வியாழன், 17 ஜூன், 2010

பகுதி 19

இயற்கை மருத்துவம் (தத்துவங்களும் செயல் முறைகளும் - மகரிஷி க.அருணாசலம்.

மனிதன் சோம்பலுக்கு ஆட்பட்டு அதிகம் தூங்குவதனாலோ, நாக்குக்கு அடிமையாய் பெரும் திண்டிக்காரனாக ஆவதனாலோ ஜீரண சக்தி குறைந்து, உண்ட உணவு நச்சுப்பொருளாக மாறுகின்றது. அன்னரசம் இரத்தமாக மாறாமல், சளியாக மாறுவதும் அதனால் இயக்கத்தடை ஏற்படுவதும் வாழ்க்கையை நெறிப்படுத்திக் கொள்ளாதவர்களின் செயல்களிலிருந்து நாம் அறிகிறோம். ஆரம்ப நிலையில் இயக்க நோயாக இருப்பது நாளடைவில் உறுப்பு நோயாக வளரும். இயக்கநோய் நிலையிலேயே பரிகாரம் காண்பது எளிது. ஆனால் நவீன மருத்துவர்கள் இயக்க நோய்க்குக் காரணமாக மலங்களை வெளியேற்றுவதற்குப் பதிலாக அவற்றை அடக்கும் விஷமருந்துகளைக் கொடுத்து நோயை வளர்க்கின்றனர். இயக்கநோய் கொடுக்கும் தீவிர வலியும், துன்பமும் தற்காலிகமாகக் குறைந்தாலும் அவை உள்ளே நின்று உறுப்புக்களை அழிக்கின்றன. அந்த நிலையில் உறுப்புக்களுக்கு புத்துயிர் கொடுப்பது எளிதல்ல. இருப்பினும் இயற்கை ஆற்றல்கள் அனைத்தையும் முறையுடன் பயன்படுத்தினால் உடம்புக்கு புத்துயிர் ஊட்டுவது சாத்தியமே.

ஆரம்ப நிலையில் நம்பிக்கையினாலும் சாதகமான எண்ணங்களின் வலிமைகளினாலும் பல நோய்களைப் போக்கலாம். எனினும் இயக்க நோய்க்கும், மனநோய்க்கும் உள்ள வேறுபாட்டைக் கவனத்தில் கொள்ளவேண்டும். இதிலுள்ள வேற்றுமை மிகவும் நுண்ணியதே பார்க்கப் போனால் வேற்றுமை இல்லையென்றே கூடச் சொல்லிவிடலாம். இயற்கை மருத்துவர் இதைப்பற்றி அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை. நோயாளியை நல்ல சூழலில் இருக்க வைத்து அவரை சீரிய எண்ணங்களை எண்ணும்படியாகவும் பசியின் நிலையை அறிந்து சாத்வீக உணவுகளை உண்ணும்படியாகவும் செய்தால் நோய் நீங்கி பூரண சுகம் பெறுவர்.

(இயற்கை இன்னும் வளரும்)
அடுத்த பதிவில் ஏழின் ஏழில்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக