ஞாயிறு, 9 மே, 2010


பகுதி 10 - இயற்கை மருத்துவம் (தத்துவங்களும் செயல்முறைகளும்) மகரிஷி க.அருணாசலம்.

நோயின் மூலகாரணம் ஒன்றுதான். அதைக் கண்டுபிடித்துச் சரிசெய்வதே நோயற்ற ஆரோக்கிய வாழ்வு வாழ்வதற்கான வழியாகும்.

வேண்டாத பொருள் தேங்கி நின்று நச்சுப் பொருள்களாக மாறி வெளியேறும் போது துன்பம் தருகின்றன. இந்த வெளியேற்றத்தில் ஏற்படும் துன்பமே வலியே நோய் எனப்படுவது என்றோமே, அப்படியானால் வெளியிலிருந்து உள் நுழையும் விஷங்களைப் பற்றி என்ன என்று வினவலாம்.

ஆம். வெறிநாய்க்கடி, தேள்/தேனீ கொட்டுதல், பூச்சிகள் எச்சமிடுதல், வண்டுகள் கடித்தல், தம்மை அறியாமலே தவறாக விஷப்பூண்டுகளை உண்பது போன்றவற்றால் வெளியிலிருந்தும் உடலில் உள்ள உயிரணுக்களுக்குள்ளும் திசுக் கூட்டங்களுக்குள்ளும் வேண்டாத பொருள்கள் நுழைகின்றன. இந்த நச்சுப் பொருள்களை வெளியேற்றுவதில் உள்ள துன்பம் பெரிதாக உள்ளதைக் காணலாம். வேறு, வேறு காரணங்களால் வெவ்வேறு பொருள்கள் வெவ்வேறு இடங்கள் மூலமாக உட்சென்றாலும் அவை எல்லாம் வெளியேற்றப்பட வேண்டியவைகளே. அவைகளை அடக்கி வைக்கவோ, தற்காலிகமாக உடலில் உள்ள பொறி புலன்களின் உணர்வைக் குறைத்து வைக்கவோ முயற்சிப்பதால் நிலைத்த பயன் கிடைக்காது மாறாக அவை நாளடைவில் வேறு உருவத்தில் (side effects) வெளியேறும். அப்போது துன்பம் அதிகமாகும்.

கடிகாரம் காலம் காட்டுகின்றது. அதில் சிறிய முள் என்றும் பெரிய முள் என்றும் வெவ்வேறு முட்கள் உள்ளன. ஒன்று விநாடியும், மற்றொன்று நிமிடமும், பிரிதொன்று மணியும் காட்டுகின்றன. சில கடிகாரங்களில் கிழமையும் தேதியும் கூடக் காணலாம். இவற்றிற்கெல்லாம் பின்னணியில் வெவ்வேறு பல் சக்கரங்கள் உள்ளன. இவற்றிற்கிடையே தொடர்பு உண்டு. எல்லாவற்றிற்கும் ஆதாரமாக இருப்பது முக்கியச் சுருள்கம்பி (Main spring) தான் இது நாளுக்கு குறைந்தது ஒரு தடவையோ அல்லது வாரத்துக்கு ஒரு முறையோ சுழற்றி விடப் பட்டால் ஒரே சீரான வேகத்தில் காலம் முழுவதும் விரிந்து பிற சக்கரங்களும் சுழலுகின்றன.

(1) சுருள் கம்பியில் விசை குறைந்து விட்டாலோ

(2) சீதோஷ்ண மாற்றத்தால் கம்பி விரிந்து சுருங்கி வேகம் மாறுபட்டாலோ

(3) தூசு தும்புகளாலான வெளித்தடைகள் ஏற்பட்டாலோ காலம் காட்டுவதில் தடை உண்டாகும்

அதுபோலவே உடம்பும் பிராணசக்தியால் இயங்குகின்றது. பிராணசக்தி குறைந்தால் இயக்கம் குறைந்து மலத்தை வெளிப்படுத்தும் வேலை தடைப்படுகின்றது. இரண்டாவதாக சீதோஷ்ண மாற்றங்களில் கடிகாரம் வேகமாகவோ, மெதுவாகவோ போகிறமாதிரி வெப்ப மாற்றங்களாலும் சூழ்நிலை மாற்றங்களாலும் உடலும்; உடலியக்கமும் பாதிக்கப்படும் மூன்றாவதாக கடிகாரத்தில் வெளி அழுக்குகள் நுழைந்து சக்கரச் சுழற்சிகளைத் தடை செய்வது போல் வெளி அழுக்குகள் உடம்பினுள் நுழைவதால் உள் உறுப்புகளாகிய இருதயம், நுரையீரல், கல்லீரல் மண்ணீரல், சிறுநீர்ப்பிரித்தி (சிறுநீரகம்), தசைக்கோளங்கள் முதலியவற்றின் இயக்கம் தடைப்படலாம். இவற்றில் தடை ஏற்படும்பொழுது வேண்டாத பொருள்களும், நச்சுப்பொருள்களும் உடம்பினுள் தேங்கி நின்று உடலுக்குத் துன்பம் விளைவிக்கின்றன. இதைப் புரிந்து கொண்டால் நோய்க்கு இயற்கைவழி சிகிச்சை செய்வது எளிதாகும். மேலும் உடம்பில் வெவ்வேறு காரணங்களால் துன்பம் வந்தபோதிலும் மூல உருவம் ஒன்றுதான். அதாவது வேண்டாதவற்றை வெளியேற்றும் முயற்சி.

இவ்வேண்டாதவை உணவு முதலிய பருப்பொருளாக இருக்கலாம் அல்லது கருத்து, கற்பனை, எண்ணம் போன்ற நுண் பொருளாகவும் இருக்கலாம். நுண்ணுடம்பாகிய மனதில் ஏற்படும் நினைவு, குறைவுகளும் பருஉடம்பையும் பாதிக்கும். இதனையும் இவ்வொன்றுள் அடக்கிக் காண்பதும் சிகிச்சைக்கு உதவும்.

(இயற்கை வளரும்)

3 கருத்துகள்:

மதுரையம்பதி சொன்னது…

அடிப்படையிலிருந்து சொல்வது புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கிறது ஜி. நோய் பிடிக்கப்பட்ட நேரத்தில் பிராணசக்தியை அதிகமாக்கிக் கொள்ள வேண்டுமெனில் என்னவெல்லாம் செய்யலாம்? என்பதையும் எழுதுவீர்களல்லவா?.

Ashwin Ji சொன்னது…

நிச்சயமாய் மேலதிக செய்திகள் வரும். தாங்கள் இப்போதுதான் பத்தாம் பகுதியை படித்தீர்கள். மேலும் பதினைந்து பகுதிகள் இருக்கின்றன.
தங்கள் ஆர்வமான பின்னூட்டத்துக்கு நன்றி. மௌலிஜி.

அன்பே சிவம்' அஷ்வின்ஜி
---------------------------------------------------
பிரபஞ்சத் துகளில் 'நான்' யார்?
----------------------------------------------------
வேதாந்த வைபவம் - www.vedantavaibhavam.blogspot.com
வாழி நலம் சூழ - www.frutarians.blogspot.com

மதுரையம்பதி சொன்னது…

//நிச்சயமாய் மேலதிக செய்திகள் வரும். தாங்கள் இப்போதுதான் பத்தாம் பகுதியை படித்தீர்கள். மேலும் பதினைந்து பகுதிகள் இருக்கின்றன.// நன்றிகள் அஷ்வின் ஜி, அப்பகுதிகளுக்காகக் காத்திருக்கிறேன். :-)

கருத்துரையிடுக