வெள்ளி, 30 ஏப்ரல், 2010

பகுதி 8 - இயற்கை மருத்துவம் (தத்துவங்களும் செயல்முறைகளும்) மகரிஷி க.அருணாசலம்.


நோய் ஒன்றே; பல அல்ல.

இயற்கை மருத்துவம் உலகில் இப்பொழுது அதிகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது.

விஞ்ஞானம் வளர்ந்துள்ள மேலை நாடுகளிலும் அறிஞர்கள் இதனை வரவேற்று ஆதரிக்க ஆரம்பித்துள்ளனர். ஆராய்ச்சி மனப்பான்மையுடைய அலோபதி வைத்தியர்கள் கூட இயற்கை முறைகளைக் கையாள ஆரம்பித்துள்ளனர். எனினும் இவர்கள் இயற்கை மருத்துவத்தின் அடிப்படைக் கோட்பாடுகளைத் தெரிந்து கொள்ளவோ, தெரிந்தாலும் அவற்றில் நம்பிக்கை பெருகும் அளவு தெளிவு பெறவோ முயலுவதில்லை. இதன் விளைவாகத்தான் சித்த, ஆயுர்வேத, யுனானி, ஹோமியோபதி மருத்துவர்கள் ஊசிபோடுதல், அலோபதி பொது மருந்துகள் ஆகியவைகளைக் கையாளுகிறார்கள். அதைப்போலவே இயற்கை மருத்துவத்தில் உள்ள முறைகளில் சிலவற்றை ஹைட்ரோபதி, குரோமோபதி, பிஸியோதெரபி என்கிற பெயர்களால் ஆங்கில முறை மருத்துவர்களான அலோபதிக் முறை மருத்துவர்களும் கையாளுகின்றனர். இவற்றால் முழுப்பயன் கிடைப்பது அரிதேயாகும். இயற்கை மருத்துவத்திற்கு அதன் அடிப்படைத் தத்துவங்களின் அறிவும் தெளிவும் மிக இன்றியமையாதது

எனவே முந்திய அத்தியாயங்களில் ஒன்றாகிய "நமது உடல் இயற்கையோடு இயைந்து வாழ்வதெற்கென அமைந்தது" என்பதைப் பற்றிப் பார்த்தோம். இங்கு "நோய் ஒன்றே பல அல்ல" என்னும் இன்னுமொரு அடிப்படை உண்மையைப் பற்றி ஆராய்வோம்.

நோய் ஒன்றுதான் என்றால் யாரும் ஆச்சரியப்படுவார்கள். அனுபவத்தில் தலையிலும், மார்பிலும், வயிற்றிலும் கைகால்களிலும், ஏன் அங்க அவயவங்கள் அனைத்திலும் வலி வந்து நம்மை வாட்டுவதை யார்தான் அறியார்? நோய்கள் பல என்பது தொன்றுதொட்டு பாமரர் முதல் அறிஞர் வரை எவரும் அறிந்த உண்மை இதனை மறுத்து நோய் ஒன்றுதான் என்பதன் பொருள் என்ன? இயற்கை மருத்துவர்கள் உலகை ஏமாற்ற விரும்புகின்றனரா? அப்படி இல்லை அவர்கள் கூட காதில் வலி ஏற்பட்டால் அதைக் காதுவலி என்றும் வயிற்று வலி ஏற்பட்டால் அதனை வயிற்று வலி என்றும் சொல்லுகின்றனர். உள்ளே உள்ள பொருள்கள் வாய்வழியாக வந்தால் அதை வாந்தி என்றும், மலவாய்வழியாக வந்தால் அதைக் கிராணி அல்லது பேதி என்றும், துன்பம் தோன்றும் இடம், இயல்பு முதலியவற்றை ஒட்டிப் பேரிட்டழைக்கின்றனர். ஆனால் பெயர்களே நோய்கள் அல்ல.

(இயற்கை வளரும்)

2 கருத்துகள்:

மதுரையம்பதி சொன்னது…

தொடருங்கள், தெரிந்துகொள்ளக் காத்திருக்கிறேன்.

Ashwin Ji சொன்னது…

வணக்கம் மௌலிஜி,
நன்றி.
தொடர் இன்னும் வரும்.
வளரும்.
வாழி நலம் சூழ.

கருத்துரையிடுக