சனி, 15 மே, 2010

பகுதி 11 - இயற்கை மருத்துவம் (தத்துவங்களும் செயல்முறைகளும்) மகரிஷி க.அருணாசலம்.


ஒரே அடிமரத்தைக் கொண்ட மரத்தில் பல கிளைகளும் இலைகளும் பூக்களும் காய்கறிகளும் இருப்பினும் மரம் ஒன்றேதான், அதுபோலவே உடலில் தோன்றும் நோய் ஒன்றதான் என்றாலும் மனித உடம்பின் வெவ்வேறு பாகங்களான தலை, கழுத்து, மார்பு, வயிறு, இடுப்புக்குழி, கை, கால், முதலியவற்றின் வாயிலாக வெளி வரும்போது பலவாகத் தோற்றமளிக்கிறது. நாடகங்களில் பல வேடங்களில் ஒருவர் தரிக்கின்றார். ஒரே ஆள் சமயத்திற்கு ஏற்றமாதிரி  வேடந்தாங்கி நடிக்கின்றார். இருப்பினும் ஒரே ஆள்தான் பலவேஷம் தரிக்கின்றார் என்பது அறிவாளிகளுக்குத் தெரியும். சிறு குழந்தைகள், சாதாரண மக்கள் வெவ்வேறு ஆள் என்று நம்பி விடுகிறார்கள். நாடகத்தைப் பற்றி எவ்வித நம்பிக்கை கொண்டாலும் தீங்கு விளைவதில்லை. ஆனால் நோயைப்பற்றியோ முதற்காரணத்தைக் காணாமல் வெளித்தோற்றத்திற்குச் சிகிச்சை அளிப்பது பூரண குணத்தை கொடுப்பதில்லை. சில சமயங்களில் அரைக்குறைச் சிகிச்சைகளால் நோய் மேலும் உள்ளத்தள்ளப்பட்டு நாட்பட்ட நோயாகவும சீரழிக்கும் நோயாகவும் பின்னர்அதிகத் தொந்தரவைக் கொடுக்கலாம்.

எனவேதான் "நோய் ஒன்றே பல அல்ல" என்னும் அடிப்படையை இயற்கை மருத்துவ தத்துவம் வற்புறுத்துகின்றது.

மாலை ஐந்து மணி சுமாருக்கு மலர்ந்த முகத்துடன் நண்பர் சோமு எனது அறைக்குள் நுழைந்தார் 'ஐயா என் வயிற்று வலி இப்பொழுது பரவாயில்லை ஆனால் முழங்கால் இரண்டிலும் நல்ல வலி. இதற்கு ஏதாவது பரிகாரம் சொல்லுங்கள்"

"சென்ற தடவை சந்தித்த போது நான் விரிவாகச் சொன்னது நினைவிருக்கலாம் அடிவயிற்றில் தொடர்ந்து காலையிலும், மாலையிலும் மண்பட்டி போட்டு வருகிறீர்களல்லவா? தொடர்ந்து செய்து வாருங்கள்.

"ஐயா! வயிற்றுவலி என்று நான் சொன்ன பொழுது எனக்கு உள்ள குறைபாடுகளைப் பற்றியெல்லாம் கேட்டு விசாரித்து நோய் ஒன்றுதான் பல அல்ல என்பதைப் பற்றிச் சொன்னீர்கள் வயிற்றுக்குப் படுக்கப் போகுமுன்னும் காலை எழுந்தவுடனும் நல்ல புற்றுமண்ணோ அல்லது களிமண்ணோ எடுத்து வந்து மண்பட்டி போட்டக்கொள்ள வேண்டுமென்று சொன்னீர்கள் நீங்கள் தெரிவித்தபடியே இரண்டு நாட்கள் செய்தேன். வலி மிகவும் குறைந்து விட்டது. ஏன்? வலியே இல்லையென்று கூட சொல்லலாம் அதன் பின்னால் மண்பட்டி போட்டுக் கொள்வதை நிறுத்தி விட்டேன். இரண்டு மூன்று நாட்கள் சுகமாக இருந்தது ஆனால் நேற்றும் இன்றும் தான் முழங்கால் மூட்டுக்களில் நல்ல வலி தயவு செய்து ஏதாவது பரிகாரம் சொல்லுங்கள் எனக்கு வயிற்றுவலி இல்லை.

இவருக்கு இயற்கை மருத்துவத் தத்துவத்தை எப்படி விளங்க வைப்பது என்பதைப் பற்றி ஆழ்ந்து யோசித்தேன். வயிற்றுவலி வேறு, முழங்கால் வலி வேறு என்ற கருத்து நெடுநாள் இவர் மனதில் ஊறிப்போய் இருந்தது. ஒவ்வொரு நோய்க்கும் வெவ்வேறு மருத்துவம் என்ற எண்ணமும் பொதுவாக இவர் ஏற்றுக்கொண்டிருந்தது. ஒன்று இதனை இவருக்கு விளங்க வைப்பது அவ்வளவு எளிதாக எனக்குத் தோன்றவில்லை இருப்பினும் எனது முயற்சியை விட்டுவிடவில்லை. "ஐயா! குழந்தையாய் இருந்தபொழுது உங்களைச் சோமு என்றுதான் அழைத்தார்கள் பின்னர் வாலிபரானீர்கள் இப்போது சில குழந்தைகளுக்கு தந்தையாகவும் இருக்கிறீர்கள் உங்கள் உருவத்தில் மாறுதல் வேலையில் மாறுதல், செயல்களில் மாறுதல் இருப்பினும் நீங்கள் சோமுதான் அதுபோல உங்கள் உடம்பில் தோன்றுகிற வலிகளுக்கும்; மூலகாரணம் ஒன்றே உடம்பினுள் வேண்டாத சில அந்நியப் பொருள்கள் தேங்கியிருக்கின்றன. அவற்றை வெளியேற்றும் முயற்சி நடக்கும் பொழுது உங்களுக்கு வலியோ துன்பமோ ஏற்படுகின்றது ஒரு தடவை வயிற்றின் மூலம் அழுக்கு வெளியேற முயன்று அதனால் உங்களுக்கு வயிற்றுவலி ஏற்பட்டது. மண்பட்டி போட்டதினால் குடல்களிலிருந்த உஷ்ணமும் துடிப்பும் குறைந்தன. அந்த அளவுக்கு அழுக்குகள் வெளியேறியுள்ளன. உங்கள் உடம்பில் காலப் போக்கில் சேர்ந்துள்ள அழுக்கு பரவலாக உடல்முழுவதும் இருக்கிறது. அதனை நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக முயன்று வெளியேற்ற வேண்டும். பூரண குணமடையக் கொஞ்சம் நாளாகலாம் எனவேதான் தொடர்ந்து மண்பட்டி போடுங்கள் என்று சொன்னேன். இது இப்போது உங்களுக்கு விளங்குகிறதா?"

"நீங்கள் சொல்வது விளங்குகிறது வயிற்றுவலி இப்போது இல்லை; முழங்காலில் தான் வலி இருக்கிறது அதற்கு ஏதாவது பரிகாரம் வேண்டும்.

"அதற்குத்தான் அடிவயிற்றில் தொடர்ந்து மண்பட்டி போட வேண்டுமென்று சொல்கிறேன். அப்படியே செய்யுங்கள்"

"வயிற்று வலிக்கு மண்பட்டி போடுவது சரி  முழங்கால் வலிக்கும் அடிவயிற்றில் மண்பட்டி போடுங்கள் என்கிறீர்களே! அதுதான் விளங்கவில்லை மண்ணைக் குழைத்து முழங்காலில் போட்டுக் கொள்ளலாமா?"

"முழங்காலில் போட்டுக் கொள்வதை விட அடிவயிற்றில் மண்பட்டி முறையாகப் போடுவதன் மூலமாகத்தான் உங்களுக்கு விரைவில் பூரணசுகம் கிடைக்கும். நாம் சாப்பிடும் உணவு எப்படி உருமாறி இரத்தமாக உடவெல்லாம் பரவுகிறதோ அதுபோல நமது உடம்புக்கு வேண்டாத அந்நியப் பொருள்கள் நெடுநாள் தங்கியிருந்தால் அவை உருமாறி உயிரணுக்கள் பலவற்றுள்ளும் போய்ச் சேர்ந்து விடுகிறது. அவற்றை வெளியேற்றுவதற்குச் சிறந்தவழி. அடிவயிற்றில் மண்பட்டி போட்டுக் கொள்வதுதான் இதன்மூலம் நல்ல மலக்கழிவு ஏற்படும் உடலில் மூலாதாரத்தில் உள்ள உஷ்ணம் சமநிலைக்கு வரும். இரத்த ஓட்டமும் தடையின்றி நடைபெறும். இன்று உங்களுக்கு இருக்கிற முழங்கால் வலிக்குக் காரணமான வாதம் இரத்த ஓட்டத்தின் மூலம் பல வழிகளிலும் வெளியேறி இன்னும் சில தினங்களில் வலி குறைந்து விடும் இன்று முழங்காலில் தோன்றுகிற வலி குறைந்து இடுப்பிலோ முதுகிலோ கூட வரலாம். பயப்பட வேண்டிய தேவையில்லை. வயிற்றில் ஏற்படும்பொழுது அதனை வயிற்றுவலி என்றும் முழங்கால் வழியே வெளியேற முயலும்போது அதை முழங்கால் வலியென்றும், இடுப்புக்குப் பக்கமாக வந்தால் அதனை இடுப்பு வலி என்றும் வெவ்வேறு பெயரிட்டு அழைக்கின்றனர். அவ்வளவுதான், நோய் ஒன்றே எனவே தான் நமது மருத்துவமும் ஒன்று' என்று சொல்லி அனுப்பினேன்.

இந்த இயற்கை மருத்துவ தத்துவம் முதலில் புரிந்து கொள்ளப்பட வேண்டும். 

அந்த எண்ணத்தை திரும்பத் திரும்ப நினைத்துப் பார்த்து அது நம்பிக்கையாக மனத்தில் உறுதிப்பட வேண்டும். இல்லையேல் இந்த மருத்துவருக்கு ஏதோ மனக்கோளாறு என்று சொல்லி நோயாளிகள் வேறு மருத்துவரிடம் போய் விடுவார்கள். 

மாத்திரைகளை விழுங்குவதினாலோ, ஊசிகள் போட்டுக் கொள்வதினாலோ தற்கால சாந்தி கிடைப்பதனால் அத்தகைய மருத்துவர்களை நாடியே உலகம் சுற்றிக் கொண்டிருக்கிறது தற்காலிக சாந்திக்குப் பின்னால் வரும் விளைவுகள் தங்கள் மருத்துவத்தினால் வந்தவை என்பதை விட்டுவிட்டு வேறு ஏதோ ஒரு வைரசினால் ஏற்பட்ட புது விளைவு என்று வாழ்நாள் முழுவதும் மருத்துவரை நாடி அவையும் உலகைத் திருத்துவது கடினமேயாயினும் மெய்யறிவைப் பரப்புவதில் தளர்ந்து விடாது முயல வேண்டும். 

சத்தியம் வெல்லும் என்ற நம்பிக்கை இருந்தால் இயற்கை மருத்துவம் கூடிய விரைவில் பலருக்கும் பணிபுரியும் வாய்ப்பினைப் பெறும்.


சமைக்கப்படும் உணவால் ஏற்படும் பாதிப்புகள்
சமைத்த உணவுகளை உண்ணும் ஒரு ஆரோக்கியமான மனிதனின் முக்கிய உறுப்புகளான சிறுநீரகம், நுரையீரல் முதலியவற்றை ஸ்கேனிங் செய்து பார்த்தால் அவை முழுவதும் சளி, கபம் போன்ற நோய் உண்டாக்கும் கசடுகள் நிறைந்து காணப்படுகின்றன. உதாரணமாக ஒரு ஸ்பாஞ்சை எடுத்து பசையில் முக்கினால் அது எப்படி இருக்குமோ, அது போல் மனிதனுடைய இலாஸ்டிக் தன்மைக் கூட குறைந்து விடுகின்றது. அதனால் சிறுநீரகம் சரிவர வேலை செய்ய முடிவதில்லை. நுரையீரல் சரியாக சுவாசிக்க உதவுவது இல்லை.

அந்த மனிதன் ஒரு வாரம் முழுவதும் உயிருள்ள உணவுகளான இலை, காய்கனி முதலியவற்றின் சாறுகளை மட்டும் சாப்பிட்டு உண்ணா நோன்பு இருந்தால், பசையில் முக்கிய ஸ்பாஞ்சைக் கழுவிச் சுத்தம் செய்த மாதிரி அவனது முக்கிய உடலுறுப்புகள் எல்லாம் சுத்தமடைகின்றன. இந்த உண்ணா நோன்பில் அவனுடைய உடலில் உள்ள ஜீவ சக்தி (Vital force) முழுவதும் உடலிலுள்ள கழிவுகளை வெளியேற்றுவதில் தீவிரமாக இருக்கின்றது. உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றப்படும் பொழுது மனிதனுக்குச் சிறிது அசெளகரியம் இருக்கும். ஆகையினால் தான் ஒரு நேரம் பட்டினி இருந்தால் கூட எனக்குத் தலைவலி வந்து விடும் என்று சிலர் கூறுகின்றனர். அவன் பட்டினியிலிருந்து உடலை சுத்தப்படுத்த அவனுடைய ஜீவ சக்தியை உபயோகிக்காமல் மீண்டும் மீண்டும் ஓய்வு இல்லாமல் சாப்பிடுவதால், அவனுடைய ஜீவ சக்தி முழுவதும் வயிற்றில் உள்ள உணவை சீரணிக்க மட்டும் தான் பயன்படுத்தப்படுகின்றது. ஆகையினால் அவனுடைய உடம்பிலுள்ள நோய்ப் பொருள்களான கசடுகள் வளர்ந்து கொண்டே போய் கொடிய நோயாளியாகின்றான். நோயாளியான இந்த மனிதன் நோய்ப் பொருள்களான கசடுகளை வெளியேற்றாமல் மருந்துகளைச் சாப்பிடுகிறான். தேவைக்கு அதிகமான மருந்துகள் உடம்பில் உள்ள இரத்தத்தையும் உறுப்புகளையும் விஷமாக்குகின்றன. சிறுநீரகம் பழுதடைகின்றது.

இதனால் எந்த மருத்துகளினாலும் குணமடைய முடியாத நோயாளியாக, மனிதன் மாறுவதற்கு வாய்ப்புகள் அதிகம். சில சைவ குடும்பங்களில் மது, புகை, மாமிசம் போன்ற எந்த கெட்ட பழக்கங்கள் இல்லாவிட்டாலும், ரூமாடிஸம் என்ற கீல்வாத நோய்களால் அவதிப்படுகின்றனர். அதற்குக் காரணம் அவர்கள் அளவுக்கு அதிகமாகச் சாப்பிடும் நெய், தயிர், எண்ணெயில் பொரித்து எடுத்த பலகாரங்கள் முதலியன ஆகும்.

இன்று உலகிலுள்ள மக்கள் கடந்த ஆயிரக்கணக்கான வருடங்களாகச் சமைத்த உணவைச் சாப்பிட்டு வாழ முடியுமா என்று சோதனை செய்து பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள். இந்தச் சோதனையின் விளைவு தான் இன்று மனிதன் ஆயிரக்கணக்கான நோய்களுக்கு நடுவில் தத்தளித்துக்கொண்டிருக்கின்றான். உலகில் உள்ள எந்த உயி¡¢னங்களுக்கும் அவற்றின் ஆரோக்கியமான வாழ்விற்கு ஆபத்தில்லை. மனிதன் மட்டும் தான் சமைத்த உணவிற்கு அடிமையாகி, பழக்கமாகி நாவை அடக்காமல் சாவை வரவழைத்துக்கொள்கின்றான். 

இன்றைய உலகில் மனிதர்கள் சமைத்த உணவுகளைச் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கின்றார்களே தவிர, இயற்கையான மரணத்தை யாரும் பெறுவதில்லை.

(இன்னும் இயற்கை மேலும் வளரும்)

4 கருத்துகள்:

Ananya Mahadevan சொன்னது…

// உலகில் உள்ள எந்த உயி¡¢னங்களுக்கும் அவற்றின் ஆரோக்கியமான வாழ்விற்கு ஆபத்தில்லை. மனிதன் மட்டும் தான் சமைத்த உணவிற்கு அடிமையாகி, பழக்கமாகி நாவை அடக்காமல் சாவை வரவழைத்துக்கொள்கின்றான். // அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன்! உங்கள் ப்ளாக் லின்க்கை என் பதிவில் இணைக்க இருக்கிறேன். ரொம்ப அருமையான தகவல்கள் அஷ்வின் ஜி! சர்வ ஜகத சுகினோ பவந்து! நன்றி நன்றி நன்றி!

மதுரையம்பதி சொன்னது…

பஞ்சு-பசை எடுத்துக்காட்டும், பச்சைக் காய்களை உண்பதால் ஏற்படும் நன்மைகளும் அருமை அஷ்வின் ஜி. முயற்சி திருவினையாக்கும், எனக்கும் எனது முயற்சியில் பலன் கிடைக்கவேண்டும்...:)

Ashwin Ji சொன்னது…

அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி அனன்யா.
உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் இந்த நல்ல செய்திகளை கொண்டு சேர்க்க எண்ணும் தங்கள் நல்ல நோக்கத்தினை நன்றியோடு பாராட்டுகிறேன்.
வாழி நலம் சூழ..

Ashwin Ji சொன்னது…

அன்பின் மௌலிஜி, உங்கள் முயற்சி திருவினையாகிட எல்லாம் வல்ல அம்பாளின் கருணை கடாக்ஷம் தங்களுக்கு கிட்டிட பிரார்த்திக்கிறேன். நன்றி.
வாழி நலம் சூழ..

கருத்துரையிடுக