புதன், 31 மார்ச், 2010

மகரிஷி க. அருணாசலம் - இயற்கை மருத்துவம் (தத்துவங்களும் செய்முறைகளும்) - பகுதி 3

3

ஆரோக்கிய வாழ்க்கை எது ?

ஒருவர் மற்றொருவரைக் காணும்பொழுது ‘நலமா?’ என்று கேட்கின்றோம். அவரும் நலமே என்று பதில் அளிக்கிறார். அதன் பொருள் என்ன? மனிதனுக்கு பருஉடல், நுண்ணுடல், காரண உடல் என்ற மூன்று உடல்கள் இருக்கின்றன. நமது புறக்கண்ணிற்குத் தோன்றுவது பருஉடல் ஒன்றேதான். எனினும் இப்பரு உடலின் உள்ளும் புறமுமாக மற்ற இரு உடல்களும் சுரந்தும் மறைந்தும் இருக்கின்றன என்பது சிந்திப்பவர்களுக்கு இலகுவில் புலப்படும் இந்த மூன்று உடல்களும் ஒன்றுடன் ஒன்று பொருந்தி, ஒரேவழி உராய்தலின்றி இயங்குவதிலே நலவாழ்வு அமைந்துள்ளது.

நல்வாழ்வை ஆரோக்கியம் என்றும் சுகம் என்றும் கூறுகின்றோம். ஆரோக்கியம் தான் ஆக்க வாழ்விற்கு அடிப்படையானது. நலமற்ற விவசாயி தன்கு வேறு எத்தனை வசதிகளிருப்பினும் விளைவைப் பெருக்க முடியாது. எத்தனை நவீன இயந்திரங்கள் இருந்தபோதிலும் நலமில்லாத உழைப்பாளியால் தொழில் துறையில் நுகர்வுப் பொருள்களை அதிக அளவில் உற்பத்தி செய்ய முடியாது. விவசாயத் துறையிலும், தொழில் துறையிலும் வளர்ச்சி இருந்தபோதிலும் நலம் இல்லையேல் நம்மால் வாழ்க்கை இன்பங்களை அனுபவிப்பது இயலாததாகும். குடும்ப சமூக வாழ்க்கைகளையும் கூட செவ்வனே நடத்த முடியாது.

பொதுவாக, நோயின்மையே ஆரோக்கியம் என்று சிலர் கருதுகின்றனர். ஆனால் ஆரோக்கியத்திற்கு மூன்று பக்கங்கள் இருக்கின்றன. ஒரு பொருளுக்கு அகலம், நீளம், உயரம் என்ற மூன்று பக்கங்கள் இருப்பது போல ஆரோக்கியத்திற்கு உடல், மனம், சமூகம் என்ற மூன்று பக்கங்கள் உண்டு. உடற்குறை மனதைப் பாதிக்கும். மனநிலையும் உடலைப் பாதிக்கவே செய்யும். சமூகச்சூழல் இரண்டையும் பாதிக்கும். இம்மூன்றும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையவை. அதுபோலவே ஆன்ம உணர்வும், உடலையும், மனதையும் மாற்றவல்லது.

மனிதர்களுக்கு நல்வாழ்வு கொடுக்க எண்ணி அரசுகள் மருந்தகங்களைப் பெரும் செலவில் நடத்துகின்றன. ஆனால் மனக்குறைவின் காரணமாகவும், சமூகச் சூழலின் போக்குகளாலும் மனிதனுக்கு சுகக் குறைவு ஏற்படுகிறது. சுகக்குறைவை நோயென நினைத்து ஒருவன் மருந்தகங்களுக்குச் சென்றால் பல பரிசோதனைகளுக்குப் பின்னால் உடலும், உடலுறுப்புகளும் ஆரோக்கியமாக இருப்பதாகவே டாக்டர்கள் கூறுகின்றனர். ஆனால் பாவம்! அவன் என்ன செய்வான்? சோர்வும், பிணிநிலையும் அவனை வருத்துகின்றன. எல்லாம் சரியாய் இருக்கிறது. ஆனால் உடலால் உழைக்க முடியவில்லையே என்று வருந்துகின்றான். நவீன முறைகளில் இதனை மனநோய் என்று சொல்கின்றனர். சில சமயங்களில் இந்த மனநோய் உடலையும் சமூக வாழ்வையும் கூடப் பாதிக்கும். மனதிலே ஆரம்பித்தது இருதயநோயாக மாறுகிறது. மனநோய் நகர வாழ்வில் நாம் நாள்தோறும் காணும் உண்மை ஏதாவது ஒரு காரணத்தால் கோபம் உண்டாகிறது. இது மனதிலேதான் ஆரம்பிக்கிறது. முகம் சிவப்பதும், நாடி நரம்புகள் துடிதுடிப்பதும், நிலை தடுமாறி தாறுமாறாகப் பேசுவதும் கோபத்தின் விளைவுகளாகும். அது இதற்கு மேலும் சென்று எதிரில் உள்ளவர்களைக் கையிற் கிடைத்ததைக் கொண்டு அடித்து விபரீதமாகக் கொலையில் முடிவதைக்கூட நாம் கேட்டுள்ளோம். கோபத்தில் பித்தநீர் அமிலத்தன்மை அடைந்து உடல் அழற்சியினை ஏற்படுத்துகின்றது. அதனால் ரத்தக்கொதிப்பு ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாகவும் முடியலாம்.

திடீரென ஏற்படும் பயம், சிலசமயங்களில் இதயத் துடிப்பை நிறுத்தும் பயத்தால் உடம்பு நடுக்குறும். உணர்ச்சி மிகும். இதனால் வளர்சிதை மாற்றத்தில் சிக்கல்கள் ஏற்படும். குருதியில் சர்க்கரையின் அளவுமிகுந்து ஏற்கனவே நீரழிவு நோயுள்ளவர்களாயிருந்தால் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம். பயத்தால் வயிற்றோட்டம் உண்டாகலாம். சிறுவர்கள் பயமுறுத்தலுக்கு ஆளாகும்போது நடுநடுங்கி, நரம்பு தளர்ந்து சிறுநீர் கழிக்கின்றனர். எதிர்மறையான வெறுப்பு, திகைப்பு, பயம் போன்றவை உடலை உலரச்செய்து, குருதி குன்றி பலத்தை போலவே அன்பு, ஆதரவு, நம்பிக்கை, உற்சாகம் போன்ற நல்லுணர்வுகள் உடலை வளர்த்து இன்ப வாழ்வைக் கொடுக்கும்.

சுகம் பிறரால் கொடுபடக்கூடியதல்ல. அதனை நாமேதான் சம்பாதித்துக் கொள்ள வேண்டும். இதற்கு வேண்டியவை எல்லாம் சுயஅறிவும், சரியான வழி நடத்தலுமேயாகும். தன்னுடைய சூழலுடன் இணைந்து வாழும் ஒருவன் எப்பொழுதுமே மகிழ்ச்சியுடனும், நலமுடனும் இருக்க முடியும். மாறிவரும் சமூக வாழ்வு மக்களின் உடல், மனவாழ்வினைப் பாதிப்பதைப் போலவே மக்களின் உடல் மனவாழ்வு சூழலையும் பாதிக்கும் இன்றைய மாறிவரும் தொழில் நுணுக்க வளர்ச்சி தனி வாழ்வையும், இல்வாழ்க்கையையும் பெரிய அளவில் மாற்றி உள்ளது. இயந்திரங்களால் கடின உழைப்பை நீக்கிக்கொள்ள வசதியும் ஏற்பட்டுள்ளது. ஆனால் பலர் பார்த்தையே பார்த்தும், செய்ததையே செய்தும் சலிப்படைந்து போயிருக்கிறார்கள். கூடிவிளையாடும் ஆடல், பாடல்களும், கூத்துகளும், திருவிழாக்களும் சிலரது வாழ்வில் புத்துணர்வு அளித்து மகிழ்ச்சியூட்டு-கின்றனவாயினும், நவீன வாழ்க்கை முறை எதிர்பாராத புத்தம் புதிய நோய்நொடிகளையும் உண்டு பண்ணி மனிதனை வேண்டாத பழக்கவழக்கங்களுக்கு ஆளாக்கியுள்ளன.

(இயற்கை வளரும்..)

2 கருத்துகள்:

Geetha Sambasivam சொன்னது…

யார் இந்த மகரிஷி அருணாசலம்?? புதுசா இருக்காரே? வேதாத்திரி மகரிஷியின் சீடர்??? முந்தைய தொடர்களைப் படிக்கலாம்னா அது என்னமோ திறக்கறாப்பல இல்லையே! ஹோமைக் கிளிக்கினாலும் இந்தப் பதிவு மட்டும் தான் வருது. முந்தைய பதிவுகளிலே க்ளிக்கினாலும் இதான் வருது. :(

Geetha Sambasivam சொன்னது…

தொடர

கருத்துரையிடுக