புதன், 19 ஜனவரி, 2011

4. இயற்கை நலவாழ்வியல் புத்தகம் அறிமுகம்.

நூலின் பெயர்: இயற்கை மருத்துவம்.
நூல் ஆசிரியர்: மகரிஷி க.அருணாசலம்.
நூல் வெளியீடு: காந்திய இலக்கியச் சங்கம், மதுரை-625020

முன்னூற்று ஐம்பத்தோரு பக்கங்களில் இயற்கை நலவாழ்வியல் தத்துவங்களையும், இயற்கை நலவாழ்வியல் முறைகளையும் இருபத்துமூன்று அத்தியாயங்களில் அழகுற விளக்கும் அருமையான நூல்.

இப்புத்தகத்தின் சில பகுதிகளை ஏற்கனவே ''வாழி நலம் சூழ'' வலைப்பூவில் ''இயற்கை மருத்துவம் (தத்துவங்களும் செய்முறைகளும்)'' மகரிஷி க.அருணாசலம்'' என்னும் தலைப்பில் தொடராக வெளியிட்டிருக்கிறேன்.

இந்தப் பதிவுகளை http://frutarians.blogspot.com/2010/03/1.html என்ற இணைப்பில் சென்று காணலாம். இந்த பதிவைப் படித்து விட்டு தொடர்பதிவுகளை வலைப்பூவிலேயே காணலாம்.

இயற்கை நலவாழ்வியல் வாழ விரும்பும் ஒவ்வொருவரும் படித்துப் பாதுகாக்க வேண்டிய நூல்.

அஷ்வின்ஜி

திங்கள், 17 ஜனவரி, 2011

3. இயற்கை நலவாழ்வியல் 
பற்றிய புத்தகம் அறிமுகம்.

இந்த பதிவில் நாம் காணப் போகும் புத்தகம் 
''நோய்கள் நீங்க எனிமா'' 
என்னும் மிகவும் பயனுள்ள ஒரு நூல்.

இந்த நூலை எழுதியவர் திரு. Dr. R. சுப்பிரமணியன், இயற்கை மருத்துவர், மருதமலை, கோவை. இவர் 1978 முதல் இயற்கை நலவாழ்வியலுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார். தற்போது பவித்ரா இயற்கை மருத்துவமனை என்ற ஒரு நிறுவனத்தை மருதமலையில் வெற்றிகரமாக நடத்திவருகிறார். நாள்பட்ட நோய்களின் தீவிரத்தை பெருமளவில் குறைத்து, பலருக்கு முழு நிவாரணமும் தரவல்ல இயற்கை மருத்துவ முறைகளை இந்த மருத்துவமனை பல நோயாளிகளுக்கு தந்துள்ளது.

"ஆஸ்பத்திரிகளில் கொடுக்கும் எனிமாவுக்கும்,இந்தப் புத்தகத்தில் விளக்கப் பெற்றுள்ள எனிமா முறைக்கும், மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசம் உண்டு. இது முற்றிலும் அகிம்சை முறையில் அமைந்த சிகிச்சை வழி. இதனைப் பல வழிகளில் அன்பர் ஆர். சுப்பிரமணியம் தமது பட்டறிவின் மூலம் தெள்ளத் தெளிய விளக்கியுள்ளார். (இந்த கையேடு) இயற்கை நலவாழ்வியல் வாழ்வு வாழ விரும்பும் அன்பர்கள் ஒவ்வொருவர் கையிலும் இருக்க வேண்டிய ஒன்று. செயற்கை வழி சென்று தனது உடல் நலனைக் கெடுத்துக் கொண்டவர்கள் இயற்கைவழி திரும்ப விரும்பும் போது இது (அஹிம்சை எனிமா முறை) துணை நிற்கும் என்பது உறுதி" என்று இந்நூலின் அணிந்துரையில் மகரிஷி டாக்டர் க.அருணாசலம், (முன்னாள் எம்.எல்.சி, மதுரையில் உள்ள அகில இந்திய காந்தி நினைவு நிதி நிறுவனம் மற்றும் தமிழ் நாடு இயற்கை மருத்துவ சங்கம் தலைவர்) கூறுகிறார். 

பல நோய்களையும் நமது உடல்தான் தீர்க்க வேண்டும் என்பது இயற்கை மருத்துவத்தின் முடிந்த முடிவு. அவ்வாறு உடல் செயல்படுவதற்கு நம் குடலைச் சுத்தம் செய்து கொள்வது இன்றியமையாதது என்பதை உணர்ந்து, மலிவான விலையில் அதற்கான கருவியை செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தால் உந்தப்பட்டு "எனிமா கேன்" ஒன்றை உருவாக்கிப் பலருக்கும் தந்து உதவி வருகிறார் டாக்டர் திரு. ஆர்.சுப்பிரமணியன்.

"குடலைக் கழுவி உடலை வளர்" என்னும் முதுமொழியை முழு விளக்கத்துடன், அறிவியல் காரணங்களுடனும், படங்களுடனும், நோயாளிகள் வாயினாலயே அவர்கள் எவ்வாறு இந்த எளிமையான முறையை பயன்படுத்தி முழு நலம் பெற்றார்கள் என்பதனையும் இப்புத்தகம் அருமையாக விளக்குகிறது.

எந்த நோயானாலும் உணவை நிறுத்தி எனிமா எடுத்துக் கொள்ள வேண்டும். வயிறு காலியானாலே நோயின் தீவிரம் குறையும். சுத்தமான குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான நீரை எனிமா கேனில் நிரப்பி செருகி (nozzle) மூலம் ஆசனவாயில் நுழைத்து சிறிது முன் சாய்ந்தோ அல்லது குனிந்தோ நிற்பதின் மூலமாகவோ அல்லது பக்கவாட்டில் படுத்திருப்பதின் மூலமாகவோ, கேனில் நிரம்பிய நீர் மலக்குடலில் செல்லும். சிறிது நேரம் நீரை மலக்குடலுக்குள் நிறுத்தி (ஓரிரு நிமிடங்கள் கழித்து) பின்னர் வெளியேற்றினால் மலம் நீருடன் சேர்ந்து பீய்ச்சிக் கொண்டு வெளி வரும். வயிற்றில் கிருமிகள் இருப்பின், வேப்பிலையை வேகவைத்து ஆறவைத்த நீர் (அ) ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாற்றில் நீர் கலந்தும் எனிமா கேனின் உதவியுடன் மேற்குறிப்பிட்ட  முறையில் உள்ளே ஏற்றி வெளியேற்றலாம். 

இந்த முறையால் பயன் பெற்ற பல ஆயிரக்கணக்கான அன்பர்களில் ஒருவரான திரு வி.தாண்டவராயர் (அட்வகேட், திருவண்ணாமலை), ''கடந்த பதின்மூன்று வருடங்களாக இம்முறையை உபயோகித்து என் எண்பத்தாறாவது வயதில் நோய் நொடியின்றி சுகமாக வாழ்ந்து வருகிறேன். மலச்சிக்கல், வயிற்றுச் சூடு, வயிற்று வலி, பேதிகள், உணவு சீரணம் ஆகாமை ஆகியவற்றிற்கு எனிமாவே கைகண்ட மருந்து"என்கிறார். கடுமையான வயிற்றுப் போக்கு இருக்கும் போது எனிமா கொடுப்பதின் மூலம், பல தடவை பேதியாவதை தடுப்பதோடு, உடலின் சுரப்பு நீர்கள் வெளியேறுவதையும் தடுக்க இயலும் என்கிறார் இந்த அட்வகேட்.

எனிமா சிகிச்சை என்பது ரிஷிகளால் பண்டைய காலம் தொட்டே கண்டுபிடிக்கப்பட்டு முறைப்படுத்தப்பட்ட ஒரு முறையாகும். அஷ்டாங்க யோகத்தில், க்ரியாக்கள் என்று சொல்வார்கள். பலவகையில் உடலை சுத்தப்படுத்தும் முறைகளை ஷத்க்ரியாக்கள் என்று கூறுவார்கள். அதில் ஒன்று பஸ்திக்ரியா என்பது பஸ்திக்ரியாவின் நவீனப்படுத்தப்பட்ட முறையே எனிமா கேன் ஆகும்.

வெவ்வேறு மருத்துவ நிபுணர்களால் இம்முறை உலகெங்கிலும் செயல்படுத்தப்பட்டு வந்தாலும், 1913-ல் புதுக்கோட்டையைச் சேர்ந்த ஆச்சார்யா லட்சுமண சர்மா அவர்களால் அஹிம்சா எனிமா என்ற பெயரில் எளிய கருவியாக அறிமுகப்படுத்தப்பட்டது இந்த எனிமா கருவி. இயற்கை மருத்துவ ஆராய்ச்சியாளராகிய லட்சுமண சர்மா அவர்கள் இந்தியா மட்டுமின்றி பல நாடுகளுக்கும் இயற்கை நலவாழ்வியல் தத்துவங்களை பரவச் செய்தவர். இயற்கை மருத்துவம் பற்றி பல புத்தகங்களை எழுதியுள்ள இவர் தனது 86 (1965) வயதிலும் இந்தத் துறையில் தளராது உழைத்தவர்.

நோய்கள் நீங்க எனிமா என்னும் டாக்டர் ஆர்.சுப்பிரமணியனின் புத்தகத்தில் கீழ்க்கண்ட தலைப்புகளில் அஹிம்சா எனிமா முறை விளக்கப்படுகிறது.
இயற்கையின் இனிமை.
(மலச்)சிக்கலுக்குச் சில காரணங்கள்.
மலம் செய்யும் மாற்றங்கள்.
எனிமா விளக்கம்.
ஒரே உடனடி நிவாரணி.
எனிமா எடுத்துக் கொள்ளும் முறைகள்.
கிடைக்கும் பலன்கள்.
உடற்கூறு இயலும், எனிமாவும்.
எனிமா வகைகள்.
Vaginal douche.
எனிமா தீர்க்கும் நோய்கள். 
அனுபவங்கள் ஆயிரம் ஆயிரம்.
மேலும் கண்கழுவுதல், மூக்குக் கழுவ்தல் பற்றிய விவரங்களையும், அருகம்புல்லின் மகிமையைப் பற்றியும் இந்நூலின் பிற்சேர்க்கையாக மருத்துவர் ஆர்.சுப்பிரமணியன் அழகாகத் தொகுத்துள்ளார்.

மருத்துவமனைகளையும், மருத்துவர்களையும் நாடாமல் இருக்க வேண்டுவோர் பயன்படுத்தவேண்டிய முறைகளைப் பற்றிய இந்த நூல் இயற்கை நலவாழ்வியல் வாழ விரும்பும் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டிய அற்புதமான நல்வாழ்க்கைத் துணைவன்  என்பதில் சற்றும் ஐயமில்லை.

வாழி நலம் சூழ....

ஞாயிறு, 16 ஜனவரி, 2011

தண்ணீரே சிறந்த மருந்து....

உடல் இளைப்பது முதல் புற்றுநோய் பாதிப்பு குறைவது வரை செலவே இல்லாத மருந்து ஒன்று இருக்கிறது தெரியுமா? 

அது தான் தண்ணீர். 

செலவே இல்லாத தண்ணீரின் மகிமை பற்றி நமக்கு தெரிந்தும் அலட்சியப்படுத்துவது தான் வேதனையான வேடிக்கை.

சென்னை போன்ற பெருநகரங்களில் வாழும் பெரும்பாலோர், தனியாரிடம் வாங்கி சாப்பிடும் `கேன் வாட்டர்’தான் நல்ல பாதுகாக்கப்பட்ட குடிநீர் என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் மெட்ரோ தண்ணீரை குடித்தாலே போதும், முக்கியமாக காய்ச்சிக் குடிக்க மறந்து விடக்கூடாது.

நாம் சாப்பிடும், குடிக்கும் எதுவாக இருந்தாலும், அதில் உள்ள நல்ல சத்துக்களை திரவமாகவும், திடமாகவும் பிரித்து பிரித்து வெளியேற வேண்டிய சமாச்சாரங்களை வெளியேற்றி, சத்துக்களை, திரவ வடிவில் ஏற்று உடலின் பாகங்கள் பிரித்துக் கொள்கின்றன. இப்படித் தான் கால்சியம், இரும்பு, கார்போஹைட்ரேட் என்று எல்லாம் உடலில் சேர்கிறது. உணவு சாப்பிடும் போது மட்டும் தண்ணீர் குடிப்பது போதாது.

தண்ணீர் குடிப்பதை பழக்கப்படுத்த வேண்டும். தண்ணீர் தொடர்பான பழங்கள், காய்கறிகளை அதிகம் சேர்க்க வேண்டும். என்ன தான் உடற்பயிற்சி செய்தாலும், டானிக் சாப்பிட்டாலும், உடல் எடை குறையாது. ஆனால், தொடர்ந்து தண்ணீர் குடித்து வாருங்கள், ஒரு மாதத்திலேயே ரிசல்ட் தெரிந்து விடும். 

உடல் எடையை அதிகப்படுத்திக் காட்ட இளைஞர்கள், இன்டர்வியூவுக்கு செல்லுமுன் கண்டபடி தண்ணீர் குடித்துச் செல்வர். இது சரியல்ல. உண்மையில், உடல் எடையை கூட்டிக் காட்ட தண்ணீர் பயன்படாது. உண்மையில், அது உடலை பாதிக்கும். தினமும் குறிப்பிட்ட அளவு சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிப்பை கட்டுப்படுத்தும் என்பது தான் உண்மை. 

ஒரு நாளைக்கு எட்டு முதல் பத்து டம்ளர் வரை தண்ணீர் குடிக்கலாம்.

நன்றி: tamilcnn.com

வெள்ளி, 14 ஜனவரி, 2011



வாழி நலம் சூழ... 


இதயம் நிறைந்த பொங்கல் நன்னாள் வாழ்த்துக்கள்.


மதிப்பிற்கும் பாசத்துக்கு உரிய வலைப்பூ அன்பர்களுக்கும், 
நண்பர்களுக்கும், வணக்கத்திற்குரிய பெரியவர்களுக்கும், 
எனது இதயம் நிறைந்த தமிழர் திருநாளாம், 
தைப் பொங்கல் வாழ்த்துக்கள்.

இந்நன்னாளில் நமக்கு,
ஆன்றோர் ஆசி,
சான்றோர் நட்பு,
சகோதர பாசம்,
மத நல்லிணக்கம்,
தோழமை நேசம்,
சுற்றிச் சூழும் நலம்,
என்றும் மங்கா வளம்,
மன மகிழ்ச்சி, 
உங்கள் எல்லார் 
உள்ளங்களிலும், 
இல்லங்களிலும் 
என்றென்றும் 
பொங்கிப் பிரவகித்து 
நல் இன்பம் என்றென்றும் 
வற்றாத ஜீவநதியாய்
ஊற்றெடுத்துப் பெருகிட
வாழ்வில் வளம் சேர்த்திட,
எல்லாம் வல்ல 
ஆடல் வல்லான் 
என் அம்மையப்பனை 
இறைஞ்சி 
வேண்டுகிறேன்.

--
'அன்பே சிவம்' அஷ்வின்ஜி
---------------------------------------------------
பிரபஞ்சத் துகளில் 'நான்' யார்?
----------------------------------------------------
வேதாந்த வைபவம் - www.vedantavaibhavam.blogspot.com
வாழி நலம் சூழ - www.frutarians.blogspot.com

திங்கள், 10 ஜனவரி, 2011

2. இயற்கை நலவாழ்வியல் நூல் அறிமுகம்

ஒரு நல்ல செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நமது வாழி நலம் சூழ.. வலைப் பூவில் திருமதி ரதி லோகநாதன் அவர்கள் எழுதி வந்த ஆரோக்கியம், ஆனந்தம் என்கிற இயற்கை நலவாழ்வியல் தொடர் ''ஆரோக்கியமே ஆனந்தம்'' என்ற தலைப்பில் ஒரு அருமையான புத்தகமாக வெளிவந்திருக்கிறது. எழுபத்தைந்து பக்கங்களில் இயற்கை நலவாழ்வு பற்றிய சுவையான செய்திகளை ஆசிரியர் வெளியிட்டிருக்கிறார்.  நமது வலைப்பூவில் வெளியிட்ட அவரது முதல் கட்டுரையான ''உலகை மாற்ற உணவை மாற்று'' என்னும் கட்டுரையும் இந்தப் புத்தகத்தில் இணைக்கப் பட்டுள்ளது. 

அச்சுகூலி, மற்றும் காகிதம் விலைகள் பெருமளவில் உயர்ந்துள்ள இந்தக் கால கட்டத்தில் இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம், இந்த நல்லதொரு புத்தகத்தின் விலை ரூபாய் இருபது என்று நிர்ணயித்துள்ளதுதான். இந்தத் தொகையைக் கூட மீண்டும் இந்தப் புத்தகத்தை அச்சிட்டு வெளியிடத்தான் உங்களிடம் இருந்து பெற்றுக்கொள்கிறேன் என்று ஆசிரியர் தன் முகவுரையில் கூறி இருக்கிறார். சேவை சிந்தனை கொண்ட சகோதரி திருமதி ரதி லோகநாதன் அவர்களை பாராட்டியே தீரவேண்டும். எல்லா வகைகளிலும் அவருக்கு உறுதுணையாக விளங்கும் அன்பர் திரு லோகநாதனுக்கு எனது வாழ்த்துக்கள். அவரது குடும்பம் நலம் சூழ வாழிய என்று வாழ்த்துவோம்.

புத்தகம் வேண்டும் என்று விரும்புபவர்கள் நூல் ஆசிரியர் திருமதி ரதி லோகநாதன் அவர்களை lram12062000@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.

அஞ்சலில் தொடர்பு கொள்ள, அவரது இல்ல முகவரி:

திரு. அ.லோகநாதன், 
24, ஆர்.வி. லே அவுட், 
ஒண்டிப்புதூர், 
கோயம்புத்தூர் - Pin: 641016, 
தமிழ்நாடு (இந்தியா).

இன்றைய கால கட்டத்தில் எல்லா தரப்பு மக்களையும் இந்த இயற்கை நலவாழ்வுச் செய்தி போய் சேர வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்ட அன்பர்கள் இந்த நூலை வாங்கி பரிசளிக்கலாம். மொத்தமாக வாங்கியும் பகிர்ந்து கொள்ளலாம்.

நன்றி.

ஞாயிறு, 2 ஜனவரி, 2011


பழசுக்கு வருது மவுசு
பாக்கெட்களில் அடைக்கப்பட்ட உணவுப்பொருட்கள் விற்கப்படும் "மால்' கலாசாரத்துக்கு அமெரிக்காவில் கூட மவுசு குறைந்து வருகிறது. ஆனால், நம்மூரில் கொடிகட்டிப்பறக்கிறது. "மால்' கலாசாரம் தவறில்லைதான்; ஆனால், சத்தான உணவு வகைகள், காய்கறிகள் போன்றவற்றை வாங்கும் நிலை மாறி, பாக்கெட், டப்பா கலாசாரம், உரம் போட்ட காய்கறிகள் என்று நாம் எங்கோ போய்க்கொண்டிருக்கிறோம்.

அமெரிக்காவில் எழுந்த ஆர்கானிக் கோஷம் இப்போது, இந்தியாவில் பரவி வருகிறது. ஆர்கானிக் காய்கறிகள், தானியங்கள், பழங்கள் என்பது பரம்பரையாக நாம் பின்பற்றி வந்ததுதான். நடுவில், உரம் போட்ட சமாச்சாரங்கள் தலைதூக்கி விட்டன. இப்போது மீண்டும் ஆர்கானிக்குக்கு மவுசு திரும்பி விட்டது. ஆர்கானிக் என்பது உரம் போடாத, ரசாயன கலப்பில்லாத உணவுப்பொருட்கள் சார்ந்தது. 

எது ஆர்கானிக், அதனால் எந்த அளவுக்கு உடலுக்கு நல்லது என்று பார்ப்போம் 

உப்பு: இப்போது பலரும் பரவலாக பயன்படுத்துவது அயோடின் சத்துள்ள பாக்கெட் உப்பு தான். சில ஆண்டுக்கு முன்வரை பயன்படுத்தி வந்த கல் உப்பு நினைவிருக்கிறதா? அதில் உள்ள கனிம சத்துக்கள் பற்றி பலருக்கும் தெரியாது. இது தான் ஆர்கானிக் உப்பு. உடலில் அயோடின் சத்து தேவை தான். ஆனால், அயோடின் சத்து கிடைக்கும் நிலையில், உப்பு மூலமும் அது சேர்ந்தால் பிரச்னை தான். 

(பதிவர் கண்ணோட்டம்: இயற்கை நலவாழ்வியல் முறையில் உப்பு பயன்படுத்துவது தேவையற்றது என்று வலியுருத்துப்படுகிறது. அதனால் கல்லுப்போ அல்லது அயோடின் உப்போ எதுவாகிலும் உப்பு தப்பு தான்.)

ரீபைண்ட் ஆயில்: செக்கில் ஆட்டிய எண்ணெயை யார் இப் போது பயன்படுத்துகின்றனர். நகரங்களில் எங்கு பார்த்தாலும் பாக் கெட் உணவு எண்ணெய் தானே. அப்படியும் செக்கில் ஆட்டியெடுத்த கடலை, நல்லெண் ணெய் இன்னமும் சில இடங் களில் விற்பனை செய்யப்படுகிறது. இதுதான் எந்த கலப்பும் இல்லாத ஆர்கானிக் எண் ணெய். ரீபைண்ட் என்பது, சூடாக்கி சமப்படுத்துவது. அதனால், வாணலியில் இரண்டாவது முறையாக சூடாக்கப்படுகிறது. இதனால், ரசாயன கலப்பு சேர்கிறது உடலில். இது தான் நிபுணர்கள் கருத்து. 

வெண்ணெய், நெய், வனஸ்பதி: மூன்றுமே கொழுப்பு சார்ந்தது தான். அதிகம் பயன்படுத்தக்கூடாது. இதனால், கொலஸ்ட்ரால் தான் உடலில் சேரும். மாறாக, ஆர்கானிக் முறையில் இயற்கையாக உருவாக்கப்பட்ட ஆலிவ் ஆயில், செக்கில் ஆட்டிய கடலை எண்ணெய் தான் மிக நல்லது. 

உலர்ந்த தானியங்கள்: பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உலர்ந்த பருப்பு உட்பட தானியங்கள் தான் பயன்படுத்துகிறோம். ஆனால், எந்த கலப்பும், செரிவூட்டலும் இன்றி, இயற்கையாக விளைவித்து எடுக்கப்பட்ட பருப்பு , தானியங்கள் தான் ஆர்கானிக் முறைப்படி நல்லது. நன்கு உலர்ந்த தானியங்களில் கொழுப்பு தான் மிஞ்சும். ஆனால், ஆர்கானிக் முறையில் சத்துக்கள் முழுமையாக கிடைக்கும். 

பாலிஷ் அரிசி: அரிசி சாதம், வெள்ளையாக இருக்க வேண்டும். பழுப்பாக இருந்தால் நகரங்களில் உள்ளவர்களுக்கு பிடிக்காது. ஆனால், புழுங்கல் அரிசி சாதம் தான் மிக நல்லது என்பது இப்போது தான் பலருக்கு தெரிய ஆரம்பித்துள்ளது. பாலிஷ் செய்யப்படாத புழுங்கல் அரிசி, முழு கோதுமை ஆகியவற்றில் தான் 100 சதவீத சத்துக்கள் உள்ளன என்பதை மறந்து விடாதீர்கள். 

சந்தை காய்கறி,பழங்கள்: உரம், ரசாயன கலப்பு சார்ந்து விளைவிக் கப்பட்ட, செயற்கையாக பெரிதாக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள் கண்களுக்கு கவர்ச்சியாக இருக்கலாம்; விலை குறைவாக இருக்கலாம். ஆனால், உடலுக்கு கெடுதல் தான். உரம் கலப்பில்லாத காய்கறிகள், கீரைகள், பழங்கள் மூலம் கிடைக்கும் பலன், மருந்துகளில் கூட கிடையாது. 

பால்: பால் உடலுக்கு நல்லது தான். ஆனால், நாம் சாப்பிடும் பாலில், கொழுப்பு சத்து நீக்கப் பட்டதால் பரவாயில்லை. ஆனால், கால்நடைகளில் 90 சதவீதம் உரம், ரசாயன ஆன்டிபயாட்டிக் மருந்துகளை பெற்ற நிலையில் தான் உள்ளன என்பது, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலே வருத்தத்துடன் கூறியுள்ளது. ஆர்கானிக் வகையில் இப்போது பல வகை மூலிகைகள் வந்துவிட்டன. பாலுடன் இவற்றையும் சாப்பிடலாம். 

கோலா, காபி, டீ: இயற்கையான காபி, டீ இப்போது கிடைப்பதில்லை. எல்லாமே, உரக்கலப்பு மிக்கது தான். அதிலும் , பாக்கெட் பானங்களில் பெரும்பாலும் உடலுக்கு ஆரோக்கியமில்லாத விஷயங்கள் தான்.
மூலிகை டீ நல்லது. மூலிகை சார்ந்த பானங்கள் இப்போது உள்ளன. அவற்றை வாங்கி அருந்தலாம். 

சர்க்கரை: சர்க்கரைக்கு பதில், வெல்லத்தை பயன்படுத்தலாம். காபி, டீ யில் கருப்பட்டி வெல்லம் போட்டு சாப்பிட்டால், உடலுக்கு நல்லது. எந்த கெடுதலும் வராது.

ஆர்கானிக் கோஷம் இன்னும், இந்தியாவில் பெரிய அளவில் எடுபடவில்லை. காரணம், இப்போதுள்ள உணவு பொருட்கள் விலையே விண்ணைத் தொடுகிறது. ஆர்கானிக் சமாச்சாரங்கள் விலை இன்னும் அதிகம். 

இருந்தாலும், காலப்போக்கில், உரக்கலப்பில்லா உணவுப்பொருட்கள் சாப்பிடும் நிலைக்கு வருவது மட்டும் நிச்சயம்.

நன்றி: தினமலர் 

வெள்ளி, 31 டிசம்பர், 2010

பகுதி 1:- இயற்கை நலவாழ்வியல் புத்தகங்கள்.

இயற்கை நலவாழ்வியல் தொடர்பான புத்தகங்களைப் பற்றி அறிமுகம் செய்வதற்காக இந்த பதிவினை தொடங்கி உள்ளேன்.

நான் படித்த புத்தகங்களில் இருந்து நான் ரசித்த சுவையான சில பகுதிகளை பதிவிடுகிறேன்.

புத்தகத்தின் தலைப்பு, ஆசிரியர் பெயர், புத்தகத்தின் மதிப்பு, மற்றும் கிடைக்கும் முகவரி போன்றவற்றையும் காணலாம்.

இந்த வகையில் நான் படித்து பெரிதும் விரும்பிய ஒரு புத்தகம் பற்றி இங்கே கூற விரும்புகிறேன்.

1.  புத்தகத்தின் பெயர்:  இயற்கை வாழ்வியல் கலை. (An Art of Natural Life)
2 .  ஆசிரியரின் பெயர்: பிரம்மஸ்ரீ கோ.எத்திராஜ் 

3.  பதிப்பக முகவரி: சித்த வித்தை தவ மையம், சித்த வித்யார்த்தி ஃபௌண்டேஷன், சித்தர் வழிச் சாலை, சிவானந்தகிரி, மல்லையாபுரம், ஆத்தூர் வட்டம், திண்டுக்கல் மாவட்டம்.  

4.  புத்தக விவரம்:    இயற்கை நலவாழ்வியல் பற்றிய அற்புதத் தொகுப்பு

5. 103 பக்கங்கள்,

6. விலை ரூ.60 மட்டும். (இந்த பணத்தை தவ மைய வளர்ச்சிக்காக பயன்படுத்தப் போவதாக ஆசிரியர் கூறி உள்ளார்)

புத்தகத்தில் இருந்து சில சுவையான பகுதிகளை வெளியிடுகிறோம்.

இயற்கை அன்னையின் பேராற்றலை மட்டுமே நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் சகல ஜீவ ராசிகளுக்கும் இந்நூல் சமர்ப்பணம் என்று துவங்கும் நூல் ஆசிரியரின் முன்னுரையிலிருந்து:

முன்னுரை:
''அன்றாட வாழ்க்கையில் இன்றைய நவீன மனித குலம் நெறியற்ற, முறையற்ற தனது உணவுப் பழக்கத்தினால் தன்னைத் தான் இழந்து கொண்டே வருகிறது.''
''உடல் பிரச்சினைகளோடும், மனக் குழப்பங்களோடும், வியாதியைப் பற்றிய சந்தேகங்கலோடும், பக்குவமில்லாத கேள்விகளோடும், நிறைந்து கிடைக்கும் நிறைவின்மைகளோடும் வாழப் பழகி விட்ட மனித சமுதாயம், அவைகளிலிருந்து தம்மை முழுமையாக விடுவித்துக் கொள்ளவும், வருங்காலத் தலைமுறைகளுக்கு தெளிவான தீர்வினை அளிக்கவும் தவறிவிட்டது.''
மனிதன் ''பொருளாதாரத்தில் சில இலக்குகளை இவனாகவே நிர்ணயம் செய்து கொண்டு, உடல் பற்றியும், உயிர் பற்றியும் எந்த ஒரு சிந்தனையும், ஆலோசனையும் இன்றி வாழ்க்கையை இயந்திரத்தனமாக மாற்றியமைத்துக் கொண்டான். போருலாதாரங்களைத் தேடிக் கொண்டு எதையும் சாதிக்கலாம் என்ற தவறான கொள்கையையும் வளர்த்துக்  கொண்டான்....
நிர்ணயித்த பொருளாதார இலக்கை அடைந்த பிறகு, மனிதன் தன் வாழ்க்கையை திரும்பிப் பார்க்கும் பொழுது, திரும்பப் பெறவே முடியாத பொக்கிஷங்களான அமைதியையும், ஆரோக்கியத்தையும், ஆனந்தத்தையும் இழந்ததாகவே அவன் அனுபவத்தில் உணருகிறான்.....''
''இழந்தவற்றைஎல்லா திரும்பப் பெறுகின்ற முயற்சியின் போது, அவன் நம்பியிருந்த பொருளாதாரமும் அவனைக் கைவிட்டு விடுகிறது.'' ......
''வாழ்வதற்கு பொருள் அவசியம் வேண்டும் என்ற மனிதன், ''வாழ்வதிலும் பொருள் வேண்டும்'' என்பதை உணர்ந்திருக்கவில்லை. அதனால் தான் அவனுக்கு இவ்வளவு தொல்லை''.
''சாவி இல்லாமல் எந்தப் பூட்டும் தயாரிப்பதில்லை. தீர்வுகள் இல்லாமல் எந்தப் பிரச்சினைகளும் உருவாவதில்லை. மனித உடல் மற்றும், மனம் சார்ந்த எந்தப் பிரச்சினைகள் இருந்தாலும் அதற்கு ஒரே தீர்வு.

முழு இயற்கை வாழ்வியல் முறையில்  
வாழ முயற்சிப்பது தான்.
''இயற்கை வாழ்வியல் கலை என்பது 500 வருடங்களோ, அல்லது 1000 வருடங்களோ வாழ்வதற்கான வழி முறை அல்ல. மனிதன் வாழும் வரை எவ்வித நோய்களுமின்றி, மருந்துகளும் இன்றி, துன்பங்களின்றி பேரானந்த வாழ்வு வாழ்வதற்கான முயற்சியே தவிர வேறு ஒன்றும் இல்லை.''
''உலகோரைத் திருத்தவோ அல்லது எனது சுயகருத்துக்களை உங்களிடம் திணிப்பதோ இந்நூலின் நோக்கமில்லை! அது நம்முடைய வேலையும் அல்ல! உலகோருக்கு தெரிவிப்பது நமது கடமை ! திருந்துவதும் திருந்தாமல் போவதும் அவர்களது உரிமை! உண்மையில் நம்மை நாம் திருத்திக் கொள்வதில் தான் பிறவியின் இரகசியம் ஒளிந்திருக்கிறது !
அன்புடன்,
கோ.எத்திராஜ்
சின்னாளப்பட்டி.

நூலாசிரியர் பிரச்சினைகளைப் பற்றி மட்டும் பட்டியலிட்டு விட்டு பின்னர் அதோடு விட்டு விடாமல் எளிய முறையிலான தீர்வுகளையும் இந்த நூலில் சொல்லுகிறார். 

புத்தகம் பற்றிய செய்திகளையும், சில பகுதிகளையும் வெளியிட அனுமதி தந்தபிரம்மஸ்ரீ கோ. எத்திராஜ் அவர்களுக்கு நன்றி.

முக்கியத் தலைப்புகளில் ஆசிரியரின் தீர்வுகள் பற்றிய சுருக்கப்பட்ட விவரங்கள் கொண்ட பதிவுகள் தொடரும். 


 
அன்பான வேண்டுகோள்:

ஆசிரியர் ஒரு பி.இ. பட்டதாரி இளைஞர். வடகரை சிவானந்தரின் தவ வாழ்க்கை நெறியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். திண்டுக்கல் அருகாமையில் ஆத்தூர் அருகே இயற்கை சூழலில், கொடைக்கானல் மலைச் சாரலில் தவமையம் அமைத்து இயற்கை நலவாழ்வினை வாழ்ந்து வருபவர். வடகரை சிவானந்தரின் சித்தவித்தையை ஆர்வம் உள்ளோருக்கு கற்றுத் தந்து வருகிறார்.

இயற்கை நலவாழ்வியல் பற்றிய அரிய கருத்துக்கள் கொண்ட இப்புத்தகத்தினை ஆசிரியர் எந்தக் கடையிலும் விற்க ஏற்பாடு செய்யவில்லை. ஆர்வம் உள்ளவர்கள் ஆசிரியரை தபால் மூலம் தொடர்பு கொண்டு புத்தகத்தினைப் பெறலாம். லாப நோக்கில்லாமல் இந்தப் புத்தகத்தினை வெளியிட்டிருப்பதாலும், தவமைய வளர்ச்சியை கருத்தில் கொண்டு புத்தகத்தின் விலை குறிக்கப்பட்டிருப்பதாலும், ஆர்வம் கொண்ட நண்பர்கள் பத்து அல்லது இருபது புத்தகங்களாக மொத்தமாக வாங்கி தங்களுக்குள் விநியோகித்துக் கொள்வது ஒரு சிறந்த முறை. மற்றும் பிறந்த நாள், மண நாள் வாழ்த்து, திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளில் வாழ்த்து சொல்வது போன்ற நேரங்களில் இந்தப் புத்தகத்தை பரிசளிப்பது மற்றொரு சிறந்த முறை.
 
நன்றி.
எளியேனின் 
வலைப்பூவைத் 
தொடர்ந்து பார்வையிட்டு 
ஆசி கூறியும், ஆதரித்தும், 
என்னை வாழ்த்தும்
அன்பு நெஞ்சங்கள் 
அனைவருக்கும் 
எனது நெஞ்சு நிறைந்த 
ஆங்கிலப் புத்தாண்டு  
வாழ்த்துக்கள். 



எதிர் வரும் நாட்களில் 
அன்பர்கள் வாழ்வில் 
அன்பு, ஆனந்தம்,  
தேக நலம்,  ஆன்ம நலம், 
மற்றும் எல்லா வளங்களும், 
அமைதியும், ஆனந்தமும் 
பொங்கிப் பிரவகிக்க 
என் ஈசன் ஆடல் வல்லான் 
அருட்துணையை 
நாடி வணங்குகிறேன். 

அன்புடன்:
 
வாழி நலம் சூழ.
'அன்பே சிவம்' அஷ்வின்ஜி
பிரபஞ்சத் துகளில் 'நான்' யார்?
 
www.vedantavaibhavam.blogspot.com
www.frutarians.blogspot.com

வியாழன், 30 டிசம்பர், 2010


இயற்கையே இறைவன்;
இயற்கை வழி வாழ்தலே இறை வழிபாடு.


யோகக் கலையின் தமிழ் நூலான திருமந்திரம் அருளிய திருமூலநாயனார். உடல் நலத்தின் சிறப்புகளை பலவாறு பாடியுள்ளார்.
''உள்ளம் பெருங்கோவில்
ஊனுடம்பு ஆலயம்
தெள்ளத் தெளிந்தார்க்கு
சீவனே சிவலிங்கம்''
என்றும்,
உடம்பினை முன்னம் இழுக்கென்றிருந்தேன்
உடம்பினுள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்பிற்குள்ளே உத்தமன் கோயில் கொண்டானென்று
உடம்பினை யானிருந்து ஒம்புகின்றனே.
எனவும்,
உடம்பாரழியிர் உயிராலழிவர் 
திடம்பட மெய்ஞானம் சேரவுமாட்டார்
உடம்பினை வழக்கும் உபாயம் அறிந்தேன்
உடம்பினை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே.
எனவும்,
அண்டம் சுருங்கின் அதற்கோர் அழிவில்லை
பிண்டம் சுருங்கின் பிராணன் நிலை பெறும்
உண்டி சுருங்கின் உபாயம் பலவுள  
கண்டங் கருத்த கபாலியுமாமே.
என்றெல்லாம் அவர் உடல் நலத்தினை பேணிக்காப்பதைப் பற்றி கூறுகிறார்.
அது போலவே உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவரும் மிக அழகாக இதையே
''மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு
அருந்தியது அற்றது போற்றியுணின்''
எனவும்,
''மாறுபாடில்லா வுண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடில்லை உயிர்க்கு''
எனவும் கூறியுள்ளார்.

செய்தியை தந்தவர்: 
திரு மூ.ஆ.அப்பன்,
இயற்கை நலவாழ்வியல் ஆலோசகர் 
குலசேகரன்பட்டினம் (தூத்துக்குடி மாவட்டம்)

புதன், 29 டிசம்பர், 2010


ஆனா‌ல் எ‌ண்ணையே இ‌ல்லாம‌ல் எ‌ப்படி சமை‌ப்பது எ‌ன்று இ‌ல்ல‌த்த‌ர‌சிக‌ள் ந‌ம்மை‌ மறுகே‌ள்‌வி‌க் கே‌ட்பா‌ர்க‌ள். அத‌ற்கு‌, ஒரு சொட்டு எண்ணை கூட பயன்படுத்தாமல் சமையல் செய்வது எப்படி என்று மரு‌த்துவ‌ர் பிமல் சாஜர் நே‌ற்று செ‌ன்னை‌யி‌ல் செய்து காட்டினார்.

உலகம் முழுவதும் இதய நோயாளிகள் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு தமிழகமும் விதிவிலக்கு அல்ல. தற்போது குறிப்பாக நகர்ப்புறங்களில் வாழும் மக்களின் வாழ்க்கை முறை அடியோடு மாறி உடல் உழைப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாக இல்லை.

குளிர்பானங்கள், பாஸ்ட்ஃபுட் முதலியவற்றைதான் இன்றைய இளைஞர்கள் விரும்புகிறார்கள். இத்தகைய காரணங்களால் சிறிய வயதிலேயே எடை அதிகரிக்கிறது. சர்க்கரைவியாதி, உயர் ரத்த அழுத்த இதயநோய் வருகிறது.

இதய நோய்க்கு எண்ணைதான் மூல காரணமாக விளங்குகிறது. அசைவ உணவுகளை எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்‌றி அதிகநேரம் வறுத்து சாப்பிடுவதால் அதிக எண்ணை உடலில் சேர்கிறது.

எனவே எண்ணை இல்லாமல் சமையல் செய்து சாப்பிட்டால் இதய நோய் வராது என்றும் இதயநோய் இருப்பவர் மட்டுமல்ல, ரத்த நாளத்தில் 10 அடைப்பு இருப்பவர்கள் கூட, ஏன், பைபாஸ் சர்ஜரிக்கு சிபாரிசு செய்யப்பட்டவர்கள் கூட எண்ணை பயன்படுத்தாத சமையலை சாப்பிட்டால் ரத்தநாளத்தில் ஏற்பட்ட அடைப்பு குறைகிறது என்றும் அறுவை சிகிச்சையே தேவை இல்லை என்றும் இதய சிகிச்சை நோய் நிபுணரும் சாஓல் என்ற விஞ்ஞானம் மற்றும் வாழும் கலை அமைப்பை சேர்ந்த மரு‌த்துவர் பிமல் சாஜர் கூறுகிறார்.

அவர் எண்ணை இல்லாத சமையலை சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் செய்து காண்பித்தார்.

நான்ஸ்டிக் பாத்திரத்தை பயன்படுத்தி அதில் ஒரு சொட்டு எண்ணை பயன்படுத்தாமல் பக்கோடா தயாரித்து காட்டினார். அதை பலரும் சுவைத்து சாப்பிட்டனர். அதேபோல கோதுமை மாவில் பால் எடுத்து அந்த பாலைக்கொண்டு நான்ஸ்டிக் பாத்திரத்தில் நெய் இன்றி எந்தவித டால்டாவும் பயன்படுத்தாமல் சுவையான அல்வா தயாரித்துக் காட்டினார்.

அதுபோல சாம்பார் சாதம், சாம்பார், உருளைக்கிழங்கு கூட்டு, பட்டர் பீன்ஸ் கலந்த கீரைக்கூட்டு உள்பட பல சமையல்களை செய்து காண்பித்தார்.

அந்த சமையலை அங்கு டாக்டரிடம் பயிற்சிக்கு வந்திருந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் சாப்பிட்டு ருசித்தனர். அவர்கள் கூறுகையில், எண்ணை பயன்படுத்தி சமைத்தது போன்றே, நல்லசுவையாக உள்ளது என்று தெரிவித்தனர்.

எண்ணை இல்லாத சமையல் குறித்து டாக்டர் பிமல் சாஜர் கூறுகை‌யி‌ல், சாஓல் என்ற விஞ்ஞான மற்றும் வாழும் கலை என்ற அமைப்பை நடத்தி வருகிறோம். இதன் நோக்கமே இதய நோய் இல்லாமல் எல்லோரும் வாழ வேண்டும். இதய நோய் வந்தவர்களும் அதில் இருந்து விடுபட்டு சுகமாக இருக்க வேண்டும் என்பதே ஆகும். இதய நோய்க்கு மூலக்காரணம் எண்ணைதான்.

எண்ணை இல்லாமல் எல்லா சமையலும் செய்ய முடியும். அதை நாங்கள் நிரூபித்துள்ளோம். தென் இந்திய சமையலில் மட்டும் பொரியல், கூட்டு, குழம்பு உள்பட 155 வகைகளை செய்து காட்டி உள்ளோம். அதற்கான புத்தகமாக, `எண்ணை இல்லா தென் இந்திய சமையல்' என்று ஒரு பு‌த்தக‌ம் வெளியிட்டுள்ளோம்.

நான் என்னுடைய மருத்துவ பணியில் இந்தியாவில் இதுவரை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இதய நோயாளிகளை இருதய அறுவை சிகிச்சையில் இருந்து காப்பாற்றி உள்ளேன். அதாவது ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டு இருதய அறுவை சிகிச்சைக்கு மரு‌த்துவர்களால் சிபாரிசு செய்யப்பட்டவர்கள், ஆஞ்சியோ பிளாஸ்ட் செய்ய பரிந்துரை செய்யப்பட்டவர்கள் ஆவார்கள். அவர்கள் எங்கள் இருதய திட்டத்தில் சேர்ந்து பயன் அடைந்துள்ளனர். திட்டத்தின்படி 3 நாள் பயிற்சி அளிக்கப்படும்.

அதாவது ஒவ்வொரு சாப்பாட்டிலும் என்ன என்ன கொழுப்பு சத்து உள்ளது. எவ்வளவு கலோரி உள்ளது. அவற்றால் உடலுக்கு ஏற்படும் பிரச்சினை என்ன, வரும் நோயாளிகளின் வேலை என்ன என்பது குறித்து விரிவாக கேட்டறியப்படும்.

பின்னர் அவர்களுக்கு யோகா கற்பிக்கப்படும். எண்ணை இல்லாத சமையலை நேரில் செய்து காண்பிக்கப்படும். தினமும் 35 நிமிடம் நடைப்பயிற்சி செய்ய ஆலோசனை வழங்கப்படும். மனதில் டென்சன் இல்லாமல் இருக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுபோ‌ன்று வாழு‌ம் கலை ப‌ற்‌றிய முழு‌ப் ப‌யி‌ற்‌சியு‌ம் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. பழ வகைகளை சாப்பிடலாம். அதில் எந்தவித கெடுதலும் இல்லை. பப்பாளி, கொய்யா, திராட்சை, வெள்ளரிக்காய், வெண்ணை எடுத்த மோர் ஆகியவற்றை நன்றாக சாப்பிடலாம்.

இந்த பயிற்சி முகாமில் அவர்களுக்கு நா‌ங்க‌ள் க‌ற்று‌க் கொடு‌த்தபடி அவ‌ர்க‌ள் த‌ங்களது வா‌ழ்‌க்கை‌ முறை‌யி‌ல் கடைப்பிடிக்க வேண்டும். அறுவை ‌சி‌கி‌ச்சையை ‌விட இவ‌ற்றை கடை‌பிடி‌ப்பது எ‌ளிதானது எ‌ன்பதா‌ல் ப‌யி‌ற்‌சி‌க்கு வருகின்ற பெரும்பாலானவர்கள் இதனை‌க் கடைபிடித்து இருதய நோய் இன்றி நலமுடன் வாழ்கிறார்கள்.

ரத்தநாளத்தில் அடைப்பு உள்ளவர்கள் அடைப்பு நீங்கி நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள். அதற்கு முக்கிய காரணம் எண்ணை இல்லாமல் சாப்பிடுவதே ஆகும் எ‌ன்று அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.
 நன்றி: வெப்துனியா.
இயற்கை உணவும் இரத்தத்தின் தன்மையும்...
(உங்கள் குடும்ப டாக்டர் உங்களிடம் சொல்லாமல் மறைத்த ரகசியம் இதோ):

இரத்தம் காரத்தன்மை (ஆல்கலைன்) உடையது. 

இயற்கை உணவும் காரத்தன்மை உடையது.  எனவே இயற்கை உணவு  எளிதாக இரத்தத்தின் காரத் தன்மையை சமன் செய்யும். 

ஆனால் சமைத்த உணவு அனைத்தும் அமிலத்தன்மை (அசிடிக்) உடையது. எனவே அது  இரத்தத்தை அமிலத்தன்மை உடையதாக்கும். 

உடலோ மீண்டும் இரத்தத்தை காரத்தன்மை உடையதாக்க போராடும்.  

அந்த போராட்டத்தில் உடல் (நலிவடையும் போது) தோல்வியடையும் போது நாம் நோய் வாய்ப்படுகிறோம்.

அல்லோபதி மருந்துகளும் நச்சத் தன்மை கொண்டிருப்பதினால், உங்கள் இரத்தத்தின் காரத் தன்மையை அமிலத் தன்மையாக மாற்றும் வல்லமை கொண்டவை. 
 
இயற்கை உணவுக்கு மாறுங்கள். உடல் நலத்தை தக்க வைத்துக் கொள்ளுங்கள்.  

மேலும் விவரங்களுக்கு இந்த வலைப்பூவின் மற்ற பகுதிகளைப் படியுங்கள். 

செவ்வாய், 28 டிசம்பர், 2010

யோகாசனங்கள் எப்படி உருவாயின என்பது பற்றிய கேள்வி ஆசனங்களைப் பயிற்சி செய்யும் பலருக்கும் தோன்றியிருக்கும்.

“இலக்கியத்திற்குப் பின் இலக்கணம்” என்பது போல, யோகத்தின் முதல் நூல் என்று கருதப்படும் பதஞ்சலி யோக சூத்திரங்கள் வரையறுக்கப்படுவதற்கு முன்பே யோகம் பற்றிய பல நுட்பங்கள் அறியப் பட்டிருந்திருக்க வேண்டும் என்றே யோக அறிஞர்கள் பலரும் கருதுகிறார்கள். இந்த நூலில் ஆசனம் பற்றி ஒரே ஒரு சூத்திரம் தான் உள்ளது: “உறுதியானதும், சுகமாயிருப்பதும் ஆன நிலை ஆசனம்”. ஏதாவது ஒரு ஆசனம் செய்யும்போது யாருக்காவது உடல் வலியால் முகம் சுளிப்பது போல் ஆனால் “ஸ்திரம் சுகம் ஆசனம்” என்று எங்கள் யோக ஆசிரியர் இந்த சூத்திரத்தைச் சொல்லி நினைவூட்டிக் கொண்டே இருப்பார்!

பதஞ்சலிக்குப் பின்னர் வந்த “ஹடயோக ப்ரதீபிகா” போன்ற நூல்களில் இன்று மிகப் பிரபலமாகி நாம் பயின்று வரும் பல ஆசனங்களின் பெயர்களும், அந்த ஆசனத்தில் உடலின் தோற்றம் (posture) எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றிய சித்திரங்களும் கிடைக்கின்றன. படங்கள் போன்ற குறியீடுகளைப் பயன்படுத்தாமல் சொற்கள் மூலமே விளக்கினாலும் ஆசனங்களுக்கான தெளிவான கையேடாக இந்த நூல் விளங்கி வந்திருக்கிறது. இது தவிர, வழிவழியாக வந்துள்ள தொடர்ச்சியான குரு சிஷ்ய மரபுகளும் இந்த ஆசனங்களில் உள்ள கலை நுணுக்கத்தை சரியான முறையில் இன்றுவரை எடுத்து வந்துள்ளன.

ஆசனங்கள் வெளி உறுப்புக்களையும், தசைகளையும் மட்டுமல்ல, உடலின் பல உள் உறுப்புக்களையும், நாடி நரம்புகளையும் உறுதியாக்குகின்றன.

பல யோகாசனங்கள் பார்ப்பதற்குக் கடினமாகத் தோன்றினாலும், பயிற்சி செய்பவர்களுக்கு இவை மிக இயல்பானதாகவே தெரியும். பயிற்சி இதற்குக் காரணம் என்றாலும், யோக ஆசனங்களின் தன்மையே அப்படிப் பட்டதாயிருக்கிறது. 2-3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வளரும் பருவத்தில் தாங்களாகவே பல ஆசனங்கள் போடுவதைப் பார்க்கலாம். உட்காருவதற்கு வந்து நிற்கத் தொடங்கும் சமயம் பல குழந்தைகளுக்கு வஜ்ராசனம் தானாக வரும். தவழ்வதற்காக அமரும் தோற்றமே ஒரு ஆசனம் தான்! ஆசனங்களின் இந்த இயற்கைத் தன்மை அவற்றுக்கு இன்னும் அழகு சேர்க்கிறது.

மனித உடலின் இயக்கம் பற்றிய ஆழ்ந்த நுண்ணறிவு பெற்றிருந்தனர் பண்டைக் கால யோகிகள். காட்டில் விலங்குகள், பறவைகள் இவற்றின் வாழ்வைக் கூர்ந்து கவனித்த அவர்கள் அவை எப்போது அமைதியடைகின்றன, ஆக்ரோஷம் கொள்கின்றன இவற்றையெல்லாம் ஆராய்ந்து பல ஆசனங்களை உருவாக்கியிருக்கலாம் என்று ஒரு கருத்து உள்ளது.

புகழ்பெற்ற யோக குரு ஸ்ரீஸ்ரீரவிசங்கர் அவர்களிடம் இந்தக் கேள்வி கேட்கப்பட்ட போது அவர் கூறினார் “யோகத்தின் ஒரு உயர்ந்த நிலையில் செல்லும்போது பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கும் ஆன்மாவை யோகிகள் உணர்ந்தார்கள். அந்த உணர்ச்சியின் வெளிப்பாடாக அவர்கள் உடல் தானாகவே பல விதமான தோற்றங்கள் கொண்டது. இப்படித்தான் ஆசனங்கள் தோன்றின. பின்னர் அவை ஆய்வுக்கு உட்பட்டு நெறிப்படுத்தப் பட்டன. பிராணாயாம முறைகள் தோன்றியதும் இப்படித்தான்.” ஸ்ரீஸ்ரீ அவர்களது உருவாக்கம் என்று கருதப்படும் புகழ்பெற்ற “சுதர்ஷன் க்ரியா” என்ற பிராணாயாம முறையும் பரிசோதனைகளாலோ, புறவயப்பட்ட முயற்சிகளாலோ தோன்றவில்லை. 

மாறாக, ஆழ்ந்த தியானத்தின் போது தானாகவே அது சித்தித்ததாக அவர் பலமுறை கூறியுள்ளார். உலகெங்கும் உள்ள யோக ஆசிரியர்கள் அடிப்படை யோகப் பயிற்சிகளில் புதிய புதிய பரிமாணங்களை இன்றும் ஆக்கம் செய்து வருகிறார்கள். இவற்றில் எத்தனை முயற்சிகள் அகவயப்பட்டவை என்பது கேள்விக்குரியது. இருந்தாலும் யோகம் என்பது “கணந்தோறும் புதிதாகத்தோன்றும்” ஒரு வாழும் கலை என்பதில் ஐயமில்லை.

யோகாசனங்கள் உருவாக்கும் உடல் தோற்றத்தோடு, அவை தரும் உணர்வு நிலையையும் கருத்தில் கொண்டு பின்னர் பெயர்கள் இடப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.

“புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகி
பல் மிருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகி
வல் அசுரராகி முனிவராய்த் தேவராய்
கல்லாய் மனிதராய்ப் பேயாய் கணங்களாய்
செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்!”

என்று திருவாசகம் கூறும் அதீத அனுபவம் பரிணாம அறிவியல் கூறும் வளர்ச்சிப் படிநிலைகளை மட்டுமல்ல, அனைத்து உயிர்களாகவும் ஆகும் ஆன்மாவின் தன்மையையும் குறிக்கிறது. எண்ணிப் பார்த்தால், இந்தப் பேரனுபவத்தின் வெளிப் பாட்டை மனித உடலின் மொழியில் பாடும் அழகிய கவிதைகள் யோகாசனங்கள்!

அசையாப் பொருள்கள் மற்றும் விலங்குகள், பறவைகள் இவற்றின் தோற்றத்தில் பல ஆசனங்கள் உள்ளன.













  • தனுராசனம் (வில்)



























































 கீழ் நோக்கும் நாய்
























மேல் நோக்கும் நாய்




































































கருவில் இருக்கும் சிசுவாக கர்ப்ப பிண்டாசனம்.











எல்லா செய்கையும் அடங்கிய பிணமாக சவாசனம்.











முனிவர்களின் பெயரால்
பரத்வாஜாசனம், மத்ஸ்யேந்திராசனம்.































தெய்வ சக்திகளாக வீரபத்ராசனம், நடராஜாசனம்.























இதயக் கமலத்தில் உறையும் ஆன்ம சக்தியின் உருவகமாகவும், ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை என்று ராஜயோகம் கூறும் சக்தி பீடமான சக்கரத்தின் உருவகமாகவும் விளங்கும் அற்புதமான பத்மாசனம்.


















இப்படி ஆசனங்களிலேயே அனைத்துயிர்களின் உணர்வு நிலைகளும் தோன்றும்படி யோகிகள் இவற்றை வடிவமைத்து பெயரும் இட்டார்களோ என்றே எண்ணத் தோன்றுகிறது!
ஆமே அனைத்துயிர் ஆகிய அம்மையும்
தாமே சகலமும் ஈன்றஅத் தையலும்
ஆமே அவளடி போற்றி வணங்கிடில்
போமே வினைகளும் புண்ணிய னாகுமே
                              - திருமந்திரம் 4.13.23

அடுத்த முறை விருட்சாசனம் செய்யும்போது, சில கணங்கள் கண்களை மூடிக் கொண்டு நீங்கள் மரமாகவே ஆகிவிட்டதாக உணருங்கள். அற்புதமான உணர்வு அது!

நன்றி -- ஜடாயு.

திங்கள், 27 டிசம்பர், 2010

இயற்கை உணவே நோய் தீர்க்கும் மருந்து. 


  
மூன்று நாட்கள் இயற்கை மருத்துவ முகாம்

நாள்:- 21-01-2011 to 23-01-2011 
(வெள்ளி, சனி, ஞாயிறு) ஆகிய நாட்களில்.

நடைபெறும் இடம்: இயற்கை வாழ்வு நிலையம் 
(வள்ளியம்மையார் ஆசிரியைப் பயிற்சிப் பள்ளி எதிர் சந்தில்) 
குலசேகரன் பட்டினம் 
(வழி) திருச்செந்தூர், தூத்துக்குடி மாவட்டம். 


 
ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள: 
திரு Dr. மூ.ஆனையப்பன், 
(இயற்கை நலவாழ்வியல் அறிஞர், ஆலோசகர் மற்றும் பயிற்சியாளர். )
9944042986, 9380873465 


நல்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன். 
அஷ்வின்ஜி, சென்னை 
வாழி நலம் சூழ.