வெள்ளி, 16 ஏப்ரல், 2010

உணவே மருத்துவம்

அசைவம் உண்ணாதவரும், மது அருந்தாதவரும், சமைக்காத (தூய சைவ) இயற்கை உணவுகளை விரும்பி உண்பவரும், இயற்கை நலவாழ்வியல் முறைகளை கடைப் பிடிப்பவர்களும் நோயின்றி மகிழ்வுடன் வாழலாம். நண்பர் எழுதிய கவிதை ஒன்றை நமது வலைப்பூவுக்காக மீள் பதிவு செய்கிறேன். இயற்கை நலவாழ்வியல் தத்துவங்களை கவிதை வடிவில் வடித்துத் தந்த நண்பருக்கு இதய நன்றி.

உணவே மருத்துவம்
உண்பதற்காகவே வாழாதீர்

உயிர் வாழ்ந்திடவே நாம் உண்போம்.
உண்ணும் உணவினில்தாம் நோய்கள்
உட்கார்ந்திருந்து நம் உயிர் பறிக்கும்
மாமிச உணவைச் சமைத்தபின்
மறுநாள் வைத்தே புசிக்காதீர்
சாமி சத்தியமாய்ச் சொன்னேன்
சமைத்ததை ஐந்து மணிக்குள் உண்.
குத்துதே குடையுதே மூட்டுவலி
குன்மம் பித்தம் வாய்வாம் நோய்
ரத்தசோகை பக்கவாதம்
நரம்புத் தளர்ச்சியும் உணவால்தான்.
பழைய குழம்பைச் சுடவைத்தே
பசிக்கு அடிக்கடி புசிக்காதீர்
குளிர்பத னத்தில் வைத்தெடுத்தே
குடலால் நோய்களை வளர்க்காதீர்.
யோகம் பெருகும் நல் உணவால்
ரோகமும் போகமும் உண்பதால்தாம்.
தாகம் என்றால் பருகுவீர்நீர்
தாறுமா றாய்மது குடிக்காதீர்
பழங்கள் கீரை காய்கறிகள்
பசுமை மாறா புதியனவாய்
கிழங்குகள் ஈந்திடும் உயிர்ச்சத்தையும்
கிரமமாய் உண்பதால் திடம் பெறலாம்.
உணவைக் குடித்தேநீர் உண்பீர்
உணவே மருந்தென உணர்ந்திடுவீர்
உணவில் மருத்துவம் ஒளிந்துள்ளதே
உறுதியாய் நம்பியே உயிர்காப்பீர்.
- பெருமத்தூர் சீராளன்
நன்றி : மூலிகை சஞ்சீவி இதழ், சூன் 2005