாசலம் முதலானவர்கள் இச்சங்கத்தில் முக்கிய அங்கம் வகித்து வளர்த்தவர்கள். இதன் பயனாக தமிழ்நாடு இயற்கை மருத்துவ சங்கம் இன்றும் மதுரையில் உள்ளது. பல கிளைகளுடன் சிறப்பாக செயல்பட்டு இயற்கை மருத்துவ விழிப்புணர்வு வந்துள்ளது. இயற்கை மருத்துவர்கள் சாதனை படைத்து வருகின்றனர்.

மு.வ.அவர்களின் மக்கள் அலோபதி மருத்துவர். எனினும், அவர்களை ஒதுக்கி, மறுத்து இயற்கை நெறிகளையே பிடிமானமாக பின்பற்றினார்.

மரம் வளர்ப்பின் முக்கியத்துவத்தை அன்றே உணர்ந்தவர். மரம் வளராமைக்கு ஆடுகளே காரணம் என்றார். மரம் வளர...வளர... வளரவிடாமல் தளிர்களைக் கடித்து கடித்துச் சிதைத்து விடுகின்றன. ஆடுகள் மட்டும் இல்லாமல் இருந்தால் தமிழகமெங்கும் மரங்கள் தானாக வளர்ந்திருக்கும். ஆகவே மனிதன் தாவர உணவுக்கு மாறினால் தாவரங்கள் செழித்து வளரும்.

வெறும் ராகியை அதிகம் உண்பதால் குடல் முதலியன வறண்டுவிடும். வனப்பும் அறிவும் வராது. ராகியில் வரட்சித் தன்மை உண்டு. கிராம ஏழை மக்கள் பலர் ராகியை உண்டே அவ்வாறு வாழ்ந்தனர். மந்த நிலை ஏற்படும் அக்காலத்து தஞ்சை மாவட்ட மக்கள் ராகியை அறியார். அரிசியையே உண்டனர். அவர்கள் பல துறைகளிலும் மேம்பட்டு விளங்கினர். அதற்கு அரிசியில் உள்ள தவிட்டில் உள்ள நுட்பமான சத்துகளும் (வைட்டமின் பி) தவிட்டில் உள்ள எண்ணெய்க் கொழுப்புகளும் (வைட்டமின் ஏ,டி) முக்கிய காரணம். இது போன்ற நுட்பமான உணவு ஆராய்ச்சிக் குறிப்புகளை மு.வ. அக்காலத்தில் தமது நூல்களில் ஆங்காங்கே குறிப்பிட்டுள்ளார்.

அவரது ஆராய்ச்சிகளும், நுட்பமும் அதனை மக்களுக்குச் சொல்லி மேம்படுத்த வேண்டும் என்கிற வேட்கையும் அவருக்கு இருந்தது. அவர் அறிவுரைகளைப் பின்பற்றியிருந்தால் தமிழர்கள் பல் நோய்களுக்கு ஆளாகி இருக்க மாட்டார்கள்.

- இயற்கை மருத்துவர் இரா.சுப்ரமணியம்

நன்றி: மாரிமுத்து உலகநாதன், தஞ்சாவூர் (முகநூல் பக்கத்தில் இருந்து)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக