புதன், 10 பிப்ரவரி, 2010

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு - 2


ஆரோக்கியமான மற்றும் ஆரோக்கியமற்ற மாவுச்சத்துக்கள்

பிரகாசமான நிறம் கொண்ட காய்கறிகள் மற்றும் பழவகைகள் மேற்கண்ட ஏழு ஊட்டச் சத்துக்கள் கொண்டு இருப்பதால் இவையும் ஆரோக்கியமான மாவுச்சத்துகள் என்று பெயர் பெறுகின்றன. பார்லி மற்றும் ஓட்ஸ் தானிய வகைகளும், விட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து, எண்ணெய் மற்றும் என்சைம்கள் ஆகியவற்றை கொண்டிருப்பதால் இவையும் ஆரோக்கியம் உள்ள மாவுச் சத்துகளாக கருதப்படுகின்றன. செயற்கையாக பதப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படும் உணவு பண்டங்கள் விட்டமின்கள், தாதுக்கள், என்ஸைம்கள் ஆகியவை இல்லாதிருப்பதால் ஆரோக்கியமற்ற மாவுச் சத்துக்களாக கருதப்படுகின்றன. 

மேலும் இந்த பதப்படுத்தப்பட்ட உணவுப்பண்டங்கள் நம்முடைய ரத்த ஓட்டத்தில் குளுக்கோஸ் அளவை வேகமாக ஏற்றுவதால், ஆரோக்கியமான உணவு என்ற தகுதியை இழக்கின்றன. இப்படித் தகுதி இழக்கும் உணவு பண்டங்களில் பாட்டில் செய்யப்பட்ட பழச்சாறுகள், உருளைக்கிழங்கு வறுவல்கள், வெள்ளை சாதம், வெள்ளை ரொட்டி, மற்றும் தக்காளி கெட்சப்  ஆகியவை அடங்கும். இவையெல்லாம் நம் உடம்பிற்கு ஊட்டம் தருவதில்லை,  பாதுகாப்பதில்லை, சுத்தப்படுத்துவதும் இல்லை.

ஆரோக்கியமான மற்றும் ஆரோக்கியமற்ற புரதச் சத்துக்கள்
கொட்டைகள், விதைகள், பீன்ஸ் வகைகள்,சோயாபீன்ஸிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் இவை எல்லாம் நமக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் பெரும் பாலானவற்றை கொண்டு இருப்பதால் ஆரோக்கியமான புரதச் சத்துக்களாகக் கருதப்படுகின்றன. மேலும் ஹைட்ரஜன் கலந்த கொழுப்புச் சத்து இவைகளில் அதிகமாகக் காணப்படுவதில்லை என்பதும் ஒரு நல்ல விஷயமாகும். மேலை நாடுகளில் சோளம் சாப்பிட்டு வளரும் கால்நடைகளுக்கு நிறைய வளர்ச்சி ஹார்மோன்கள் மற்றும் அன்டிபயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுவதால் இக்கால்நடைகளிலிருந்து பெறப்படும் இறைச்சி ஆரோக்கியமற்ற புரதமாக கருதப்படுகின்றது. இந்தக் கால்நடைகளிலிருந்து பெறப்படும் இறைச்சி புற்று நோயைத் தூண்டும். கொழுப்புச் சத்தை அதிகரிக்கும் மற்றும் இரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தும். 

ஆரோக்கியமான மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புச் சத்துக்கள்
ஆலிவ் எண்ணெயிலுள்ள தனி கலப்பில்லாத கொழுப்புச் சத்து நம்முடைய ரத்தக் குழாய்கள் மற்றும் உடம்பிலுள்ள மூட்டுக்கள் ஆகியவற்றிற்கு நல்லதொரு உராய்வில்லாத இயக்கத்தை கொடுப்பதால் ஆரோக்கியமான கொழுப்புச் சத்தாகக் கருதப்படுகின்றது.வால்நட் கொட்டைகளில் காணப்படுகின்ற சில கூட்டுக் கலப்பில்லாத கொழுப்புச் சத்துக்கள் நம் உடம்பிற்கு மிகவும் தேவையான ஒமேகா3என்றழைக்கப்படும் அவசியமான கொழுப்பு அமிலத்தை கொண்டிருக்கின்றன. இவை நம்முடைய ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு, ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தின் அடர்த்தி ஆகியவற்றை கட்டுப்படுத்துவதால் நல்ல கொழுப்புச் சத்தாகக் கருதப்படுகின்றன.

மாற்றம் செய்யப்பட்ட கொழுப்புச் சத்துக்கள், பிராணிகளிடம் காணப்படும் சில ஹைட்ரஜன் கலந்த கொழுப்புச் சத்துக்கள், ஒமேகா6  கொழுப்பு அமிலம் போன்ற சில கூட்டுக் கலப்பில்லாத கொழுப்புச் சத்துக்கள் ஆகியவை ஆரோக்கியமற்ற கொழுப்புச் சத்துக்களாக கருதப்படுகின்றன. மார்ஜரின், உருளைக்கிழங்கு வறுவல் மற்றும் வறுவல் செய்யப்படுகின்ற பதார்த்தங்கள் ஆகியவை மாற்றம் செய்யப்பட்ட கொழுப்புச் சத்துக்கள் ஆகும். மேலும் பதப்படுத்தப்பட்ட தேங்காய் எண்ணெய் மற்றும் பாம் ஆயில் ஆகியவை இரண்டும் ஆரோக்கியமற்ற ஹைட்ரஜன் கலந்த கொழுப்புச் சத்துக்களாகக் கருதப்படுகின்றன. சூரியகாந்தி எண்ணெய் மற்றும் பருத்திக் கொட்டை எண்ணெய் மற்றும் சோயாபீன் எண்ணெய் ஆகியவை ஆரோக்கியமற்ற கூட்டுக் கலப்பில்லாத கொழுப்புச் சத்துக்களாகக் கருதப்படுகின்றது. மேற்கூறிய ஆரோக்கியமற்ற கொழுப்புச் சத்துக்கள் எல்லாம் நம்முடம்பில் கொலஸ்ட்ராலை அதிகரித்து அதன் காரணமாக ரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தக் கூடியன.

(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக