செவ்வாய், 2 மார்ச், 2010

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு... பகுதி 6

பகுதி 6
சாக்லேட்:
சாக்லேட்டில் கஃபின் என்ற கெமிக்கல் இருக்கின்றது. அதன் காரணமாக சாக்லேட் சாப்பிடும் பொழுது நமக்கு ஓர் உற்சாகம் கிடைக்கின்றது. இது நாளடைவில் நமக்கு ஒரு விடமுடியாத பழக்கமாக மாறலாம். வெள்ளை சாக்லேட் மற்றும் பால் சாக்லேட்டுகள் சுகர் மற்றும் கொழுப்புச் சத்து அதிகம் கொண்டவை. ஆனால் கறுப்பு நிறச் சாக்லேட் ஆன்டி-ஆக்ஸைடண்ட் திறன் கொண்டது. ஆகவே நாம் பால் சாப்பிடுவதற்குப் பதிலாக கறுப்பு சாக்லேட் சாப்பிடுவது நல்லது.

காபி:
காபி தற்போது மிகவும் பிரபலமான பானமாக இருக்கின்றது. இருந்தாலும் இரண்டு அல்லது மூன்று கப்பிற்கு மேல் நாம் காபி குடிக்கும் பொழுது நம்முடைய இன்சுலின் அளவு அதிகமாகி அதன்மூலம் நம் உடம்பில் பாதிப்பு வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ரெகுலராக நாம் குடிக்கின்ற காபியைவிட சிக்கோரி, வேர்கனன், பொடியாக்கி அதிலிருந்து தயாரிக்கப்படும் சிக்கோரி காபி மிகவும் நல்லது. சிக்கோரி காபியில் கஃபின் குறைவாக உள்ளது. அதே சமயத்தில் நம் ஈரலையும் பலப்படுத்தக் கூடியது. சோயா பீனிலிருந்து தயாரிக்கப்படும் சோயா காபியும் கஃபின் இல்லாமல் இருக்கின்றது. இயற்கையான முறையில் வளர்க்கப்படும் காபிச் செடிகளிலிருந்து தயாரிக்கப்படும் காபியை நாம் ரேஷி என்றழைக்கப்படும் காளானுடன் சாக்லேட் கலந்து சாப்பிட்டால் அது நம்முடம்பிற்கு மிகவும் நல்லது. மேலும் பச்சை நிற டீயில் கஃபின் குறைவாக உள்ளது என்பதால் ரெகுலர் காபியைவிட பச்சை நிற டீ நல்லது.

உணவு தயாரிப்பு:
நம் உடம்பிற்குத் தேவையான உணவுப் பொருட்களை நாம் சாப்பிடும் பொழுதும் நாம் சரியான முறையில் அதை சமைக்காவிட்டால் அதில் உள்ள ஊட்டச் சத்துக்கள் எல்லாம் வீணாகிப் போகின்றன. உதாரணமாக ஆப்பிளை நாம் பச்சையாக சாப்பிடும் பொழுது அதில் உள்ள விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்தெல்லாம் நமக்கு வீணாகாமல் அப்படியே கிடைக்கின்றன. ஆனால் அதை நம் பழச்சாறாக மாற்றும் பொழுது, அதிலுள்ள நார்ச்சத்தையெல்லாம் நாம் இழக்க நேரிடுகின்றது. தவறான சமையலின் காரணமாக மற்ற உணவு வகைகளும் இம்மாதிரியே விட்டமின்களையும், என்சைம்களையும், தாதுப் பொருட்களையும் இழக்க நேரிடலாம். ஆகவே இம்மாதிரி இழப்புகள் நேராமல் இருக்கும் பொருட்டு நம் சமையல் சம்மந்தமான சில முக்கிய விதிமுறைகளை பார்ப்பது நல்லது.

காய்கறிகளை அதிக வெப்பத்தில் வேக வைக்கும் பொழுது அவற்றில் இருக்கும் விட்டமின் சி மற்றும் பிகாம்ளக்ஸ் விட்டமின்கள் 30 % அளவிற்கு வீணாகின்றன. கொதிக்க வைத்தால் 75 % அளவிற்கு விட்டமின்கள் பறிபோகின்றன. இதைத் தவிர்க்க வேண்டுமென்றால் காய்கறிகள் தண்ணீரில் மூழ்கிவிடாத அளவிற்கு மட்டத்தைக் குறைத்துக் கொண்டு வேக வைக்க வேண்டும். காய்கறிகள் நிறம் மாறி வலுவிழந்து குழம்புபோல் மாறியிருந்தால் அவை வீணாகிவிட்டன என்று அர்த்தம். பாத்திரத்திலிருந்து எடுக்கும் பொழுது அவற்றின் இயற்கையான நிறத்துடன் நொறுங்காமல் இருந்தால்தான் அவை முறையாக சமைக்கப்பட்டுள்ளன என்று அர்த்தம்.

எண்ணெயை போட்டு சமைக்கும் பொழுது, எண்ணை மிகவும் சூடு ஏறினாலும் சமையலை அது பாதிக்கும். வேகவைத்த காய்கறிகளின் மேல் பச்சை எண்ணெயை விட்டுக் கொள்வது நல்லது. சமையலுக்கு ஆலிவ் ஆயிலை பயன் படுத்துவது எப்பொழுதும் நல்லது. அதே எண்ணெயை மீண்டும் மீண்டும் சமையலுக்குப் பயன்படுத்தி சூடு ஏற்றிக் கொண்டு இருந்தால், அந்த எண்ணெயின் தன்மையே மாறி புற்று நோயை உண்டாக்கக்கூடிய வேண்டாத எண்ணெயாக மாறிவிடுகின்றது. ஆகவே எண்ணெயில் சமைக்கும் பொழுது சூட்டைக் குறைத்துக் கொள்வது நல்லது. சோயாபீன் எண்ணெய் சூடேறினால் கெட்டுப் போகும் தன்மைக் கொண்டது. ஆகவே அதற்குப் பதிலாக சூட்டைத் தாங்கக் கூடிய தேங்காய் எண்ணெயை சமையலுக்கு பயன்படுத்துவது நல்லது.

மைக்ரோவேவ்: குளிர்ந்து போன பண்டங்களை சூடேற்றுவதற்காக மட்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சமையலுக்கு அதை பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால் அந்த மைக்ரோவேவ் கதிர்கள் முக்கியமான என்சைம்களை அழித்துவிடக் கூடியவை.

பழச்சாறு: தினமும் 6 முதல் 9 கப் காய்கறிகளையும் பழங்களையும் பச்சையாக சாப்பிடுவது பிடிக்கவில்லை என்றால் பழச்சாறாக மாற்றி சாப்பிடுவது நல்லது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் பழச்சாற்றைவிட காய்கறிகள் சாற்றை அதிகம் சாப்பிடுவது நல்லது. பழச்சாறுகள் நம் உடம்பில் காரத்தன்மையை சேர்க்கக் கூடியவை. இப்படி உடம்பில் காரத்தன்மை சேரும் பொழுது அமிலத்தன்மை சேருவது குறைக்கப்படுகின்றது. பச்சைக் காய்கறிகளில் உள்ள குளோரோபில் நம்முடைய சிறுகுடல் மற்றும் பெருங்குடலில் உள்ள நச்சுக்களை அகற்ற உதவுகின்றது. ஊட்டச்சத்து பொடிகளை மாத்திரைகளாக உட்கொள்ளாமல் நாம் காய்கறிச் சாற்றோடு கலந்து உட்கொள்ளும் பொழுது அவை வேகமாக ஜீரணிக்கப்படுகின்றன.

பழச்சாறுகளில் ஜீரணத்திற்கு உதவக்கூடிய என்சைம்கள் நிறைய உள்ளன. இதன் பலனாக, பழச்சாறுகளை நம் உடம்பு சிரமமில்லாமல் ஜீரணித்துக் கொள்கின்றது. மேலும் பழச்சாற்றில் ஊட்டச்சத்துக்கள் அதிகமாகவும் இருக்கும். உதாரணமாக நாம் இரண்டு கப் கேரட் ஜீஸ் சாப்பிடும் பொழுது அது ஒரு பவுண்ட் பச்சை கேரட் சாப்பிடுவதற்குச் சமமாகின்றது.

பச்சைக் காய்கறிச் சாறுகள் ஆன்டிஆக்சிடண்ட் மற்றும் ஆன்டிபயோடிக் போன்ற மருத்துவச் சக்தி வாய்ந்த ஊட்டச் சத்துக்கள் கொண்டுள்ளன. கேரட், செலரி, லெட்டூஸ் ஆகியவற்றில் உள்ள ஊட்டச்சத்துகள் சர்க்கரை நோயாளிகளுக்கு உதவக்கூடியவை. ப்ராக்கோலியில் உள்ள குரோமியம் இன்சுலின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றது. பூண்டு, வெங்காயம் மற்றும் தக்காளியிலிருந்து பெறப்படும் பழச்சாறுகள் ஆன்டிபயோடிக் தன்மைக் கொண்டவை. வெள்ளரிக்காய் மற்றும் முட்டைக் கோஸிலிருந்து எடுக்கப்படும் சாறு ரத்த அழுத்தம் மற்றும் அசிடிடி(Acidity)யை குறைக்கும் தன்மை கொண்டவை.

(நலம் தொடரும்..)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக